தொகுதி 53 · கடிதம் 3971
அறவழியில், அமைதிவழியில் ஆர்ப்பாட்டம்!
2015-08-07
உடன்பிறப்பே,
நேற்றையதினம், (6-8-2015) என்னுடைய “உடன்பிறப்பு மடலில்” தமிழகத்திலே 1971ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சியிலே மதுவிலக்குக் கொள்கையை என்ன காரணத்தால் ரத்து செய்யப்பட்டது என்பது பற்றியும், ஆனால் 1974ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சியிலேயே மீண்டும் மதுவிலக்கு தமிழகத்திலே நடைமுறைப்படுத்தப்பட்டது என்றும் விளக்கமாகக் குறிப்பிட்டிருந்தேன். ஆனாலும் சிலர் விடாப்பிடியாக, கழகத்தின் மீது எதையாவது சொல்லிக் குறைகூறிட வேண்டுமென்பதற்காக, தி.மு. கழக ஆட்சியிலே மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டதென்பதை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திலே உள்ள நிதிநிலை காரணமாக மதுவிலக்கு ஒத்தி வைக்கப்பட்டு, மீண்டும் கொண்டு வரப்பட்டுவிட்டது என்ற உண்மையினை மறைக்கிறார்கள்.
1971இல் தி.மு.கழகம் மதுவிலக்குக் கொள்கையை ஒத்திவைப்பதற்கு முன்பு தமிழ்நாட்டில் மது விற்பனை செய்யப்படவில்லையா என்றால், விற்பனை செய்யப்பட்டுத்தான் வந்தது. பெரிய பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள், ஏன் நடுத்தர மக்கள்கூட மது அருந்துவதற்கான “பர்மிட்”களை வாங்கிக் கொண்டு, மதுக்களை விற்பனை செய்யும் கடைகளிலிருந்து மது வகையறாக்களை வாங்கி அருந்திக்கொண்டுதான் இருந்தார்கள். வசதி குறைந்தோர், கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பவர்களிடம் வாங்கிக் குடித்தார்கள். எனவே முன்பு எந்தக் காலத்திலும் மது இல்லாமல் இருந்ததில்லை. ஏன் சுதந்திரம் பெறுவதற்கு முன்பேகூட, மது விற்பனை நடந்து கொண்டிருந்ததால்தான், அண்ணல் காந்தி அடிகளே கள்ளுக்கடை மறியல் என்ற பெயரால் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினார். ஏன், தந்தை பெரியார் அவர்களே கள்ளுக்கடை மறியல் செய்ததோடு, தனக்குச் சொந்தமான தோப்பில் கள் இறக்குவதற்கான 500 தென்னை மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்தார். 1971ஆம் ஆண்டு மதுவிலக்கை ஒத்திவைத்த தி.மு. கழகம், 1973இல் தொடங்கி, 1974இல் மீண்டும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்திய போதிலும், தி.மு. கழகத்தைப் பிடிக்காத சிலர் 1971 ஆம் ஆண்டு மதுவிலக்கை ஒத்திவைத்ததை மட்டும் மீண்டும் மீண்டும் கூறிவருகிறார்கள். அவ்வப்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப, ஒரு முடிவினை எடுப்பதும், பிறகு சூழ்நிலை மாறிய பிறகு எடுத்த முடிவினைத் திரும்பப் பெறுவதும் அல்லது மாற்றிக்கொள்வதும் முன் எப்போதும் நடந்தது இல்லையா? பேரறிஞர் அண்ணா இருந்தபோதே, தி.