தொகுதி 53 · கடிதம் 3985
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பதைக் கழகம் பெறவிருக்கும் வெற்றியின் மூலம் மெய்ப்பித்துக் காட்டுவோம்!
2015-12-27
உடன்பிறப்பே,
12-3-2015 அன்று “கொள்கை காத்திட குவியட்டும் தேர்தல் நிதி” என்ற தலைப்பில் நான் எழுதிய மடலில், உங்களையெல்லாம் கனிவுடன் நோக்கி, “2016ஆம் ஆண்டு ஏப்ரல், மே திங்களில் தமிழக அரசின் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் வரவுள்ளது. ஐந்தாண்டு காலம் இந்த நாட்டு மக்கள் பட்ட துன்பங்களுக்கெல்லாம் விடிவு காலம் ஏற்படவிருக்கிறது” என்று தொடங்கி, கழகத்தின் தேர்தல் நிதிக்குக் கணிசமாக வழங்கிட வேண்டுமென்று நான் கேட்டுக்கொண்டு ஒரு சில திங்கள்கள் ஆகின்றன.
நேற்றுவரையில் நீங்கள் அன்போடு அளித்த - ஆர்வத்தோடு வழங்கிய அந்த நிதி, சிறு துளி பெரு வெள்ளமாகப் பெருகி - 21 கோடியே 93 இலட்சத்து 96 ஆயிரத்து 534 ரூபாய் என்ற அளவுக்குச் சேர்ந்துள்ளது. இந்த 22 கோடி ரூபாயை, தமிழக ஆளுங்கட்சி பல வகைகளிலும் குவித்து வைத்திருக்கின்ற மிகப்பெரு நிதியோடு ஒப்பிட்டால், சிறு கடுகாகத்தான் தோன்றும். ஆனால் “கடுகு சிறுத்தாலும் காரம் போகாது” என்ற முதுமொழிக்கொப்பத்தான், இந்த நிதியை நானும் நம்முடைய கழக உடன்பிறப்புகளும் கருதி மகிழ்வோம் என்பதை நிதி வழங்கிய கழக உடன்பிறப்புகளாம் நீங்கள் நன்கறிவீர்கள். இந்தத் தேர்தல் நிதியினை இந்த அளவுக்குப் பெற்றுக் கொண்ட வகையில் நானும், நமது கழகத்தின் பொருளாளர் மற்றும் கழகச் செயல்வீரர்கள் அனைவரும் பெருமை கொள்கிறோம்.
ஆனால் உடன்பிறப்புகளே, பெருமை கொள்வது மாத்திரம் காரிய வெற்றிக்குப் போதுமா என்றால் போதவே போதாது.
வரும் தேர்தல்கள் சட்டமன்றம் ஆனாலும், நாடாளுமன்றம் ஆனாலும், இரண்டு மன்றங்களிலும் நம்முடைய கழகத்தினர் பெரும் எண்ணிக்கையில் இடம்பெற வேண்டும். அதற்கேற்ப உடன்பிறப்புகளே, உங்களுடைய பணி அமைந்திட வேண்டும். தேர்தல் பணிகளை மாத்திரம் சிறப்பாக ஆற்றிவிட்டுத் தேர்தல் நிதியைத் திரட்டுவதில் சிந்தனை இல்லாமல் அக்கறை காட்டாமல் இருந்து விடக்கூடாது. அதிலும் நீங்கள் மேலும் ஆர்வம் காட்டுவீர்களேயானால், நீங்கள் தந்துள்ள - இன்னும் தரப்போகிற தேர்தல் நிதியை வைத்து அனைவரும் மகிழத்தக்க வெற்றியை வரப் போகின்ற தேர்தல்களில் நாம் பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கின்றது.
தமிழகத்தில் நடைபெறுகின்ற ஆட்சியினை அடையாளம் கண்டுகொள்கிற வாய்ப்பு - அந்த வாய்ப்பில் ஏழையெளியோர் அனுதினமும் அனுபவித்து வருகின்ற துயரத்தை நேரடியாகவே கண்டு கலங்குகின்ற நிலை - நமக்கும், நடுநிலையாளர்களுக்கும் பொதுவாக நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலையில், நீங்கள் இதுவரை திரட்டித் தந்துள்ள இந்த 22 கோடி ரூபாய் தேர்தல் நிதி, தேர்தலைச் சந்திக்க, மிக முக்கியமான செலவுகளுக்குக்கூடப் போதாது என்பதை நீங்களும் அறிவீர்கள்; நானும் உணருகிறேன்.
