தொகுதி 52 · கடிதம் 3962
மெட்ரோ, மோனோ ரெயில் திட்டங்கள் - ஒரு விளக்கம்!
2015-04-26
உடன்பிறப்பே,
24-4-2015 தேதிய “தினத்தந்தி” நாளிதழில் “சென்னையில் மோனோ ரெயில் திட்டத்தை நிறைவேற்ற 2 நிறுவனங்கள் தேர்வு - குறைந்த தொகையைக் குறிப்பிடும் நிறுவனத்துக்கு மே மாதம் பணி ஆணை வழங்கப்படும்” என்ற தலைப்பில் ஒரு விளக்கப் படத்துடன் செய்தி வெளிவந்துள்ளது. வேறு எந்த நாளேட்டிலும் இந்த முக்கியமான செய்தி வந்ததாகத் தெரியவில்லை. ஏன், முக்கியமான செய்தி என்று கூறுகிறேன் என்றால்,
2011ஆம் ஆண்டில், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அ.தி.மு.க. அரசு 3-6-2011 அன்று படித்த ஆளுநர் உரையில் “சென்னை மாநகருக்குத் தற்போதுள்ள போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட “மோனோ” இரயில் திட்டத்தை அரசு செயல்படுத்தும். முதற்கட்டமாக 111 கிலோ மீட்டருக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக 300 கிலோ மீட்டர்வரை விரிவுபடுத்தப்படும். கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி போன்ற மாநகராட்சிகளிலும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க “மோனோ ரெயில்” திட்டம் செயல்படுத்த உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்” என்று அறிவித்தது.
அதற்குப் பிறகு ஜெயலலிதா வழிகாட்டுதல்படி;
4-8-2011 அன்று படித்த நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், இன்றைய முதலமைச்சர், “மோனோ ரெயில்” திட்டத்தை விரைவில் தொடங்குவதற்குத் தேவையான நிதி ஆதாரம் இந்த ஆண்டிலேயே கண்டறியப்படும் என்றார். கண்டறிந்தார்களா? என்ன ஆயிற்று அந்தத் திட்டம்?
இந்த “மோனோ” திட்டத்தை 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா அறிவிக்க என்ன காரணம் தெரியுமா?
2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக தி.மு. கழக ஆட்சியில் ஆளுநர் உரை 7-1-2011 அன்று திரு. சுர்ஜித் சிங் பர்னாலா அவர்களால் படிக்கப்பட்டபோதே, அந்த உரையில் பத்தி 21இல், “சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்துப் பாதுகாப்பான விரைவான பயணத்திற்கு வழிசெய்ய ரூபாய் 14,600 கோடி செலவில் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஜப்பான் நாட்டு நிதி உதவியுடனும், மத்திய அரசு நிதி உதவியுடனும் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் அனுமதிக்கப்பட்டு மிக விரைவாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த மெட்ரோ ரயில் இணைப்பு ரூபாய் 3001 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூர்வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இவ்வாறு முனைப்போடு தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்த திட்டம்தான் “மெட்ரோ ரயில்” திட்டம். அந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறலாமா? அதனால்தான் “மோனோ” திட்டத்தையே ஜெயலலிதா அறிவித்தார். அறிவித்தது மட்டுமல்ல; மெட்ரோ ரெயில் திட்டத்தைவிட மோனோ ரெயில் திட்டமே சிறந்தது என்று வாதிட்டார்.
மீண்டும் 30-1-2012 அன்று ஆளுநர் உரையில் “மோனோ ரெயில் திட்டத்தைச்” செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்” என்று சொன்னார்கள். அதன் பிறகு 26-3-2012 அன்று படித்த நிதிநிலை அறிக்கையில் மோனோ ரெயில் 4 வழித் தடங்களில் இயங்கும் என்றும், எந்தெந்த வழித் தடங்கள் என்றும் விரிவாகப் படித்தார்கள். அதன் பிறகு 16-6-2012 தேதிய “தினமணி”யில் 34 இடங்களில் மோனோ ரயில் நிலையங்கள் என்றும், அமைச்சர் தலைமையில் 2 மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடைபெற்றது என்றும் செய்தி வந்தது. மொத்தத்தில் “மோனோ” ரெயில் திட்டமே, தி.மு. கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட “மெட்ரோ” ரெயில் திட்டத்தினை ஏற்கக்கூடாது என்ற ஜெயலலிதாவின் வழக்கமான காழ்ப்புணர்ச்சி காரணமாக அறிவிக்கப்பட்ட போட்டித்திட்டம் என்பது தமிழ்நாட்டிலுள்ள அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே மெட்ரோ ரெயில் திட்டம் கூடாது என்றும், மோனோ ரெயில் திட்டத்தைத்தான்
நடைமுறைப்படுத்தப் போவதாகவும் கூறிய போதிலும், 2013 ஆம் ஆண்டு ஆளுநர் உரையிலே வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூருக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகக் கூறப்பட்டது.