மு. கழகம் திராவிட நாடு பிரிவினை கோரியது. பின்னர் அந்தக் கோரிக்கையைக் கைவிடவில்லையா? தந்ைத பெரியார் முதலில் திராவிட நாடு கேட்டார், பின்னர் 1956க்குப் பிறகு, அதை மாற்றிக் கொண்டு “தமிழ்நாடு தமிழருக்கே” என்று கூறவில்லையா? மத்தியில் காங்கிரஸ் கட்சி இந்தி மொழியை ஆட்சிமொழி என்று அறிவித்தது. பின்னர் ஆங்கிலத்தை இணை ஆட்சிமொழி என்று அறிவிக்கவில்லையா? 1937ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் நான்கு மாவட்டங்களில் மட்டும் மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்திய மூதறிஞர் ராஜாஜி, இந்தியைக் கட்டாயப் பாடமாகக் கொண்டுவந்தவர். பின்னர் அவரே இந்தியை எதிர்க்கத் தொடங்கி, அண்ணா அவர்களுடன் இணைந்து மேடைகளில் முழங்கவில்லையா? அப்போதெல்லாம் அவர் இந்தியைத் தமிழகத்திற்குப் பாடமாகக் கொண்டு வந்ததைச் சொல்லி, குற்றஞ்சாட்டவில்லையே? ஏன் நம்மை வேகமாகத் தாக்கிடும் பா.ம.க. நிறுவனர் ஒரு தோதவில் தி.மு.க.வை ஆதரித்துவிட்டு, அடுத்த தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதரித்தது கிடையாதா? திராவிடக் கட்சிகள் துணையுடன் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டுவிட்டு, இப்போது தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய திராவிடக் கட்சிகளுடன் இனி உறவே இல்லை என்று மாற்றிக் கொள்ளவில்லையா? என், தமிழ்நாட்டில் மதுவிலக்கு என்று பேசுகின்ற இதே ராமதாஸ், பக்கத்திலே உள்ள புதுவை மாநிலத்திலே மதுவிலக்குக் கொள்கையைக் கொண்டுவர வேண்டுமென்று ஒரு நாளாவது பேசியிருக்கிறாரா? கொள்கைகளையும், நிலைப்பாட்டையும் காலப்
போக்கில் அந்தந்தக் காலத்தின் தேவைக்கேற்பவும், கட்சியின் எதிர்காலம், மக்கள் நலன் ஆகியவற்றைக் கருதியும் மாற்றிக் கொள்வது என்பது மாபாதகம் அலல. உலக வரலாற்றில் ஒரு நூறு சான்றுகளை எடுத்துக்கூற முடியும்.
இதே மதுவிலக்குப் பிரச்சினையிலும் மாறி மாறி முடிவு எடுக்கப்பட்டதற்குச் சில உதாரணம் கூறுகிறேன். அமெரிக்க நாட்டிலே 1919ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 16ஆம் நாள் அரசியல் சட்டத்தையே திருத்தி, மதுவிலக்குச் சட்டத்தை அமலுக்் குக் கொண்டுவந்தார்கள். ஆனால் 1938ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 20ஆம் தேதியன்று மதுவிலக்குச் சட்டம் அங்கே ரத்து செய்யப்பட்டது.
பின்லாந்து நாட்டில் 1907ஆம் ஆண்டு மது விலக்குச் சட்டம் கொண்டு வரப்பட்டது; 1932இல் அந்த நாட்டில் மதுவிலக்குச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. நார்வே நாட்டில் 1919ஆம் ஆண்டு மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது; அது 1927இல் ரத்து செய்யப்பட்டு விட்டது. நியூபவுண்ட்லாண்ட் நாட்டில் 1915இல் மதுவிலக்கை அமல் செய்தார்கள்; 1924இல் அதை ரத்து செய்துவிட்டார்கள். துருக்கியில் 1920இல் மதுவிலக்கை அமல்படுத்தினார்கள்; 1924இல் அதை ரத்து செய்துவிட்டார்கள்.
