தொகுதி 52 · கடிதம் 3951
அகதிகள் பிரச்சினையில் அ.தி.மு.க. அரசின் பொறுப்பற்ற செயல்!
2015-01-31
உடன்பிறப்பே,
தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை எந்த அளவுக்கு அமைச்சர்களும், அதிகாரிகளும், ஆளுங்கட்சியினரும் மதித்து நடந்து கொள்கிறார்கள் என்பதைக் குடியரசு தின விழா அணிவகுப்பின்போதே கண்டோம். அதற்குப் பிறகு, நேற்றையதினம் அவர் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியதாக “தினத்தந்தி” நாளேடு, “டெல்லியில் நடைபெறும் கூட்டத்திற்குத் தமிழக அரசு எதிர்ப்பு - பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் அமைச்சர் கடிதம்” என்ற தலைப்போடு முதல் பக்கத்தில் வெளியிட்டிருப்பதைக் கண்டேன். அந்தக் கடிதத்தில் “இலங்கைத் தமிழ் அகதிகள் தாங்களாகவே இலங்கைக்குத் திரும்பிச் செல்வது குறித்து, நாளை நடைபெறவுள்ள அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பங்கேற்கத் தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவரை அனுப்பி வைக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது” என்று தொடங்கி “இலங்கைத் தமிழ் அகதிகள் தாங்களாகவே நாடு திரும்புவது குறித்து நடைபெறவுள்ள அமைச்சர்கள் நிலையிலான ஆலோசனைக் கூட்டம் அவசியமற்றது என தமிழக அரசு கருதுகிறது. எனவே தற்போதைய நிலையில் இந்தக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்” என்று முதலமைச்சர் கடிதத்தை முடித்திருக்கிறார்.
இலங்கை அகதிகளும், இலங்கையிலே முன்னாள் அதிபர் ராஜபக்ஷே அரசின் கொடுமையினால் புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களும், தாங்கள் மீண்டும் தாயகம் திரும்பி, நிம்மதியாக வாழ வேண்டுமென்று விரும்புவது ஒருபுறம் இருந்தாலும், தற்போது அப்படி அங்கே சென்றால் அமைதியான வாழ்வுக்கான வழி ஏற்படுமா? அல்லது முன்பு போலவே கொடுமை தொடருமா? என்றே தெரியாத நிலையில்; இலங்கைக்குத் திரும்பினால் என்ன நடக்கும்? என்பது தெளிவற்ற தெரியாத நிலையில், மத்திய அரசு முக்கியமானதொரு கூட்டத்தைக்
கூட்டியுள்ளபோது, அதிலே தமிழக மூத்த அதிகாரி ஒருவர் கலந்துகொண்டு, அவதிப்படுகின்ற இலங்கைத் தமிழர்களின் நிலைமைகள் பற்றியும், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஈழத் தமிழர் நல்வாழ்வுக்கு ஆற்றிட வேண்டிய பணிகள் பற்றியும் எடுத்துரைக்கக் கிடைத்த அருமையான வாய்ப்பினை இழக்கின்ற அளவுக்கு முதல் அமைச்சரின் கடிதம் உள்ளது. அந்தக் கூட்டத்திலே கலந்துகொண்டு, தமிழ் அகதிகள் அங்கே சென்றால் இலங்கை அரசு அவர்களை நல்ல முறையில் வாழ வைக்க வேண்டும், அதற்கான உறுதியைத் தர வேண்டும் என்ற செய்தியையாவது தெரிவிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை அல்லவா?
முதலமைச்சர் தன் கடிதத்தில், “தமிழ் அகதிகள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்கு உகந்த சுமூகமான நிலை, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இப்போதும் இல்லை என்பதைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்” என்றும் எழுதியிருக்கிறார். இந்தக் கருத்தையே, டெல்லிக்குச் சென்று, அந்தக் கூட்டத்திலே தமிழக அரசின் கருத்தாகத் தெரிவித்து, அதற்கொரு முடிவினைக் காண முயற்சித்திருக்கலாம் அல்லவா?
மேலும் முதலமைச்சர் தன்னுடைய கடிதத்தில், “மதிப்பிற்குரிய எங்கள் தலைவர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழக அரசு” என்று தொடங்கி, “இலங்கைத் தமிழ் அகதிகள் தங்குவதற்கு, மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் தமிழக அரசு இட வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது” என்றும், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு அ.தி.மு.க. ஆட்சியிலேதான் சலுகைகள் செய்து தரப்பட்டன என்றும் டெல்லிக்குப் பிரதமருக்கு எழுதிய கடிதத்திலே பட்டியலிட்டிருக்கிறார். அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியிலேதான் சலுகைகள் செய்யப்பட்டன என்றும், அதற்கு முன்பிருந்த கழக ஆட்சியிலே எதுவும் செய்யப்படவில்லை என்பது போலவும் பன்னீர்செல்வம் எழுதிய காரணத்தால்தான், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு தி.மு.கழக ஆட்சியில் என்னென்ன செய்யப்பட்டன என்பதை நினைவு கூர்ந்திட வேண்டிய கட்டாயத்திற்கு நான் வந்தேன்.
