தொகுதி 53 · கடிதம் 3982
எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியுமா?
2015-09-27
உடன்பிறப்பே,
மின்சார உற்பத்தி பற்றியும், மின்வெட்டு பற்றியும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் கடந்த நான்கரை ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டு மக்களை எப்படி உண்மைக்கு மாறான செய்திகளை அடுக்கடுக்காகச் சொல்லி ஏமாற்றி வருகிறார்கள் என்று அவ்வப்போது நாம் எடுத்துக் கூறியே வருகிறோம்.
ஆதாரமாக அண்மையில் வெளிவந்த சில நாளேடுகள் இந்த மின்வெட்டு குறித்தும், மின் தடை குறித்தும் என்னென்ன தெரிவித்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறேன். நேற்றைய தினம் தமிழகச் சட்டப்பேரவையில் மின் துறை அமைச்சர் மின்வெட்டே கிடையாது என்று பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனால் நேற்றையதினம் காலையில் வெளிவந்த “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேட்டில் வந்த செய்தி என்ன தெரியுமா?
POWER CUTS ARE BACK IN STATE AS WIND POWER
GENERATION REDUCES.
Shortage was 2400 MW in Last 2 days.
என்ற தலைப்பில் வந்துள்ள செய்தியில் -
“Close on the heels of Tamil Nadu organising a Global Investors’ Meet with the promise of uninterrupted power supply to investors, the State has plunged into a serious power shortage.The shortage has been 2,400 MW in the last two days as wind power generation, which was about 2000 MW has almost stopped in the last two days. Power demand hovered around 13,338 MW on Wednesday evening, whereas the supply
was only 11,055 MW... Due to the shortage, many districts witnessed power cuts on Wednesday evening and Thursday morning.”
- என்று எழுதப்பட்டுள்ளது. உண்மை நிலை இவ்வாறிருக்க, தமிழகச் சட்டப்பேரவையில், மின் துறை அமைச்சர், மின்வெட்டே
தமிழகத்தில் இல்லை என்று ஒரு முறைக்குப் பல முறை கூறுகிறார் என்றால், பேரவையில் இப்படி உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறலாமா என்றுதான் நான் கேட்க விரும்புகிறேன்.
தமிழக அரசின் இந்த நிலைமையை தமிழகத்திலே உள்ள பெரும்பாலான நாளேடுகள் மறைத்த போதிலும், “தினகரன்” நாளேடு சற்று விரிவாகவே “தமிழகத்தின் பல மாவட்டங்களில் மீண்டும் 2 மணி நேரம் மின்வெட்டு - நள்ளிரவில் பொதுமக்கள் மறியல்” என்ற தலைப்பில் 25-9-2015 அன்று செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அந்தச் செய்தியில், “தமிழகத்திற்குச் சராசரியாக நாள்தோறும் 13,940 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் 10,400 முதல் 10,500 மெகாவாட் என்ற அளவிலேயே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், தனியாரிடம் 500 முதல் 600 மெகாவாட்வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மின் உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ள நிலையில் சென்னை தவிர்த்து பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் 2 மணி நேரம் மின்தடை செய்ய மின்வாரிய அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் மின் பற்றாக்குறை ஏற்பட்ட போது, எந்தெந்த பகுதிகளில் எப்போது மின்தடை செய்யப்படும், எவ்வளவு நேரம் மின்தடை நீடிக்கும் என்பதை முன்னதாகவே மின்வாரிய அதிகாரிகள் தெரிவிப்பார்கள். ஆனால், தற்போது மின்தடை குறித்து எந்த அறிவிப்பையும் செய்யவில்லை. குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 1 மணி நேரத்திற்கு ஒரு முறை மின்சாரம் தடைபட்டுக் கொண்டிருந்தது. இது பக்ரீத் பண்டிகைக்கு தயாராகிக் கொண்டிருந்த இஸ்லாமிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர் மின்வெட்டைக் கண்டித்து அழகியமண்டபம் பகுதி பொதுமக்கள் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகளுடன் இரவு 8 மணிக்குச் சாலையில் திரண்டனர். பின்னர் மறியலுக்கு முயன்றனர். அவர்களிடம் தக்கலை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபின் பொதுமக்கள் கலைந்து சென்றனர். நாகர்கோவில் இடலாக்குடியில் இரவு 11 மணியளவில் அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 12 மணிக்கு மின்சாரம் மீண்டும் வந்ததால் மக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் கடந்த 4 நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல் படுத்தப்படுகிறது” என்றெல்லாம் எழுதியுள்ளது.
