தொகுதி 52 · கடிதம் 3953
அதிர்ச்சி வைத்தியம் அவசியம் அல்லவா?
2015-02-12
உடன்பிறப்பே,
வணக்கம். ஒவ்வொரு தேர்தலின் போதும் நேரில் வந்து பிரச்சாரக் கூட்டங்களின் வாயிலாக வாக்காளர்களைச் சந்தித்து, கழக வேட்பாளருக்கும், கூட்டணி வேட்பாளர்களுக்கும் ஆதரவு கோருவதை வாடிக்கையாகவும், ஜனநாயகக் கடமையாகவும் கொண்ட நான்; நாளை (13-2-2015) நடைபெறவுள்ள திருவரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் வாக்களிக்கப் போகும் வாக்காளப் பெருமக்களிடம் இந்த என்னுடைய அறிக்கையின் மூலம் வாக்குகளைக் கழக வேட்பாளர் தம்பி என். ஆனந்துக்கு உதயசூரியன் சின்னத்திலே வழங்கிட வேண்டுமென்று பெரிதும் விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். கடந்தமுறை திருவரங்கம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக நின்று உங்களுடைய பொன்னான வாக்குகளைப் பெற்று, முதலமைச்சராகவே ஆனவர், இந்த முறை அறிக்கை வாயிலாக வாக்குகளைக் கேட்கும்போது, நான் அறிக்கை வாயிலாக வாக்குக் கேட்கக் கூடாதா?
திருவரங்கம் தொகுதியிலே இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்டதற்கு என்ன காரணம்? பொதுவாக வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் மறைந்து விடுவார்களானால், அந்தத் தொகுதிக்குத்தான் இடைத்தேர்தல் நடைபெறும். ஆனால் இந்த இடைத் தேர்தல் அப்படியல்ல! ஏற்கனவே நீங்கள் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்த ஜெயலலிதா, 1991 முதல் 1996 வரை முதலமைச்சராகப் பதவி வகித்தபோது, தன்னுடைய வருமானத்திற்கும் அதிகமாக 66 கோடி ரூபாய்க்கான சொத்துக்களைக் குவித்த காரணத்தால், இத்தனை ஆண்டுக் காலம் வேண்டுமென்றே வழக்கு இழுத்தடிக்கப்பட்டு, இறுதியாகக் கடந்த 2014 செப்டம்பர் 27ஆம் தேதியன்று பெங்களூர் சிறப்பு
நீதிமன்றத்தால் நான்காண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட காரணத்தால், ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை இழந்து, அவர் வகித்த சட்டப் பேரவை உறுப்பினர் பதவியும் காலியாகி, அந்த இடத்திற்காகத்தான் இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஜெயலலிதா பதவியிலே இவ்வாறு அமர்வதும், பதவிக் காலத்திலேயே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுவது என்பதும் இது முதல் முறையல்ல! ஏற்கனவே ஒரு முறை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு - சட்டத்துக்குப் புறம்பாக நான்கு தொகுதிகளிலே போட்டியிட்டு - வேட்பு மனு செல்லாமல் போய் - பிறகு அவருடைய கட்சி பெரும்பான்மையாக வெற்றி பெற்றபோது, அரசியல் சட்டரீதியாகத் தகுதியற்ற நிலையிலும்தானே ஆளுநரைக் கையிலே போட்டுக்கொண்டு அவசர அவசரமாகப் பதவியேற்றுப் பின்னர் அவர் அவ்வாறு பதவியேற்றது செல்லாது என்று இந்திய உச்ச நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டவர்தான் ஜெயலலிதா. தற்போதும் அவர் ஒருவர் செய்த தவறு காரணமாகவும், தண்டனை காரணமாகவும் திருவரங்கம் தொகுதியிலே உள்ள மக்களுக்கும், ஏன் அங்கே போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கும், அவற்றின் உறுப்பினர்களுக்கும்தான் வீண் அலைச்சலும், அவதியும். அரசுக்கும் வீண் செலவு. எனவே இப்போது அந்தத் தொகுதியிலே இடைத் தேர்தல் வருவதற்குக் காரணமாக இருந்த கட்சிக்கும், அதன் தலைமைக்கும் தக்கதொரு பாடம் கற்பிக்கவாவது நீங்கள் இந்த இடைத்தேர்தலில் தி.மு.கழக வேட்பாளருக்கு உங்கள் வாக்குகளை வழங்கிட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஜெயலலிதா திருவரங்கம் இடைத்தேர்தலையொட்டி விடுத்துள்ள வேண்டுகோளில், “இந்த இடைத்தேர்தல் சதிகாரர்களால் போடப்பட்ட வழக்கின் தீர்ப்பு காரணமாக ஏற்படுத்தப்பட்ட இடைத்தேர்தல்” என்று சொல்லியிருக்கிறார். ஜெயலலிதாவின் “அகராதியில், ஜெயலலிதா சொத்துக் குவித்தது பற்றி வழக்கு தொடுத்தவர்களும், விரிவாக விசாரித்துத் தீர்ப்பு வழங்கியவரும் சதிகாரர்களாம்! அப்படியென்றால் அந்த வழக்கில் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டவருக்கு என்ன பெயர்? உத்தமரா? புனிதரா? தவறு நடைபெற்றதை எதிர்த்து வழக்கு
தொடுத்தால், புரிந்த குற்றத்திற்கேற்ற தண்டனை வழங்கினால் அவர்கள் எல்லாம் சதிகாரர்களா?
