தொகுதி 53 · கடிதம் 3966
நீதி விண்ணுயர எழுந்து நிற்கும்; வெற்றி முரசம் ஒலிக்கும்!
2015-05-27
உடன்பிறப்பே,
ஜெயலலிதா, சென்னை மாநகரில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைப் பற்றியோ, சட்ட விதிமுறைகளைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல், கொண்டுவந்து குவிக்கப்பட்ட கட்சிக்கார்களின் கொண்டாட்டங்களுக் கிடையே, மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் நடைபெற்று ஐனநாயக ரீதியாக மக்களிடம் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று தற்போது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரா என்றால் கிடையாது. ஜெயலலிதா தன்னுடைய வருமானத்திற்கு அதிகமாக 66 கோடி ரூபாய்க்கான சொத்துக்களைச் சேர்த்தார் என்ற வழக்கு கடந்த 19 ஆண்டுகளாக நடைபெற்று, இறுதியாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் திங்கள் 27ஆம் தேதி, பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அவர்களால், நான்காண்டு காலம் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தண்டிக்கப்பட்டுச் சிறையிலே இருந்த ஜெயலலிதா ஜாமீனில் வெளியே வர முயற்சிசெய்து, உச்ச நீதிமன்றம்வரை அந்த வழக்கு சென்று, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டத்து அவர்கள், முறைப்படி கேட்கப்பட வேண்டிய; கர்நாடக அரசின் கருத்தைக்கூடக் கேட்காமல், வெகுவேகமாக விசாரித்து, நீதிமன்றத்தின் முன் வைக்கப்படாத கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு 17-10-
2014 அன்று ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்தார்.
அவ்வாறு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவித்து, இதே போன்ற வேறு வழக்குகளில் மேற்கொள்ளப்படாத வியப்புக்குரிய முன்மாதிரியாக ஜெயலலிதாவின் அப்பீல் மனுவை மட்டும் கர்நாடகா உயர் நீதிமன்றம் மூன்று மாதங்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பளிக்க
வேண்டுமென்று காலவரம்பு நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்த போது, அந்தத் தீர்ப்பு பற்றியும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டத்து அவர்கள் பற்றியும் அப்போதே கடுமையான விமர்சனங்கள்
இந்தியா முழுவதும் ஏடுகளில் வெளிவந்தன.
அதன் பிறகு ஜெயலலிதா செய்த மேல்முறையீட்டின் மீது பெங்களூர் உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வில் ஜனவரி 5 துவங்கி மார்ச் 11வரை வழக்கு நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்களிடம் நீதிமன்றத்திலேயே, விசாரணையின்போதே, அந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி அவர்கள் அவ்வப்போது தனது மன ஓட்டத்தின் பிரதிபலிப்பாகப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து, அந்தக் கருத்துகள் எல்லாம் ஏடுகளிலே தொடர்ந்து வெளிவந்தன. குறிப்பாக அவர்களுடைய வாதத்தில் குற்றச்சாட்டுகளை முழுவதும் மறுப்பதற்கான எந்தவிதமான ஆ தாரங்களும் எடுத்துக்காட்டப்படவில்லை என்றும், குன்ஹா அவர்களின் தீர்ப்பிலே போடப்பட்டிருந்த 15066 மேற்பட்ட முடிச்சுகள் எதையும் அவிழ்க்கவில்லை என்றும், அவர்களின் வாதத்தில் போதிய மதிப்பெண்கள் பெறவில்லை என்றும், குன்ஹா அளித்த தீர்ப்பையே மீண்டும் தான் தரவேண்டிய நிலைதான் உள்ளதென்றும் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். எனவே தன்னிச்சையாகப் பல்வேறு நாட்களில் வழக்கு குறித்துத் தெரிவித்த எதிர்மறைக் கருத்துகளின் மூலம், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு எவ்வாறு அமையப்போகிறது என்று முன்கூட்டியே பல தரப்பினராலும் யூகிக்கப்பட்டது. ப