அதைக்கூட இது ஏதோ அ.தி.மு.க. ஆட்சியில்தான் திருவொற்றியூருக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை அறிவித்திருப்பதைப் போல ஆளுநர் உரையிலே குறிப்பிட்டிருந்தார்கள். ஆளுநர் உரையில் அப்போது வேறு எதுவும் தலைப்பாக அறிவிப்பதற்குக் கிடைக்காத காரணத்தால், ஏடுகள் எல்லாம் திருவொற்றியூருக்கு மெட்ரோ ரெயில் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதாகப் பெரிதாகச் செய்தி வெளியிட்டார்கள். ஆனால் உண்மையில் திருவொற்றியூருக்கு மெட்ரோ ரெயில் திட்டம் தி.மு.கழக ஆட்சியிலேயே அறிவிக்கப்பட்டதுதான்!
இந்த “மோனோ” திட்டம் பற்றி 3-6-2014 அன்று “டைம்ஸ் ஆப் இந்தியா” இதழ், “ஜெயலலிதா மிகவும் ஆர்வத்தோடு செயல்படுத்த விரும்பும் “மோனோ” ரெயில் திட்டம் நகர மறுக்கிறது. இதற்காக ஒப்பந்தப் புள்ளி அளிப்பதற்காக குறிக்கப்பட்டிருந்த காலம் மே மாதம் இறுதியாகும். அதற்குப் பின்னரும்கூட ஒப்பந்ததாரர்கள் அந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை” என்றெல்லாம் எழுதியிருந்தது.
“மோனோ” திட்டம் பற்றிய முடிவினைப் பின்னர் ஜெயலலிதா மாற்றிக்கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதை மகிழ்வோடு வரவேற்பதாகவும், முதலமைச்சர் சோதனை ஓட்டத்தைத் தொடங்கி வைத்திருப்பதாகவும் கடந்த ஆண்டு ஆளுநர் உரையிலே தெரிவித்தார்கள். “மோனோ” திட்டத்தை ஏற்கனவே பாராட்டிய இந்த அரசினர், கடந்த ஆண்டு ஆளுநர் உரையில் அதைப் பற்றி ஒரு வரி கூடக் குறிப்பிடவில்லை. “மெட்ரோ” திட்டத்தைத் தொடக்கத்தில் வரவேற்காத ஜெயலலிதா கடந்த ஆண்டு பிரதமரைச் சந்தித்த நேரத்தில், மெட்ரோ ரெயிலின் 76 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இரண்டாம் பாகப் பணிகளை நிறைவேற்ற 36 ஆயிரத்து 100 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், மத்திய அரசின் முழு உதவி நாடப்படுகிறது என்று தெரிவித்தார். மெட்ரோ திட்டமே கூடாது என்று சொன்னவர்கள், அந்தத் திட்டத்தை
நிறைவேற்ற மறுத்தவர்கள், பிறகு டெல்லிக்குச் சென்று அதே மெட்ரோ திட்டத்திற்கு நிதி வேண்டுமென்று கேட்டார்கள்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில், அசோக் நகர் முதல் ஆலந்தூர்வரை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போதே மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை திட்டமிட்டபடி அக்டோபர் மாதம் பயணிகள் ரெயில் சேவை தொடங்கவுள்ளது; இதற்காகக் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து தற்போதுவரை சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்தச் சோதனை ஓட்டத்தின் போது ரெயில் பாதைகள், மின்சார இணைப்புகள், சிக்னல்கள் சரிவர அமைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை செய்யப்பட்டது. இவை அனைத்தும் வெற்றிகரமாகவே இருந்தது” என்று தெரிவித்தார்கள். ஆனால் அக்டோபர் மாதம் முடிந்து ஆறு மாதங்கள் ஆகியும் மெட்ரோ ரெயில் ஓடுகிறதா என்றால் இல்லை! சென்னையில் “மெட்ரோ ரெயில்” சோதனை ஓட்டத்தை முதல் அமைச்சர் ஜெயலலிதாவே தொடங்கிவைத்தார். அனைத்து நாளேடுகளிலும் அதைப் பற்றி முதல் பக்கத்திலேயே பெரிதாகச் செய்திகள் வந்தன. 14,600 கோடி ரூபாய்க்கான திட்டம் அது. அந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்த முதலமைச்சர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அன்றாடம் தலைமைச் செயலகத்திலிருந்து “காணொலி காட்சிகள்” மூலமாகப் பல திட்டங்களைத் தொடங்கி வைப்பதைப் போல இல்லாமல், இந்தத் திட்டத்திற்கு நேரிலே வந்து தொடங்கிவைத்தார். அந்தத் திட்டத்தைப் பற்றி அதனைத் தொடங்கி வைக்கும் விழாவிலே பேசியிருந்தால், அந்தத் திட்டம் எந்த ஆட்சியில், எந்த ஆண்டு தொடங்கப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம் கூற வேண்டுமல்லவா? அதனால் அங்கே விழாப் பேருரை எதுவும் இல்லாமல் கொடி அசைத்து, மெட்ரோ ரெயிலின் சோதனையோட்டத்தைத் தொடங்கி வைத்துவிட்டார். அவர் அங்கே உரையாற்றாவிட்டாலும், அந்தத் திட்டத்தைப் பற்றிய குறிப்பு தமிழக அரசினால் தரப்பட்டது. அதிலே அந்தத் திட்டத்தைப் பற்றிய குறிப்புகள் விவரிக்கப்பட்ட போதிலும், கவனமாக அது எந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்பதை விட்டு விட்டார்கள். அந்தத் திட்டம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், நான் முதலமைச்சராக இருந்தபோது,
தொடங்கப்பட்ட திட்டம். எப்படி அதை வெளியிடுவார்கள்? இவ்வாறு சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்ற போதிலும், அது தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதற்காகவும், ஜெயலலிதா முதலமைச்சராக இல்லை என்பதாலும், மெட்ரோ ரெயில் திட்டத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கக்கூட முன்வராமல் இருக்கிறார்கள்.