“தி.மு.கழகம் அல்லது எதிர்க்கட்சி வேட்பாளர்களை ஆதரிப்பதால் எந்தவித நன்மையும் வாக்காளர்களுக்குக் கிடைக்காது” என்றும் ஜெயலலிதா தனது வேண்டுகோள் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். உண்மைதான்! அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்தால், வாக்குக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் கிடைக்கும் என்பதைத்தான் இவ்வாறு சூசகமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறாரோ, என்னவோ?
ஆளுங்கட்சிக்கு இந்த இடைத்தேர்தலில் ஒரு படிப்பினையைக் கற்பித்து எச்சரிக்க வேண்டுமென்பதற்காகத்தான், தி.மு.கழகத்தின் சார்பாக ஏற்கனவே ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரையே மீண்டும் நிறுத்தி, எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக, கழக வேட்பாளருக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு நல்கிட வேண்டுமென்று முதன் முதலாக நான் அறிக்கை வாயிலாகக் கேட்டுக் கொண்டேன். ஆனாலும் பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன காரணத்தினாலோ தனியாக வேட்பாளரை அங்கே நிறுத்தியுள்ளன. கழகத்தைப் பொறுத்தவரை, இந்த இடைத்தேர்தலில் திருவரங்கம் தொகுதியிலே கழகத் தோழர்கள் ஆற்றியிருக்கும் பணி, சாதாரணமானதல்ல. கழகத்தின் முன்னணியினரும், தோழர்களும் தங்கள் தங்கள் சொந்தச் செலவில் அங்கே வந்து தங்கிக்கொண்டு உணவு கிடைக்கிறதோ இல்லையோ, தங்குவதற்கு இட வசதி உள்ளதோ இல்லையோ, எதையும் பொருட்படுத்தாமல், “கண் துஞ்சாது பசி நோக்காது மெய் வருத்தம் பாராது” திருவரங்கம் தொகுதியிலே திசையெங்கும் சுற்றிச் சுழன்று தேர்தல் பணியாற்றி வருகிறார்கள் என்ற செய்தி எனக்குத் தொடர்ந்து வந்து என்னைக் களிப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றது. அந்த மாவட்டத்தைச் சேர்ந்த கழக முன்னணியினர் உள்கட்சிப் பிரச்சினைகளையெல்லாம் உதைத்து விரட்டிவிட்டு அங்கே தேர்தல் பணியாற்றுகிறார்கள் என்பதையும் அறிந்து, “எல்லோரும் என் உடன்பிறப்புகள் அன்றோ” என உவகை கொண்டேன். எல்லாவற்றுக்கும் மேலாக, பணிக் குழுத் தலைவராகப் பணியாற்றும் தம்பி நேருவின் உழைப்பு வெறும் சொற்களால் விளக்கிடக் கூடியதல்ல. இந்த இடைத் தேர்தலில்
கழக வேட்பாளர் என். ஆனந்த் என்பது அதிகாரப்பூர்வமானது என்றாலும், அந்த வேட்பாளரைவிட அதிகமாக, தன்னையே ஒரு வேட்பாளரைப் போல ஆக்கிக்கொண்டு நேரு சுறுசுறுப்புடன் பம்பரமாகச் சுற்றி வருகிறார் என்றால் அது மிகையல்ல. நேரு வேட்பாளராக மாறிவிட்டார் என்றால், கழகப் பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலின், தொடக்கத்திலிருந்தே இடைத் தேர்தல் பணிக் குழுத் தலைவராகவே மாறித் தன்னுடைய நேரத்தையும் நினைப்பையும் அதற்காகவே செலவிட்டு வருகிறார் என்று தான் கூற வேண்டும். பொதுச் செயலாளர், பேராசிரியர் அவர்களும் நேரில் என்னைச் சந்தித்து, நானும் திருவரங்கம் சென்று சில கூட்டங்களில் பேசிவிட்டு வருகிறேன் என்று ஆர்வத்தோடு புறப்பட்டு விட்டார்.