உலக அளவில் இவ்வாறு பல்வேறு நாடுகளில், இந்த மதுவிலக்குக் கொள்கை தள்ளாடி தள்ளாடித்தான் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. ஏன் என்றால் மதுவிலக்குக் கொள்கை அல்லவா? 1971ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மூலமாக மது விலக்கை ஒத்திவைத்தபோதுகூட, நிதி நிலை அறிக்கையிலே நான் என்ன உரைத்தேன் என்பதை 6ஆம் தேதிய எனது மடலில் குறிப்பிட்டிருக்கிறேன். அதே நிதிநிலை அறிக்கையில், “தமிழகத்தில் மட்டும் மதுவிலக்குச் சட்டத்தைத் தீவிரப்படுத்துவதால் மதுவிலக்கின் வாயிலாக நாம் காப்பாற்ற விரும்பும் ஒழுக்கம், நாணயம், Gremio இவைகளையே பாதுகாக்க வாய்ப்பு இல்லாமல் போகிறது. எனவே உயர் தனிக் கொள்கையான மதுவிலக்கில் இந்த அரசு தொடர்ந்து நம்பிக்கை வைத்திருக்கிறது எனினும், இந்திய நாடு முழுவதுக்குமாக இந்தக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு பொறுப்பேற்றுக் கொள்ளும்வரையில் தமிழகத்தில் மது விலக்குச் சட்டம் செயல்படுவதை ஆகஸ்ட் 30ஆம் நாளில் இருந்து ஒத்திவைக்க இந்த அரசு முடிவுசெய்கிறது
என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுதான் குறிப்பிட்டேன். மேலும் நண்பர் எம்.ஜி.ஆர். தலைமையில் மதுவிலக்குப் பிரச்சாரக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது என்பதையும் மறந்துவிடக் கூடாது.
இன்னும் சொல்லப்போனால், மதுவிலக்கு குறித்து 13- 9-1969இல் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையின் இறுதியில், “மதுவிலக்குக் கொள்கையில் தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள எந்தத் தனி மனிதனுக்கோ, எந்தக் கட்சிக்கோ உள்ள அக்கறையைவிட, அந்தக் கொள்கை மக்களுக்குத் தேவையானது என்பதில், தி.மு. கழகத் தலைவரும், தமிழக முதல்வருமான கலைஞருக்கு அதிக அக்கறையும், அதிகப் பிடிப்பும் உண்டு என்பதை மற்றையோரைவிட அழுத்தமாக என்னால் துணிந்துகூற முடியும்” என்று தெரிவித்ததையும், அதற்குப் பின் அவரே “ஆனந்த விகடன்” பத்திரிகையிலே “நான் ஏன் பிறந்தேன்” என்ற தலைப்பிலே எழுதிய நீண்ட தொடர் கட்டுரையிலே விரிவாக எழுதியதையும் அ.தி.மு.க.விலே தற்போதுள்ளவர்கள் வேண்டுமானால் மறந்திருக்கலாம்; ஆனால் நான் மறக்கவில்லை. இந்த அளவுக்கு மதுவிலக்குக் கொள்கையிலே உறுதியாக இருந்த அருமை நண்பர் எம்.ஜி. ஆர்., பின்னர் முதலமைச்சராக இருந்தபோதுதான், மதுவிலக்கு சம்பந்தமான சட்டங்கள், திட்டங்கள் இவைகள் எல்லாம் மாற்றப்பட்டன. 1-5-1981இல் சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் கூட திறக்கப்பட்டன. ஆனால் குடிப்பவர்கள் “பெர்மிட்” ஒன்று பெற வேண்டுமென்று விதிமுறைகளில் கூறப்பட்டது. 1981 வரை தமிழ்நாட்டில் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகள் இல்லை. 1981க்குப் பின்பு தான் இந்த மதுபானங்களைத் தயாரிக்கின்ற உரிமையை நான்கு தனி நபர்களுக்கும், கூட்டுறவுத் துறை நிறுவனத்திற்கும் அளிக்கப்பட்டது. கள்ளுக்கடைகள் ஏல முறையில் அனுமதிக்கப்பட்டன. சாராய உற்பத்தி 10 தனிப்பட்ட நபர்களுக்குக் கொடுக்கப்பட்டது. சாராயத்தை விநியோகம் செய்கின்ற மொத்த வியாபாரம் 15 தனிப்பட்ட நபர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இவை எல்லாம் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களாகும்.
