தொகுதி 52 · கடிதம் 3939
இருள் அகலவும், இதயங்கள் மலரவும் இதோ திட்டங்கள்!
2014-11-22
உடன்பிறப்பே,
பொதுப் பிரச்சினைகள் பற்றியும் தமிழகத்தில் நடை பெறுகின்ற ஆட்சியின் அலங்கோலங்கள் பற்றியும் தினந்தோறும் கருத்துகளை எடுத்துரைக்கும் நான், இன்று நம்முடைய கழகம் திட்டமிட்டு அவசியம் நடத்திட வேண்டிய பிரச்சாரக் கூட்டங்கள் பற்றிச் சில விவரங்களை உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
உடன்பிறப்பே, உனக்குத் தெரியும்; எனக்கு 90 வயது முடிவுற்று 91 வயது நடக்கிறது. இந்த வயதிலும் என்னால் தூங்க முடிவதில்லை. எனக்கு நல்ல தூக்கம் வருவதில்லை. காரணம், என் வீட்டைப் பற்றிய கவலையில்லை; நம் கட்சியைப் பற்றியும், நம் கட்சிக்கு வாளும் - கேடயமுமாக இருந்து வரும் பிரச்சாரக் கூட்டங்கள் சிலகாலம் முறையாகவும் பரவலாகவும் நடைபெறாமல் தொய்வு ஏற்பட்டு இருக்கிறதே என்பதை பற்றியும்தான் கவலை.
நம் கழகத்தை இந்த அளவுக்கு உயர்த்தி வளர்த்தது, கழகச் சொற்பொழிவாளர்கள் ஒவ்வொரு ஊராக, நகரமாக, கிராமமாகச் சென்று செய்த கொள்கைப் பிரச்சாரம் அல்லவா? இன்று இந்த வயதிலும் என்னால் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்ய முடிகிறதோ இல்லையோ என்பதற்காக, கழகத்தின் கருத்துகளை அறிக்கைகளாக, “உடன்பிறப்பு” மடல்களாக வெளியிட்டு வருகிறேன். இந்த கருத்துகளை நம்முடைய “முரசொலி” நாளேட்டைத் தவிர, வேறு எந்த நாளேடும் ஆளுவோர் மீது கொண்டுள்ள அச்சத்தின் காரணமாக முழுமையாக வெளியிடுவதில்லை. நான் வெளியிட்டு வரும் கருத்துகளை முறையாகத் தொடர்ந்து படித்து வந்தாலே பிரச்சாரத்திற்கான கருப்பொருள் கிடைத்து விடும்.
“நம்மிடையே நீண்ட நாள்களாக இருந்து வரும் மடமைகளையும், முன்னேற்றத் தடைகளையும், குறைபாடுகளையும் நீக்கவும், மக்கள் யாவரையும் ஒன்றுபடுத்தி ஒரு சமுதாயமாக ஆக்கவும், சிறப்பாக நமக்கு - திராவிட மக்களுக்கு இருந்து வரும் சமுதாய இழிவு, மத மூட நம்பிக்கை, சாதிப் பிரிவு வேறுபாடு அடியோடு அழிக்கப்பட்டு, உயர்சாதிக் கொடுமையிலிருந்து மீளவுமே பாடுபட்டு வரும்படியான, அதாவது மக்களுக்கு வலியுறுத்தி வரும்படி யான ஒரு பிரச்சார ஸ்தாபனமே திராவிடர் கழகம்” என்று தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தை, பிரச்சார இயக்கம் என்றே வர்ணித்தார்.
திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டபோது பேரறிஞர் அண்ணா அவர்கள் அதை “ஒட்டு மாஞ்செடி” என்றும்; தி.க.வும், தி.மு.க.வும் “இரட்டைக் குழல் துப்பாக்கி” என்றும் விளக்கியதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகத்தின் நீட்சி என்றே கருதப்பட்டு வருகிறது. பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் “பாசறை” என்றும், பாசறைப் பயிற்சி, பிரச்சாரத்திற்குப் பெரிதும் தேவைப்படும் என்றும் கருதினார். இலட்சியங்களை வென்றெடுக்க பிரச்சாரம் மிகவும் அவசியம். பிரச்சாரத்திற்கு பாசறைப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் நிரம்பத் தேவை. அதனால்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள், “ஸ்தாபனம் - அதாவது அமைப்பு - பலருடைய எண்ணங்களைத் திரட்டி, பலருடைய சக்திகளை ஒருங்கு சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு பொது இடம் - ஒரு பாசறை. பாசறையிலே, பலவிதமான போர்க் கருவிகளும், வீரர்களும் தேவை. கருவிகளின் எண்ணிக்கையும் வகையும் வளர்ந்து கொண்டிருக்க வேண்டும். பாசறையின் உபயோகம் அதிகப்பட வேண்டுமானால்; வாள் மட்டும் போரெனக் குவித்து வைத்துக் கொண்டு, கேடயம் தேடாமல் இருப்பதோ, வில்களைக் குன்றெனக் குவித்து வைத்துக் கொண்டு அம்புகள் இல்லாமல் இருப்பதோ, துப்பாக்கிகளைக் கிடங்குகளில் குவித்து வைத்துக் கொண்டு, வெடி மருந்து தேடாமல் இருந்து விடுவதோ, இவை யாவும் ஒழுங்காகவும் தேவைக்கேற்ற அளவும் இருந்து இவைகளைத் திறம்பட உபயோகிக்கும் ஆற்றலுள்ள வீரர்கள் இல்லாதிருந்தால், பாசறை
இருந்தென்ன பயன்?” என்று வகைவகையான பொருள்கள் - அந்தப் பொருள்களைப் பொருத்தமாகக் கையாளக் கூடிய அறிவுக் கூர்மையும் நாவன்மையும் மிக்க பேச்சாளர்கள் - அவர்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு, நாட்டில் தொடர்ந்து நடைபெற வேண்டிய பிரச்சாரம் பற்றி அருமையாக விளக்கியிருக்கிறார் அண்ணா.
தி.மு.கழகத்தில் பிரச்சாரம் செய்வோர், பொது மக்கள் மத்தியில் “பிரச்சாரப் பீரங்கிகள்” என்றும், “சந்து முனைச் சிந்துபாடிகள்” என்றும் அழைக்கப்பட்டனர். தி.மு.கழகத்தின் பிரச்சாரக் கூட்டங்கள் “கழகத்தின் மாலை நேரக் கல்லூரிகள்” எனக் கருதப்பட்டன. தி.மு. கழகம் அரசியலில் காலடியெடுத்து வைப்பதற்கு முன்பெல்லாம், மேடைப் பொழிவு, பிரசங்கமாக இருந்தது; பொழிஞர், பிரசங்கியாக இருந்தார். பிரசங்கம், சொற்பொழிவாகவும், பிரசங்கியார் சொற்பொழிவாளராகவும் நற்றமிழில் நாடு போற்றும் மாற்றம் பெற்றது நமது இயக்கச் சொற்பொழிவாளர்களாலதான்.
அறிஞர் அண்ணா அவர்களும் அவருடைய ஆற்றல் மிக்க தம்பிமார்களும் கையாண்ட பிரமிக்கத்தக்க பிரச்சார உத்திகள்தான், தமிழக அரசியலையே புரட்டிப் போட்டன. அரசாங்கம், ஜனநாயகம், வாக்குரிமை, கருத்துரிமை - என்பதெல்லாம் ஏதோ எங்கோ இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்நியப் பொருள்கள் என்ற எண்ணம் மாறி, நமக்காகவும், நாட்டின் பொது நலனுக்காகவும் ஏற்பட்டவைதான் இவை அனைத்தும் என்ற ஒளிபிறந்து, நமது மக்கள் விழிப்பும் எழுச்சியும் பெற்றது கழகத்தின் இடையறாத பிரச்சாரத்தின் காரணமாகத்தான். பட்டிதொட்டியெங்கும் - ஏன், தெருமுனைகளிலும் திண்ணைகளிலும் நடத்தப்பட்ட பிரச்சாரத்தினால்தான், கழகம் ஆல் போல் தழைத்து வந்திருக்கிறது. 1996 வரை கழகம் பெற்ற தேர்தல் வெற்றிகள் அனைத்தும் அதனுடைய பிரச்சாரப் பலத்தினால்தான்.
தந்தை பெரியார், இறுதி மூச்சு இருந்தவரை தமது வேனிலேயே இடைவிடாது சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரப் பணியை மேற்கொண்டவர். அவர் மறைந்த போது, தமிழக மக்கள், “பெரியாரின் பிரச்சாரச் சுற்றுப்பயணம் நின்று விட்டதே” என்றுதான் கலங்கிக் கண்ணீர் சிந்தினர். பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தைச் சுற்றிச் சுற்றி வந்து விடிய விடியச் சோர்வின்றிப் பிரச்சாரம் செய்தவர்; “இரவு முழுதும் பிரச்சாரம் செய்து, தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது” என்று
முதல் நாள் மாலையிலிருந்து மறுநாள் விடியல் வரை செய்த பிரச்சாரத்தைப் பற்றிப் பெருமிதத்தோடு சுட்டிக்காட்டியிருக்கிறார்.
