தொகுதி 53 · கடிதம் 3973
இன்று “முரசொலி” பிறந்தநாள்!
2015-08-10
உடன்பிறப்பே,
10-8-1942 - ஆகஸ்ட் 10 என்பதை நாட்காட்டியில் கண்டதும், என் நெஞ்சில் ஒளி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது; காரணம் அந்த நாள்தான், முரசொலி பிறந்த நாள் - இந்த ஆகஸ்ட் திங்கள் 10ஆம் தேதி முரசொலிக்கு 73வது பிறந்த நாள். எந்த முரசொலி? துண்டுத் தாளாகத் தொடங்கி, வார இதழாக வளர்ந்து, நாளேடாகத் தொடர்ந்து நடைபோட்டுவரும் முரசொலி! கையெழுத்துப் பிரதி வடிவத்தில் மாத இதழாக வெளிவந்து கொண்டிருந்த முரசொலி 14.1.1948 -இல் வார இதழாகவும் 17.9.1960-இல் நாளேடாகவும் அச்சில் வெளிவரத் தொடங்கியது. முரசொலிக்கு இன்று ஆகஸ்ட் 10ஆம் தேதி 73வது வயது பிறக்கிறது. எனக்கோ 91 வயது முடிந்து விட்டது. ஆம், என்னுடைய 18வது வயதில்தான் முரசொலி பிறந்தது!
1942ஆம் ஆண்டு அகல் விளக்காக ஏற்றிவைக்கப்பட்டு, இன்று ஆகாயத்துக் கதிர் விளக்காக ஒளிவிடும் “முரசொலி” யின் நிறுவனர் என்ற நிலையில் இந்த நாளில் சில நினைவுகள்!
நான் என்னுடைய வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்ததைப் போலவே, நான் தொடங்கியதாலோ என்னவோ; முரசொலியும் பல சோதனை, வேதனைகளைக் கடந்து வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அது சந்தித்த வழக்குகள் எத்தனையோ? எதற்கு இதனைச் சொல்கிறேன் என்றால், “முரசொலி” பிறந்த அதே நாளில் - இன்றையதினம் நமது கழகத்தின் சார்பில் மதுவிலக்குக் கொள்கைக்காக மாவட்டக் கழகத் தலைநகரங்களில் எல்லாம், மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை எண்ணிடும்போது, இதிலே உள்ள பொருத்தத்தைப் பார்த்து நான் இறும்பூது எய்துகிறேன்!
உடன்பிறப்பே, நீ, இந்த ஆர்ப்பாட்டக் களத்தில் நெஞ்சுயர்த்தி நிற்கும்போது, என்னுடைய இந்த மடலைப் படிப்பாய் என்பதையும், இந்த நாள் “முரசொலி பிறந்த நாள்” என்பதை நீ தவறாமல் நினைவு கூர்வாய் என்பதையும் நான் நன்றாகவே அறிவேன்.
இந்த முரசொலியினை நான் தொடங்கிய அதே 1942ஆம் ஆண்டுதான், பேரறிஞர் அண்ணா அவர்களை நான் சந்தித்த ஆண்டுமாகும். 1942இல் அறிஞர் அண்ணாவின் “திராவிட நாடு' இதழில் நான் எழுதிய 'இளமைப் பலி' என்ற கட்டுரை வெளியாயிற்று. அதே ஆண்டில் திருவாரூருக்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள் வந்தபோது என்னை அழைத்துவரச் செய்து, பாராட்டி வாழ்த்தி, அறிவுரைகளும் வழங்கினார். எனவே அண்ணாவை எண்ணும்போது முரசொலியும், முரசொலியை நினைக்கும்போது அண்ணாவும் என் நெஞ்சில் என்றென்றும் நீக்கமற நிறைந்திருக்கின்றது.
என்னுடைய 20வது வயதில், தந்தை பெரியார் அவர்கள் திருவாரூர் சுயமரியாதைச் சங்க ஆண்டு விழாவுக்கு வந்திருந்தபோது 'முரசொலி' இதழைக் கண்டு மிகச் சிறந்த பணி என்று புகழ்ந்து பாராட்டியதும் என் நினைவிலே நீங்காமல் இன்றும் உள்ளது.