இதற்கிடையே உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு (நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே. அகர்வால், பிரபுல்ல சி. பந்த் அடங்கியது) அளித்த ஒரு தீர்ப்பில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வரவிருந்த தீர்ப்பைப் பற்றிக் குறிப்பிடும்போது, “குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றத்தின் முக்கியத்துவத்தை உயர்நீதிமன்ற நீதிபதி (குமாரசாமி) கருத்திலே கொள்ள வேண்டும். சமூகத்தை; ஊழல், எப்படி (கரையான் போல) அரித்து வருகிறது என்பது குறித்து உயர் நீதிமன்றம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். நீதிமன்றத்தின் முன்னுள்ள சாட் சியங்களை முழுமையாகவும் ஒருங்கிணைத்தும் மதிப்பீடு செய்து தீர்ப்பளிக்க வேண்டும். விருப்பு வெறுப்பின்றி அளிக்கும்
தீர்ப்பு பாரபட்சமின்றித் தீர்க்கமாக எடுத்துரைக்கப்பட வேண்டும்” என்று மிக வலிமையான அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இன்னும் சொல்லப்போனால், அரசியல் சாசன அமர்வுக்குக் காரணமான இந்த வழக்கிலே, உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி. லோகுர் அவர்கள், “ஒரு கிரிமினல் வழக்கை எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு இந்த மேல் முறையீடு வழக்கு ஒரு சான்று. கிரிமினல் வழக்குகளில் நீதி வழங்கும் முறை தோற்றுவிட்டது. இதைச் சீர்படுத்த வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது” என்று இந்த வழக்கு எப்படிப்பட்ட பின்னடைவுகளை நீதித் துறையிலே ஏற்படுத்தி வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
உச்ச நீதிமன்ற அமர்வு இவ்வாறு எந்த வழக்கிலும் இல்லாத அளவுக்கு அசாதாரணமான கருத்துகளைத் தெரிவிக்கக் காரணம் என்ன?
உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்களே பெங்களூர் வந்ததாகவும், குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு கிடைத்திடச் செய்யப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் செய்திகள் பரவலாகப் பேசப்பட்டன என்ற போதிலும், நாம் அவற்றைக் கிஞ்சிற்றும் நம்பவில்லை. 1 1-5-2015 அன்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, தனது தீர்ப்பில் ஜெயலலிதாவை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்தார். அதனை அ.தி.மு.க.வினர் எதிர்பாராதது நடந்தே விட்டது என எண்ணி வெற்றியாகக் கொண்டாடினர். ஜெயலலிதாவும் தனது மனசாட்சிக்கு இரட்டைத் தாழ்ப்பாள் போட்டு நெடுந்துயில் கொள்ளச் செய்துவிட்டு நீதி வென்றதாக அறிக்கை விடுத்தார். நம்மைப் பொறுத்தவரையில் நீதிபதி குமாரசாமி நீதிமன்றத்தில் விசாரணை நடத்தியபோது கூறிய மொழிகளுக்கும், வழங்கிய தீர்ப்புக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறதே என்ற சந்தேகம் வந்தது. ஆனால் தீர்ப்பையே திருப்பிப்போட்டு, திகைக்க வைக்கின்ற அளவுக்கு அடுத்த நாளே தீர்ப்பிலே உள்ள மிகப் பெரிய தவறுகள் மற்றும் குளறுபடிகள் குறித்துப் பலரும் தங்கள் கருத்துகளை அச்சமின்றி வெளிப்படையாகத் தெரிவித்தனர். நானும் அந்தத் தீர்ப்பினை ஊன்றிப் படித்தபோது, மிகப் பெரிய கணிதப் பிழையினைக்
கண்டேன். அந்தப் பிழையே தீர்ப்புக்கு அடிப்படைக் காரணியாக அமைந்திருந்ததையும் உணர்ந்தேன். மன்னன் பாண்டிய நெடுஞ்செழியன், தான் தவறாகத் தீர்ப்பு அளித்துவிட்டதை அறிந்தவுடன், “யானோ அரசன், யானே கள்வன்” என்று மனதார ஒப்புக்கொண்டு, அரியாசனத்திலிருந்து உருண்டு விழுந்து உயிர் துறந்தான். அதன் மூலம் “நீதி வழுவா நெடுஞ்செழியன்” என்ற புகழ்ப் பெயர் நிலைத்திடலாயிற்று. அவன் நீதி தெரிந்தவன் - நீதி உணர்ந்தவன்!
