தொகுதி 52 · கடிதம் 3924
பொய்யாகிப் போன “புஸ்வாணத்” திட்டங்கள்!
2014-09-26
உடன்பிறப்பே,
தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, 6,805 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் வகையில், மின் கட்டணங்களை 15 சதவிகிதம் முதல் 17 சதவிகிதம் வரை உயர்த்த, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவுசெய்து, உத்தேசக் கட்டண உயர்வுப் பட்டியலையும் ஏடுகளிலே வெளியிட்டுள்ளது. வீடுகள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், வணிகம், நீரேற்று நீர்ப் பாசனம், தற்காலிக மின்வினியோகம் ஆகியவற்றுக்குப் புதிய உத்தேச மின் கட்டணத்தை ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாகப் பொதுமக்களிடம் மிகப் பெரிய எதிர்ப்பு வரக் கூடுமென்று எதிர்பார்த்து, முதல் அமைச்சர் ஜெயலலிதா மின்சாரக் கட்டணம் உயர்ந்தாலும் ஏழை மக்களுக்குப் பாதிப்பு இருக்காது என்றும் கூடுதல் மானியத்தை அரசே வழங்கும் என்றும் குறிப்பிட்டுச் சொல்லாமல் தெளிவின்றி ஓர் அறிவிப்பினைச் செய்திருக்கிறார். ஆனால் ஏழை மக்களுக்குப் பாதிப்பு இருக்காது என்றால், ஏழை மக்கள் என்பதற்கு என்ன வரம்பு அவர் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. தற்போது அறிவிக்க உத்தேசித்துள்ள மின் கட்டண உயர்வு காரணமாக, ஏழை மக்கள் மாத்திரமல்ல; நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மக்களும் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.
ஏழை மக்களுக்குப் பாதிப்பு இருக்காது என்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிக்கையை முதல் பக்கத்தில் வெளியிட்ட “தினத்தந்தி” நாளேடு, மின்சாரக் கட்டண உயர்வு பற்றிய செய்தியை 7ஆம் பக்கத்திலேதான் வெளியிட்டுள்ளது. மேலும் தொழிற்சாலைகளுக்குச் செய்யப்பட்டுள்ள மின்வெட்டு பற்றிய செய்தியை அந்த நாளேடு வெளியிடவே இல்லை.
தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு வீடுகளுக்கு எவ்வளவு என்றால், இரண்டு மாதங்களுக்கு, 201 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூபாய் 4 என்பது, ரூ. 4.60 எனவும், 501 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் ரூபாய் 5.75 என்பதிலிருந்து ரூபாய் 6.60 என்ற அளவுக்கும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு மானியமாகத் தற்போது 500 யூனிட்வரை மட்டுமே வழங்கிவருகிறது. 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்குத் தமிழக அரசு மானியம் அளிப்பதில்லை. இந்த நிலையில் சாதாரண நடுத்தர மக்கள் தற்போது வளர்ந்து வரும் வாழ்க்கை முறைச் சூழ்நிலையில் இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட்டுக்குக் குறையாமல் பயன்படுத்துவார்கள். இப்போது உயர்த்தப்படும் மின் கட்டண உயர்வால் 600 யூனிட்டுக்கு - யூனிட் ஒன்றுக்கு 85 பைசா வீதம் - இதுவரை 3,450 ரூபாய் மட்டுமே கட்டணமாகச் செலுத்தி வந்தவர்கள், இனிமேல் கூடுதலாக 510 ரூபாய் சேர்த்து 3,960 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இவ்வாறு மின் கட்டண உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என்று தொடர்ந்து அறிவித்து, மக்களைக் கசக்கிப் பிழிவதை வாடிக்கையாகக் கொண்டவர் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல் அமைச்சராக வந்தபோது 1-12-2001 முதல் மின் கட்டணங்களை உயர்த்தினார். மீண்டும் 2003ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் 15-3-2003 அன்று 1,398 கோடி ரூபாய்க்கு மின் கட்டண உயர்வுகளைச் செய்தார்.
