தொகுதி 52 · கடிதம் 3921
தளர்ச்சிப் பாதையில் தடுமாறும் தமிழக ஆட்சி!
2014-09-18
உடன்பிறப்பே,
18.9.2014 நடைபெறும் உள்ளாட்சி மன்ற இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம், தே.மு.தி.க, பா.ம.க., ம.தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், காங்கிரஸ் போன்ற கட்சிகள், ஜனநாயக நெறிமுறைகளுக்கெதிரான ஆளுங்கட்சியின் அராஜகங்களையும், அக்கிரமங்களையும் எதிர்த்துப் போட்டியிட இயலாது என்று கூறிப் போட்டியிடாமல் புறக்கணித்து விட்டன. இதிலே பா.ஜ.க.வும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் மட்டும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட போதிலும், 3,075 இடங்களுக்கு நடை பெற வேண்டிய தேர்தலில், 1,589 இடங்களில் வேட்பு மனுக்களைத் தள்ளுபடி செய்தோ, மாநிலத் தேர்தல் ஆணையமும், அ.தி.மு.க.வும் கூட்டாக இணைந்து அல்லது வாபஸ் பெறச் செய்தோ, மாநிலத் தேர்தல் ஆணையமும், அ.தி.மு.க.வும் கூட்டாக இணைந்து, ஆளுங்கட்சியினர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டனர். அந்த அளவுக்குத் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியில் ஜனநாயகம் கொடி கட்டிப் பறக்கிறது(?.?9. இந்தக் கூத்தில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா - களத்தில் எதிரிகளையே காணவில்லை என்று கூறி விட்டு - கதாநாயகி ஒருவர் “காமெடி” காட்சிகளில் நடிப்பதைப் போல - தேர்தல் பிரச்சாரம் செய்யப் போகிறேன் என்று கூறிக் கொண்டு, பெரும் பணச் செலவில் தூத்துக்குடியில் புதிதாக கெலிகாப்டர் தளம் அமைக்கச் செய்து, அங்கேயும், கோவையிலும் பயணம் செய்து, அவருக்கு எழுதித் தரப்பட்ட பிரச்சார உரைக் குறிப்பை அப்படியே படித்து விட்டு, அதை ஏடுகளுக்கும் கொடுத்து விட்டுத் திரும்பி விட்டார்.
கோவையில் பேச்சினைப் படித்த முதல் அமைச்சர் ஜெயலலிதா “தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது” என்றுகூறி, அதற்காக
அதிகாரிகள் கொடுத்த புள்ளிவிவரங்களைத் தெரிவித்திருக்கிறார். “மத்திய புள்ளியியல் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 2012- 2013ஆம் ஆண்டிற்கான புள்ளி விவரங்களை மேற்கோள்காட்டி, தமிழகத்தில் வளர்ச்சி குறைந்து விட்டதாக, இங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் உள்ள உண்மை நிலையை உங்களுக்கு எடுத்துரைப்பது எனது கடமை” என்று தனது பதிலைத் தொடங்கிய முதலமைச்சர் என்ன புள்ளி விவரத்தைக் கூறி வாதத்தை முறியடித்திருக்கிறார் என்று பார்த்தேன்.