ஜெயலலிதா தரப்பினர் இந்தியன் வங்கியிலே பத்து முறை கடன் பெற்ற தொகைகளையெல்லாம் நீதிபதி குமாரசாமி, வரிசையாகக் குறிப்பிட்டு, அதையெல்லாம் கூட்டி 24 கோடி ரூபாய் அவர்கள் கடனாகப் பெற்றிருப்பதாகவும், அந்தத் தொகையை வருவாயாக எடுத்துக்கொண்டால், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு அவருடைய உண்மையான வருமானத்தில் 8 சதவிகிதம்தான் என்றும், அவ்வாறு பத்து சதவிகிதத்திற்குக் குறைவாக வருவாய்க்கு அதிகமாகச் சொத்து சேர்க்கப்பட்டிருந்தால், அதனைக் குற்றமாகக் கருதி தண்டனை வழங்கத் தேவையில்லை என்றும் எழுதித்தான் இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா தரப்பினரை விடுதலை செய்திருக்கிறார். இந்த விவரங்கள் உண்மையானவையாக, நிரூபிக்கக் கூடியவையாக இருந்தால், ஜெயலலிதாவின் விடுதலை பற்றி இருவேறு கருத்துகளுக்கே இடம்கிடையாது. ஆனால் ஜெயலலிதா தரப்பினர் இந்தியன் வங்கியிலிருந்து பெற்ற கடன்கள் என்று வரிசையாகப் பட்டியலிட்டு, அதன் கூட்டுத் தொகை 24 கோடி ரூபாய் என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பிலே தெரிவித் திருப்பது முற்றிலும் தவறான புள்ளி விவரமாகும். எப்படியென்றால், ஜெயலலிதா தரப்பினர் பத்து முறை இந்தியன் வங்கியிலே கடன் பெற்ற அந்த பத்துத் தொகைகளையும் கூட்டினால், பத்து கோடி ரூபாய்தான் வருகிறதே தவிர, நீதிபதி தெரிவித்தவாறு 24 கோடி ரூபாய் என்று கூட்டுத்தொகை வர வாய்ப்பே இல்லை. உணமையான கூட்டுத் தொகையின்படி பார்த்தால், ஜெயலலிதா அவருடைய வருவாயைவிட 76 சதவிகிதம் கூடுதலாகச் சொத்துக் குவித்திருக்கிறார்.
| 16 சதவிகிதம் என்பதுகூட தவறு; எல்லா தவறுகளையும் சேர்த்தால் 119 சதவிகிதத்திற்கு மேல் சொத்துக்களை ஜெயலலிதா
குவித்துள்ளார் என்றும் அதன்படி அவர் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருத்துகள் கூறப்படுகின்றன.
அது மாத்திரமல்ல; வருவாய்க்கு மேல் சொத்துக் குவிப்பு பத்து சதவிகித அளவுக்குள் இருந்தால், அதற்குத் தண்டனை இல்லை என்ற விதி, தற்போது நடைமுறையிலே உள்ள ஊழல தடுப்புச் சட்டத்திலே இடம்பெறவில்லை என்றும், 1988ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோதே இந்தச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தில் அப்படிப்பட்ட ஓர் அம்சம் இடம் பெறவில்லை என்றும் விரிவாகவும், விளக்கமாகவும் பலராலும் எடுத்துக் கூறப்பட்டது. இந்த விவரங்களையெல்லாம் பலரும் எடுத்துக்காட்டி, தீர்ப்பின் அடிப்படையிலேயே இவ்வாறு இமாலயத் தவறு உள்ளது, எனவே இந்தத் தீர்ப்பை மாற்ற வேண்டும், அதற்கு உதவியாக இந்த வழக்கில் முக்கிய முதல் நிலைப் பங்காற்றிவரும் கர்நாடக அரசுதானே உச்ச நீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்ய வேண்டுமென்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆங்கில நாளிதழ்களில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ள “தி டைம்ஸ் ஆப் இந்தியா” ஏட்டில், - 22-5-2015 அன்று - மூத்த செய்தியாளர், ஏ. சுப்ரமணியம் என்பவர்; ஜெயலலிதாவின் வழக்கில் குமாரசாமி அளித்த தீர்ப்பு பற்றி மிகவும் விளக்கமாக “Curious Case of Amma Assets: Overlooking the obvious” - From Calculation To take on Gifts, Karnataka High Court Order has many Loopholes - என்ற தலைப்பிட்டு எழுதியுள்ளார். அதுபோலவே, பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் என்ற பெண்மணி இந்த வழக்கு பற்றி நன்கு ஆய்ந்தறிந்து “More than Bad Maths: Four Big Errors That Let Jayalalithaa off the Hook” என்ற தலைப்பில் நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கர்நாடக உயர் நீதிமன்றத்தின் 919 பக்கத் தீர்ப்பில் வழக்கத்துக்கு மாறான பல செய்திகளும், முடிவுகளும் இடம்பெற்றுள்ளன என்று குறிப்பிட்டுப் பல ஏடுகளும் வெளியிட்டுள்ள அசைக்க முடியாத வாதங்களில் சிலவற்றை மட்டும் சுருக்கமாகக் கூறுகிறேன்.