அறிவுலக ஆசான் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1962ஆம் ஆண்டு பொங்கல் மலருக்கு எழுதிய கட்டுரையை நினைவு கூர்ந்தால், முரசொலியின் பணி இன்றைய இளைஞர் சமுதாயத்திற்கு முழுவதும் புரிந்திடும்:-
முரசொலி -
“இசைக்கு அடுத்தபடியாகத் தமிழரின் செவிக்கும் சிந்தனைக்கும் இனிமை பயப்பதாகும்.
போர்க் கருவியாக மட்டுமல்ல, புகழ்க் கருவியாக, கொடை அறிவிக்கும் கருவியாகக் கொள்ளப்பட்டுத் தமிழகத்தில் ஏற்றம் பெற்றிருந்த ஒன்றாகும். கேட்டுத் தமிழர் இன்புறுவர்; மாற்றார் மருளுவர்; இறுதி வெற்றி பெற்றுத் தமிழர் மகிழ்ச்சி கொள்வர்.
முரசொலி -
பிறர் வாழ்வையும் உரிமையினையும் மதிக்க மறுத்ததில்லை. தமது உரிமையை அழித்திட எவர் முனையினும் பொறுத்துக் கொண்ட தில்லை; தன்மானத்தைப் பறித்திட முயல்வோரைத் தம் தாள்பணியவைக்கத் தவறியதில்லை.
வீரத்தினை விளக்கிற்று; வீண் ஆரவாரத்தை ஆர்ப்பரிப்பைக் காட்டும் கருவியாக இருந்ததில்லை.
எனும் கருவி, தமிழரின் வீரத்தை, வெற்றியை, ஏற்றத்தைக் காட்டி நின்றது போலவே, தம்பி கருணாநிதியின் கைவண்ணம் நிரம்பிய கருத்துக் கோட்டம் எனத்தகும் “இதழ் வடிவு” தமிழகச் சிறப்பினை நாம் உணரச் செய்திடும் செயலினைச் செம்மையாகச் செய்துவருகிறது.
இதழ், கருத்தொலியும் காவிய ஒலியும், கவிதை ஒலியும் குறிக்கோள் ஒலியும் கொண்டதாகத் திகழ்ந்து வருவதனை நாடு நன்கறியும்.
மலர், ஆண்டுதோறும் நமக்குக் கிடைத்திடும் அணிகலன்.
மலர், கேடு களைந்திட விழைவோர்க்கு, நாடு வாழ்ந்திட வழி காண விரும்புவோர்க்கு, தேவைப்படும் எழுச்சியைத் தரவல்லது.
வாழ்க; வளர்க; தம்பி கருணாநிதியின் தொண்டு வெல்க, வளர்க!”
பேரறிஞர் அண்ணா அவர்களால் இவ்வாறு பலபடப் பாராட்டப்பட்ட, முரசொலி - என்னுடைய முதல் குழந்தை என்று அனைவராலும் எந்நாளும் பாராட்டப்படும் “முரசொலி” இதே நாளில்தான் - 73 ஆண்டுகளுக்கு முன்பு - 10-8-1942
அன்றுதான் - தொடங்கப்பட்டது. இன்று தமிழகத்திலே உள்ள உடன்பிறப்புகளால் ஆர்வமுடன் ஆதரிக்கப்படுகின்ற “முரசொலி” ஏடு, தொடக்கத்தில் திங்கள் தோறும் ஆயிரக்கணக்கிலே அச்சிடப்பட்டு ஊர்தோறுமுள்ள திராவிட இயக்கக் கிளைகளுக்கு அனுப்பப்பட்டது. அந்தக் கிளைக் கழகத்தினர் திரட்டித் தரும் நன்கொடைகளினால் “முரசொலி” துண்டு அறிக்கை வெளியிட்டு, கழகத்தை முரசொலி வளர்க்க, முரசொலியைக் கழகம் வளர்த்தது. என்னுடைய எழுத்துக் கலையை வளர்க்கவும் “முரசொலி” காரணமாக அமைந்தது. “முரசொலி”க்குப் பல எழுத்தாளர்கள் உண்டு. எனினும் நான் ஆயுள் கால நிரந்தர எழுத்தாளன். “சேரன்” என்பது என் புனை பெயர். தொடக்கத்தில் இதற்குச் செயலாளர் தென்னன், பொருளாளர் டி.எஸ். ராஜகோபால் - இருவரும் இன்றைக்கு இல்லை. முரசொலியின் நினைவில் என்றும் வாழ்வர்.
