தொகுதி 52 · கடிதம் 3941
நல்ல சமயம் இது; நழுவ விடலாமா?
2014-11-25
உடன்பிறப்பே,
2-11-2014 தேதிய “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில இதழில், “Empowerment of women remains on Paper: Report” என்ற தலைப்பில் மகளிருக்கு இட ஒதுக்கீடு பற்றி ஆய்வு அடிப்படையிலான விரிவான செய்தி ஒன்றினைக் காண நேரிட்டது. 1989ஆம் ஆண்டு தி.மு.கழகம் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது மகளிருக்குச் சொத்தில் சம உரிமை என்ற சட்டம் இயற்றப்பட்டது. மேலும் அதே ஆண்டில்தான், அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 சதவிகிதம் வழங்கும் சட்டமும் கழக ஆட்சியிலே நிறைவேற்றப்பட்டது.
இந்தியா விடுதலை பெற்றதற்குப் பிறகு ஒவ்வொரு அரசாங்கமும் மகளிர் உரிய பிரதிநிதித்துவம் பெறவேண்டுமென்பதைத் தங்களுடைய முக்கிய முழக்கமாக ஒலித்த போதிலும்; பெண்கள் ஆண்களுக்குப் பின்னால்தான் இடம் பெற வேண்டிய நிலையிலே உள்ளார்கள் என்றும், கொள்கை முடிவுகளை வடிவமைப்பதிலும், பொருளாதார முன்னேற்றம் பற்றி வரையறை செய்வதிலும், மகளிர்க்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும் அரசாங்கத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
மத்திய புள்ளியியல் துறை சார்பில், “2014இல் இந்தியாவில் பெண்களும் ஆண்களும்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பில், மோடி அவர்களின் அமைச்சரவையில் 45 பேர் இடம் பெற்றிருந்த போதிலும், அதிலே பெண்கள் 7 பேர் மட்டுமே என்றும்; 2004ஆம் ஆண்டு 10 சதவிகிதம் என்ற அளவுக்கு இருந்த மகளிர், பத்தாண்டுகளுக்குப் பிறகும் தற்போது 15 சதவிகிதம்
பெண் அமைச்சர்கள் தான் என்ற அளவுக்கு இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 62 பெண்கள் மட்டுமே வெற்றிபெற்றார்கள்.
தேர்தலில் போட்டியிடும் மகளிர் என்று பார்க்கும்போது 15வது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 56 சதவிகிதம் போட்டியிட்டதற்கு மாறாக, 16வது பொதுத் தேர்தலில் 66 சதவிகிதமாக ஆனது; ஆண்கள் பங்கேற்ற புள்ளி விவரமும் 60 சதவிகிதம் என்பதிலிருந்து 67 சதவிகிதமாக ஆனது. நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பெண்களில், 20 பேர் 41 வயதிலிருந்து 50 வயதானவர்கள்; அவர்களின் தகுதி நிலை என்ன என்று பார்த்தால், 34 சதவிகிதத்தினர் சமூக மற்றும் அரசியல் பணியாளர்கள் மற்றும் 44 சதவிகிதத்தினர் முதுநிலைப் பட்டதாரிகள். நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் ஆண்களைப் பொறுத்தவரை, 31 சதவிகிதத்தினர் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டவர்கள்; 42 சதவிகிதத்தினர் பட்டதாரிகள்; 29 சதவிகிதத்தினர் முதுநிலைப் பட்டதாரிகள்.
மாநிலங்களைப் பொறுத்தவரை என்ன நிலை என்று பார்த்தால், சட்டப்பேரவையிலே 8 சதவிகிதத்தினரே பெண்கள் - சட்டமன்ற மேலவையிலே 4 சதவிகிதத்தினர்தான் என்ற உண்மை தெளிவாகிறது. இந்தியாவில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே; அவர்களுக்கு ஜனநாயக அமைப்புகளில் உரிய அதிகாரங்களை வழங்கிடவும், தற்போது பொது வாழ்வில் நிலவி வரும் சமன்பாடற்ற பங்கீட்டினை மாற்றியமைத்திடவும் ஒரே தீர்வாக இருப்பது மகளிர்க்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதுதான்.
