தொகுதி 51 · கடிதம் 3914
குண்டர் சட்டத்தை மேலும் கொடுமையாக்குவதா?
2014-08-15
உடன்பிறப்பே,
அ.தி.மு.க. அரசு சட்டப்பேரவையின் இந்தக் கூட்டத் தொடரின் இறுதி நாளான 12-8-2014 அன்று 19 சட்ட மசோதாக்களை அவசர அவசரமாக முன்மொழிந்து விரிவாகவும், விளக்கமாகவும் விவாதிப்பதற்குக்கூட நேரம் தராமல் அவையிலே நிறைவேற்றியிருக்கிறார்கள். அந்த மசோதாக்களில் ஒன்று; கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்கள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், பாலியல் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்துபவர்கள், காணொலித் திருடர்கள் முதல் முறை குற்றம் புரியும்போதே, குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வழிவகை செய்து இயற்றப்பட்ட மசோதாவாகும். ஏற்கனவே உள்ள சட்டத்தின்படி, இத்தகைய கொடுங்குற்றம் செய்பவர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய வழி உள்ளது. தற்போது இந்த அரசு செய்கின்ற திருத்தம், இந்தச் சட்ட விரோதச் செயல்களைச் செய்பவர்கள், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் (Habitual Offenders) என்பதற்குப் பதிலாக ஒரு முறை குற்றம் செய்தாலும், (Single Offence) அது சட்டம், ஒழுங்கைச் சீர்குலைக்கக் கூடியதாக இருக்கிறது என்ற காரணத்தால், அவர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க வழிவகை செய்து கொள்கிறார்கள். இந்த ஆட்சியினர் ஏற்கனவே உள்ள இந்தக் குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட் சியினர் உள்ளிட்ட தங்களுக்குப் பிடிக்காதவர்களையெல்லாம் கைது செய்து சிறையிலே அடைத்து வந்தார்கள். தற்போது இந்தச் சட்டத்தில் அவர்களுக்கு மேலும் ஒரு வசதியாக, ஒரு முறை இந்தத் தவறினைச் செய்தாலும், அவர்களை இந்தச் சட்டப் பிரிவில் கைது செய்யலாம் என்றாகிறது. தங்களுக்குப் பிடிக்காதவர்களை இந்த ஆட்சியின் தவறுகளை ஜனநாயகரீதியாகத் தட்டிக் கேட்பவர் களையெல்லாம் அச்சுறுத்தி, அடக்கி, முடக்கி, இந்தக் குண்டர்
சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையிலே அடைக்க அ.திமு.க. ஆட்சியினர் மற்றுமோர் வழியினைத் தேடிக் கொள்கிறார்கள். பாலியல் குற்றவாளிகளை - முதல் முறை அக்குற்றத்தைப் புரிந்தாலும் உண்மையாக தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்துத் தண்டிப்பது பற்றி நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் தவறு செய்யாதவர்களையும், அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராகக் கருத்து சொல்பவர்களையும், ஜனநாயக ரீதியாக எதிர்வினைகளில் ஈடுபடுபவர்களையும் தவறு செய்ததாக இட்டுக்கட்டி இந்த ஆட்சியினர் கைதுசெய்வார்கள்.
இந்தச் சட்டத்தின் “மகாத்மியம்” பற்றி “இந்து” ஆங்கில நாளேடு எழுதும் போது, “If enacted, the amendments will mean that the principle that only habitual offenders will be detained under the Goondas Act will be changed to cover even a single offence, “which has a propensity to disturb public order” என்று தெரிவித்திருப்பதோடு, அதே “இந்து” நாளேட்டில், சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி
திரு. கே. சந்துரு அவர்கள் இந்த சட்டத்தைப் பற்றிக் கூறும்போது, “The amendments will be violative of Article 22 of the Constitution, which prescribes the parameters for such detention laws” என்று கருத்து கூறியிருக்கிறார். நீதிபதி சந்துரு அவர்கள் இப்போது மாத்திரமல்ல; அடிக்கடி இந்தச் சட்டம் பற்றிக் கூறும்போது, “Time and again, Justice Chandru says, High Courts had flagged abuse of the Goondas Act and have struck down numerous such detentions. In such a scenario, removing the term “Habitually” may make way for further misuse of the law by the police, he cautions.
இந்தச் சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டால், ஓராண்டு காலத்திற்கு எந்த விசாரணையும் இல்லாமலேயே சிறையிலே அடைக்கப்படலாம் எனும் அளவுக்கு வெள்ளை ஏகாதிபத்தியத்தை நினைஷூட்டும் சட்டம் இது. இந்த ஆட்சியில் இதுவரை இந்தக் குண்டர்கள் சட்டம் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் நன்கறிவோம். குறிப்பாக நீதிமன்றத்திலே இந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மீது நீதியரசர்கள் என்ன தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் என்பதையும் நினைவிலே கொள்வது நல்லது.