திருவரங்கம் தொகுதியில் இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆளுங்கட்சியினர் ஜனநாயக விரோத, சட்ட விரோத, அராஜக நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை நீங்களே நேரில் கண்டு அறிந்திருக்கிறீர்கள். போலி வாக்காளர் சேர்த்திருப்பது பற்றி உரிய நேரத்தில் கழகத்தின் சார்பில் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. நானும் அதைப்பற்றி விரிவாகத் தெரிவித்திருக்கிறேன். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததால், இதைப் பற்றி உயர் நீதிமன்றத்தில் கழகத்தின் சார்பில் கடந்த வாரம் வழக்கு தொடுத்து, வாதாடிய போது, தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் அளித்த தீர்ப்பில், “திருவரங்கம் தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்து, சரியான வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம், இடைத்தேர்தல் நடப்பதற்கு 2 நாட்கள் முன்பாக வெளியிட வேண்டும்” என்று உத்தரவிட்டார்கள். ஆனால் உயர் நீதிமன்றத்தின் இந்த ஆணையை ஏற்காமல், தேர்தல் ஆணையத்தின் சார்பில் 9-2-2015 அன்று உயர்நீதிமன்றத்தில், “தேர்தலுக்கு முன்னதாக திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட முடியாது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்ற வேண்டும்” என்று கேட்டதற்கு, நீதிபதிகள் அதை ஏற்க மறுத்ததோடு, “தேர்தல் ஆணையத்தின் சார்பில் கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையில்தான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை எப்படி மாற்ற முடியும்” என்று கண்டிப்புடன் கூறி, தனியாக மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறார்கள்.
திருவரங்கம் தொகுதியில் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை குறைந்திருப்பதாக ஆசிரியர்கள் சொல்கிறார்கள் என்றும், அதுவும் கல்வி அமைச்சர் வீரமணி என்பவர் பிரச்சாரத்துக்குச் செல்லும் இடங்களில் பள்ளி மாணவர்கள் தான் அ.தி.மு.க. கொடியைப் பிடித்தபடி நிற்கிறார்கள் என்றும், கொடிகளைப் பிடிக்கும் மாணவர்களுக்கு “ஸ்பெஷல்” கவனிப்பு உண்டு என்றும் வார இதழ் ஒன்றே விரிவாக எழுதியிருக்கின்றது.