24-10-2009 அன்று “இந்து” நாளிதழில் “Facilities at Refugee Camps good: U.S. Consul-General” என்ற தலைப்பில் - “U.S.
Consul-General Andres T. Simkin, on Friday expressed satisfaction with the facilities provided to refugees living in camps in Tamil Nadu” என்ற வரிகளைத்தான் இந்த நேரத்தில் பன்னீருக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். கழக ஆட்சியில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்காகச் செய்யப்பட்ட சலுகைகளைச் சுருக்கமாக நினைவூட்ட வேண்டுமேயானால், இதோ பட்டியல்:-
தமிழ்நாட்டில், 26 மாவட்டங்களில் 115 முகாம்களில் (2 சிறப்பு முகாம்கள் உள்பட) இலங்கைத்தமிழர்கள் குடியமர்த்தப்பட்டிருந்தனர். இவற்றில், 19,340 குடும்பங்களைச் சார்ந்த 73,241 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். சுமார் 11,288 குடும்பங்களைச் சார்ந்த 31,802 பேர் முகாம்களுக்கு வெளியில் தங்கியிருந்தனர்.
2006-ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில், ரூ. 2 கோடியே 80 லட்சம் செலவில், 9562 வீடுகளின் மேற்கூரைகள் சீர் செய்யப்பட்டன. ரூ.3 கோடி செலவில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. 86 முகாம்களில் அடிப்படை வசதிகளான கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் ரூ.9 கோடியே 12 லட்சம் செலவில் செய்துகொடுக்கப்பட்டன. 2007-2008ஆம் ஆண்டில் 50 முகாம்களில் புதியதாகக் கழிப்பறைகள் மற்றும் குடிநீர்வசதிகள் ரூ.5 கோடியே 24 லட்சம் செலவில் செய்து முடிக்கப்பட்டன. 2008ம் ஆண்டில் 72 முகாம்களில் வீடுகள் புதுப்பிக்கவும், மற்றும் கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கவும் ரூ.3 கோடியே 12 லட்சம் செலவிடப்பட்டது. 2009-10ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு இத்தகைய பராமரிப்பு பணிகளைச் செய்வதற்காகச் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் என்னுமிடத்தில் 96 வீடுகள் ரூ.1.20 கோடி செலவிலும், நாட்டரசன்கோட்டை, சென்னலகுடியில் 90 வீடுகள் ரூ.30.50 இலட்சம் செலவிலும், வேலூர் மாவட்டம் குடியாத்தம் முகாமில் 62 வீடுகள் ரூ.21.08 இலட்சம் செலவிலும், ஈரோடு மாவட்டம் காங்கேயத்தில் 63 வீடுகள் ரூ.22.68 இலட்சத்திலும், திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் 26 வீடுகள் ரூ.5.54 இலட்சத்திலும் கட்டிமுடிக்கப்பட்டு இலங்கைத் தமிழர்கள்
குடியமர்த்தப்பட்டனர்.