எனவே நீங்கள் மேலும் தர இருக்கின்ற தேர்தல் நிதி, உங்களுடைய சக்திக்கு உட்பட்டது எவ்வளவு ஆயினும், குறிப்பாக வெள்ளிக் காசுகளாக இருந்தாலும்கூட, அதை நான் தங்கக் காசுகளாகக் கருதித்தான் பெற்றுக்கொள்வேன்.
தொடர்ந்து தேர்தல் நிதி வழங்கும் பணியை மேலும் என்னை ஊக்குவிக்கும் வகையில், “கழகத்தை எங்கள் உழைப்பால் கட்டிக் காப்போம் - எதிர்ப்பினை நெட்டித் தள்ளுவோம்” என்ற உங்கள் உணர்வுகளைச் செயல் மூலம்
காட்ட இந்தத் தேர்தல் நிதி மட்டுமல்ல; திராவிட இன உணர்வை மேலும் வளர்க்க ஒன்றுபட்டு உழைப்போம் என்ற உறுதியை நீங்கள் மேற்கொள்ளுவீர்களேயானால், இந்த நிதி தரும் மகிழ்ச்சியைவிடப் பெரும் மகிழ்ச்சியை நான் பெறுவேன்.
நம்முடைய கழகம் தமிழ்நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் பாடுபடுகின்ற பாட்டாளி மக்களைக் கொண்ட பேரியக்கம் என்பதையும், திராவிட இனத்தைக் காப்பாற்றுவதற்காகத் தந்தை பெரியார் அவர்களாலும், பேரறிஞர் அண்ணா அவர்களாலும் உருவாக்கப்பட்டு, இன்று நமது சமுதாய எதிரிகளை வீழ்த்துவதற்கான சம்மட்டியாக நாம் கைகளிலே ஏந்தி அறப்போர் ஆயுதங்களாகப் பயன்படுத்தி அன்றுதொட்டு இன்றுவரை, தமிழ்ச் சமுதாயத்தைப் பாதுகாக்கவும், பெரும் படை கொண்டோ - பண மூட்டைகளைக் கொண்டோ இந்த ஒப்பற்ற இயக்கத்தை - இனமான இயக்கத்தை - திராவிடர்களுடைய அரசியல், சமுதாய இழிவினை நீக்கி, எந்நாளும் ஏற்றம் பெற இடைவிடாது உழைக்கின்ற கழகத்தின் மாமணிகளாம் இளைஞர், மகளிர், மாணவர் ஆகிய பல தரப்பட்டவர்களை, படை வீரர்களாகக் கொண்டு - இந்தப் பாசறை பெரு வெற்றியினைப் பெற்று, ஈடு இணையற்ற இனமானக் கோட்டை இது; இதனை எவராலும் வீழ்த்திட இயலாது என்ற நம்பிக்கையைச் செயல் வடிவமாக ஆக்கிக் காட்டுவதற்கு ஜனநாயகத்தில் தேர்தல் வெற்றிகளே அடையாளச் சின்னங்கள் ஆகும்; நம்பிக்கை நட்சத்திரங்கள் ஆகும் என்பதையும் மெய்ப்பிக்கும் வகையில் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே, நீங்கள் வழங்கி வருகின்ற இந்தத் தேர்தல் நிதி எண்ணிக்கையில் எளிமையாகத் தெரிந்தாலும், உங்கள் இடத்தில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை ஒவ்வொரு நாளும் என் நெஞ்சில் வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதை உறுதிபடக் கூறிக்கொள்கிறேன்.
நம்முடைய எதிரிகள் என்னென்னவோ செய்து கொல்லைப் புறமாகக் குவித்துவைத்துள்ள பெரு நிதியை எண்ணிப் பார்த்து, தேர்தல் வருவதற்கு இன்னும் இருப்பது ஒரு சில மாதங்களே, அது ஒவ்வொரு தமிழனுடைய தலை எழுத்தையும் நிர்ணயிக்கப் போகும் தேர்தல்,
அதில் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கடமையை ஆற்ற வேண்டும் என்பதையெல்லாம் உணர்ந்து தேர்தல் நிதியை மேலும் மேலும் வழங்குவதிலும், இந்த அரசின் ஊழல்களை, முறைகேடுகளை, சீர்கேடுகளையெல்லாம் பொதுமக்களிடம் எல்லா வகையிலும் எடுத்துக் கூறுவதிலும் அக்கறையோடு பணியாற்ற வேண்டும்.