இந்த முரசொலியின், பொன்விழா மலருக்கு நான் எழுதிய கவிதையில்,
“அஞ்சுக அன்னையிடம் உயிர்ப்பால் அருந்தி, அய்யாவின் கொள்கையின்பால், உவப்பால் தவழ்ந்து அண்ணாவின் பேரன்பால் ஆளாகி வளர்ந்து, இளமைத் துடிப்பால் இந்திப் போர்ப்படை கூட்டி இலட்சிய முனைப்பால் முரசொலிக்க வந்தவன் நான்! ஆதிமகன் வள்ளுவன் வழி முப்பால் தந்தவளே! அணுப்பொழுதும் அப்பால் சென்றிடாமல் - எனை அரவணைத்துக் காக்கின்ற தமிழே! உன் சார்பில் போர்க்கள முரசின் பொன்விழா மலரை ஆர்த்தெழும் உடன்பிறப்பாளர் அனைவருக்கும்;
நெஞ்சில் என்றும் பூத்திருக்கும் தாய், தந்தை, பெரியார், அண்ணா - மற்றும் வாழ்த்துகின்ற ஆன்றோர் சான்றோர்க்கும்; காணிக்கை ஆக்குகின்றேன்” - என எழுதியிருந்தேன். கழகப் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்கள்
முரசொலியின் பொன்விழாவுக்கு எழுதிய வாழ்த்துரையில்,
“திராவிட முன்னேற்றக் கழகத்தின் கேடயமாகத் திகழ்ந்துவரும் முரசொலி, தமிழ்ப் பயிர் வளர்க்கும் பண்ணையின் ஏராகவும் விளங்குகின்றது. எத்தனையோ அரசின் தடைகள், வழக்குகள், எதிர்பாராத இழப்புகள் இத்தனையும் தாங்கிக்கொண்டு, வேலாழி முகத்த களிறு என வீறு நடைபோட்டு வருவது முரசொலி. அதன் பொன்விழாவில் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு நின் பயணம் தொடர்க என்று வாழ்த்துகிறேன். இனமும் மொழியும் இழந்த மானம் மீட்டுத், தமிழர் தலைநிமிர்ந்து வாழும் வழிகாணச் செய்திடும் நாள் காண நீ வாழ்க என்று வாழ்த்துகிறேன். வாழ்த்திவிட்டு முரசொலியைப் புரட்டுகிறேன், கலைஞர் திருமுகத்தின் மறு தோற்றமாகவே காட்சி அளிப்பதைக் காண்கிறேன், வாழ்த்துகிறேன் மறுபடியும் - எந்நாளும் வாழ்கவென்றே” என்று குறிப்பிட்டதையும் இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன். முரசொலியின் வளர்ச்சிக்கு - அந்த இதழையே போர்வாளாகவும், கேடயமாகவும் ஏந்திக்கொண்டு கழகத்தை நடத்துகின்ற என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே காரணம். அவர்களுக்கெல்லாம் இந்த நேரத்தில் நன்றி செலுத்துகிறேன். கழகத்தின் குரலாக விளங்கிவரும் “முரசொலி”, தமிழ் இனத்தின் எழுச்சிக்காகவும், மொழியின் முதன்மைக்காகவும், உரிமைகளை மீட்கவும் தனது தூய பணியினைத் தொடர மேலும் வளர்த்தெடுப்பீர்! முரசொலி, கல்லிலும் முள்ளிலும் பயணம் செய்தது! முரசொலி, காட்டாறுகள் பலவற்றைக் கடந்து வந்தது! முரசொலி, கடும் விலங்குக் கூட்டத்தை வென்று வந்தது! முரசொலி, தமிழகத்தின் அரசியல்களத்தில் என்றும், இன்றும் ஒலித்து வருவது! இந்த முரசொலியின் 73வது பிறந்த நாளில் எனது அன்பு உடன்பிறப்புகளாம், அதன் வாசகர்கள் அனைவருக்கும், முரசொலியின் நிறுவனர் என்ற முறையில் உளம் நிறைந்த வாழ்த்துகள்!
மு.க. 10-8-2015
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 53 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 53 PDF ↗