கழகப் பிரச்சாரப் பணியில் காடு மேடு கழனி என்றும், கிராமம், குக்கிராமம், நகரம் என்றும் கண் துஞ்சாது ஆர்வத்தோடு ஈடுபட்டவன் நான். சைக்கிளிலும், கட்டை வண்டியிலும் கல்லும் முள்ளும் நிறைந்த கரடுமுரடான பாதைகளில் பயணம் செய்து, “பெட்ரோமாக்ஸ்” விளக்கொளியில் பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய காலமெல்லாம் உண்டு. இன்று காலம் மாறிவிட்டது; போக்குவரத்து வசதிகளிலும், மேடை அமைப்பு - விளம்பரம் போன்ற பொதுக்கூட்ட ஏற்பாடுகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நாடகங்கள், திரைப்படங்கள், எழுத்தோவியங்கள், மேடைகள். எனப் பல்வேறு பிரச்சாரச் சாதனங்களையும் தொடர்ந்து பயன்படுத்தியவன் நான். பிரச்சாரப் பயணங்களின்போது நான் சந்தித்த விபத்துகள், அதனால் எனக்கு நேர்ந்த இழப்புகள் பல.
1996க்குப் பிறகு நடந்த தேர்தல்களில் “பிரிண்ட் மீடியா” எனப்படும் அச்சியற்றி வெளிவரும் பத்திரிகைகள் மட்டுமல்லாமல், “எலெக்ட்ரானிக் மீடியா” என்றழைக்கப்படும் ஊடகங்களும் பெரும் பங்கு வகிக்கலாயின. தொடக்க காலத்தில் பத்திரிகைகள் சில, கழகத்திற்கு எதிரானவையாகவே இருந்து வந்தன. அந்த வகைப் பத்திரிகைகளுக்குத் தி.மு.கழகம் என்றாலே ஒரு வகை ஒவ்வாமை, வெறுப்பு இருந்தன. தி.மு.கழகத்தின் பிரச்சாரம் ஏற்படுத்திய எழுச்சியினால் ஏற்றம் பெற்றோரில் பெரும்பான்மையினர் பிற்படுத்தப்பட்டோர் - மிகப் பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் என்பதாலும், தி.மு.கழகத்தின் சமுதாயக் கருத்துகளையும் அரசியல் கொள்கைகளையும் சமுதாயத்தின் சில பிரிவினரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்பதாலும், தி.மு.கழகம் முன்னேற்றப் பாதையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தங்கள் தலை மேல் விழும் இடி என்று அவர்கள் கருதினர். அந்த ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் இயங்கிய பத்திரிகைகள் - அவைகளுக்கு இடையே எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கிக் கொண்டதைப்போல - கழகத்தை அழித்தொழிக்க ஒவ்வொரு கட்டத்திலும் முயற்சி செய்து பார்த்தன. இந்த அணுகுமுறையை ஒட்டியே புதியதாக வந்த ஊடகங்களும் செயல்படலாயின. பத்திரிகை பலமோ, ஊடக வலிமையோ தி.மு.கழகத்திற்கு இல்லை. _- சில பத்திரிகைகளும் ஊடகங்களும் ஜனநாயக மாண்புகளையே சவாலுக்கு அழைக்கின்றன. கருத்துச் சுதந்திரத்தை, கருத்துகளைத் திணிப்பதற்கும், மக்களின் எண்ண ஓட்டங்களை ஆக்கிரமித்துக் கொள்வதற்கும் அவை பயன்படுத்துகின்றன. செய்திகளைச் சொல்லி, காய்தல் உவத்தலகற்றி நடுநிலையோடு கண்ணியமான விமர்சனங்களைச் செய்து, பொது மக்களின் சிந்தனையைச் செழுமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்திற்கு விடை கொடுத்து விட்டு; தகவல்களைத் தங்கள் விருப்பத்திற்கேற்றபடி திரித்தும் வளைத்தும் கற்பனை கலந்தும் வெளியிட ஆரம்பித்தன. இதிலே அவைகளுக்கு இடையே வணிக ரீதியிலான போட்டி வேறு. யார் செய்தியை முந்தித் தருவது, யார் தரும் செய்தி