ஏன், கடந்த 16ஆம் தேதி தாம்பரம் நகரம், சிட்லப்பாக்கம் பேரூராட்சி மற்றும் குரோம்பேட்டையின் ஒரு பகுதியில் மின்தடை ஏற்பட்டு, நள்ளிரவுவரை மின்சாரம் வராததால் பொதுமக்கள் சிட்லப்பாக்கம் நேரு நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகள் சமாதானத்திற்குப் பிறகு கலைந்து சென்றிருக்கிறார்கள்.
ஆனால் துறையின் அமைச்சர் தமிழகத்திலே மின்வெட்டே இல்லை என்று நம்மையும் ஏமாற்றுகிறார், சட்டப்பேரவையையும் ஏமாற்றுகிறார், ஏன், தமிழக முதலமைச்சரையும் ஏமாற்றி வருகிறார். அதை நம்பி 9-9-2015 அன்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர், “மின்வெட்டு முழுவதுமாகக் களையப்பட்டு இன்று மிகை மின் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது” என்றார். முதல்வர் அறிவித்து ஒரு மாதத்திற்குள்ளாகவே, தமிழ்நாடு மிகை மின் மாநிலம் என்று முதல் அமைச்சர் பேசியது எவ்வளவு பெரிய பொய் என்பதை மாநாட்டுக்கு வந்திருந்த முதலீட்டாளர்கள் புரிந்துகொண்டால், எந்த அளவுக்கு அது தமிழக அரசுக்குத் தலைகுனிவு என்பதை ஆட்சியாளர்கள் தான் கூறவேண்டும்.
அதே முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜெயலலிதா பேசும்போது, “இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அதிகமாகப் பெறுகின்ற மூன்றாவது மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது” என்று தெரிவித்தார். உண்மைக்கு மாறாக நான் கூறவில்லை. அவருடைய பேச்சை அழகான கையேடாகத் தமிழக அரசின் செய்தித்துறை அச்சிட்டுக் கொடுத்துள்ளது. முதலமைச்சர் பேசி ஒருசில நாட்களுக்குள், மத்திய அரசும், உலக வங்கியும் இணைந்து, 98 அம்சங்களை அடிப்படையாக வைத்துத் தயாரித்த, தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில், தமிழகம் 12வது இடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “முதலீட்டுக்கு உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் பின்னடைவு ஏன்?” என்ற தலைப்பில் “தினமலர்” வெளியிட்ட செய்தியிலேகூட, “முதலீட்டாளர்களின் குறைகளைத் தீர்க்கக் காலக்கெடு மற்றும் குறித்த கெடுவுக்குள் பணிகளை முடிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தமிழகத்தில் வழி இல்லை. ஆந்திரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் இருப்பது போல், திட்ட அனுமதிகளை, உரிய நேரத்தில் அளிக்க உத்தரவாதம் வழங்கும் சட்டமும், தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் “ஒற்றைச் சாளர முறையில் அனுமதி என்று
அரசு அறிவித்திருந்தாலும், அதற்கான பிரத்யேக இணையதளமே இல்லை. பஞ்சாப், ஆந்திரா ஆகிய மாநிலங்களில், ஒற்றைச் சாளர முறையில் மனு செய்திருந்தால், அவற்றின் நிலையை அறிய வெளிப்படையான வசதி உள்ளது. அது தமிழகத்தில் இல்லை” என்றும், இன்னும் விரிவாகச் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
“ஆனந்த விகடன்” வார இதழில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிந்தனையாளர் கனகராஜ் கூறும்போது, “எப்போதும் அந்நிய நேரடி முதலீடு சொன்னபடி வந்துவிடுவதில்லை. ஏதோ இரண்டரை லட்சம் கோடி ரூபாயும் நாளை காலையே வந்து குவிந்துவிடும் எனக் கூறப்படும் பிம்பம் உண்மையல்ல. முதலீட்டாளர்களுக்குத் தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் சலுகைகளில் முக்கியமானது - மூன்று நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டால்கூட, அதற்கான இழப்பீட்டை அரசாங்கம் அளிக்கும்; தங்குதடையற்ற மின்சாரம் கிடைக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு இப்போது இருக்கிறதா? தடையற்ற மின்சாரம் வழங்க முடியாவிட்டால், அரசாங்கம் அளிக்க வேண்டிய இழப்பீட்டின் பிரமாண்டம் எவ்வளவு எனக் கணிக்க முடியுமா? குற்றம் சுமத்த வேண்டுமென்பதற்காகப் பொத்தாம் பொதுவாகச் சொல்லவில்லை. தமிழ்நாடு அரசு அறிவித்த “தொலைநோக்குத் திட்டம் 2023”ன் மொத்த முதலீடு 15 லட்சம் கோடி. அதில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்குத் தொகையான நான்கரை லட்சம் கோடி ரூபாயை மின்சாரத் துறைக்கு என முதலீடு செய்தார்கள். அதன் மூலம் 20 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்படும், அதுவும் 2017ஆம் ஆண்டுக்குள் 