உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 51

தொகுதி 51 · கடிதம் 3907

சர்ச்சையை உருவாக்கவா சமஸ்கிருத வாரம்?

2014-07-22

உடன்பிறப்பே,

கடந்த சில வாரங்களுக்கு முன், சமூக வலைத்தளங்களில் இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய அரசு ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. அதைப் பற்றி 17-6-2014 அன்று “தி எகானமிக் டைம்ஸ்” ஆங்கில நாளிதழ் “பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முன்னுரிமைப்படி வெளியிடப்படும் ஆணை - சமூக வலைத்தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது” என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை வெளியானதும் நான் உடனடியாக அதுபற்றி அறிக்கை ஒன்றினை வெளியிட்டு, பிரதமர் அவர்கள் அதுபற்றி கவனம் செலுத்த வேண்டுமென்பதே நாட்டின் நலன் நாடுவோர் அனைவரது விருப்பமும் வேண்டுகோளுமாகும் என்று தெரிவித்திருந்தேன். இந்த அறிக்கைக்குப் பிறகு பிரதமர் அலுவலகம் “சமூக வலைத்தளங்களில் இந்தி மொழி தொடர்பு மொழியாக, இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும்” என்றும், “இந்தி பேசாத மாநிலங்களில் எந்த மாற்றமும் இருக்காது” என்றும் தெரிவித்திருந்தது. மேலும் தமிழ்நாட்டிற்கு வந்திருந்த மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு அவர்களும் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எந்தப் பகுதி மக்கள் மீதும் மொழியைத் திணிக்க முடியாது; பா.ஜ.க.வைப் பொறுத்தவரை சமூக வலைத்தளங்களில் அலுவலக மொழியாக இந்தியைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது; அனைத்துப் பிராந்திய மொழிகளுக்கும் தாய்மொழிக்கான உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதே பா.ஜ.க. வின் நிலைப்பாடு!” என்று அறிவித்தார். இந்த விவரங்களை நான் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன்.

இதற்குப் பிறகு தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி கட்டாயமாகி வருகிறது

என்றும், இந்தி பயிற்சிக்குச் செல்லாத மற்றும் தேர்வு எழுதாத 11 ஊழியர்களுக்கு “மெமோ” கொடுக்கப்பட்டுள்ளது என்றும், வருகைப் பதிவேடு மற்றும் அரசு ஆணைகளிலும் இந்தி புகுந்திருப்பது மத்திய அரசு அலுவலர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் 30.6.2014 செய்தி வந்தது.

தற்போது மத்திய அரசின் நிறுவனமான சி.பி.எஸ்.ஈ. (Central Board of School Education) இயக்குநர் சார்பில் நான்கு பக்க சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்தச் சுற்றறிக்கையில், ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தை சமஸ்கிருத வாரமாகக் கொண்டாட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, சமஸ்கிருதம் என்றால் என்ன என்றே தெரியாத பிராந்தியங்களுக்கும்கூடப் பொருந்தும் வகையில் உள்ளது என்று மொழியியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். சமஸ்கிருதத்தைக் கற்பிக்கவும் பயிலவும் சி.பி.எஸ்.இ. உறுதி பூண்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியப் பண்பாட்டின் ஆணி வேர் சமஸ்கிருதம்தான்; இதில் இந்திய அறிவுக் களஞ்சியம் உள்ளது என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த கட்டுரைப் போட்டி போன்றவற்றை நடத்த வேண்டுமென்றும் இந்தச் சுற்றறிக்கையிலே கூறப்பட்டுள்ளது. மாணவர்களிடையே சமஸ்கிருதம் பற்றிய விழிப்புணர்ச்சியை வலுப்படுத்திட முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் அதிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.

2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி, ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரத்தை சமஸ்கிருத வாரமாகக் கொண்டாட வேண்டுமென்று உத்தரவிட்டார். இந்திய மொழிகள் அனைத்துக்கும் சமஸ்கிருதம்தான் தாய் என்ற எண்ணத்தை மாணவர்களிடையே பதியவைக்கும் பொருட்டு, 2001-ஆம் ஆண்டு நடந்ததைப் போலவே இப்போது மீண்டும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மொழியியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள் என்றெல்லாம் செய்தி வந்துள்ளது.

இந்தித் திணிப்பை எப்படி ஏற்க முடியாதோ, அதைப் போல சமஸ்கிருதத் திணிப்பையும் ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் மற்ற

கட்சிகள் எல்லாம் கூட சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுவதற்குத் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கையை உடனடியாக மத்திய அரசாங்கம் கைவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான

எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறது.