அதாவது ஜெயலலிதா தரப்பினர் இந்தியன் வங்கியிலே வாங்கிய பத்து கடன் தொகைகளைக் குறிப்பிட்டு, அதன் கூட்டுத் தொகை 24 கோடி ரூபாய் என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பிலே தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்தப் பத்துக்
கடன் தொகைகளையும் யார் கூட்டினாலும் 10 கோடி ரூபாய்தான்
வருகிறது. பத்து கோடி ரூபாய் வங்கியில் கடன் பெற்றிருக்க, நீதிபதி குமாரசாமி 24 கோடி ரூபாய் கடன்பெற்றதாக மிகைப்படுத்திக் கூறி, ஜெயலலிதா தரப்பினரை வழக்கிலிருந்து விடுதலை செய்திருக்கிறார். எனவே கூட்டுத் தொகையில் 14 கோடியை அதிகமாகச் சேர்த்துச் சொல்லி, தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வங்கியிலிருந்து பத்து முறை வாங்கப்பட்ட கடன் தொகைகளில், இந்தியன் வங்கியிலிருந்து ஜெயா பப்ளிகேஷன்ஸுக்காகப் பெறப்பட்ட 1.5 கோடி ரூபாய் கடன் திருப்பிச் செலுத்தப்பட்டிருக்கிறது. இதை விசாரணை நீதிமன்றமும் முறையான செலவு என ஏற்றுக்கொண்டு விட்டது. வாங்கப்பட்ட கடன்களில் வரிசை எண் 8இல் 1.57 கோடி ரூபாய் சுதாகரன் கடன் பெற்றதாக நீதிபதி குமாரசாமி தீர்ப்பிலே காட்டியிருக்கிறார். ஆனால் உண்மை என்னவெனில், சுதாகரன் 1.57 கோடி ரூபாய் கடன் கேட்டு இந்தியன் வங்கிக்கு விண்ணப்பம் கொடுத்தபோதிலும் - வங்கி 1.33 கோடி ரூபாய்தான் கடன் வழங்க அனுமதித்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த வழக்கினைச் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தபோது, உண்மையாகச் சுதாகரன் கடனாகப் பெற்ற 1.33 கோடி ரூபாயை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டது. ஆனால் நீதிபதி குமாரசாமி, சுதாகரன் கடன் கேட்டு விண்ணப்பித்த 1.57 கோடி ரூபாயை, அவர் கடன் பெற்றதாகக் கூறி, கணக்கிலே எடுத்துக்காட்டி குற்றஞ்சாட்டப்பட்டவர்களை வழக்கிலிருந்து விடுதலை செய்திருக்கிறார்.
நீதிபதி குமாரசாமி வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதையும், வருமான வரி செலுத்துவதையும், வருவாய்க்கான ஆதாரமாக ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால் 2014இல் சுரேஷ்ராஜன் வழக்கில் வருமான வரி செலுத்துவது மட்டுமே நேர்மையான வழியில் சொத்து சேர்ந்ததற்கான ஆதாரம் எனக் கூற முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி இந்த வழக்கில் நீதிபதி குமாரசாமி வருமான வரிக் கணக்கையும், வருமான வரி செலுத்தியதையும் வருமானத்திற்கான ஆதாரமாக ஏற்றுக்கொண்டது சரியல்ல என்று 'டைம்ஸ் ஆப் இந்தியா” ஏடு கூறுகிறது.
ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர், “உச்ச நீதிமன்றம் வருவாய்க்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது சம்மந்தமான பல வழக்குகளில்,
வருவாய் வந்ததற்கான ஆதாரம் ஏற்றுக்கொள்ளும் வகையில் தெளிவுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்” என்றும்; “வருமான வரித் துறை, வருவாய்க்கான ஆதாரத்தைப் பரிசோதித்துப் பார்ப்பதில்லை. எனவே, வருமான வரிக் கணக்கை வருவாய்க்கான ஆதார ஆவணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது” என்றும் கூறியிருக்கிறார்.