14-9-2014 அன்று நான் “கேள்வி-பதில்” பகுதியில் கூறும்போது, “வழக்கமாக பொருளாதார வளர்ச்சி போன்ற புள்ளி விவரங்களில், மாநில புள்ளியியல் இயக்குனரகங்கள் வெளியிடும் விவரங்களுக்கும், மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவிக்கும் விவரங்களுக்கும் அதிக வேறுபாடு இருக்கும். மாநில புள்ளியியல் இயக்குனரகங்கள் வெளியிடும் புள்ளி விவரங்கள் மாநில அரசின் அனுமதி பெற்ற பிறகே வெளியிடப்படும்; எனவே அந்தப் புள்ளி விவரங்கள் மாநில அரசுக்குச் சாதகமாக இருப்பதோடு, அவற்றில் முழுமையான நம்பகத்தன்மையும் இருப்பதில்லை. ஆனால் மத்திய புள்ளியியல் அலுவலகம் யாரிடமும் அனுமதி பெறுவதில்லை. பிரதமர்கூட இதிலே தலையிட முடியாது. எனவே அவற்றின் நடுநிலையையும், நம்பகத்தன்மையையும் யாரும் சந்தேகிப்பதில்லை. அவ்வாறு மத்திய புள்ளியியல் அலுவலகம் மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி பற்றி வெளியிட்ட அறிக்கை 10-9-2014 அன்று “இந்து” நாளேட்டில் வெளிவந்துள்ளது. அந்தச் செய்தியின் முதல் பத்தியே, “Bihar is the fastest growing State while Tamil Nadu is the worst performer, the latest data released by the Central Statistics Office has revealed” GOMI தான் தொடங்குகிறது. அதாவது மத்திய புள்ளியியல் அலுவலகம் அண்மையில் வெளியிட்ட 2012-2013ஆம் ஆண்டுக்கான விவரப்படி, பீகார் வேகமாக வளர்ந்து வரும் முதல் நிலை மாநிலம் என்றும், தமிழ்நாடு படுமோசமான - கடைநிலை மாநிலம் என்றும் கூறப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மற்றும் மாநில வாரியான வளர்ச்சி ஆகியவற்றை மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள விவரப்படி, நாட்டின் சராசரி உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 4.5 சதவிகிதம். பீகார் மாநிலம் 10.73 சதவிகித வளர்ச்சியை எட்டி நாட்டிலேயே முதல்
இடத்தைப் பிடித்துள்ளது. கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களும் நாட்டின் சராசரி வளர்ச்சி வீதமான 4.5 சதவீதத்தை ஒட்டியோ அல்லது அதைவிடக் கூடுதலாகவோ வளர்ச்சியைப் பெற்றுள்ளன. மாநிலங்களின் வளர்ச்சிப் பட்டியலில், ஒப்பீட்டுத் தர வரிசைப்படி கடைசி இடத்தைப் பிடித்துள்ளது தமிழ்நாடு. இங்கே வளர்ச்சி விகிதம் 3.9 சதவிகிதம்தான். இது நாட்டின் சராசரி வளர்ச்சி விகிதத்தை விட மிகக் குறைவாகும். 18 மாநிலங்களின் தர வரிசைப் பட்டியல் மத்திய புள்ளியியல் அலுவலகத்தால் வெளியிடப்பட்டிருப்பதில், கடைசி இடத்தைப் பெற்றிருக்கும் “பெரும்பேறு (!),” ஜெயலலிதாவை முதலமைச்சராகக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கே கிடைத்துள்ளது” என்று விரிவாகக் குறிப்பிட்டிருந்தேன்.
தமிழகத்திலே உள்ள மற்றக் கட்சித் தலைவர்களும் இந்தப் புள்ளி விவரங்களை எடுத்துக்காட்டி, இந்த மிக மோசமான நிலைக்குக் காரணமான அ.தி.மு.க. ஆட்சிக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். அதற்குத்தான் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா கோவை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலே பதில் கூறியிருக்கிறார். என்ன பதில் தெரியுமா?
“2012-2013ஆம் ஆண்டு தமிழ்நாடு மிகப் பெரிய வறட்சியைச் சந்தித்தது. தென் மேற்குப் பருவ மழை மற்றும் வடகிழக்குப் பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும், கர்நாடகம் நமக்கு உரிய தண்ணீரைத் திறந்து விட மறுத்ததன் காரணமாகவும் வேளாண் உற்பத்தியில் எதிர்மறையான வளர்ச்சியைத் தமிழ்நாடு சந்தித்தது” என்று கூறியிருக்கிறார். அதாவது எதிர்க்கட்சிகள் கூறிய புள்ளி விவரங்கள் தவறு என்று கூறவில்லை. அந்த ஆண்டு தமிழ்நாட்டில் மிகப் பெரிய வறட்சி என்று கூறி “வாய்தா” வாங்கியிருக்கிறார்.