கரூர் மாவட்டம், ஆச்சிமங்கலம் என்ற இடத்தில் ரூ.1.16 கோடி செலவில் 450 வீடுகள் கட்ட அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. கோவை மாவட்டம், வேடர் காலனி முகாமில் புதியதாக 150 வீடுகள் ரூ.86 இலட்சம் செலவிலும், திருமூர்த்தி நகர் முகாமில் புதியதாக 115 வீடுகள் ரூ.98 இலட்சம் செலவிலும், வேலூர் மாவட்டம் சின்னப்பள்ளிக்குப்பம் முகாமில் புதியதாக 87 வீடுகள் ரூ.68.80 இலட்சம் செலவிலும், திருநெல்வேலி மாவட்டம் நாராயணம்மாள்புரத்தில் புதியதாக 9 வீடுகள் ரூ.7.74 இலட்சம் செலவிலும், ஆலடியூர் முகாமில் 46 வீடுகள் ரூ.39.56 இலட்சம் செலவிலும், அத்தியடிப்பிள்ளையார் கோவில் அகதிகள் முகாமில் 60 வீடுகள், ரூ.51.60 இலட்சம் செலவிலும் புதியதாகக் கட்ட அனுமதி வழங்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களுக்கு அரசின் சார்பில் ரொக்க நிதி உதவி அ.தி.மு.க. ஆட்சியில் எந்த அளவுக்கு உயர்த்தப்பட்டது என்பதையும் முதல் அமைச்சர் டெல்லிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். ஆனால் 1.8.2006 முதலே, தி.மு.கழக ஆட்சியில், மத்திய - மாநில அரசுகள் வழங்கும் பணக் கொடை குடும்பத் தலைவர்களுக்கு ரூபாய் 200 என்பதிலிருந்து 400 ரூபாயாகவும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு வயது வந்தோருக்கும் ரூபாய் 144 என்பதிலிருந்து ரூபாய் 288 ரூபாயாகவும், குடும்பத்தில் உள்ள முதல் குழந்தைக்கு ரூபாய் 90 என்பதிலிருந்து 180 ரூபாயாகவும், குடும்பத்தில் உள்ள மற்ற குழந்தைகளுக்கு ரூபாய் 45 என்பதிலிருந்து 90 ரூபாயாகவும் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டது என்பதைப் பன்னீர்செல்வத்தின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு வரவில்லை போலும்! கர்ப்பிணிப் பெண்களுக்கான; டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறுக்கான ஆறாயிரம் ரூபாய் நிதியுதவித் திட்டம் 2007 முதல் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, சுமார் 1000 பேருக்கு 2007-08ஆம் ஆண்டிலும், 2242 நபர்களுக்கு 2008-09ம் ஆண்டிலும் வழங்கப்பட்டது. முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், இலங்கைத் தமிழ் அகதிகளின் குழந்தைகள் 12ஆம் வகுப்புவரை கட்டணமில்லா கல்வி பயில தகுதி அளிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள்,
பாடப் புத்தகங்கள் எல்லாம் வழங்குவதற்கும் அவர்களுடைய ஆட்சியிலே அறிவிக்கப்பட்டதாக எழுதியிருக்கிறார். ஆனால் தி.மு. கழக ஆட்சிக் காலத்திலேயே முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் இல்லத்து மாணவ மாணவியர்களுக்கு 12ம் வகுப்பு வரை இலவசக் கல்வியும், இலவசப் புத்தகம், நோட்டுப் புத்தகம், சீருடை, மதிய உணவு மற்றும் +1 மாணவ மாணவியருக்கு இலவச மிதிவண்டியும் வழங்கப்பட்டது. 2008-09-ஆம் ஆண்டில் 20,106 மாணவ மாணவியர்களும், 2009-10இல் 19,737 மாணவ மாணவியர்களும் பயன்பெற்றனர் என்பதுதான் உண்மை.
2008-09 மற்றும் 2009-10-ஆம் ஆண்டுகளில் கலைக் கல்லூரிகளில் இலங்கை மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள உரிய அனுமதி மற்றும் ஆணைகள் வழங்கப்பட்டு 2008-09ஆம் ஆண்டில் 917 மாணவ மாணவியர்களும், 2009-10ல் 1084 மாணவ மாணவியர்களும் பயின்றனர்.
2009-10ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழ் மாணவ மாணவியரைச் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேர்க்க அரசின் ஆணைகள் வழங்கப்பட்டன.
அனைத்து முகாம்களிலும் உள்ள இலங்கைத் தமிழர்களுக்குப் பொதுச் சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இலங்கைத் தமிழர் சிறப்பு நிவாரண நிதியில் இருந்து ரூ.15,000/- விபத்து மற்றும் உயிர்காக்கும்
மருத்துவச் சிகிச்சைகளுக்காக வழங்கப்பட்டது.
2006ஆம் ஆண்டிற்கு முன் வரை இரவு 6 மணியில் இருந்து காலை 6 மணி வரை மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. 2006-ஆம் ஆண்டிற்குப் பிறகு 24 மணி நேரமும் தொடர்ந்து மின்சாரம் வழங்க கழக ஆட்சியில் ஆணையிடப்பட்டு வழங்கப்பட்டது.
முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் தங்கள் வாழ்வாதாரத்தினைப் பெருக்கிக்கொள்ளும் பொருட்டுக் காலை 6 மணி முதல் மாலை 6 வரை வேறு இடங்களுக்கு சென்று வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர். இது தவிர வெளியூர்களில் சென்று தங்கி வேலை செய்ய விரும்புபவர்களுக்குச் சிறப்பு அனுமதிகள் வழங்கப்பட்டுப் பணக்கொடை வழங்கப்படும் நாளில் மட்டும் வந்து பணக்கொடைகள் பெற்றுச் செல்ல ஆணைகள் வழங்கப்பட்டன.