ஜெயலலிதாவின் 44வது பிறந்த நாளுக்காகத் தரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் பரிசுகளை அவருடைய வருமானமாக நீதிபதி குமாரசாமி ஏற்றுக்கொண்டிருக்கிறார். இது நெறிமுறைக்கு மாறாக உள்ளது என்று “டைம்ஸ் ஆப் இந்தியா' எழுதியுள்ளது. மேலும் வருமான வரி கட்டுவதன் மூலம், சட்ட விரோதமான சொத்தின் மீது களங்கம் துடைக்கப்பட முடியாது. பொது ஊழியர் களுக்கான நடத்தை விதிகளில் பரிசுகளைப் பெற்றுக்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. பரிசுகளை, வருமானத்துக்குரிய சட்டப்பூர்வமான வழியாக ஏற்றுக்கொண்டால், அது ஊழல் தடுப்புச் சட்டத்தின் முக்கிய நோக்கத்தையே வீழ்த்திவிடும் என்று அந்த ஆங்கில நாளிதழ் குறிப்பிடுகிறது.
தாமதமாகத் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளை நீதிபதி குமாரசாமி ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், பிறந்த நாள் பரிசுகளையும், வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பரிசுப் பணத்தையும் வருமானமாகச் சேர்த்துக் கொண்டதும் ஆச்சரியமான செய்தியாகும். 77 இலட்சம் ரூபாய் வெளிநாட்டுப் பணம் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, 2012ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்திலே வழக்கு நிலுவையிலே இருந்து வருகிறது. ஆனால் நீதிபதி குமாரசாமி அதற்குள்ளாகவே தன்னிச்சையாக அதை வருமானமாக எடுத்துக் கொண்டு, தனது தீர்ப்பிலே ஜெயலலிதாவை விடுதலை செய்திருக்கிறார். அன்னியச் செலாவணி முறைப்படுத்தும் சட்டத்தின்படி (FERA) அமைச்சராக இருக்கும் ஒருவர், வெளிநாடுகளிலிருந்து பரிசுப் பொருள்களைப் பெறுவது முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. எனவே ஜெயலலிதா முதலமைச்சராக இருந்துகொண்டு 77 லட்ச ரூபாய்க்குப் பரிசுத் தொகையாகப் பெற்றிருப்பது அன்னியச் செலாவணி முறைப்படுத்தும் சட்டத்தின்படி குற்றமாகும். எனவே நீதிபதி குமாரசாமி, உச்ச நீதிமன்றத்திலே நிலுவையிலே உள்ள வழக்கின்
முடிவைப் பற்றிக் கவலைப்படாமலும், “பெரா” சட்டத்தை மதிக்காமலும் தீர்ப்பளித்திருக்கிறார்.
28 கோடி ரூபாய்க்குக் கட்டுமானச் செலவு செய்து, கட்டிடங்கள் கட்டப்பட்ட நிலையில், நீதிபதி குமாரசாமி அதை மிகவும் குறைத்து 5 கோடி ரூபாயாகக் குறைத்து விட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை நிரூபிப்பதற்கான ரசீ துகளையோ, வவுச்ச்களையோ, பொறியாளர்களின் அறிக்கைகளையோ, கட்டிடம் கட்டியவரின் அறிவிப்புகளையோ தாக்கல் செய்யவில்லை என்றும் “டைம்ஸ் ஆப் இந்தியா” விளக்கியிருக்கிறது. கட்டுமானப் பொருள்களுக்கு அரசு நிர்ணயித்திருக்கும் விலையை நீதிபதி குமாரசாமி ஏற்றுக்கொள்ளாதது தவறு என்றும், கட்டுமானப் பொருள்களுக்கும் அரசின் பொதுப்பணித்துறை நிர்ணயிக்கும் விலையைத்தான் நீதிமன்றங்கள் அனைத்தும் ஏற்றுக்கொண்டு வரும் நிலையில், நீதிபதி குமாரசாமி அவர்கள் பொதுப்பணித் துறை நிர்ணயம் செய்த தொகையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது, ஏதோ நீதிபதி வலிந்து குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்கு அனுசரணையாக முக்கியமான தீர்ப்புகளையும், சட்டங்களையும்
மீறி முடிவெடுத்துள்ளாரோ என்று சந்தேகிக்க வைக்கிறது.