இந்த உறுதிக்கு ஒரு நாள்கூட ஊறு வராமல், தொடர்ந்து தேர்தல் நிதி வழங்கும் பணியை மேலும் என்னை ஊக்குவிக்கும் வகையில், “கழகத்தை எங்கள் உழைப்பால் கட்டிக் காப்போம் - எதிர்ப்பினை நெட்டித் தள்ளுவோம்” என்ற உங்கள் உணர்வுகளைச் செயல் மூலம் காட்ட இந்தத் தேர்தல் நிதி மட்டுமல்ல; திராவிட இன உணர்வை மேலும் வளர்க்க ஒன்றுபட்டு உழைப்போம் என்ற உறுதியை நீங்கள் மேற்கொள்ளுவீர்களேயானால், இந்த நிதி தரும் மகிழ்ச்சியைவிடப் பெரும் மகிழ்ச்சியை நான் பெறுவேன்.
உடன்பிறப்பே, நான் இவ்வாறு கூறிவிட்டதால், அளித்த நிதியே போதும் என்று நீங்கள் ஆறுதல் கொண்டுவிடக் கூடாது. நான் முன்பே எழுதியது போல, நம்முடைய எதிரிகள் என்னென்னவோ செய்து கொல்லைப் புறமாகக் குவித்து வைத்துள்ள பெரு நிதியை எண்ணிப் பார்த்து, தேர்தல் வருவதற்கு இன்னும் இருப்பது ஒரு சில மாதங்களே, அது ஒவ்வொரு தமிழனுடைய தலை எழுத்தையும் நிர்ணயிக்கப் போகும் தேர்தல், அதில் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கடமையை ஆற்ற வேண்டும் என்பதையெல்லாம் உணர்ந்து தேர்தல் நிதியை மேலும் மேலும் வழங்குவதிலும், இந்த அரசின் ஊழல்களை, முறைகேடுகளை, சீர்கேடுகளையெல்லாம் பொதுமக்களிடம் எல்லா வகையிலும் எடுத்துக் கூறுவதிலும் அக்கறையோடு பணியாற்ற வேண்டும்.
ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும், நான் கேட்டவுடன் இல்லையென்று மறுக்காமல் அள்ளிக் கொடுக்கும் உடன்பிறப்புகள் என்னோடு இருக்கிறீர்கள் என்பதை நான் நன்றாகவே அறிவேன். எனவே உங்களிடம் கேட்காமல் இந்த நேரத்தில் நான் வேறு யாரிடம் சென்று கேட்க முடியும்? பணக்காரர்களிடம், தொழில் முதலாளிகளிடம், பல கோடி ரூபாய் வைத்திருப்போரிடம் நான் தேர்தல் நிதி கேட்டுப் பழக்கப்பட்டவன் அல்ல. உடன்பிறப்பே, உன்னிடம்தான் நான் திரும்பத் திரும்பக் கேட்டுவருகிறேன்.
நீயும் தவறாமல் கொடுத்துக் கொண்டே வருகிறாய். ஆனால் நம்முடைய எதிரியிடம் குவிந்திருக்கும் பணபலத்தை எண்ணிடும்போது, இப்போது நீ கொடுத்துள்ள நிதி போதவே போதாது என்பதை உணர்ந்து, நாட்கள் இன்னும் சிலதான்
இருக்கின்றன என்பதையும் மனதிலே கொண்டு, வெட்டி வா என்றால், கட்டி வரும் உள்ளத்தோடு பெருநிதியைக் கொண்டு வந்து கழக நிதியோடு சேர்ப்பதிலும், தேர்தல் பணிகளைத் தொய்வில்லாமல் ஆற்றுவதிலும் இன்றிலிருந்தே நீ முனைப்புக் காட்டிட வேண்டும். தேர்தல் பணிகள் குறித்துத் தொடர்ந்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது எழுதுகிறேன். கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பதைக் கழகம் பெற இருக்கும் வெற்றியின் மூலம் மெய்ப்பித்துக் காட்டுவோம்! அன்புள்ள, மு.க. 27-12-2015
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 53 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 53 PDF ↗