மற்றொரு வார இதழ், “மணப்பாறை பகுதியில் உள்ள 7 ஊராட்சிகளுக்குப் பொறுப்பான அமைச்சர் செந்தில் பாலாஜியும், எம்.பி. தம்பிதுரையும் தினமும் மாலையில் மட்டும் பிரச்சாரம் செய்தனர். பத்து நாட்களாக அ.தி.மு.க. வேட்பாளர் இந்தப் பக்கமே போகவில்லை. பிப். 1 அன்று வேட்பாளர் வளர்மதி வருகிறார் என்றதும், காலை 7.30 மணிக்கே தம்பிதுரை ஆஜர். 100 நாள் வேலைத் திட்டத்து ஆட்களைத் திரட்டி வைத்திருந்தனர். ஆளுக்கு ஒரு மணி நேரத்துக்கு 200 ரூபாய் பேசிக் கூட்டி வந்திருந்தனர். இங்குக் கூடுதலாக, புதுக்கோட்டையில் இருந்து குத்தாட்டக் குழுவினரைக் கொண்டுவந்து ஆட வைத்தனர். அச்சடித்ததைப் படிப்பதைப் போல வேட்பாளர் வளர்மதி, திரும்பத் திரும்ப ஜெயலலிதாதான் தெய்வம் என உருகினார். மணி 1.30 ஆனதும் மறவனூரில் வேட்பாளர் உட்பட அனைவருக்கும் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, தக்காளிச் சோறு, எலுமிச்சை சோறு, மீன் வறுவல் என பலவகை உணவுகளும் தயாராக இருந்தன” என்றெல்லாம் எழுதியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறுகின்ற வகையில், அ.தி.மு.க. சார்பாக மிகப் பெரிய பந்தல் போட்டு, வாக்காளர்களுக்கு டோக்கன் அளித்து மூன்று வேளையும் பிரியாணி மற்றும் இதர கறி வகைகளைப் பரிமாறவில்லையா? அதற்கான புகைப்படங்களைத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கழக அமைப்புச் செயலாளர் தம்பி ஆர்.எஸ். பாரதி எடுத்துச் சென்று தர வில்லையா? தலைமைத் தேர்தல் அதிகாரியே நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறவில்லையா? எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியினர் மீது ஆளுங்கட்சியினர் புகார் கூறினால் உடனடியாகக் காவல் துறையினர் வழக்குப்
பதிவு செய்கிறார்கள் என்றும், அதே நேரத்தில் அ.தி.மு.க.வினர்
மீது புகார் என்றால் கண்டு கொள்வதே இல்லை என்றும் செய்திகள் வருகின்றன. இன்றைய முதலமைச்சர், நேரடியாகத் தொகுதிக்குள் வராவிட்டாலும், அவருடைய மகன்கள் இரண்டு பேரும் தொகுதியிலேயே தங்கியிருப்பதாகவும், அனைத்துப் பிரச்சினைகளிலும் அவர்களது ஆணையின் பேரில்தான் நடவடிக்கை எடுப்பதாகவும் வார இதழ்கள் பக்கம் பக்கமாக எழுதியுள்ளன.
திருவரங்கம் தொகுதியில் மகளிர் அணியுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மகளிர் அணிச் செயலாளர், கவிஞர் கனிமொழி, எம்.பி, நேரில் டெல்லி சென்று தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து கழகத்தின் சார்பில் அளித்த மனுவில் போலி வாக்காளர்பட்டியல் பற்றியும், 63 புகார்கள் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது பற்றியும், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளை உடனடியாக நீக்கிவிட்டுப் புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பது பற்றியும் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக மண்டல வருவாய் அதிகாரியான மனோகரன் என்பவர் வாக்காளர் பதிவு அதிகாரியாக இருந்து தொகுதி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும், அவர் ஏற்கனவே அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராகப் போட்டியிட அந்தக் கட்சியிடம் மனு செய்தவர் என்றும் தெரிவித்திருக்கிறார். அவர் மனுவிலே குறிப்பிட்டது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், நேற்றையதினம் அந்த அதிகாரி தேர்தல் ஆணையத்தினாலே அவசர அவசரமாக மாற்றப்பட்டிருக்கிறார். இதிலிருந்தே அ.தி.மு.க. எந்த அளவுக்கு இந்த இடைத்தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா இதே திருவரங்கம் தொகுதியைச் சுற்றி வந்து பிரச்சாரம் செய்தபோது கொடுத்த வாக்குறுதிகளான, நூறாண்டுக் கால அடிமனை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்பது நிறைவேற்றப்பட்டதா? இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்படும் என்று சொன்னாரே, செய்தாரா? திருவரங்கம் தொகுதியிலே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உடனடித் தீர்வு காணப்படும் என்று சொன்னாரே, தீர்வு காணப்பட்டுவிட்டதா? அந்தத் தொகுதிக்கு மாத்திரமல்ல!