5,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதோ கண்ணுக்கு எட்டும் தொலைவில் வந்துவிட்டது 2017. ஆனால் மின்சாரம்? கடந்த மூன்று வருடங்களில் மின்சார உற்பத்தித் திட்டங்கள் எதுவும் உருப்படியாகச் செயல்படுத்தப்படவில்லை. ஆக 2017ஆம் ஆண்டுக்குள் 500 மெகாவாட் மின்சாரத்தைக்கூட இவர்களால் தயாரிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம். இந்த நிலையில் எந்த நம்பிக்கையில் “மின்தடை ஏற்பட்டால் இழப்பீடு” எனத் தமிழ்நாடு அரசு வாக்குறுதி கொடுக்கிறது?” என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆட்சியினர்தான் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்துவதில்லையே, தொடர்ந்து அறிவிப்புகளை
வெளியிடும் ஒரே ஒரு காரியத்தைத்தானே சளைக்காமல் செய்து வருகிறார்கள்! அதனால் அறிவிப்பு செய்ததற்காகவே பேரவையில் பாராட்டுத் தீர்மானம் வேறு! மின் உற்பத்தி குறித்து கடந்த நான்கரை ஆண்டுகளில் இந்த ஆட்சியினர் செய்த அறிவிப்புகள்தான் எத்தனை? எத்தனை? குறிப்பாக சி.ஐ.டி.யு.வைச் சேர்ந்த தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.எஸ். சுப்பிரமணியம் கடந்த 23ஆம் தேதி “தீக்கதிர்” நாளிதழில் ஒரு பக்கக் கட்டுரையே மின்துறை பற்றி எழுதியிருக்கிறார். அதில் இந்த ஆட்சியினர் 110வது விதியின்கீழ்ப் பேரவையில் அறிவிக்கப்பட்ட மின் திட்டங்கள் பற்றியும், அந்தத் திட்டங்கள் எல்லாம் இன்னமும் தொடங்கப்படாமல் எந்த நிலையில் உள்ளன என்பதையும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. 29-3-2012 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா விதி 110இன் கீழ்ப் படித்த அறிக்கையில், “660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம் என்னும் ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்த எனது தலைமையிலான அரசு தற்போது முடிவு செய்துள்ளது என்பதை இந்தப் பேரவைக்குத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 3,960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்படும் இந்த அனல் மின் திட்டம், 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் தனது உற்பத்தியைத் தொடங்கும்” என்று அறிவித்தார். 2015ஆம் ஆண்டு இறுதி வந்துவிட்டது. என்ன ஆயிற்று இந்தத் திட்டம்? ஏன் உற்பத்தியைத் தொடங்கவில்லை? மின்துறை அமைச்சர் நேற்றைய தனது உரையில், சூரிய ஒளி மின் உற்பத்தி பற்றி நீண்ட நேரம் பேசியிருக்கிறார். 20-10-2012 அன்று ஜெயலலிதா சூரிய சக்தி மூலம் 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை வெளியிட்டு, 2013, 2014, 2015ஆம் ஆண்டுகளில் தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தமிழக அரசால் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்தார். ஆனால் மூன்றாண்டுகளுக்குப் பிறகு பேரவையில் துறையின் அமைச்சர் 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் 3 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார் என்றால் என்ன பொருள்? 2013ஆம் ஆண்டு 1000 மெகாவாட், 2014ஆம் ஆண்டு 1000 மெகாவாட் என்று அறிவித்ததெல்லாம் பொய்தானே?
12-9-2014 அன்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட ஆணையில் 12-9-2015க்குள்
சூரிய சக்தி மின்நிலையம் அமைத்து, மின் உற்பத்தியைத் துவக்குவோரிடம், மின்வாரியம் ஒரு யூனிட் மின்சாரத்தை 7.01 ரூபாய் விலையில் வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆணையை 1-4-2016 வரை, அதாவது ஆறு மாத காலத்திற்கு நீட்டித்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. ஏன் இந்தக் கால நீடிப்பு என்று நான் அப்போதே கேட்டேன். வெளி மாநிலங்களில் சூரிய சக்தி மின்சாரம் ஒரு யூனிட் ரூ. 5.40க்குக் கிடைக்கும்போது, ரூ. 7.01 என்ற அதிகமான விலை கொடுத்து வாங்கக் கால நீடிப்பு செய்தது ஏன்? அண்மையில் அதானி குழுமத்தோடு செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்கூட ஒரு யூனிட் மின்சாரம் 7.01 ரூபாய்க்கு வாங்கத்தான் முடிவு செய்யப்பட்டிருப்பதாகச் செய்தி வந்தது. வெளியிலே குறைவான விலைக்குக் கிடைக்கும்போது, அதிக விலை கொடுத்து வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது ஏன்?