மேலும் ஜெயலலிதா 2013-2014ஆம் ஆண்டில் இந்த நிலை முற்றிலும் மாறிவிட்டதாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கூடுதலாக ஆகியிருப்பதாக மத்திய புள்ளியியல் அமைப்பு மதிப்பிட்டுள்ளது என்றும் கோவையில் தெரிவித்திருக்கிறார். 2012-2013ஆம் ஆண்டுக்கான மொத்த உற்பத்தி வளர்ச்சியைத்தான் மத்திய புள்ளியியல் அமைப்பு வெளியிட்டிருப்பதாக ஏடுகளில் செய்தி வெளிவந்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி பற்றி பதில் கூறியபோது, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி பற்றியும் “டைம்ஸ் ஆப் இந்தியா” வெளியிட்ட புள்ளிவிவரங்களை எடுத்துக் கூறி அதற்கு என்ன பதில் என்று கேட்டிருந்தேனே; அதற்கு ஏன் முதலமைச்சர் ஜெயலலிதா பதிலளிக்கவில்லை? அந்தப் புள்ளி விவரங்கள் எல்லாம் உண்மை என்று ஒப்புக் கொள்கிறாரா? தொழில் முதலீட்டாளர்கள், தொழில்களை நடத்த உகந்த மாநிலமாகத் தமிழ்நாடு இல்லை என்றும், கடந்த மூன்றாண்டுகளாக தொடர் மின்வெட்டு காரணமாகத் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், முதலமைச்சர் உள்ளிட்ட உயர் மட்ட முடிவுகளை எடுப்பவர்களுடன் எளிதில் அணுகிப் பேச முடியாத நிலை இருக்கிறது என்றும், 2012-2013ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மிகவும் குறைந்த அளவான 4.14 சதவிகிதம்தான் என்றும், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி என்பது ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே போகிறது என்றும், தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி, 2009-2010ஆம் ஆண்டில் (தி.மு. கழக ஆட்சியில்) 29.18 சதவிகிதமாக இருந்தது, 2012- 2013ஆம் ஆண்டில் (ஜெயலலிதா ஆட்சியில்) மைனஸ் 1.31 சதவிகிதமாகக் குறைந்து விட்டது என்றும், தொழில் வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், 2009-2010 ஆம் ஆண்டில் (தி.மு.கழக ஆட்சியில்) 20.93 சதவிகிதம். 2012-2013ஆம் ஆண்டில் (ஜெயலலிதா ஆட்சியில்) 5.38 சதவிகிதமாகக் குறைந்து, 2013-2014ஆம் ஆண்டில் 1.61 சதவிகிதமாக மேலும் குறைந்து விட்டது என்றும் கூறியிருக்கிறார்களே, இதற்கெல்லாம் கோவை கூட்டத்திலே முதலமைச்சரால் ஏன் பதிலளிக்க இயலவில்லை?
World Economic Forum’s Competitiveness of Indian Cities என்ற அமைப்பு அண்மையில் “தொழில் தொடங்க சென்னை ஒரு சரியான இடம் கிடையாது. அகமதாபாத்தான் முதல் நிலையில் இருக்கிறது. ஆனால் நான்காண்டுகளுக்கு முன்பு சென்னை பற்றிய நிலைமையே வேறு. 2010ஆம் ஆண்டு வெளியான அறிக்கையின்படி, தர வரிசையில் சென்னை, பெங்களூருவைப் பின்னுக்குத் தள்ளி விட்டது என்பதுதான்” என்று கூறியிருக்கிறதே; அதற்கு முதல் அமைச்சரின் பதில் என்ன?
கோவையில் மின்சாரம் பற்றியும் முதலமைச்சர் பேசியிருக்கிறார். ஆனால் தொழிலதிபர் ஒருவர் “டைம்ஸ் ஆப்
இந்தியா” நாளேட்டுக்கு அளித்த பதிலில், “மின்சாரம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. தமிழ்நாட்டில் மின்சாரத்தை வெளியில் வாங்கித் தொழிலை நடத்த வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான மின் நிறுவனங்கள், குறிப்பாகக் காற்றாலை நிறுவனங்கள் மின்சாரத்தை அரசுக்கு விற்று விட்டு, பணத்தைப் பெறுவதற்காக மாதக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கின்றன. தமிழக அரசு பல்வேறு செயல் திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையில், எதையும் செய்யாமல் இருக்கிறது. செப்டம்பருக்குப் பிறகு காற்றாலைகள் மின் உற்பத்தியைச் செய்யாத நிலையில், நாங்கள் என்னதான் செய்வது என்று அக்டோபர் வரை காத்திருக்கப் போகிறோம்” என்றெல்லாம் பேட்டியளித்து பத்து நாட்கள் ஆகிறதே, அதற்கு என்ன பதில்?