தமிழ்நாட்டுக்கே எத்தனை எத்தனை திட்டங்களை ஜெயலலிதா அறிவித்தார்? சட்டப்பேரவை நடைபெறும்போது ஒவ்வொரு நாளும் 110வது விதியின் கீழ் அவர் அறிவிப்பு வெளியிடாத நாள் உண்டா? வேறு எந்த ஒரு அமைச்சரையாவது, அவரவர் துறையின் கீழான அறிக்கைகளைப் படிக்க இந்த ஆட்சியில் அனுமதி உண்டா? அந்த அறிவிப்புகளில் நிறைவேற்றப்பட வேண்டியவை இன்னும் எத்தனை இருக்கின்றன? முதலமைச்சர் ஜெயலலிதா அந்தத் தொகுதியின் வாக்காளப் பெருமக்களுக்கு விடுத்த வேண்டுகோளில், கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், மின்வெட்டால் தமிழகமே இருள் சூழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டது என்றும், அ.தி.மு.க. ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தி, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றுள்ளேன் என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால் உண்மை நிலை என்ன? மின் கட்டணம் எந்த அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது? மின் வாரியத்தின் இழப்பு எவ்வளவு? பால் விலையை எந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறார்கள்? ஆவின் நிறுவனத்திலே நடைபெற்ற ஊழல், அமைச்சரையே வீட்டுக்கு அனுப்பவில்லையா? டீசல் விலை உயர்வைக் காரணமாகக் கூறிப் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதே, தற்போது டீசல் விலை ஆறு முறை குறைக்கப்பட்டு விட்டதே, பேருந்துக் கட்டணம் குறைக்கப்பட்டதா? டாஸ்மாக் நிறுவனத்திலே எத்தனை ஊழல்? கேவலம், பேருந்துக் கழகங்களுக்கு ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதிலேகூட லஞ்சம் தலைவிரித்தாடுகிறதே? இந்த ஆட்சியில் பாதிக்கப்படாத வர்க்கத்தினர்தான் யார்? விவசாயிகள் படும் இன்னல்களுக்கு அளவுண்டா? தொழிலாளர்களின் நிலை என்ன? தொழிற்சாலைகள் வரிசையாக மூடு விழா நடத்திக் கொண்டிருக்கவில்லையா? இன்று கூட ஒரு தொழிற்சாலை மூடுவது பற்றி ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே! நெசவாளர்கள் நிம்மதி இழந்து விட்டார்களே; மீனவர் துன்பம் குறைந்தபாடில்லையே? மாணவர்களின் பிரச்சினைகள் என்றால் ஆட்சியிலே இருக்கும் மதோன்மத்தர்கள் காட்டிடும் அலட்சியம் தான் என்ன? அரசு அலுவலர்களை மதித்து ஒரு முறையாவது முதலமைச்சர் அழைத்துப் பேசியது உண்டா? சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு நிர்வாகம் நிலை தடுமாறி லஞ்ச ஊழல், எங்கணும் பெருகி நாடு காடாகி வருகிறதே!
இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் வர வேண்டாமா? இருள் மறைந்து ஒளி பரவிட வேண்டாமா? இந்தக் கொடுமைகளுக்கு ஒரு தடைக்கல் போடக் கிடைத்த வாய்ப்பாகத்தான் திருவரங்கம் இடைத் தேர்தல் வந்துள்ளது. இந்த இடைத்தேர்தல் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஆனால் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும் அதிகார மமதையில் ஆட்டம் போடுவோருக்கும் ஓர் அதிர்ச்சி வைத்தியம் அளித்திட வேண்டாமா?
அப்படிக் கிடைத்த நல்வாய்ப்பாகக் கருதி, சிந்திக்கும் திறனும் சீர்தூக்கிப் பார்க்கும் சிறப்பும் கொண்ட திருவரங்கம் தொகுதி வாக்காளப் பெருமக்களே, கட்சி பேதங்களையெல்லாம் பார்க்காமல், நடைபெறுகின்ற அராஜக, ஆணவ ஆட்சிக்கு ஒரு பாடம் கற்பித்திட, உங்களுடைய மேலான வாக்குகளை அன்புத் தம்பி என். ஆனந்துக்கு “உதயசூரியன்” சின்னத்திலே அளித்து, பெரும்பான்மையான வாக்குகளில் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். அன்புள்ள,
மு.க.
12-2-2015
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 52 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 52 PDF ↗