தி.மு. கழக ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு மின்சார வாரியம் 18-1-2010 அன்று மின் கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கான மனுவைத் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் தாக்கல் செய்தது. அதனைப் பல்வேறு கட்டங்களில் பரிசீலித்து, 31-7-2010 அன்று மின் கட்டண மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட்களுக்குக் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர், குடிசைவாசிகள், விசைத்தறி மின்நுகர்வோர், கைத்தறி மின்
நுகர்வோர், பொது வழிபாட்டிடங்கள் மற்றும் வேளாண் மின்
நுகர்வோர் ஆகியோருக்கு எந்தவிதமான மின் கட்டண உயர்வும் செய்யப்படவில்லை. ஆனால் தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள அறிவிப்பில், வீடுகளுக்கு 2 மாதத்திற்கு 50 முதல் 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் ரூ. 2.60 லிருந்து ரூ. 3 ஆகவும், 101 முதல் 200 யூனிட்வரை பயன்படுத்துவோருக்கு ரூ.2.80 லிருந்து ரூ. 3.25 ஆகவும், 201 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ. 4 லிருந்து ரூ. 4.60 ஆகவும், சராசரியாக 501 யூனிட்டும் அதற்கு மேலும் பயன்படுத்தினால் ஒரு யூனிட் ரூ. 5.75லிருந்து ரூ. 6.60 ஆகவும் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
கழக ஆட்சியில் 2010ஆம் ஆண்டு, மின் கட்டண உயர்வு 1,651 கோடி ரூபாய்தான்! ஆனால் 2011இல் ஆட்சிக்கு வந்த பிறகு 2012ஆம் ஆண்டு 7,874 கோடி ரூபாய் அளவிற்கு மின் கட்டண உயர்வுகளை அறிவித்துவிட்டு, அப்போது அதிலே வெறும் 740 கோடி ரூபாய் அளவிற்குக் கண்துடைப்பிற்காகத் திரும்பப் பெற்றார். 2012ஆம் ஆண்டு 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மின் கட்டண உயர்வுகளைச் செய்துவிட்டு, இரண்டு ஆண்டுக் காலத்தில் தற்போது மேலும் உயர்த்த முன்வந்திருப்பது 6,805 கோடி ரூபாய் என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே எந்த அளவுக்குப் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் சிறிதும் கவலைக் கொள்ளாமல் ஜெயலலிதா ஆட்சியில் மிகையாக மின் கட்டணம் உயர்த்த முன்வந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். கழக ஆட்சியில், வீடுகளுக்கு மின்சாரம் உபயோகிப்போர் மொத்தம் 149.86 இலட்சம் பேரில், 134.67 இலட்சம் பேருக்கு அதாவது 90 சதவிகிதம் பேருக்குக் கழக ஆட்சியில் எந்தவிதமான மின் கட்டண உயர்வும் செய்யப்படவில்லை.
அதற்கே இன்றைய முதலமைச்சர், ஜெயலலிதா 2-8-2010 அன்று விடுத்த அறிக்கையில்,
“விலைவாசியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கச் சொன்னால், விலைவாசியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கிறார் முதல்வர் கருணாநிதி. இரண்டு மாதத்துக்கு 600 யூனிட் மின்சாரத்துக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகளில்
மாதம் 300 யூனிட் மின்சார பயன்பாடு என்பது சர்வ சாதாரணம். மேலும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் ஏழை எளிய மக்கள் கூடுதல் மின்சாரக் கட்டணத்துக்கு ஆளாக்கப்படுவார்கள். மின் கட்டண உயர்வால் வீட்டு வாடகையும் உயரலாம். தொழிற்சாலைகள், சிறு, குறுந் தொழில்கள், குடிசைத் தொழில்கள், கல்வி நிறுவனங்கள் என எல்லா தரப்புக்கும் மின் கட்டண உயர்வால் கடும் பாதிப்பு ஏற்படும். மின் கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் மேலும் உயரக் கூடும். சாமானிய மக்கள்மீது திணிக்கப்பட்டுள்ள இந்தக் கூடுதல் சுமையை உடனடியாக நீக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று என்னைக் கேட்டுக் கொண்ட அம்மையார் ஜெயலலிதா, இப்போது அவருடைய இந்தப் பழைய அறிக்கையினை நினைவுபடுத்திக்கொண்டு இந்த மின் கட்டண உயர்வு முழுவதையும் திரும்பப் பெற்றுக்கொண்டு, அந்தத் தொகை முழுவதையும் மின் வாரியத்திற்கு மானியமாக அளித்திட முன்வர வேண்டும்.
24-9-2014 அன்று இந்தச் செய்தியை வெளியிட்ட “தி இந்து” ஆங்கில நாளிதழ், “Another Shock from T.N. Electricity Authority - Tariff Hike by 15-30 p.c. - Up to 90 p.c. cut for industries” என்ற தலைப்பில் தொழிற்சாலைகளுக்கு மின் வெட்டு செய்யப்படுவது பற்றியும் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு மீண்டும் மின் தடை என்ற செய்தி ஒரு சில நாளேடுகளில் மட்டும் வந்திருக்கிறது. ஆனால் கடந்த மே மாத இறுதியில் ஜெயலலிதா ஒரு அறிவிப்பினைச் செய்தார். 28-5-2014 அன்று ஆளுங்கட்சி நாளேடான “நமது எம்.ஜி.ஆர்” பத்திரிகையில் அந்தச் செய்தி வந்திருந்தது. முதல் பக்கத்தில் வந்த அந்தச் செய்தி என்ன தெரியுமா?