நீதிபதி குமாரசாமி அவர்களே தனது தீர்ப்பு, பக்கம் 875இல் “பின் யோசனையில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்கு நம்பத்தக்க தல்ல” என்றும்; “பல ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கையே தாக்கல் செய்யாமல் இருப்பது வருமான வரிச் செலுத்த வேண்டியவரின் உரிமையைப் பறித்துவிடுகிறது. நீண்ட காலதாமதத்திற்குப் பின் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதும், உரிய நேரத்தில் தாக்கல் செய்யாது இருப்பதும் “நமது எம்.ஜி.ஆர்.” சந்தா திட்டத்தின் உண்மைத் தன்மையில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்றும் கூறிவிட்டு, “நமது எம்.ஜி.ஆர்.” சந்தா திட்டத்தின் மூலமாக 4 கோடி ரூபாய் வருமானத்தை ஏற்றுக்கொண்டிருப்பது முன்னுக்குப் பின் முரணானது ஆகும். இது எப்படியிருக்கிறதென்றால், ஒருவர் தன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்வரை, காத்திருந்து விட்டு அதற்குப் பின்னர் அடையாளம் காட்ட முடியாத வருமானத்தையெல்லாம் இணைத்து வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்துவிட்டால், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்ற எண்ணத்தோடு, “நமது எம்.ஜி. ஆர்.”
சந்தா திட்டமே உருவாயிற்றோ என்று எண்ணத் தோன்றுகிறதா இல்லையா? இப்படிச் செய்வதால் நமது சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளில் ஏற்படும் தாக்கத்தை நீதித் துறை விழிப்புணர்வோடு உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அந்த ஓய்வு பெற்ற நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.
என்.டி.டி.வி. தொலைக்காட்சி தெரிவித்த செய்தியில், வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா வாங்கிக் குவித்த சொத்தின் மதிப்பீடு, கட்டிடங்களின் தளம் போடுவதற்கான செலவை மாற்றி அமைத்ததில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது என்றும், சதுர அடிக்கு 310 ரூபாய் என்பது 250 ரூபாயாகக் குறைக்கப்பட்டதால், 22 கோடி ரூபாய் குறைந்துள்ளது என்றும் அம்பலப்படுத்தியிருக்கிற து.
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கருணானந்தி, “உச்ச நீதிமன்றம் கிருஷ்ணானந்த் அக்னிகோத்ரி வழக்கில் வழங்கிய தீர்ப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. வருவாய்க்கு மீறிய சொத்து பத்து சதவிகிதம்வரை இருக்குமானால், குற்றஞ்சாட்டப்பட்டோர், விடுதலை பெற உரிமை உள்ளவர்கள் என்று நீதிபதி குமாரசாமி சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவில் எந்த இடத்திலும், இவ்வாறு குறிப்பிடப்படவில்லை” என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்த வழக்கினைச் சட்ட விதி முறைகளின் இயல்பான அடுத்த கட்டமாக மேல் முறையீட்டுக்கு உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்லப்படாமலேயே தடுத்து சட்டத்தின் வாயை அடைப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. தீர்ப்பிலே எல்லோருக்கும் எளிதில் புரியக்கூடிய கூட்டுத் தொகையிலே பெருந்தவறு இல்லாமல் இருந்திருந்தால்கூட, மேல் முறையீடு தேவையில்லை என்று கூறலாம். ஆனால் மாபெரும் தவறு நடைபெற்றிருக்கும்போது, ஏற்பட்டிருக்கும் தவறு அனைவருடைய கவனத்திற்கும் தெரிந்திருக்கும் போது, மேல் முறையீடு செய்யாமல், அந்தத் தவறான தீர்ப்பின் அடிப்படையில் அவசரம் அவசரமாக ஜெயலலிதா இவ்வாறு மீண்டும் முதலமைச்சராகப் பதவி ஏற்பது சட்ட விதிமுறைகளின்படி சரிதானா? நேர்வழியில் நிமிர்ந்து வந்து பதவி ஏற்காமல், சட்டத்தின் கால்களைக் கட்டிப்போட்டுவிட்டு,
மனசாட்சிக்கும் விடைகொடுத்துவிட்டு, கொல்லைப்புற வழியாக வந்து பதவி ஏற்பதற்கா இவ்வளவு பெரிய கொண்டாட்டம்? தவறான தீர்ப்பின் அடிப்படையிலே ஜெயலலிதா முதல் அமைச்சராகப் பதவியேற்க அரசியல் சட்டத்தின் பிரதிநிதியான தமிழக ஆளுனரும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறாரா? மத்திய அரசை ஆளும் பா.ஜ.க.வும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இந்தத் தவறுக்கு மத்திய அரசும் உடன்பாடாக இருக்கிறது என்று பொருளா?
ஏன், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதாவுக்கே இந்தத் தீர்ப்பு தவறான தீர்ப்பு என்பது நன்றாகத் தெரிந்த காரணத்தால்தான், முதலில் திட்டமிட்டவாறு உடனடியாகப் பதவியேற்க முன்வரவில்லை. இருந்தாலும் பதவி ஆசை யாரையும் ஆட்டுவிக்கும் என்ற பாணியில் பின்னர் பதவியேற்றுக் கொண்டுள்ளார்கள். அதிலும்தான் ஏராளமான விதிமீறல்கள்!
ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் அரசியல் சட்டத்திற்குப் புறம்பாகப் பதவியேற்பது இது முதல் முறையல்ல. 2001ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு, டான்சி நிலப் பேர ஊழல் வழக்கிலே தனி நீதிமன்றம் 9-10-2000 அன்று ஜெயலலிதா வுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையை விதித்தது. அவ்வாறு இரண்டாண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றவர்கள், தேர்தலிலே போட்டியிட முடியாது என்ற விதிமுறைப்படி “ஜெயலலிதாவும் தேர்தலில் போட்டியிட முடியாது” என்று சட்டநிபுணர்கள் கூறினார்கள். அந்த நிலையில் ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் 3-11-2000 அன்று, ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், தனி நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை நிறுத்திவைத்து, தன்னைத் தேர்தலிலே போட்டியிட அனுமதிக்குமாறு கோரினார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி மலைசுப்பிரமணியன், ஜெயலலிதாவின் மனுவைத் தள்ளுபடி செய்து 11-4-2001 அன்று அளித்த தீர்ப்பில், “இந்தியத் தண்டனைச் சட்டம் 409வது பிரிவின்கீழ்க் குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்பட்டிருந்தால், அதனைத் தம்மால் நிறுத்திவைக்க முடியுமென்றும், ஆனால் அந்த வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ்த் தனி நீதிமன்றம் கூறியிருக்கும் தீர்ப்பைத் தன்னால் நிறுத்திவைக்க முடியாது”
என்றும் குறிப்பிட்டிருந்தார். மத்திய தேர்தல் ஆணையமும், இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோதே, ஜெயலலிதா நான்கு தொகுதிகளிலே போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ததால், அவருடைய வேட்பு மனு செல்லாது என்று தேர்தல் அதிகாரிகளால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையே பெரிய காரணமாக ஜெயலலிதா தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்து, தமிழ் மக்களுக்கே இயல்பான அனுதாப உணர்வைத் தூண்டியதன் விளைவாக, அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த மே 14ஆம் தேதி அன்றே, அவசர அவசரமாக அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர்களின் கூட்டம் கூட்டப் பெற்று, ஜெயலலிதா சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடனடியாக அன்றைய தினம் மாலையிலேயே அவருக்கு கவர்னர் பாத்திமா பீவி பதவிப் பிரமாணமும் செய்துவைத்தார். பதவியேற்கத் தடை கோரி யாராவது வழக்குத் தொடுத்து விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகத்தான் அவசர அவசரமாகப் பதவி யேற்றதாக அப்போது ஏடுகள் எல்லாம் எழுதின. குறிப்பாக “ஆனந்த விகடன்” தனது தலையங்கத்தில் “தன் மீதுள்ள களங்கத்தைச் சட்டரீதியாகத் துடைத்தெறிந்த பிறகே முதல்வர் பதவியில் ஜெயலலிதா அமர வேண்டும். அதுதான் கண்ணியமும் கவுரவமிக்க அந்தப் பதவிக்கும் அழகு, அவருக்கும் அழகு” என்று எழுதியது.
15-5-2001 தேதிய “இந்து” தலையங்கத்தில், “சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து உறுதியாகத் தடை செய்யப்பட்ட ஒருவர் முதல் அமைச்சர் ஆவது இதுவே முதல் முறை என்றும், சட்டப்படி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர் இத்தகைய பதவியில் அமர்வதும் இதுவே முதல் முறை என்றும், இரு நிலைகளிலும் அவருடைய செயல் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வையே மீறுவதோடு, சட்ட ரீதியாகவும், நியாயபூர்வமாகவும், வேதனை அளிக்கும் வினாக்களை எழுப்பியுள்ளது” என்றும் எழுதியது. இதையெல்லாம் அலட்சியப்படுத்தி விட்டுத்தான் ஜெயலலிதா அப்போது பதவியேற்றார்.