சமஸ்கிருத மொழி பற்றி எழுதும்போது, நான் சில நாட்களுக்கு முன்பு படித்த திரு. கோ. வேள்நம்பி எழுதிய “அஞ்சிறைத் தும்பி சிலம்பொலி சு.செல்லப்பன்” என்ற நூலில் தமிழ் - உலக முதன்மொழி என்ற தலைப்பில் வெளிவந்த சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

சீகன்பால்கு என்னும் ஜெர்மானியப் பாதிரியார் தமிழ்நாட்டின் தரங்கம்பாடியில் தங்கிச் சமயத் தொண்டாற்றி வந்தார். அவர், தம் தாய் நாடு திரும்பியபோது இலண்டன் வழியே சென்றார். இலண்டனின் மிகப் பெரிய கிறித்துவ அடிகளார் காண்டர்பரியார், சீகன்பால்குவுக்கு விருந்தொன்று வைத்து, தமிழ்நாட்டில் அரிய சமயத் தொண்டாற்றித் திரும்பியுள்ள அவருக்கு மிக உயர்ந்த மொழியான இலத்தீன் மொழியில் பாராட்டிதழ் படித்துத் தருவதாய்ப் பெருமையுடன் கூறியிருக்கிறார். வரவேற்பினை ஏற்றுப் பேசிய சீகன்பால்கு, “உயர்ந்த மொழியான இலத்தீனில் எனக்கு வரவேற்பிதழ் படித்தளிப்பதாகச் சொன்னீர்கள். நானும் ஓர் உயர்ந்த மொழியில் நன்றி கூறுவதுதான் பொருத்தம்” எனச் சொல்லித் தமிழில் பேசியிருக்கிறார். அங்கிருந்தோர் அவரிடம் அம்மொழியின் பெயரைக் கேட்டதும், “தமிழ்” என்று பெருமை பொங்க சீகன்பால்கு கூறினாராம். இது ஒன்று.

அடுத்து, வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளாரும், அவர் காலத்தில் வாழ்ந்த காஞ்சி சங்கராச்சாரியாரும் ஒரு முறை ஒருவரையொருவர் காண நேர்ந்தது. சங்கராச்சாரியார், வள்ளலாரிடம், “உங்கள் பாசுரங்களைப் படித்துப் பார்த்தேன். தமிழ் மொழி நன்றாக இருக்கிறது; என்றாலும் வடமொழிதான் உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் தாய்” என்றாராம். உடனே வள்ளலார், “வடமொழி, தாய்மொழி என்றால், தமிழ்தான் தந்தை மொழி” என்றாராம்! தாய் இருந்தாலும், தந்தை இன்றேல் பிறப்பு ஏது? உலக மொழிகள் தோன்றத் தமிழே முதற்காரணம் என்பதை வள்ளலார் கூறியிருக்கிறார்.

“செந்தமிழை யாம் ஒருவருக்கும் காசுக்கு விற்பதில்லை” என்று நிமிர்ந்த கல்விச் செருக்கோடும், பெருமிதத்தோடும்

கூறியவர் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை திரு. பரிதிமாற் கலைஞர். அவர், “ஆரிய மொழிக்குரிய நெடுங்கணக்கு, தமிழ் முறையைப் பார்த்துச் செய்யப்பெற்றது என்பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு. ஆரியர்கள் தாங்கள் சென்ற இடங்கட்குத் தக்கபடி புதிய லிபியை ஏற்படுத்திக் கொள்ளும் இயல்புடையவர். ஆரியர் தமிழ் லிபியை ஒட்டிக் கிரந்தம் என்னும் பெயரில் புதியதோர் லிபியை ஏற்படுத்திக் கொண்டனர்” எனத் “தமிழ் மொழியின் வரலாறு” என்னும் தம் நூலில் எழுதியிருக்கிறார்.

மனோன்மணியம் நாடக நூலை எழுதிய சுந்தரனார் அவர்கள் அந்த நூலில் தமிழ் வணக்கம் கூறுமிடத்து “ஆரியம் போலுலக வழக்கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே” என்று பெருமைப்படுத்தியதையும்; மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் “தமிழ் வரலாறு” எனும் நூலில், “உலகமொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் எனக் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றுள், தொன்மை, முன்மை, எண்மை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புக்களை ஒருங்கேயுடையது தமிழே” என்று விளக்கியிருப்பதையும் யாரும் மறுத்துவிட முடியாது.

