உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 53

தொகுதி 53 · கடிதம் 3988

நீதியில் ஊழலுக்கு நிச்சயம் இடம் இல்லை!

2016-01-10

உடன்பிறப்பே,

“ஜெ.வுக்கு எதிரான வழக்கு: நீதிபதி மாற்றம்” என்ற தலைப்பில் “தினமலர்” நாளேட்டிலும் - “ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி மாற்றம்” என்ற தலைப்பில் “தி இந்து” தமிழ் நாளேட்டிலும் - “சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நீதிபதி மாற்றம்” என்ற தலைப்பில் “தினத்தந்தி” நாளேட்டிலும் - “சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு, நீதிபதி திடீர் மாற்றம்” என்ற தலைப்பில் “தினகரன்” நாளேட்டிலும் - “Assets Case: New Judge on SC Bench” என்று “தி இந்து” ஆங்கில நாளேட்டிலும் 8-1-2016 அன்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

குறிப்பாக அந்தச் செய்திகள், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டை விசாரித்து வந்த நீதிபதிகளில் ஒருவர் மாற்றப்பட்டுள்ளார் என்ற தகவலைத் தெரிவிக்கின்றன. இந்த அமர்வில் ஆரம்பத்தில் நீதிபதி பினாகி சந்திர கோஷ் அவர்கள் முதன்மை நீதிபதியாகவும், அவருக்குத் துணையாக நீதிபதி அகர்வால் அவர்களும் நியமிக்கப்பட்டிருந்தார்கள். கடைசியாக 23-11-2015 அன்று விசாரணை நடைபெற்ற போது, மேல்முறையீட்டின் இறுதி வாதத்தைக் கேட்பதற்கான தேதி ஜனவரி 8ஆம் தேதி நிர்ணயிக்கப்படும் என்றும், அன்று முதல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விசாரணை நடைபெறும் என்றும் குறிப்பிட்டிருந்தன. இந்த வழக்கு பற்றிய விவரத்தை நினைவுக்குக் கொண்டு வரச் சுருக்கமாகக் கூறுகிறேன்.

1991-1996ஆம் ஆண்டுகளில், தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை 1996ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்குதான் கடந்த 19 ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து,

தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா அவர்கள் 27-9-2014 அன்று ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா நான்காண்டுகள் சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியே 1 லட்சமும், மற்ற மூவருக்கும் தலா 10 கோடியே 10 ஆயிரம் ரூபாயும் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா உட்பட நால்வரும், சிறையிலே அடைக்கப்பட்டனர்.

இவ்வாறு தண்டிக்கப்பட்டு சிறையிலே இருந்த ஜெயலலிதா ஜாமீனில் வெளியே வர முயற்சி செய்து, உச்ச நீதிமன்றம் வரை அந்த வழக்கு சென்று, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டத்து அவர்கள், 17-11-2014 அன்று ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்தார். அவ்வாறு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவித்து, ஜெயலலிதாவின் அப்பீல் மனுவை கர்நாடகா உயர் நீதிமன்றம் மூன்று மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்த போது, அந்தத் தீர்ப்பு பற்றியும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டத்து அவர்கள் பற்றியும் அப்போதே கடுமையான விமர்சனங்கள்

ஏடுகளில் வெளிவந்தன.