அந்த முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நிரந்தரமான விடிவு காலம் பிறக்க வேண்டும் என்பதற்காக 26- 9-2009 அன்று காஞ்சியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில் இறுதித் தீர்மானமாக துணை முதல்வர் தம்பி மு.க. ஸ்டாலின் படித்தபோது, “இவற்றிற்கெல்லாம் மேலாக; இவர்களை இந்தியக் குடியுரிமைச் சட்டம் மற்றும் தொடர்புடைய ஏனைய சட்டங்களின்கீழ், மறு குடியமர்த்தும் முயற்சியாக மத்திய அரசோடு கலந்து பேசி; அவர்கள் விருப்பம் தெரிவித்தால் தமிழகத்திலே நிரந்தரமாகக் குடியிருக்க வழிவகை செய்துதர வேண்டுமென்றும், அவர்கள் தங்குவதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்குமான ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டுமென்று” கேட்டுக் கொண்டதோடு மட்டுமல்லாமல், அதற்கடுத்த மறுநாளே 27-9-2009 அன்று நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், “I request your kind intervention on humanitarian grounds and use of your esteemed offices to resolve this larger issue occupying the centre stage of attention of the Tamil people enabling the permanent settlement of Sri Lankan Tamil Refugees in Tamil Nadu. Once their stay is legally regularised, the Government of Tamil Nadu will be able to take up necessary steps for the betterment of their livelihood, economically and socially” என்று எழுதியிருந்தேன்.
இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களில் வாழ்வோரின் நிலை குறித்து அறிய தி.மு. கழக ஆட்சியில் அமைச்சர்களையெல்லாம் நேரில் சென்று பார்த்து நிலைமை அறிந்து எனக்கு அறிக்கை தர வேண்டுமென்று என் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலேயே முடிவெடுத்து நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டது.
தி.மு.கழக அரசைப் பொறுத்தவரையில் - அவர்கள் இலங்கைத் தமிழ் அகதிகள் அல்ல: அவர்களும் தமிழர்கள் தான் - நம்மோடு தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள் தான் - அவர்களை வாழ்விக்கச் செய்யும் அனைத்து முயற்சிகளும் நம்மை நாமே வாழ்வித்துக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகள்தான் என்ற உணர்வுபூர்வமான நோக்கோடு செயல்பட்டது என்பதுதான் உண்மை. ஆனால் பன்னீர்செல்வம் தற்போது பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அவருடைய மரியாதைக்குரிய அம்மா அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலே தீர்மானம்
நிறைவேற்றியதாகவும் தெரிவித்திருக்கிறார். உண்மைதான்! “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இலங்கை அரசு உடனடியாகக் கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எவரையும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது. இலங்கை அரசால் பிரபாகரனைப் பிடித்து நாடு கடத்த இயலவில்லையென்றால் இலங்கை அரசின் அனுமதியோடு, இந்திய ராணுவத்தை இலங்கை அரசின் உதவிக்கு அனுப்பி, பிரபாகரனைச் சிறைபிடிப்பதற்கு உரிய முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும்” என்றெல்லாம் ஜெயலலிதா தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானங்களை முன்மொழிந்து நிறைவேற்றிய நிகழ்வுகளை மறக்க முடியுமா? அவைகளைத்தான் மறைமுகமாகப் பன்னீர்செல்வம் நினைவுபடுத்தியிருக்கிறார் என்று கருதுகிறேன். இலங்கைத் தமிழ் அகதிகள் பிரச்சினையில், அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த ஆண்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்து பூவிருந்தவல்லி முகாமிற்கு மாற்றப்பட்ட செந்தூரன் என்பவர், சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையினை முன்வைத்துத் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதையும், அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதையும், தமிழக அரசு உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டுச் செந்தூரன் உயிரைக் காப்பதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டுமென்று கழகத்தின் சார்பில் நான் குறிப்பிட்டதையும் மறக்க முடியுமா? இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் தேவையில்லாமல் “அம்மா” புகழ் பாடியிருப்பதையும், டெல்லி கூட்டத்திலே கலந்து கொண்டு, இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உரிய நிவாரணங்கள் விரைவில் காணப்பட வேண்டுமென்று நேருக்கு நேர் நின்று குரல் எழுப்பாமல், அந்தக் கூட்டத்தைத் தவிர்ப்பதற்கு நொண்டிச் சமாதானம் கூறிக் கடிதம் எழுதியிருப்பதையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். அன்புள்ள,
மு.க.
31-1-2015
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 52 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 52 PDF ↗