நான் ஏற்கனவே பல முறை தெரிவித்ததைப் போல, மகளிர்க்கான இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் நிறைவேற்றப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதும், பிறகு ஏதோ ஒரு காரணத்தால், அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் போய் விடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை கடந்த பதினேழு ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகின்ற ஒரு பிரச்சினையாகும். 2005ஆம் ஆண்டு வேலூரில் நடைபெற்ற தி.மு.கழக மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினையொட்டி, “தமிழக மகளிரே ஒன்று கூடுங்கள்” என்று நான் விடுத்த அறிவிப்புக்கிணங்க, அந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15இல் சென்னையில் மகளிர் பேரணி
ஒன்று என் தலைமையில் நடைபெற்றது. மேலும் 2007ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற கழக உயர்நிலைச் செயல் திட்டக்குழு, மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு கொண்டுவர வலியுறுத்தி, மாவட்டத் தலைநகரங்களில் 2007, பிப்ரவரி 10ஆம் தேதி மகளிர் பேரணி நடத்தப்பட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றி, அவ்வாறே நடத்தப்பட்டது. 2008, ஜூன் திங்கள் 14, 15 ஆகிய இரு நாட்களில் கடலூரில் தி.மு.க. மகளிர் அணியினர் நடத்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றுதான், “சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் பெண்கள் 33 சதவிகிதத் தொகுதிகளில் பங்கேற்கும் வகையில் சட்ட முன்வடிவை நிறைவேற்றிட வேண்டும்” என்பதாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் - இன்று நேற்றல்ல, பல ஆண்டுக் காலமாக இந்த மகளிர் இட ஒதுக்கீடு பிரச்சினையில் ஆழ்ந்த அக்கறைகொண்டு, ஒவ்வொரு மாநாட்டிலும், பொதுக் குழுவிலும் தீர்மானங்கள் நிறைவேற்றிடத் தவறியதில்லை. இளம் தலைவர் ராஜீவ் காந்தி அவர்கள் பிரதமராக இருந்த போதுதான் மகளிர்க்கு நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33 சதவிகித இட ஒதுக்கீடு செய்யும் பிரச்சினை பரவலாகப் பேசப்பட்டது. அதற்கு முதற் கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான “பஞ்சாயத்து ராஜ்” சட்டம் நடைமுறைக்கு வந்தபோது, உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர்க்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு என்பது கட்டாயமாக்கப்பட்டது. அதனால்தான், 1996ஆம் ஆண்டு நான்காவது முறையாக எனது தலைமையில் கழக ஆட்சி தமிழகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டவுடன், அதற்கு முன்பு பல ஆண்டுக் காலம் நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை அறிவித்து, மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள் அனைத்திலும் தேர்தலை நடத்தி, 116,747 மக்கள் பிரதிநிதிகள் நிர்வாகப் பொறுப்புகளை யேற்கும் நிலையை உருவாக்கியபோது, மகளிருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்துப் பதவிகளிலும் 33 விழுக்காடு ஒதுக்கீடு செய்து பெரும் சாதனை புரிந்ததின் வாயிலாக, 44,143 மகளிர் அப்போது உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பேற்கும் உன்னதமான நிலைமையைத் தமிழகத்தில் கழக அரசு செய்து காட்டியது.
அதே 1996ஆம் ஆண்டுதான் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிர்க்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா முதலில் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது. அன்றைய பிரதமர் தேவகவுடா அவர்கள் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியில் 81வது அரசியல் சாசன திருத்தத்தின்கீழ் இந்த மசோதாவை அன்றைய மத்திய சட்ட அமைச்சராக இருந்த திரு. ராம்காந்த் காலப் அவர்கள் முன்மொழிந்தார். சமாஜ்வாடி, ராஷ்டீரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததின் காரணமாக அந்த மசோதா - நாடாளுமன்ற உறுப்பினர் கீதாமுகர்ஜி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கையானது அதே ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி யன்று பதினோராவது மக்களவையில் முன்மொழியப்பட்டது. பின்னர் அதற்கடுத்த பன்னிரண்டாவது மக்களவையிலே, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியிலே - 84வது அரசியல் சாசன திருத்தமாக இந்த மசோதா நாடாளுமன்றத்தில் - 26-6-1998 அன்று மீண்டும் முன்மொழியப்பட்ட போதிலும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் மக்களவை ஒத்திவைக்கப்பட நேரிட்டது. அதன்பிறகு பதின்மூன்றாவது மக்களவையில், திரு.வாஜ்பய் அவர்கள் பிரதமராக இருந்தபோது 22-11-1999 அன்று மீண்டும் மசோதா நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது. அன்று சட்ட அமைச்சராக இருந்த திரு. ராம் ஜெத்மலானி அவர்கள் மசோதாவை முன்மொழிந்த போது - சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி. கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து - சட்ட அமைச்சரின் கையிலே இருந்த மசோதாவின் நகலைப் பிடுங்கி, கிழித்தெறிந்தனர். அதன் காரணமாக அப்போதும் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. அதன் பின்னர் 2002ஆம் ஆண்டில் ஒரு முறையும் - 2003ஆம் ஆண்டில் இரண்டு முறையும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட போதிலும், அப்போதும் அதனை நிறைவேற்றிட இயலவில்லை. 2008ஆம் ஆண்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலே - சட்ட அமைச்சராக இருந்த திரு. பரத்வாஜ் அவர்கள் மாநிலங்களவையிலே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை முன்மொழிந்த போதிலும், அப்போதும் அவையிலே ஏற்பட்ட அமளியால் மசோதா நிறைவேறவில்லை.