கேட்போரைப் பெரிதும் கவர்ந்து ஈர்க்கிறது, யார் தரும் செய்தியை அதிகமானவர்கள் கேட்டு ஆனந்தம் கொள்கிறார்கள் என்ற அடிப்படையில் போட்டி கடுமையாகி; பேனைப் பெருமாளாக்குவதும், துரும்பைத் தூணாக்குவதும், பூனையைப் புலியென உருவகப்படுத்துவதும், புழுதியைக் கிளப்பிவிட்டு அதை பூதம் எனச் சித்தரிப்பதும் சர்வ சாதாரணமாக ஊடகங்களில் நடைபெறுகின்றன. முழுத் தகவலும் மறுக்கப்படும் இந்தத் தந்திரங்களினால் மக்களிடையே ஒருவித மயக்கம் ஏற்பட்டு; வெண்ணைக்கும் சுண்ணாம்புக்கும் உள்ள வேறுபாடு மறைந்து விடுகிறது. இனி ஒரு அரசு இப்படிப்பட்ட சாதனைகளைச் செய்திட முடியுமா? என்று எண்ணியெண்ணிப் பெருமைப்படத்தக்க அளவுக்கு கழக அரசு, 1996-2001 காலகட்டத்தில் தமிழ் மாநிலத்தைப் பல்வேறு முனைகளிலும் முன்னெடுத்துச் சென்று, வளர்ச்சியின் அனைத்து அளவுகோல்களையும் விஞ்சி, முதன்மை மாநிலமாக ஆக்கிக் காட்டியது. எனினும் என்ன? கழக ஆட்சியில் பணப் புழக்கம் இல்லை - என்ற கற்பனையைச் சில ஊடகங்கள் உள்நோக்கத்தோடு தொடர்ந்து பரப்பி மக்களை நம்பச் செய்து, தேர்தலில் தோற்கடிக்கச் செய்தனர். 2006-2011 காலகட்டத்திலும் கழக அரசு நிகழ்த்திக் காட்டாத சாதனைகளா? 2ஜி என்பது கானல் நீரைத் தேடும் மாயமானைப் போன்றது; ஆனாலும் அந்த அனுமானப் பூதத்தை நடமாடவிட்டு, மக்களைத் திகைத்திட
வைத்துத் திசைதிருப்பித் தேர்தலில் கழகத்தைத் தோற்கடித்தனர். மிகைப்படுத்தல், அதீத கற்பனை - அவற்றின் ஊடே இரண்டறக் கலந்திருக்கும் கவர்ச்சி, ஆகியவை காரணமாகக் கழகம் தோற்கடிக்கப்பட்டது. வாக்காளர்களின் கண்கள் ஊடகங்களின் திட்டமிட்ட பிரச்சாரத்தால் கட்டப்பட்டுவிட்டதால், நமது சாதனைகள் அவர்களுக்குப் புலப்படாமலேயே போய்விட்டன. அந்தச் சிலருடைய வெற்றிக்கும், நம் பலருடைய தேர்தல் தோல்விக்கும் என்ன காரணம் என்பதைச் சற்று ஆழமாக எண்ணிப் பார்த்தால் பின்னணியை உணர்ந்து கொள்ள முடியும்.
ஊடகத்தினர், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரைத் தாங்கிப் பிடிக்கிறார்கள்; அனுதாப அலை அடிக்கிறது என்ற மாயையை ஏற்படுத்துகிறார்கள். தண்டிக்கப்பட்டது ஒரு சதி என்றும்; தண்டித்த நீதிபதி கண்டிக்கப்பட வேண்டியவர் என்றும்
உள்நோக்கத்தோடு சொல்பவர்களைத் தூக்கி நிறுத்துகிறார்கள்.
ஆனால் அதேநேரத்தில் விசாரணையே முடிவுறாத நிலையில் உள்ள வழக்கை ஊதிப் பெரிதாக்கி, அதில் தீர்ப்பு வழங்கிடத் துடிப்போடு இவர்களே முன்வருகிறார்கள். சட்டம் - நியாயம் - நீதி என்பனவெல்லாம் இவர்களுக்கு வேறு, நமக்கு வேறு என்று பாகுபடுத்தப் பார்க்கிறார்கள். சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்ற தத்துவமே தவறானது என்று நம்ப வைக்க எத்தனிக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் குறைகளும் எல்லாவற்றிலும் ஊழலும் நிறைந்த ஆட்சிக்கு எதிரான மனோபாவம் இல்லை என்று சொல்லிச் சொல்லி, தெளிவான சிந்தனை உடையவர்களைக்கூட, அது உண்மையாக இருக்குமோ என்று குழப்பம் அடையச் செய்கிறார்கள்.