இதுபற்றிக்கூட நேற்றையதினம் “தினமலர்” நாளேடு முதல் பக்கத்திலே வெளியிட்ட செய்தியில், “அ.தி.மு.க. பொதுச் செயலர், ஜெயலலிதா, முதல்வர் பதவியிலிருந்து விலகிய பிறகு, தமிழகத்தில், கட்டடங்கள் திறப்பு விழா, திட்டம் துவக்க விழா, அடிக்கல் நாட்டு விழா எதுவும் நடைபெறவில்லை. சென்னையில், மெட்ரோ ரயில் துவக்கமும் தள்ளிப் போடப்படுகிறது. ஜெயலலிதா மீண்டும் முதல்வரான பின்னரே, இப்பணிகளை மேற்கொள்ள வேண்டுமென, ஆட்சியில் உள்ளவர்கள் நினைப்பதால், திருப்பணி முடிந்தும், 85 கோவில்கள், கும்பாபிஷேகத்திற்காக, காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
மேலும், சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்தை இடையிலே அ.தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது. அப்போதுதான் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் முதன்மை ஆலோசகரான திரு. இ. ஸ்ரீதரன் 11-4-2012 அன்று சென்னையில் அளித்த பேட்டியில், “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தைக் கைவிட்டதன் மூலம் தமிழக அரசு மிக மோசமான தவறைச் செய்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு நான் இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்திற்கு இதுவரை அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்தைக் கைவிடும் தமிழக அரசின் முடிவு வருத்தம் அளிக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் பணிகளைத் தொழில்ரீதியில் சிறப்பாகச் செய்து வருகிறது. முதல் கட்டத்துக்கும், இரண்டாவது கட்டத்துக்கும் இடையில் இந்த அளவிற்கு இடைவெளி விழுவது நல்லதல்ல. மெட்ரோ ரயில் மூலம் செல்லும் பயணிகளில் நான்கில் ஒரு பங்குதான் மோனோ ரயிலில் பயணம் செய்ய இயலும். பெரும்பாலான நகரங்களில் மோனோ ரயில் திட்டம் தோல்வி அடைந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பெருவாரியாக
மக்கள் பயணம் செய்ய மெட்ரோ ரயில் திட்டம்தான் உகந்தது. மோனோரயில் சாதாரண ஒன்றுதான். அதில் அதிகம் பேர் பயணம் செய்யமுடியாது. மோனோ ரயில் திட்டம் வெற்றிகரமான திட்டம் இல்லை. தற்போது அந்த ரயில் பயன்படுத்தப்படும் ஜப்பானில்கூட, சிறு சிறு நகரங்களில்தான் பயன்படுத்தப்படுகிறது. சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம்தான் அவசியமாகும். அதேசமயம் மெட்ரோ ரயில் செலவும் குறைவாகும். மெட்ரோ ரயிலுடன் ஒப்பிடும்போது மோனோ ரயில் திட்டத்திற்கான செலவு 50 சதவிகிதம் அதிகமாகும்” என்று அனுபவத்தின் அடிப்படையில் திரு. இ. ஸ்ரீதரன் தெரிவித்த கருத்தை அ.தி.மு.க. அரசு காதில் போட்டுக்கொள்ளவில்லை.