இப்படித் தொடர்ந்து ஐக்கிய முன்னணி ஆட்சியிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியிலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா முன்மொழியப்பட்ட போதிலும், மசோதாவின் பாதையில் இடப்பட்ட தடைக் கற்களின் காரணமாக நிறைவேறாமலேயே போய்விட்டது.
ஏன்; மகளிர்க்கென தனியே இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரவேண்டும்? இப்போது மகளிர் அந்தப் பொறுப்புகளுக்குப் போட்டியிட முடியாதா? சட்டம் ஏதாவது தடுக்கிறதா?
சட்டம் தடுக்கவில்லை! சட்டமன்ற வேட்பாளராகவோ, நாடாளுமன்ற வேட்பாளராகவோ; தேர்தலில் ஒரு ஆண் போட்டியிடுவதைப் போல; இப்போது ஒரு பெண்ணும் போட்டியிடலாம்; அரசியல் சட்டம் அதைத் தடுக்கவில்லை. ஆனால் ஆணாதிக்கம் அவர்களைப் போட்டியிட அனுமதிக்கவில்லை. ஆணாதிக்கத்தின் இந்தச் சனாதனச் சம்பிரதாயத்துடன் எவ்வளவு காலத்துக்குச் சண்டை போட்டுக்கொண்டிருக்க முடியும்? அதனால்தான் மகளிர்க்கு இத்தனை இடம் என்று ஒதுக்கீடு செய்து, அந்தச் சட்டப்படி அந்த இடங்களில் மகளிர் மட்டும்தான் போட்டியிட முடியும் என்று செய்துவிட்டால்; அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைக்கான அடிக்கல் நாட்டும் திருப்பணி நிறைவேறத் தொடங்கிவிடும்.
ஏற்கனவே “தலித்” எனப்படும் தாழ்த்தப்பட்ட பெருங்குடி மக்களை; இந்த உரிமைகளைப் பெறக் கூடியவர்களாகக் கைதூக்கிவிட இருக்கின்ற தனித் தொகுதி முறை எல்லா மட்டத்திலும் அரசியல் சட்ட ரீதியாக அமைக்கப்பட்டிருப்பதை “மாதிரி”யாகக்கொண்டு; அந்தப் பழைய நிலைக்குப் பங்கமேதும் நேராமல்; தொடர்ந்து நீண்டகாலமாக வைக்கப்பட்டு வருகின்ற கோரிக்கையான மகளிர் இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டு, அதற்கான துவக்கத்தை நடத்த சமூகப் பிரக்ஞையுள்ள அமைப்புகளும் மற்றும் உரிமைகள் வழங்கப்படுவதில் உள்ள நியாயங்களை நிலைநாட்டிட நினைத்திடும் இயக்கங்களும் முன்வர வேண்டும்.
மகளிர்க்கு இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற, “பொதுக் கருத்து” உருவாக வேண்டும் என்ற வாதம் ஏற்புடையதுதான். எனினும் பொதுக் கருத்து உருவாகிட மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சியின் போதும், ஏதோ ஒரு காரணத்தினால் அது தள்ளிப்போய் “காலவரையறையற்ற காத்திருப்பு” என்ற
நிலை ஏற்பட்டு விடுகிறது. இதனைத் தவிர்த்திட, சட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு, முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
முன்னர் மத்திய அரசு மகளிர் இடஒதுக்கீடு எனும் நீண்ட காலக் கோரிக்கையை எப்படியும் நிறைவேற்றுவது என்ற நெஞ்சார்ந்த உறுதியுடன்; தானே முன்வந்து அனைத்துக் கட்சிகளையும் தனித்தனியாகவும், பொதுவாகவும் அழைத்து வைத்துப் பேசியுங் கூட இறுதி முடிவு எடுக்க முடியாத நிலை நேரிட்டது.