அதன் பிறகு ஜெயலலிதா செய்த மேல்முறையீட்டின் மீது பெங்களூர் உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வில் ஜனவரி 5 துவங்கி மார்ச் 11 வரை வழக்கு நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்களிடம் நீதிமன்றத்திலேயே, விசாரணையின் போதே, அந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி அவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து, அந்தக் கருத்துகள் எல்லாம் ஏடுகளிலே தொடர்ந்து வெளிவந்தன. குறிப்பாக அவர்களுடைய வாதத்தில் எந்தவிதமான ஆதாரங்களும் எடுத்துக் காட்டப்படவில்லை என்றும், குன்ஹா அவர்களின் தீர்ப்பிலே போடப்பட்டிருந்த 150க்கு மேற்பட்ட முடிச்சுகளை அவிழ்க்கவில்லை என்றும், அவர்களின் வாதத்தில் போதிய மதிப்பெண்கள் பெறவில்லை என்றும், குன்ஹா அளித்த தீர்ப்பைத்தான் மீண்டும், தானும் தர வேண்டிய நிலையே உள்ளதென்றும் வெளிப்படையாக நீதிமன்றத்திலேயே நீதிபதி குமாரசாமி தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு (நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே. அகர்வால், பிரபுல்ல சி. பந்த் அடங்கியது) அளித்த ஒரு தீர்ப்பில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வரவிருந்த தீர்ப்பைப் பற்றிக் குறிப்பிடும் போது, “குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றத்தின் முக்கியத்துவத்தை உயர் நீதிமன்ற நீதிபதி (குமாரசாமி) கருத்திலே கொள்ள வேண்டும். ஊழல், சமூகத்தை எப்படி (கரையான் போல) அரித்து வருகிறது என்பது குறித்து உயர் நீதிமன்றம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். நீதிமன்றத்தின் முன்னுள்ள சாட்சியங்களை முழுமையாகவும் ஒருங்கிணைத்தும் மதிப்பீடு செய்து தீர்ப்பளிக்க வேண்டும். விருப்பு வெறுப்பின்றி அளிக்கும் தீர்ப்பு பாரபட்சமின்றி தீர்க்கமாக எடுத்துரைக்கப்பட வேண்டும்” என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தது.

இன்னும் சொல்லப்போனால், உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகுர் அவர்கள், “ஒரு கிரிமினல் வழக்கை எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு இந்த மேல் முறையீடு வழக்கு ஒரு சான்று. கிரிமினல் வழக்குகளில் நீதி வழங்கும் முறை தோற்றுவிட்டது. இதைச் சீர்படுத்த வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது” என்று தெரிவித்திருந்தார்.

உச்ச நீதிமன்ற அமர்வு இவ்வாறு அசாதாரணமாக கருத்துகளைத் தெரிவிக்கக் காரணம் என்ன?

உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்களே பெங்களூர் வந்ததாகவும், குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஆதரவாகத் தீர்ப்புக் கிடைக்க பல்வேறு முயற்சிகள் நடைபெறுவதாகவும் அப்போது செய்திகள் பேசப்பட்டன.

11-5-2015 அன்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார். அதனை அ.தி.மு.க.வினர் வெற்றியாக கொண்டாடினர். ஜெயலலிதாவும் நீதி வென்றதாக அறிக்கை விடுத்தார். நம்மைப் பொறுத்த வரையில் நீதிபதி குமாரசாமி நீதிமன்றத்தில் விசாரணை நடத்திய போது கூறிய மொழிகளுக்கும், தீர்ப்புக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறதே என்ற சந்தேகம் வந்தது. ஆனால் தீர்ப்பையே திருப்பிப் போடுகின்ற அளவுக்கு

அடுத்த நாளே தீர்ப்பிலே உள்ள மிகப் பெரிய தவறுகள் குறித்து பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

அதாவது நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா தரப்பினர் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன்களையெல்லாம், ஜெயலலிதாவின் வருமானமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கூறி, இந்தியன் வங்கியிலிருந்து ஜெயலலிதா தரப்பினர் கடன்களைப் பெற்றார்கள் என்ற பட்டியலையும், அதன் கூட்டுத் தொகையையும் தனது

தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பட்டியலை நீதிபதி குறிப்பிட்டவாறு சற்று விரிவாகச் சொல்ல வேண்டுமேயானால்,

ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெற்ற கடன் 1,50,00,000 குணபூசனியிடமிருந்து மாற்றப்பட்ட கடன் 3,75,00,000 ஜெயலலிதா பெற்ற கடன் 90,00,000 ஜெ. ரியல் எஸ்டேட் பெற்ற கடன் 25,00,000 ஜெ.எஸ். ஹவுசிங் பெற்ற கடன் 12,46,000 ஜெ. பார்ம் ஹவுஸ் பெற்ற கடன் 50,00,000 சசிகலா பெற்ற கடன் 25,00,000 வி.என். சுதாகரன் பெற்ற கடன் 1,57,00,000 ராமராஜ் அக்ரோ மில்ஸ் பெற்ற கடன் 1,65,00,000

மகாலட்சுமி திருமண மண்டபத்திற்காக கடன் 17,85,274

ஆக மொத்தம் ஜெயலலிதா தரப்பினர் பெற்ற கடன் 24,17,31,274 ரூபாய் என்று நீதிபதி குமாரசாமி அவர்கள் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் மேலேகண்ட பட்டியலில் உள்ள பத்து கடன் தொகையையும் கூட்டல் கணக்குத் தெரிந்த யார் ஒருவரைவிட்டுக் கூட்டச் சொன்னாலும், அதன் கூட்டுத் தொகை 10,67,31,274 ரூபாய்தான் வரும். ஆனால் கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், இதன் கூட்டுத் தொகை 24,17,31,274 ரூபாய் என்றும், இந்தக் கூட்டுத் தொகையின் அடிப்படையில் தான் ஜெயலலிதா மீது

சொத்துக் குவிப்பு வழக்கு 66 கோடி ரூபாய்க்குத் தொடுத்தது தவறு என்றும் வியாக்யானம் செய்து, அவரை விடுதலை செய்தார்.

அது மாத்திரமல்ல; வருவாய்க்கு மேல் சொத்துக் குவிப்பு பத்து சதவிகித அளவுக்குள் இருந்தால், அதற்குத் தண்டனை இல்லை என்ற சட்ட விதி, தற்போதுள்ள சட்டத்திலே இடம் பெறவில்லை என்றும், 1988ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோதே இந்தச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தில் இடம் பெறவில்லை என்றும் விரிவாகவும், விளக்கமாகப் பலராலும் எடுத்துக் கூறப்பட்டது. இந்த விவரங்களையெல்லாம் பலரும் எடுத்துக் காட்டி, தீர்ப்பிலே இவ்வாறு இமாலயத் தவறு உள்ளது, எனவே இந்தத் தீர்ப்பை மாற்ற வேண்டும், அதற்கு உதவியாக இந்த வழக்கில் கர்நாடக அரசு தானே உச்ச நீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார்கள்.

“தி டைம்ஸ் ஆப் இந்தியா” - 22-5-2015 அன்று - ஜெயலலிதாவின் வழக்கில் குமாரசாமி அளித்த தீர்ப்பு பற்றி மிகவும் விளக்கமாக “Curious Case of Amma Assets: Overlooking the obvious” - From Calculation To take on Gifts, Karnataka High Court Order has many Loopholes - என்ற தலைப்பிட்டு எழுதியது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் 919 பக்கத் தீர்ப்பில் வழக்கத்துக்கு மாறான பல செய்திகளும், முடிவுகளும் இடம் பெற்றுள்ளன என்று குறிப்பிட்டு ஒன்பது முறைகேடுகளை “டைம்ஸ் ஆப் இந்தியா” புள்ளி விவரங்களோடு விளக்கியிருந்தது.

“தீக்கதிர்” (23-5-2015) நாளேடு, “சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், சொத்து மதிப்பை நீதிபதி தவறாகக் கணக்கிட்டதாலேயே, அவருக்கு இந்த விடுதலை கிடைத்துள்ளது என்றும், இந்தக் கணக்கில் ஏற்பட்ட தவறைச் சரி செய்தால், தீர்ப்பு மறுபடியும் மாறும் என்றும் சட்ட வல்லுநர்கள் பலரும் கூறியுள்ளனர்” என்று எழுதியது.