சேது சமுத்திரத் திட்டத்தையும், மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தையும் முடக்கி வைத்திருப்பதைப் போல, இந்த மெட்ரோ ரெயில் திட்டத்தின் விரிவாக்கத்தையும் முடக்கி வைத்தவர்கள்தான் அதன் பிறகு, மெட்ரோ ரெயில் திட்டத்தின் சோதனை ஓட்டத்தைத் தொடங்கிவைத்து, தாங்கள்தான் அந்தத் திட்டத்திற்கே காரணகர்த்தா என்பதைப் போலப் பெருமை தேடிக்கொள்ள முயன்றார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு மெட்ரோ ரெயில் திட்டம் யாருடைய ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்ற உண்மை நன்றாகவே
தெரியும்.
இந்த நிலையில்தான் நேற்றையதினம் “தினத்தந்தி” நாளேட்டில் மோனோ ரெயில் திட்டத்தை நிறைவேற்ற இரண்டு நிறுவனங்கள் தேர்வு பெற்றிருப்பதாகவும் - குறைந்த தொகையைக் குறிப்பிடும் நிறுவனத்துக்கு மே மாதம் பணி ஆணை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருப்பதோடு, மெட்ரோ ரெயில் திட்டத்தைவிட, மோனோ ரெயில் திட்டம்தான் சிறந்தது என்றும் சென்னையில் மோனோ ரெயில் இன்னும் இரண்டாண்டுகளில் ஓடத் தொடங்கிவிடும் என்றும் இந்தச் செய்திகளை மோனோ ரெயில் வட்டாரங்கள் தெரிவிப்பதாகவும் எழுதியிருக்கிறார்கள். இந்த “மோனோ?” ரெயில் திட்டத்தைப் பற்றி 3-4-2014 தேதிய “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளேட்டில், “The difficulty in finding bidders for Chennai’s Mono Rail Project has not stopped the State Government from planning a similar project in Coimbatore. The Plan for a Mono Rail Project in Coimbatore appears far-fetched as the
State Transport Department has not been able to find takers for its project in Chennai” (சென்னை மோனோ ரெயில் திட்டத்தைச் செயலாக்கத்திற்குக் கொண்டு வருவதற்குத் தேவையான தகுதி படைத்தவர்கள் யாரும் இதுவரையில் கிடைத்தபாடில்லை. எனினும் தமிழக அரசு; கோவைக்கு என்று தனியே மோனோ ரெயில் திட்டம் ஒன்றைக் கொண்டு வருவதற்குச் செய்த அறிவிப்பைக் கைவிட்டதாகத் தெரியவில்லை. சென்னை மோனோ ரெயில் திட்டத்திற்குத் தகுதி படைத்தவர்கள் யாரும் முன்வராத காரணத்தால் திட்டம் செயலாக்கத்திற்கு வருவது தாமதமாகிக் கொண்டிருக்கிறது. எனவே கோவை மோனோ ரெயில் திட்டமும் செயலாக்கத்திற்கு வரும் என்று தோன்றவில்லை) என்று செய்தி வெளிவந்திருக்கிறது என்றால், இந்த ஆட்சியில் எந்தத் திட்டத்தையும் எடுத்து நடத்துவதற்கு யாரும் முன்வருவதில்லை; அதனால் எந்த அறிவிப்பும் செயலாக்கம் பெறுவதுமில்லை என்பதுதான் உண்மை. 2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன், கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தை ஒதுக்கிவைத்து விட்டு மோனோ ரெயில் திட்டம் என்று ஜெயலலிதா அறிவித்தார். மெட்ரோ திட்டத்தைவிட மோனோ திட்டமே சிறந்தது என்றார். அதற்குள் மெட்ரோ திட்டம் ஓரளவுக்கு முடிந்த நிலையில் அதைக் கைவிடவும் முடியவில்லை. அதே நேரத்தில் அதன் காரணமாகத் தி.மு.க.வுக்குப் பெயர் வந்து விடவும் விரும்பவில்லை. இத்தகைய காழ்ப்புணர்ச்சியோடுதான் இன்றளவும் மெட்ரோ திட்டப் பணிகள் முடிவுற்ற பிறகும் அதனைத் தொடங்கிவைக்காமல் கிடப்பிலே போட எண்ணுகிறார். 2011ஆம் ஆண்டு மே திங்களில் ஆட்சிக்கு வந்தபோது ஜெயலலிதா அறிவித்த திட்டம் - 3-6-2011 அன்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்ட திட்டம் - நான்காண்டுகளுக்குப் பிறகும் தொடங்கப்படவில்லை என்பதும், இன்னும் இரண்டாண்டுகளில் மோனோ ரெயில் ஓடத் தொடங்கிவிடும் என்பதும் “யார் காதில் பூ சுற்றப் பார்க்கிறார்கள்” என்ற கேள்வியைத்தானே கேட்கத் தோன்றும்! அன்புள்ள, மு.க. 26-4-2015
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 52 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 52 PDF ↗