காரணம் என்ன? விவசாயி, தொழிலாளி, ஆசிரியர், மாணவர் பிரச்சினை என்றால் அவர்கள் கோரிக்கை ஒருமித்த குரலிலேதான் பெரும்பாலும் ஒலிக்கிறது. ஆனால் மகளிர் இட ஒதுக்கீடு கோரிக்கை என்றாலே; முதலில் எல்லாக் கட்சிகளும் ஒருமித்த குரல் எழுப்புவது என்பது இயலாத ஒன்றாக இருக்கிறது. இட ஒதுக்கீடே மகளிர்க்குத் தேவையில்லை என்று சொல்கின்ற சில முற்போக்கு(?)வாதிகளும் இருக்கிறார்கள்; நிறைவேற்றுமாறு தலையசைப்போரிலும் நிபந்தனை விதித்துத் தம்மையறியாமலே தடுத்திடுவோரும் இருக்கிறார்கள். “எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வரட்டும்; மகளிர்க்குச் சட்ட ரீதியாக இட ஒதுக்கீடு உரிமை வழங்கக் கதவு திறந்தால் போதும்” என நினைப்போரும் இருக்கிறார்கள். அப்படி நினைப்பவர்கள் மகளிர்க்கான இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனும் உள் ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பானவர்கள் என்று எவரும் எண்ணிடத் தேவையில்லை. அவர்களின் சமூக நீதிக்கான இலட்சியப் பயணத்தைத் திரும்பிப் பார்ப்போருக்கு அந்தத் தவறான எண்ணம் எழவே எழாது!
மகளிர்க்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட சட்டம் கொண்டு வரும்போது, அதிலும் உள் ஒதுக்கீடு செய்து, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, புறக்கணிக்கப்படக் கூடியதல்ல! ஆனால் அந்தக் கோரிக்கையே; மூலக் கோரிக்கையான மகளிர் இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு ஒரு முட்டுச் சந்தாக ஆகிவிடக் கூடாதே என்பதுதான் நம் போன்றார்க்குள்ள கவலையாகும்!
இந்திய சுதந்திரப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோதே வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கான உரிமைக் குரலும் ஒலித்து, அதனை உச்சநீதிமன்றம் மறுத்து; சமூகநீதி கண்டிட இட
ஒதுக்கீட்டுக்கான போராட்டத்தைத் திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முறையே தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் நடத்திப் பெருந் தலைவர் காமராசரின் முறையீட்டினால், “ஆசிய ஜோதி” இந்தியப் பிரதமர் பண்டித நேரு 1951ல், அதற்காக அரசியல் சட்டத்தில் முதல் திருத்தமே கொண்டு வந்தார் என்பது வரலாற்றுச் சான்றாக இருக்கிறது. இது வருங்காலத்தில் மேலும் மேலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான சமூக நீதியை உறுதிப்படுத்திட வழிகாட்டும் பெருவாய்ப்பல்லவா!
இந்த வரலாற்றுச் சான்றினைக் கருத்தில்கொண்டு, முதலில் மகளிர்க்கான இடஒதுக்கீட்டினைச் சட்ட ரீதியாகக் கெட்டிப்படுத்திக் கொள்ளவும்; தொடர்ந்து உள் ஒதுக்கீட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளவும் அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும். பெண்களுக்கு நியாயமாகச் சேரவேண்டிய அதிகாரப் பங்களிப்பை வழங்கி இந்திய சமுதாயம் உண்மையில் சம நீதியையும், சமூக நீதியையும் போற்றிடும் சமுதாயமே என்று உலகத்தார்க்கு உணர்த்திட உதவிட வேண்டும் என்றும் இப்போதுள்ள பதினாறாவது நாடாளுமன்றத்திலும், மாநிலங்களவையிலும் மகளிர் இடஒதுக்கீட்டை மகிழ்வோடு ஆதரிக்கக்கூடிய கட்சிகளே பெரும்பான்மையாக உள்ளன; வாஜ்பய் பிரதமராக இருந்தபோது மகளிர் இடஒதுக்கீட்டுக்கு மேற்கொள்ளப்பட்ட மனமார்ந்த முயற்சிகளை நினைவில் கொண்டு; நல்ல சமயம் வாய்த்திருக்கிறது, இதை நழுவ விடக்கூடாது என்றெண்ணி, மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றிடப் பிரதமர் நரேந்திர மோடி ஆர்வத்தோடு முன்வர வேண்டும் என்றும்; வலியுறுத்துகிறேன்.
24-11-2014 அன்று தொடங்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் இன்சூரன்ஸ் திருத்த மசோதா, தொழிலாளர் சட்டங்கள் போன்ற மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் மசோதாக்கள் உள்ளிட்ட 67 மசோதாக்களை நிறைவேற்றிட முனைப்புடன் செயல்பட்டுவரும் மத்திய அரசு, நீண்டகாலமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும் நிறைவேற்றிட முனைப்போடு முயற்சிக்கும் என்று நம்புகிறேன்.
அன்புள்ள, மு.க.
25-11-2014
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 52 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 52 PDF ↗