“தமிழக மக்களுக்கு இனிப்பான செய்தி - மீண்டும் மின்மிகை மாநிலமாக்குவேன் என்ற சூளுரையை நிறைவேற்றிய புரட்சித் தலைவி அம்மா - கருணாநிதி ஆட்சியில் இருண்டு கிடந்த தமிழகம் அம்மா ஆட்சியில் ஒளி பெற்று மிளிர்கிறது - மூன்றே ஆண்டுகளில் மின்வெட்டே இல்லாத மாநிலமாக மாற்றிச் சாதனை - ஜூன் 1ஆம்
தேதி முதல் தமிழகம் முழுவதும் மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து - முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அறிவிப்பு - அம்மா பெருமிதம் - அனைத்துக் கட்சிகளும் பாராட்டு - மக்கள் பெருமகிழ்ச்சி” - இது அந்தப் பத்திரிகை செய்திக்கான தலைப்பு. அந்த அறிவிப்பில், “தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் உள்ள மின் கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தையும் 1-6- 2014 முதல் அறவே நீக்க நான் உத்தரவிட்டுள்ளேன். இதன்படி, தற்போது உயர் மின் அழுத்தத் தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைமுறையில் உள்ள 90 விழுக்காடு மின் கட்டுப்பாடு 1-6-2014 முதல் நீக்கப்படும். இதே போன்று, உயர் மின் அழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு மற்ற நேரங்களில் தற்போது நடைமுறையில் உள்ள 20 விழுக்காடு மின் கட்டுப்பாடும் 1-6-2014 முதல் நீக்கப்படும். இதன் மூலம் 1-11-2008 முதல் தமிழ்நாட்டில் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியினரால் அமல்படுத்தப்பட்ட மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நடவடிக்கையின் காரணமாகத் தமிழ்நாட்டில் தொழில் வளம் மேலும் பெருகவும், புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவும் வழிவகை ஏற்படும். நான் ஏற்கனவே உறுதி அளித்தபடி மின்வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்குத் தமிழ்நாட்டை மூன்றே ஆண்டுகளில் கொண்டுவந்ததில் நான் பெருமிதம் அடைகிறேன்” என்றெல்லாம் பெருமையோடு அறிவித்திருந்தார்.
இந்தச் செய்தி வெளிவந்து நான்கு மாதங்கள் கூட ஆகவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, உள்ளாட்சி மன்றங்களுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கோவையில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா மின்தடையை ரத்து செய்தது பற்றித் தன்னைத்தானே பாராட்டிக் கொண்டார். அப்போதே இது பற்றி நான் விளக்கமளித்திருந்தேன்.
24-9-2014 அன்று பெரும்பாலான ஏடுகளில் வெளிவந்த செய்திகளில் ஒன்று “தொழிற்சாலைகளுக்கு மீண்டும் மின்தடை அறிவிப்பு” என்பதாகும். ஆனால் இந்த மின்தடை அறிவிப்பு, ஆளுங்கட்சியின் நாளேட்டில் வெளிவந்திருக்கிறதா என்று பார்த்தால், அறவே கிடையாது. அவர்களுக்கே அதை வெளியிட வெட்கமாக இருந்தது போலும்!
மின்தடையை நீக்குவதாக மகிழ்ச்சியுடன் செய்தி வெளியிட்ட முதலமைச்சர் தொழிற்சாலைகளுக்கு மீண்டும் மின்தடை என்ற அறிவிப்பினைச் செய்தாரா என்றால் கிடையாது. மின்வாரிய அதிகாரிகள்தான் இந்த அறிவிப்பைச் செய்திருக்கிறார்கள். அதன்படி தொழிற்சாலை மற்றும் வணிக மின் இணைப்புகளுக்கு 20 சதவிகித மின்தடை; மாலை 6 மணி முதல் 10 மணி வரை 90 சதவிகித மின்தடை 23ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். “இதன் மூலம் ஜூன் முதல் மின்தடை ரத்து செய்யப்படும் என்ற அரசின் உத்தரவு, மூன்று மாதங்களில் புஸ்வாணம் ஆகியது, தொழிற்துறையினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது” என்று நாளேடுகளே விமர்சனம் செய்துள்ளது. மேலும் ஒரு பத்திரிகையில், தொழிற்துறையினர் கூறியதாக வந்துள்ள செய்தியில், “கடந்த 2008ல் மின்தடை அமல்படுத்தப்பட முடிவு செய்தபோது, மின்வாரிய அதிகாரிகள், மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் முறைப்படி அனுமதி பெற்று, மின் நுகர்வோரிடம் கருத்து கேட்டு, அதன் அடிப்படையில் மின்தடையை அமல்படுத்தினர். ஆனால், தற்போது புதிதாக மின்தடை அமல்படுத்தும்போது, கடந்த முறை பின்பற்றிய நடைமுறைகளை, மின்வாரிய அதிகாரிகள் பின்பற்றவில்லை. இதனால், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என்று எழுதப்பட்டுள்ளது.
“தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் மின் கட்டண உயர்வு மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டு ஆகியவற்றினால் தொழில் போட்டியில் நம்மால் மேலும் ஈடுபடுவது மிகவும் கடினம்; தொழிற்சாலைகளை நடத்துவதே பெரும் பாரமாகி விட்டது” என்று இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தலைவர் கே. இளங்கோ அவர்களும்; “பஞ்சாலைத் தொழிலுக்குப் பெரும் பாதகம் ஏற்பட்டு விட்டது; பஞ்சாலைத் தொழிலதிபர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்லத் தொடங்கி விடுவார்கள்” என்று தென்னிந்தியப் பஞ்சாலைத் தொழிற்சங்கத் தலைவர் டி. ராஜ்குமார் அவர்களும்; “ஆயத்த ஆடைத் தொழிலில் நிலவும் போட்டிக்கு இப்போதைய நிலையில் நம்மால் ஈடு கொடுக்க முடியாமல் போய்விடும்” என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏ. சக்திவேல் அவர்களும்; “மின் கட்டண உயர்வின் காரணமாகத் தமிழ்நாட்டுக்கென சிறப்பாக இருந்த தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பெரும் பாதிப்புக்குள்ளாகும்” என்று “நாஸ்காம்” இயக்குனர் கே. புருசோத்தமன்
அவர்களும் கூறியதாக இன்றைய (25-9-2014) “இந்து” ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா 23-9-2014 அன்று விடுத்துள்ள அறிக்கையில், 2011இல் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கடந்த மூன்றாண்டு காலமாக மின் உற்பத்தியைப் பெருக்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைத் தனது தலைமையிலான அரசு தொடர்ந்து எடுத்து வந்துகொண்டிருக்கிறது என்று கூறிக் கொண்டிருக்கிறார். 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப் பேற்றவுடன் வைத்த கொள்கை விளக்கக் குறிப்பில், தி.மு. கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களான வடசென்னை நிலை 2, மேட்டூர் நிலை 3, தமிழ்நாடு மின்சார வாரியமும், தேசிய அனல் மின் கழகமும் கூட்டு முயற்சியில் தொடங்கிய வல்லூர், தமிழ்நாடு மின்சார வாரியமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி கூட்டு நிறுவனமும் கூட்டு முயற்சியில் உருவாக்கிய தூத்துக்குடி ஆகிய நான்கு திட்டங்களின் மூலம் 2012ஆம் ஆண்டு இறுதிக்குள் 3,228 மெகாவாட் மின்சாரம் கிடைக்குமென்று சட்டமன்றத்தில் தெரிவித்தார்களே, அந்த நான்கு திட்டங்களில் அ.தி.மு.க. ஆட்சியினர் முனைப்பு காட்டினார்களா? காட்டியிருந்தால் தற்போது தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டு அறிவிக்க வேண்டிய நிலைமையே ஏற்பட்டிருக்காதே? கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை; அ.தி.மு.க. ஆட்சியில் புதிதாக அறிவித்த திட்டங்களிலிருந்தும் ஒரு மெகாவாட் மின்சாரம்கூடக் கிடைக்கவில்லை; இன்னும் சொல்லப்போனால் புதிய திட்டங்கள் எதுவும் தொடங்கப்படவே இல்லை. நான் ஏற்கனவே தெரிவித்ததைப் போலவும், மின்வாரிய அதிகாரிகளே கூறுவதைப் போலவும், ஒரு சிலர் எழுதிக் கொடுக்கும் குறிப்புகளை மட்டும் முதலமைச்சர் படித்துக் கொண்டிருக்கிறாரே தவிர, அவர் கூறியதெல்லாம் பொய், பொய், பொய்யைத் தவிர வேறில்லை என்பதற்குத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மின்வெட்டும், மின் கட்டண உயர்வும் நாட்டுமக்களுக்கு எடுத்துக்காட்டும் சான்றுகளாகும்! அன்புள்ள, மு.க. 26-9-2014
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 52 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 52 PDF ↗