மேலும் அதே நாளேட்டில் வேறொரு செய்திக் கட்டுரையில், “NAMMA CHENNAI, NOT A GLOBAL CITY” என்ற தலைப்பில் தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் “போர்டு”, “மிச்சலின்”, “ஹுண்டாய்” ஆகிய கார் நிறுவனங்கள் இந்தியாவில் அவற்றின் தலைமை அலுவலகங்களை சென்னையிலே நிறுவியிருந்தன. ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் எதிர்மறை நடவடிக்கைகளின் காரணமாக அந்த மூன்று கார் நிறுவனங்களும் தங்களுடைய தலைமை அலுவலகங்களை வேறு மாநிலங்களுக்கு மாற்றிவிட்டன என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளதே, அதற்கு முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பதில் எங்கே?
தி.மு. கழகம் ஆட்சியை விட்டு இறங்கும்போது 2011ஆம் ஆண்டில் பேரவையில் படிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை, பத்தி 5இல், “தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் உறுதியான பொருளாதார வளர்ச்சித் திட்டங்களின் காரணமாக, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி வலுவான நிலையில் உள்ளது. நிலையான விலை விகிதத்தின் அடிப்படையில், 2006-2007ஆம் ஆண்டில் விவசாயத் துறையின் வளர்ச்சி 12.64 சதவீதமாகவும், தொழில் துறையின் வளர்ச்சி 12.91 சதவீதமாகவும், சேவைத் துறையின் வளர்ச்சி 16.33 சதவீதமாகவும், மாநிலத்தின் மொத்த உற்பத்தி வளர்ச்சி 14.85 சதவீதமாகவும் இருந்தது. 2005-2006ஆம் ஆண்டில் 39 ஆயிரத்து 692 ரூபாயாக இருந்த தனி நபர் வருமானம், 2009-2010ஆம் ஆண்டில் 69 ஆயிரத்து 377 ரூபாயாக உயர்ந்துள்ளது” என்றெல்லாம் தெரிவித்திருந்தோம்.
ஆனால் இந்த ஆண்டு, அ.தி.மு.க. ஆட்சியில் 13-2-2014 அன்று பேரவையில் படிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில், “சரிநிகர் வளர்ச்சியை எட்ட மாநில அரசு கடுமையாக முயன்று வரும் அதே வேளையில், வளர்ச்சியைத் தூண்டவும், நலிவுற்று வரும் பேரியல் பொருளாதாரச் சூழ்நிலைகளை மேம்படுத்தவும், மத்திய அரசு தவறியதன் காரணமாக, பொருளாதார வளர்ச்சியும், முதலீடுகளும் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன” என்று மத்திய அரசின் மீது பழி போடப்பட்டுள்ளதே தவிர, தமிழ் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி உயர்ந்திருப்பதாக எந்தத் தகவலும் இல்லை. “தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றிக் காட்டுவேன்” என்ற ஜெயலலிதாவின் முழக்கம் வெற்று முழக்கமாகி விட்டது. தமிழகத்திற்கான தொலைநோக்குத் திட்டம் - என்பது வெறும் காகிதத் திட்டமாகி விட்டது. தமிழகத்தின் வளர்ச்சி அனைத்து முனைகளிலும் தரை தட்டிய கப்பலாகி விட்டது. இந்த நிலையில் “தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது” என்று ஜெயலலிதா, தேர்தலுக்காக வாக்காளர்களைத் திசை திருப்புவதற்காக, பேசியிருப்பதில் எந்தவிதப் பொருளும் இல்லை. உண்மையில் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லவில்லை; வாட்டத்தைப் பெருக்கிடும் தளர்ச்சிப் பாதையில்தான் தடுமாறிக் கொண்டிருக்கிறது! அன்புள்ள, மு.க. 18-09-2014
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 52 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 52 PDF ↗