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பில் கூட்டல் கணக்கில் தவறு செய்துள்ளதை எடுத்துக்காட்டி, பிழையான கூட்டல் கணக்கின் அடிப்படையில் வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென்று கோரித்தான் கர்நாடக மாநில அரசும், கழகப் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியரும் உச்ச நீதிமன்றத்திலே மேல் முறையீடு

செய்து அந்த வழக்குதான் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மேல் முறையீட்டு வழக்கு முதலில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், ஆர்.கே. அகர்வால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, ஜெயலலிதாவின் மனுவுக்குப் பதில் அளித்து கர்நாடக அரசு மற்றும் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சார்பில் மனு அளிக்கக் கோரி அவையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. வழக்கின் அடுத்த கட்ட வாதம் ஜனவரி 8ஆம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் 7-1-2016 அன்று இந்த வழக்கு விசாரணை குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், நீதிபதி ஆர்.கே. அகர்வால் அவர்கள் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக நீதிபதி அமிதவ ராய் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. வழக்கு விசாரணை தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், இந்த முக்கியமான வழக்கில் நீதிபதி மாற்றம் என்பது வழக்கறிஞர்கள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. மாற்றப்பட்டுள்ள நீதிபதி ஆர்.கே. அகர்வால் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தவர் என்றும், நேர்மையான நீதிபதி என்று பெயரெடுத்த அவர், தற்போது இந்த வழக்கில் இருந்து ஒதுங்கிக் கொள்ள விருப்பம் தெரிவித்ததால்தான், அவர் மாற்றப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர்கள் மத்தியில் ஒரு உரையாடல் நிலவுகிறதாம். நீதிபதிகள் மாற்றம் மட்டுமல்ல; உச்ச நீதிமன்றத்தின் சார்பில் 6.1.2016 அன்று “Elimination List” பட்டியல் ஒன்று வெளியானது. உச்ச நீதிமன்றத்தில் அதிகப்படியான முக்கிய வழக்குகள் தேங்கிக் கிடப்பதால், நீதிபதிகளுக்குக் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதால், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு விசாரணை 8-1-2016 அன்று நடைபெறாது என்றும் உச்ச நீதிமன்றப் பதிவுத் துறை இந்தத் தகவலைத் தெரிவித்திருப்பதாகவும் செய்தி வந்தது.

ஆனால் 7.1.2016 அன்று இந்தச் செய்தியைத் தொடர்ந்து “Supplementary List for Friday the 8th January, 2016” என்ற பட்டியலில், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கினை, விசாரணைப் பட்டியலிலே இணைத்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டிருக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகள் என்ன காரணத்திற்காக இப்படியெல்லாம் நடைபெறுகின்றன? எதற்காக 8ஆம் தேதி விசாரணைக்காகப் போடப்பட்டிருந்த வழக்கினை நீக்கினார்கள்? பிறகு எதற்காக அதே நாளில் அந்த வழக்கினைச் சேர்த்தார்கள்? முதலிலே இரண்டு குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கினை விசாரிப்பார்கள் என்று அறிவித்து விசாரணையையும் தொடங்கினார்கள். பிறகு தற்போது திடீரென்று ஏன் ஒரு நீதிபதியை மாற்றியிருக்கிறார்கள்? - என்பதையெல்லாம் பார்க்கும்போது சற்றுக் குழப்பமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், சட்ட நெறிமுறைகளின் தலைமைப்பீடமான உச்ச நீதிமன்றம் ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த நடவடிக்கைகளை சட்ட ரீதியாகவே செய்திருக்கும் என்பதிலும், சட்டத்தின் வழிமுறைகளில் எந்த முனையிலிருந்தும் எவ்விதத் தலையீட்டையும் உச்ச நீதிமன்றம் நிச்சயம் அனுமதிக்காது என்பதிலும், நீதியின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கெல்லாம் நம்பிக்கை இருக்கவே செய்கிறது. அன்புள்ள, மு.க. 10-01-2016

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 53 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 53 PDF ↗