சட்டப்பூர்வமான வழியை அலட்சியப்படுத்தி 2001ஆம் ஆண்டு கடைப்பிடித்த அதே நடைமுறையைப் பின்பற்றித்தான்
இப்போதும் ஜெயலலிதா பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். எந்த அளவுக்கு ஜெயலலிதா தரப்பினர் நிலத்தை வாங்கிக் குவித்தார்கள் என்பது பற்றிக் கூறவேண்டுமானால், 22-8-1994 அன்று 53 ஏக்கர்; 17-11-1994 அன்று 281 ஏக்கர்; 22-12-1994 அன்று 507 ஏக்கர்; 6-1-1995 அன்று 166 ஏக்கர்; 21-2-1995 அன்று 158 ஏக்கர் என்றும் பட்டியல் நீளுகிறது. 17-11-1994 அன்று ஒரே நாளில் மட்டும் 281 ஏக்கர் என்றும், 73.90 ஏக்கர் என்றும், 69.78 ஏக்கர் என்றும், 60.65 ஏக்கர் என்றும், 42.31 ஏக்கர் என்றும், 34.815 ஏக்கர் என்றும் தொடர்ச்சியாக நிலங்கள் என மொத்தம் மூன்றாயிரம் ஏக்கர் நிலங்கள் வாங்கியிருக்கிறார்கள். எனவே ஜெயலலிதா 66 கோடி ரூபாய்க்குச் சொத்து குவித்தார் என்பது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழக்கு தொடரப்பட்ட நேரத்தில் கூறப்பட்ட தொகையாகும். உண்மையில் தற்போதுள்ள சந்தைக் கணக்குப்படி அந்தச் சொத்துக்களின் மதிப்பைக் கணக்கிட்டால் சுமார் 6000 கோடி ரூபாய்க்கு மேல் ஜெயலலிதா சொத்துக் குவித்திருக்கிறார் என்பதுதான் உண்மை!
“கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பு எதிர்காலத்தில் பல தவறான தீர்ப்புகளுக்கு முன்னோடியாக அமைந்துவிடக் கூடும். உலகம் இந்தியாவைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் தருணம் இது என்பதை உச்ச நீதிமன்றம் உணர வேண்டும். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு இந்திய நீதித் துறைக்கு உலகில் நிலவி வரும் மதிப்பை யும் மாண்பையும் வெகுவாகக் குறைத்துவிட்டது. எனவே உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பினைக் கூர்மையாகவும், ஆழமாகவும் ஆய்வுசெய்திட வேண்டும்” என்றெல்லாம் இந்த வழக்கு பற்றி கருத்துகள் சமூக அக்கறை கொண்ட பல செய்தி யாளர்களாலும், ஓய்வு பெற்ற நீதிபதிகளாலும் ஏடுகளில் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த உண்மையைச் சட்டப்படி நிலைநாட்டிட வேண்டிய கடமை அனைவர்க்கும் உண்டு. மேலும் ஜனநாயகத்தின் மிக முக்கிய அங்கமான நீதித்துறைமீது படிந்துள்ள களங்கம் துடைக்கப்பட வேண்டும் என்று சட்ட விற்பன்னர்களும், நடுநிலைப் பத்திரிகையாளர்களும், சமூக ஆர்வலர்களும் பெரிதும் விரும்புகிறார்கள். நீதிபதி குமாரசாமி அவர்களின் தீர்ப்பே இறுதித் தீர்ப்பல்ல. இந்திய உச்ச நீதிமன்றம்தான் நீதி தேவனுக்கு நேர்ந்து
விட்ட மயக்கத்தைக் கலைத்து வளைந்துவிட்ட சட்டத்தை நிமிர்த்தி நேோர்வழிப்படுத்திட வேண்டும். இந்த வழக்கில் மேல் முறையீடு செய்திட வேண்டிய பொறுப்பு கர்நாடக அரசுக்கும், டாக்டர் சுப்ரமணியம் சுவாமி அவர்களுக்கும் இருப்பதைப் போலத் தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்குத் தலை வணங்கி மேல் முறையீடு செய்திட வேண்டிய பொறுப்பு, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் உண்டு என்பதால்தான், 25-5-2015 அன்று நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்திலே “இந்த வழக்கினில் பங்கேற்கத் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உரிமை உண்டு என இரண்டு முறை உச்ச நீதிமன்றத்தால் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா மீதான இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கிலே உச்ச நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் மேல் முறையீடு செய்யும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்ற அறிவிப்பினைச் செய்திருக் கிறேன். நீதியின் ராஜபாட்டையில் எத்தனை தடைக்கற்களைக் குவித்தாலும் அவற்றைப் படிக்கற்களாக்கிக் கொண்டு இறுதியில் நீதி விண்ணுயர எழுந்து நிற்கும்! வெற்றி முரசம் ஒலிக்கும்!
மு.க. 27-5-2015
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 53 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 53 PDF ↗