இதுபோன்றதொரு சட்டப் பிரிவு இல்லாத நேரத்திலேயே அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற உடனேயே 30-7-2011 அன்று வீரபாண்டி ஆறுமுகம், ஜெ. அன்பழகன், எம்.எல்.ஏ. ஆகியோரும், அதே நாளில் திருவாரூரில் பொருளாளர் மு.க. ஸ்டாலின், பூண்டி கலைவாணன் ஆகியோரும், 2-8-2011 அன்று புரசை ரெங்கநாதனும், 4-8-2011 அன்று ஈரோட்டில் என்.கே.கே.பி. ராஜாவும், 6-8-2011 அன்று திருப்பூர் மாநகர துணைச் செயலாளர் டி.கே.டி. நாகராஜும், 10-8-2011 அன்று திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.வும், சேலம் தம்மம்பட்டி நகரக் கழகச் செயலாளரும், 17-8-2011 அன்று கோவையில் பொங்கலூர் மணியும், 25-8-2011 அன்று முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, திருச்சி மாநகரக் கழகச் செயலாளர் அன்பழகன், கோவை மாநகரச் செயலாளர் வீரகோபால் ஆகியோரும், 27-8-2011 அன்று லால்குடி யில் சவுந்தர பாண்டியன், எம்.எல்.ஏ.வும், காங்கேயத்தில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஏ.சி. கோவிந்தசாமியும், 29-8-2011 அன்று மதுரையில் முன்னாள் மேயரின் கணவர் கோபிநாத்தும், 1-9- 2011 அன்று திருச்செங்கோடு நகராட்சித் தலைவரும், 9-9-2011 அன்று சென்னையில் பகுதிக் கழகச் செயலாளர் ௧. தனசேகரனும், மதுரையில் ஜெயராமனும், 10-9-2011 அன்று நெல்லையில் கருப்பசாமி பாண்டியனும், 11-9-2011 அன்று மதுரையில் மின்னல்கொடியும், 18-9-2011 அன்று விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடியும்,
19-9-2011 அன்று கரூரில் கே.சி.பழனிச்சாமி, எம்.எல்.ஏ.வும், 23-9-2011 அன்று சென்னையில் முன்னாள் அமைச்சர் கே.பி.பி. சாமியும், 2-11-2011 அன்று கே.பி.பி. சாமியின் சகோதரர்களும், ஐசரி கணேசும், 3-6-2012 அன்று மீண்டும் முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகமும், ஐ. பெரியசாமியும், மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் தளபதியும் என்று கழக முன்னணியினர் நாட்டில் நடமாடவே கூடாது என்ற தீய நோக்கத்தோடு, ஆட்சிக்கு வந்து ஒரு சில மாதங்களிலேயே தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்கள் ஜாமீனில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பிறகும், மீண்டும் அவர்கள் மீது ஏதேதோ பொய்ப் புகார்களைப் பெற்று வேண்டுமென்றே வழக்கு தொடுத்தும், அதிலும் நீதிமன்றத்தை அணுகி சட்ட விதிமுறைகளின்படி ஜாமீன் பெற்றால் அவர்களில் சிலர் மீது குண்டர்சட்டத்தைப் பிறப்பித்து விசாரணையே
இன்றிச் சிறையிலே அடைத்தும் தொடர்ந்து நடந்துவந்த பிறகு வேறு வழியில்லாமல் அத்தகைய பழிவாங்கும் காட்டு தர்பார் போக்கினைக் கண்டிக்கும் வகையிலே மாத்திரமல்லாமல், அத்துடன் மக்கள் பிரச்சினைகளையும் இணைத்துக் கழகத் தலைமைச் செயற்குழுவினைக் கூட்டி அதிலே ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அதற்குப் பிறகுதான் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டு முறைப்படி நடைபெற்றது.
திருமங்கலம்-மதுரைச் சாலையில் அமைக்கப்பட்டிருந்த வாகனச் சோதனைச் சாவடியில் போலீசாரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, அவர்களை மோசமான வார்த்தைகளால் திட்டியதாகக்கூறி, பின்னர் கொலை செய்யப்பட்டுவிட்ட, பொட்டு சுரேஷ் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த அமர்நாத் என்பவர் பொட்டு சுரேஷ் மீது அளித்த நிலப் பறிப்பு புகாரின் பேரில் மற்றொரு வழக்கையும் போலீசார் பதிவுசெய்தனர். அந்த வழக்குகளின் அடிப்படையில் பொட்டு சுரேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவை ரத்துசெய்ய மதுரையைச் சேர்ந்த ஆர்.எல். அசோகன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்தார். “குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரைச் சிறையில் அடைப்பதற்கு உகந்த போதுமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என சம்பந்தப்பட்ட அதிகாரி திருப்தி அடையும் நிலையில்தான், அதற்கான உத்தரவை அந்த அதிகாரி பிறப்பிக்க முடியும். ஆனால் பொட்டு சுரேஷ் வழக்கில் அவ்வாறு ஆவணங்கள் காட்டப்படாததால், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” என்று நீதிபதிகள் சி. நாகப்பன், டி. சுதந்திரம் ஆகியோர் 12-11-2011 அன்று உத்தரவிட்டனர்.