இந்த நிலைமைகளையெல்லாம் மாற்றிட நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் பிரச்சாரம்தான். கழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பிரச்சாரகராக மாற வேண்டும். கழகப்பிரச்சாரக்கூட்டங்கள் - தலைமைக் கழகம் அறிவித்தால்தான் நடத்துவது என்ற நடைமுறையை மாற்றி - நாடெங்கும் நாள்தோறும் நடத்தப்பட வேண்டும். அடுத்துவரும் ஓராண்டுக்குள் குறைந்தது ஐந்தாயிரம் பொதுக் கூட்டங்களையாவது கழகத்தின் சார்பில் நடத்திட வேண்டும். கழகத்தில் தற்போது புதியதாகப் பிரிக்கப்பட்டவை உட்பட 65 மாவட்டக் கழகங்களும் - 578 ஒன்றியக் கழகங்களும் - 129 நகரக் கழகங்களும்-122 பகுதிக் கழகங்களும் - 538 பேரூர்க்
கழகங்களும் உள்ளன. 578 ஒன்றியக் கழகங்களும், 129 நகரக் கழகங்களும், 122 பகுதிக் கழகங்களும் ஒவ்வொரு மாதமும் ஒரு பிரச்சாரக் கூட்டம் நடத்தினாலே மாதம் ஒன்றுக்கு 829 கூட்டங்களாகின்றன. இந்த முறைப்படி பன்னிரெண்டு மாதங்களில் ஒன்றியக் கழகங்களும் - நகரக் கழகங்களும்-பகுதிக் கழகங்களும் மொத்தம் 829X12 = 9,948 கூட்டங்களை அதாவது பத்தாயிரம் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களை நடத்திட முடியும். எனவே கழகப் பிரச்சாரத்தை மேலும் வலுப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் ஒன்றியக் கழகங்களும், நகரக் கழகங்களும், பகுதிக் கழகங்களும் 2015 ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்தை நடத்தி, கழகத்திற்குப் புதிய உத்வேகத்தை உருவாக்கித் தர வேண்டுமென்றும்; ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்தியதற்குப் பிறகு, கூட்டம் பற்றிய விவரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பிட வேண்டுமென்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கூட்டங்கள் பற்றி கணினியில் பதிவு செய்யப்படும் தொகுப்பு விவரங்களை ஒவ்வொரு மாதமும் நானும், பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களும், பொருளாளரும் ஆய்வு செய்ய இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
20-11-2014 அன்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் நான் பேசும்போது குறிப்பிட்டதை இங்கே நினைவுபடுத்துகிறேன். “தி.மு.கழகக் கூட்டம் என்றால், தி.மு.கழகத்தின் பிரச்சாரம் என்றால், அது ஏதோ அரசாங்கத்தை மாற்றுகின்ற கூட்டம் என்ற எண்ணத் தோடு மட்டும் அணுகக் கூடாது. சமுதாயத்தை அடியோடு மாற்றுகின்ற சமுதாயப் புரட்சிக்கான சூழலை உருவாக்குகின்ற, மானமுள்ள சமுதாயத்தை ஏற்படுத்துகின்ற பிரச்சாரத்திற்கான கூட்டம் என்றே கருத வேண்டும். நமது பிரச்சாரக் கூட்டங்களில் சுயமரியாதைக் கருத்துகள், சமுதாயக் கருத்துகள், சமுதாய மாற்றத்திற்கு அடிப்படையான கருத்துகள் எடுத்துவைக்கப்பட வேண்டும். நேற்றைய தினம் நானும், நம்முடைய பேராசிரியர் அவர்களும், தமிழர் தலைவர் வீரமணி அவர்களும் என்னுடைய இல்லத்திலே அமர்ந்து இந்தச் சமுதாயத்தை மேலும் சீர்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசித்து எடுக்கப்பட்ட
முடிவின்படி இந்தக் கருத்துகளை வெளியிடுகிறேன்.”
ஆலோசித்து வகுக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிரல்படி மாநிலம் எங்கும் பரவலாகத் தொடர்ந்து முறைப்படி நடைபெற உள்ள நமது பிரச்சாரக் கூட்டங்களில் நமது கருத்துகளை வகைப்படுத்தித் திரும்பத் திரும்பச் சொன்னால் தான் அவை பொதுமக்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதியும்; மாற்றத்திற்கான கதவுகள் திறக்கும். கழகக் கருத்துகள் குன்றின் மேலிட்ட விளக்காக ஒளிரட்டும்; இருள் அகலட்டும்; இதயங்கள் மலரட்டும்!
அன்புள்ள, மு.க. 22-11-2014
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 52 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 52 PDF ↗