தற்போது தமிழ்நாடு முழுவதும் ஏன் மக்கள் தன்னெழுச்சியாக நடத்தும் இந்தப் போராட்டங்கள்? எப்படி இது தொடங்கியது? காந்தியவாதி சசிபெருமாள்! அறுபது வயதைக் கூட எட்டவில்லை. குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை மூட வேண்டுமென்பதற்காகத்தான் போராட்டம். அந்த ஒரு கடையை மூடுவதற்கு ஒப்புக்கொண்டிருந்தால் பிரச்சினையே வந்திருக்காது. தமிழகமெங்கும் போராட்டமும் பெருகியிருக்காது. ஆனால் இந்த ஆட்சியிலே எதைக் கவனித்தார்கள்; இதைக் கவனிப்பதற்கு? “செல்போன் டவரில்” எத்தனை மணி நேரம் அவரால் இருக்க முடியும்? சம்பந்தப்பட்டவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் அங்கே வந்து பிரச்சினையைப் பேசி முடிவுகண்டிருந்தால், சசிபெருமாள் இறந்திருப்பாரா? இப்போது என்ன நிலைமை? அவர் இறந்து எட்டு நாட்களாகியும், அவரது உடலை அடக்கம் செய்ய முடியவில்லை. குடும்பத் தலைவனைப் பறிகொடுத்த அந்தக் குடும்பத்தினர் போராட்டத்திலும், சிறையிலுமாக நாட்களைத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அவருடைய மூத்த மகன் நேற்றையதினம் சென்னை உயர் நீதிமன்றத்தி லேயே தன் தந்தையின் மரணம் குறித்து நீதி விசாரணை கோரி வழக்குத் தொடுத்து, நீதிமன்றம் அரசுக்கு “நோட்டீஸ்” அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இதே நீதி விசாரணை கோரி நான் அறிக்கை விடுத்து எத்தனை நாட்களாயிற்று? இந்த ஆட்சியினர் கேட்டார்களா? அப்போதே கேட்டிருந்தால், இன்றைக்குச் சசி பெருமாளின் மகனே நீதிமன்றம் செல்கின்ற அளவுக்கு நிலைமை முற்றியிருக்குமா?
குமரி மாவட்டத்தில் தொடங்கிய பிரச்சினை இப்போது தமிழகம் முழுவதிலும் தீப்பரவி எரிந்து கொண்டிருக்கின்றது. “ரோம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்” என்பார்களே, அதுபோலத்தான் அ.தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. இதன் விளைவு என்ன தெரியுமா? நாடெங்கும் நடைபெறும் போராட்டம் காரணமாக, சேலம் மாவட்டத்தில், வாழப்பாடியை அடுத்த புதுப்பாளையத்தில் நடைபெற்று வந்த ஒரு டாஸ்மாக் கடைக்குத் தீவைக்கப்பட்டதின் காரணமாக, கடைக்குள் இருந்த ஊழியர் செல்வம் என்பவர் சிக்கி உயிரிழந்திருக்கிறார். தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்
சங்க மாநிலத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி கூறும்
போது, “வாழப்பாடியில் நடந்த சம்பவத்திற்கு முழுப் பொறுப்பும் அரசுதான். பணி முடிந்ததும் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ள சூழலில் போலீஸ் பாதுகாப்பு இரவிலும் அளித்திருந்தால் இந்தச் சம்பவம் நடக்க வாய்ப்பில்லை. இந்தச் சம்பவத்திற்கு அரசுதான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். இந்த ஆட்சியின் அலட்சியம் காரணமாக மறைந்த செல்வத்தின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கெல்லாம் பொறுப்பு ஏற்க வேண்டியது யார்? இந்தத் துறைக்கென ஒரு அமைச்சர் இருக்கிறாரா இல்லையா? எதிர்க்கட்சிகளையெல்லாம் தாக்கி அறிக்கை விடுவதுதான் அவருக்கு வேலையா? எந்தெந்த அமைச்சர்கள் மீதெல்லாமோ நடவடிக்கை எடுக்கின்ற முதலமைச்சர், இந்த அமைச்சர் அடுக்கடுக்காகத் தவறுகளைச் செய்த போதிலும் பொறுமையாக இருப்பதன் மர்மம் என்ன? ஆனால் என்ன நடக்கிறது இந்த ஆட்சியிலே? ஏழு நாட்களுக்குப் பிறகு, தலைமைச் செயலகத்திற்கு முதலமைச்சர் வருகை தந்தார் என்று நாளிதழிலேயே செய்தி வருகிறது. வாரத்திற்கு ஒரு முறை வருகிற போதும் தலைமைச் செயலகத்திலே என்ன நடக்கிறது? 