விருதுநகரைச் சேர்ந்த கே. சுப்பிரமணி என்பவர் மீது
ரத்து செய்யக்கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில், நீதிபதிகள் கே. சுகுணா, ஆர்.மாலா ஆகியோர்முன் தாக்கல் செய்த வழக்கில்; “குண்டர் சட்டத்தின்கீழ்க் கைது செய்யப்படும் நபரை, நீதிமன்ற விசாரணையைச் சந்திக்காமலேயே ஓராண்டுக்குச் சிறையில் அடைக்கலாம். ஒருவரைக் குண்டர் சட்டத்தில்
சிறையில் அடைக்க உத்தரவிடும் போது, அதற்கான
காரணங்களைக் கவனமாக கையாளவேண்டும். மனத்தை செலுத்தாமல் உத்தரவில் அதிகாரிகள் கையெழுத்திடக் கூடாது. இதனால் குண்டர் சட்டத்தின் உண்மையான நோக்கம் அடிபடுவதுடன், அந்தச் சட்டத்தின்கீழ்க் கைது செய்யப்படும் நபரின் தனி மனித சுதந்திரமும் பாதிக்கப்படுகிறது. குண்டர் சட்டத்தை அமல்படுத்தும்போது பல்வேறு கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துள்ளது. அதை அதிகாரிகள் கடைப்பிடிக்காமல், இயந்திரத்தனமாகச் செயலபட்டு உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றனர். ஆதாரங்களைப் பார்க்காமலேயே விருதுநகர் மாவட்ட ஆட்சியர் குண்டர் சட்ட உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். அவரது உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இதுபோன்று இயந்திரத்தனமாக செயல்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்வதைத் தடுக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கும், மனுதாரர் மகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப் பரிந்துரைத்த இன்ஸ்பெக்டர் குருவெங்கட் ராஜுக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. பணத்தைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சுப்பிரமணிக்கு வழங்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுமாத்திரமா? சேலம் மாவட்டக் கழகச் செயலாளரும், கழகத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவருமான தம்பி வீரபாண்டி ஆறுமுகம் அவர்களை வேண்டுமென்றே, திட்டமிட்டுக் குண்டர் சட்டத்தின்கீழ் ஜெயலலிதா அரசு சிறையிலே அடைத்தது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.என். பாஷா அவர்களும், பால் வசந்தகுமார் அவர்களும் 13-10- 2012 அன்று அளித்த தீர்ப்பில் “நில அபகரிப்பு வழக்கு அடிப்படையில் குண்டர் சட்டத்தைப் பிரயோகிப்பது என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதாகும். ஒருவரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ்ச் சிறையில் அடைப்பதற்கு முன்பு என்ன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த வழக்கில் அந்த விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒருவரைச் சிறையில் அடைத்ததற்குப் பின்னர், ஐந்து நாட்களுக்குள் வழக்கு
தொடர்பான ஆவணங்களை அவருக்குத் தர வேண்டும். அதன்படி மனுதாரர்களை சிறையில் அடைத்ததற்குப் பின்னர் ஐந்து நாட்களுக்குள் எந்த ஆவணங்களும் அவர்களுக்குத் தரப்படவில்லை. மனுதாரர்கள் மீது 2007ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை நடந்த சம்பவம் தொடர்பாக ஆறு வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த ஆறு வழக்குகளை வைத்துத்தான் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ்ச் சிறையில் அடைத்தார்கள். சட்டப்படி இந்த ஆறு வழக்குகளும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புள்ளதாக இருக்க வேண்டும். ஆனால் அவைகள் அப்படி இல்லை. இது தவிர, மனுதாரர்களின் செயல் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். அப்படி எதுவும் மனுதாரர்களின் செயல்களில் இல்லை. வழக்கு சம்பந்தமான ஆவணங் களை முழுமையாகப் படிக்காமல், மனுதாரர்களைக குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ், சிறையில் அடைக்க வேண்டும் என்பதற்காகச் சேலம் மாநகரக் காவல் ஆணையர் இயந்திரத்தனமாக அவசர அவசரமாகச் செயல்பட்டுள்ளார். இதன் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 22 (5)இன் கீழ்த் தரப்பட்டுள்ள தனி மனித உரிமை அறவே மறுக்கப்பட்டுள்ளது. மாநகரக் காவல் ஆணையர் எப்படி அவசர அவசரமாகச் செயல்பட்டாரோ, அவ்வாறே அரசும் இது தொடர்பான ஆவணங்களைப் படிக்காமல் இவ்வழக்கினைத் தொடுத்துள்ளது. சொல்லப்பட்ட எந்த வழக்கிலும் வீரபாண்டி ஆறுமுகம் நேரடியாகச் சம்பந்தப்படவில்லை. எனவே சேலம் மாநகரக் காவல் ஆணையர் உள்நோக்கத்தோடு செயல்பட்டு, வழக்கில் உண்மைக்கு மாறாகப் பொய்யான தகவல்களைக் குறிப்பிட்டுத் தடுப்புக் காவல் ஆணை பிறப்பித்துள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. மேலும் சுமார் 500 பக்கம் உள்ள ஆவணங்களை எப்படி இரண்டு நாள்களில் அரசு அதிகாரிகள் பரிசீலனை செய்து உத்தரவிட்டனர் என்று தெரியவில்லை. இவைகள் எல்லாமே சட்டத்துக்குப் புறம்பானதாகும். மனுதாரார்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ்ச் சிறையில் அடைத்து போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவு செல்லாது. அதை ரத்து செய்கிறோம்”
என்று நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள் என்றால், ஜெயலலிதா அரசுக்கு இதைவிட ஒரு பெரிய கண்டனம் இருக்க முடியுமா?
குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் தங்களை விடுவிக்கக்கோரி தொடர்ந்த வழக்குகள் நிலுவையிலே இருந்ததையொட்டி, அந்த வழக்குகளை விரைந்து முடிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சதீஷ்குமார் அக்னிஹோத்ரி உத்தரவிட்டார். அந்த அடிப்படையில் இந்த வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காகச் சிறப்பு தனி டிவிஷன் பெஞ்ச் ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் நீதியரசர்கள் தனபாலன், சொக்கலிங்கம் ஆகியோர் 14-6-2014 அன்று இத்தகைய வழக்குகளை விசாரித்தனர். நீதிபதிகள் காலை 10.30 மணிக்கு விசாரணையைத் தொடங்கி, மதியம் 2 மணிக்குள் 220 வழக்குகளை விசாரித்து 212 வழக்குகளில் தீர்ப்பு கூறினார்கள். அதன்படி இந்த 212 வழக்குகளில் உள்ள குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
5-8-2013 தேதிய “இந்தியன் எக்ஸ்பிரஸ்” ஆங்கில நாளேடு, குண்டர்கள் சட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “While there is concern over history-sheeters detained under the Goondas Act walking free using legal loop-holes, human rights advocates are equally-worried over the frequent political abuse of the legislation. They say the stringent legislation, whose objective is to contain anti-social elements, has become a political weapon to settle scores” என்றும்;
“Over the years, the Goondas Act has become a toothless law thanks to the sloppy enforcement by the bureaucracy and police. So much so that over 80 per cent of those detained under the Goondas Act manage to walk out of jail within a few months either on the orders of the judiciary or Advisory Board, thereby reducing the invocation of the Act to a mere ritual. Curiously, in most cases, the detentions are quashed on the grounds of ‘non-application of mind’ by the officials/ officers concerned while passing the detention orders. The Madras High Court has time and again quashed the detentions due to the silly mistakes of the officials” என்றும் எழுதியிருப்பதை எண்ணிப் பார்த்தால், இந்தச் சட்டம் எப்படியெல்லாம் சிந்தனை சிறிதுமின்றி
தாறுமாறாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
ஆனால் அ.தி.மு.க. அரசு, “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்” என்பதைப் போல, இந்தச் சட்டத்தை மேலும் கடுமையாகவும், கொடுமையானதுமாக மாற்றி, இதுவரை தொடர்ந்து இத்தகைய குற்றம் செய்தவர்களைத்தான் கைது செய்ய முடியும் என்ற நிலையைத் தளர்த்தி, ஒரே முறை தவறு செய்தாலே போதும், கைது செய்யலாம் என்ற அளவுக்கு, பெரும் தீய உள்நோக்கத்தோடு, திருத்தம் கொண்டு வந்திருக்கிறது. தாங்கள் நினைத்தபடி, அரசியல் ரீதியாகப் பழி வாங்க வேண்டுமென்ற நோக்கில், எதிர்க்கட்சியினரைக் கைது செய்யக்கூடிய வகையில் மிகவும் ஆபத்தான இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்து பேரவையில் நிறைவேற்றியிருப்பது, ஜனநாயகம் உயிர்த்தெழ முடியாமல் ஆழக் குழி தோண்டி புதைக்கும் முயற்சி என்று கழகத்தின் சார்பில் அறிவிக்கின்றேன். அன்புள்ள, மு.க. 15-8-2014
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 51 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 51 PDF ↗