ஒழுங்குமுறை ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் ஒருவரான திரு. நாகல்சாமி அப்போதே ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அதை மீறி ஆணை பிறப்பிக்கப்பட்டதா இல்லையா? மின்சாரத்தை வாங்கவுள்ள மின்வாரியமோ, மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின்நுகர்வோரோ யாரும் கோரிக்கை விடுக்காத நிலையில், ஆணையம் தன்னிச்சையாக இவ்வாறு கட்டண ஆணையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க என்ன காரணம்? குஜராத் அதானிக்காகத் தானா? இவ்வாறு கட்டண ஆணையை நீட்டிப்பது குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் விவாதிக்கப்படவில்லை. அதிக விலை கொடுத்து ஒப்பந்தப்படி 25 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்கினால் 23 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறதே, அதற்கு மின்துறை அமைச்சரின் பதில்
என்ன?
மேலும் அமைச்சர் மற்ற மாநிலங்களின் கொள்முதல் விலை அதிகமாக உள்ளதாகக் கூறி குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மத்தியப் பிரதேசத்தில் இதே அதானி குழுமம் ஒரு யூனிட் மின்சாரத்தை 6 ரூபாய் 4 காசுக்கு வழங்க ஒப்புதல் கொடுத்ததைப் பற்றி அமைச்சர் ஏன் வாய்திறக்கவில்லை? தனக்கு வசதியாக அதை மூடி மறைத்தது ஏன்?
இன்னும் சொல்லப்போனால், 24-11-2013 தேதிய தினமலரிலேயே “தமிழகத்தில் சூரிய மின் உற்பத்தித் திட்டம் அம்பேல்” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளிவந்தது. அந்தச் செய்தியில், “இந்தத் திட்டத்தில் ஏராளமான குளறுபடிகள் உள்ளதாலும், அதைக் கவனிக்க மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆர்வம் காட்டாததாலும் சூரிய மின் சக்தி சாதன உற்பத்தியாளர்கள், முதல்வரைச் சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்” என்றும் அப்போதே எழுதியது.
ஒட்டுமொத்தமாக அமைச்சரின் பதிலில் தற்போது மின்வெட்டு இல்லை என்றும், மின்தடைதான் உள்ளது என்றும் சொல்லியிருக்கிறார். இதிலிருந்து மின்தடை என்ற தொழில்நுட்பப் பெயரால் எதார்த்தத்தில் தொடர்ந்து நிலவிவரும் மின்வெட்டு என்பதை இல்லை என்பதைப் போலச் சாமர்த்தியமாகச் சொல்லி நிரூபிக்கப் பார்க்கிறார்கள். மின்வெட்டு இருக்கிறதா இல்லையா என்பதை நானல்ல, ஏடுகளில் வெளிவந்த செய்தியையே தெரிவித்துவிட்டேன். ஏன், நேற்று வெளிவந்த “காலைக்கதிர்” இதழில் “மின்வெட்டில் இருளில் மூழ்கிய ஜி.எச்., மெழுகுவர்த்தி ஏற்றிச் சமாளித்த நோயாளிகள்” என்ற தலைப்பில் ஒரு செய்தியும், “மூன்று மணி நேர மின்வெட்டால் அவதி - 2,170 மெகாவாட் பற்றாக்குறை” என்ற தலைப்பில் ஒரு செய்தியும் வெளிவந்துள்ளன. இப்படி நாட்டில் நடப்பதையெல்லாம் மறைத்துவிட்டு மின்வெட்டே இல்லை என்று அமைச்சர் பேரவையில் உண்மைக்கு மாறான தகவலைச் சொல்வதால் மின்வெட்டால் மக்கள் அனுபவித்துவரும் வேதனைகள் குறைந்து விடுமா? சிலரைப் பல நாள் ஏமாற்றலாம், பலரைச் சிலநாள் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது! அதுபோல அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு வரும் தமிழ்நாட்டு மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது என்பதை அமைச்சர் உணரும் காலம் அண்மையிலே தான்; வெகு தொலைவில் இல்லை!
அன்புள்ள, மு.க. 27-9-2015
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 53 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 53 PDF ↗