4-8-2015 தேதிய “தினமலர்” நாளிதழில் வந்த செய்தியில், “முதல்வர் ஜெயலலிதா கடந்த 27ஆம் தேதி தலைமைச் செயலகம் வந்தார். அதன்பின், நேற்று (3-8-2015) பகல் 12.35 மணிக்குத் தலைமைச் செயலகம் வந்தார். அவரை அமைச்சர்கள் வரவேற்றனர். பஸ் நிலையங்களில், பாலூட்டும் பெண்களுக்கான அறைகளை, முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். சட்டம், ஒழுங்குப் பிரச்சினை குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். உளவுத் துறை ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை தெற்கு மண்டல போலீஸ் இணை கமிஷனராக பொறுப் பேற்றுள்ள அருண், சென்னை வடக்கு மண்டல போலீஸ் கூடுதல் கமிஷனர் ரவிக்குமார் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். நிகழ்ச்சிகள் முடிந்தபின், முதல்வர் பகல் 1.25 மணிக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்டுச்
சென்றார்” என்று கூறப்பட்டுள்ளது.
ஆக ஒரு வாரம் கழித்துத் தலைமைச் செயலகத்திற்கு வந்துள்ள முதல் அமைச்சர் 50 நிமிடங்கள் மட்டுமே தலைமைச் செயலகத்தில் இருந்திருக்கிறார் என்பதும், அந்த நேரத்திற்குள் தான் இவ்வளவு பணிகளையும் நிறைவேற்றினார் என்பதும் தெரிகிறது? ஒரு வாரத்திற்கு ஒருமுறை வருகின்ற முதல் அமைச்சர், வரும்போது ஏதேதோ திட்டங்களைத் தொடங்கி வைத்துவிட்டு, அவற்றைப் புகைப்படங்களாக எடுத்து வைத்துக் கொண்டு, ஒவ்வொரு நாளும் முதலமைச்சர் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்ததைப் போலவும், ஏதோ ஒரு திட்டத்தைத் தொடங்கி வைத்ததைப் போலவும், ஒவ்வொன்றாகப் பத்திரிகைகளுக்கு அரசு செய்திக் குறிப்புகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு உடந்தையாகத் தலைமைச் செயலாளரும், ஆலோசகரும் புகைப்படங்களிலே காட்சி அளிக் கிறார்கள். நாளைய தினம் வேறொரு அரசு அமைந்து, இவ்வாறு நடைபெறும் முறைகேடுகளுக்கு இவர்களும் உடந்தையா என்ற கேள்வி வரும்போதுதான் உண்மை புரியும். 10ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின்போது, நேற்றைய தினமும் இன்றும் நான் தெரிவித்துள்ள விவரங்களையெல்லாம் பொது மக்களிடம் எடுத்து விளக்கிட வேண்டும். நான் எனது முதல் அறிவிப்பிலே தெரிவித்ததைப் போல ஆர்ப்பாட்டங்கள் அறவழியிலே, அமைதியான முறையிலே நடைபெற வேண்டும். கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் முழு வெற்றி என்ற நிலையை உருவாக்க வேண்டும். அன்புள்ள, மு.க. 7-8-2015
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 53 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 53 PDF ↗