தாய்மொழிக் கல்விக்கு மாறாக - சமஸ்கிருதத்தினை இந்தியா முழுதும் பாட மொழியாக ஆக்கினால், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் இந்தியரை ஒன்றிணைக்கலாம் என்று ஆங்கில ஆட்சியினர்க்கு எடுத்துரைத்ததன் காரணமாக இந்தியா முழுவதும் சமஸ்கிருத ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தன. தமிழ் அறிஞர்கள் எதிர்த்துக் குரல் கொடுத்தனர். அப்போது பரிதிமாற்கலைஞர், தமிழ்ப் பேராசிரியர் பூரணலிங்கம் பிள்ளை முதலியோர் சமஸ்கிருதம் தாய்மொழிப் பாடமாக ஆவதை எதிர்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டனர். 1856இல் கால்டுவெல் அவர்கள் தாம் எழுதிய “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற நூலில், “திராவிட மொழிகள் அனைத்திலும் உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒழித்துவிட்டு, உயிர் வாழ்வதோடு, அவற்றின் துணையை ஒரு சிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வளர்வதும் இயலும்” என்று கூறியுள்ளார். 1857இல் பரிதிமாற் கலைஞர் தாம் இயற்றிய “தமிழ் மொழியின் வரலாறு”

என்னும் நூலில் “திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழியாம் என்பது இலக்கணம். இம்மொழி நூலிலக்கணம் தமிழ் மொழியின்கண்ணும் அமைந்திருத்தல் தேற்றம்” எனக்கூறி, உரிய விளக்கங்கள் அளித்துள்ளார்.

கல்லூரிப் பாடத் திட்டத்தில் தாய்மொழிக் கல்வியாகச் சேர்க்கப்பட வேண்டியது அவரவர் தாய்மொழியா? அல்லது இந்தியாவின் ஒரே செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள சமஸ்கிருதமா? என்ற விவாதம் ஒரு கட்டத்தை எட்டியபோது, அதனை முடிவு செய்யும் பொறுப்பை அன்று இந்தியாவின் புகழ் பெற்ற பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த சென்னைப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்க முடிவுசெய்தார் வைஸ்ராய் கர்ஸான் பிரபு அவர்கள். வைஸ்ராயிடமிருந்து வந்த கோரிக்கை மொழித் தொடர்புடையதாக இருப்பதால் அதன் மீது முடிவெடுக்கத் தகுந்த அமைப்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமே எனக் கருதிய அன்றைய சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், முடிவெடுக்கும் முழுப் பொறுப்பையும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திடமே ஒப்படைத்தார். இதை அறிந்த பரிதிமாற் கலைஞரும், மு.சி. பூரணலிங்கம் பிள்ளை அவர்களும் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த ஆசிரியர் சங்கச் செயற்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்து, தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினர். இதற்காக இவ்விருவரும் பம்பரம் போல் சுழன்று செயலாற்றினர். இவர்கள் விரும்பியது போலவே பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், “கல்லூரிகளில் அவரவர் தாய்மொழிக் கல்வியே பாடமாக்கப்பட வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றி, பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பியது. துணைவேந்தர், அந்த முடிவையே சென்னைப் பல்கலைக்கழக முடிவாக வைஸ்ராய் கர்ஸான் பிரபுவுக்கு அனுப்பி வைத்தார். சென்னைப் பல்கலைக்கழகத் தீர்மானத்தை அரசின் தீர்மானமாக ஏற்றுக்கொண்ட கர்ஸான் பிரபு இந்தியாவெங்கும் உள்ள கல்லூரி மாணவர்கட்கு அவரவர் தாய்மொழிக் கல்வி பெற பாடத் திட்டத்தில் வகை செய்தார். இதன் மூலம் இந்தியக் குடிமக்கட்கு அவரவர் தாய்மொழிக் கல்வி, கல்லூரிகளில் ஒரு பாடமாக உறுதி செய்யப்பட்டது. பரிதிமாற்கலைஞர், மு.சி. பூரணலிங்கம் பிள்ளை முயற்சிகளுக்குப் பின்புலமாகவும், மிகப் பெரும் உதவியாகவும் விளங்கிய பெருமை, நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவிய பாண்டித்துரைத் தேவர் அவர்கட்கும் உண்டு என்பதை

நன்றியுணர்வோடு நினைவுகூரத் தமிழ் மக்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளனர். இந்த விளக்கங்களை எல்லாம் “செம்மொழி உள்ளும் புறமும்” என்ற நூலில் அருமை நண்பர் திரு. மணவை முஸ்தபா எடுத்து எழுதியிருக்கிறார்.

பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினரான அருமை நண்பர் இல. கணேசன் அவர்கள்கூட சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதால் தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும் பாதிப்பில்லை என்றும், அ.தி.மு.க.வில் “அகில” என்பதும், “திராவிட” என்பதும் சமஸ்கிருத வார்த்தைகள்தான் என்றும், சமஸ்கிருதத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்புடையது அல்ல என்றும், அதே நேரத்தில் செம்மொழி தமிழுக்கு தை மாதத்தின் முதல் ஏழு நாட்களைத் தமிழ் மொழி வாரம் என்று கொண்டாடலாம் என்றும் கூறியிருக்கிறார். அவர் வாதப்படியே சமஸ்கிருத வாரம் கொண்டாடினால் மேலும் மேலும் சமஸ்கிருத வார்த்தைகள் உள்ளே வர வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்பதையும் நினைவிலே கொள்ளவேண்டும்.

இந்தப் பிரச்சினை குறித்துத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒவ்வொரு மாநிலத்திலும், அதன் மொழி சார்ந்த கலாச்சாரத்தின் அடிப்படையில் மொழி வாரம் கொண்டாடப்பட வேண்டுமென்றும், தமிழ்நாட்டில் தமிழ்ச் செம்மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் சம்மந்தப்பட்ட மொழிகளின் வாரத்தையும் கொண்டாட உத்தரவிடுங்கள் என்றும் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதை ஏற்க முடியாதென்றும் பிரதமருக்குக் கடிதம் எழுதியதாகக்கூட செய்தி வந்தது. ஆனால் இதே ஜெயலலிதா, 8-7-2014 அன்று தலைமைச் செயலகத்தில் இருந்தவாறே, சென்னையில் காமராஜர் சாலையிலே அமைந்துள்ள விவேகானந்தர் இல்ல வளாகத்தில், தமிழ்நாடு அரசின் இரண்டு கோடி ரூபாய் நிதி உதவியுடன் ராமகிருஷ்ண மடம் நிர்வாகத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள விவேகானந்தர் பண்பாட்டு மையத்தைக் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்த நிகழ்ச்சி பற்றி ஏடுகளில் செய்தி வெளிவந்தது. விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டு விழாவினையொட்டி 8000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள விவேகானந்தர் பண்பாட்டு மையத்தில் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிப் பாடங்களைப் பயிற்றுவித்தல் போன்ற பல்வேறு பண்பாட்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தார்கள். அதாவது தமிழக அரசே இரண்டு

கோடி ரூபாய் நிதி உதவி செய்து, கட்டப்பட்டு, முதலமைச்சரே 8ஆம் தேதி திறந்து வைத்த விவேகானந்தர் பண்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளில் ஒன்றாகத் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிப் பாடங்களைப் பயிற்றுவிக்கப்

போகிறார்களாம்!

தமிழ்நாட்டின் தலைநகரில், தலைமைச் செயலகத்திற்கு அருகிலே உள்ள விவேகானந்தர் பண்பாட்டு மையத்தில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் பயிற்றுவிக்க அமைந்துள்ள பண்பாட்டு மையத்திற்கு அரசின் சார்பில் இரண்டு கோடி ரூபாய் நிதி உதவி செய்துவிட்டு, மத்திய அரசுக்குத் தமிழகத்திலே சமஸ்கிருத வாரம் கொண்டாடக் கூடாது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதுகிறார் என்றால் இது எத்தகைய இரட்டைவேடப் போக்கு என்பதைத் தமிழ்நாட்டு மக்கள்தான் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஆனால் நம்மைப் பொறுத்தவரையில் இந்தி மொழியையோ, சமஸ்கிருத மொழியையோ எந்தப் பிரிவு மக்கள் மீதும் திணிப்பதை என்றைக்கும் ஏற்றுக் கொள்ளாதவர்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள இயலாது. எனவே மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நம்முடைய கடுமையான கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவிப்பதோடு, ஏற்கனவே இந்தி மொழி பற்றிய அறிவிப்பில் மத்திய அரசு அது இந்தி மொழி பேசுகின்ற மாநிலங்களுக்கு மட்டுமே உரிய அறிவிப்பு என்று அறிவித்ததைப் போல, இந்த சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது பற்றியும் உடனடியாக உரிய திருத்த அறிக்கையினை வெளியிட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். சரஸ்வதி, சமஸ்கிருதம் என்ற அடிப்படை வாதத்தைக் கைவிட்டு, தேர்தலின்போது உறுதியளித்தபடி, மத்திய மோடி அரசு இந்திய நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதே முரண்பாடுகளையும், கருத்து மோதல்களையும் தவிர்த்திடப் பெரிதும் உதவும்.

அன்புள்ள, மு.க. 22-7-2014

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 51 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 51 PDF ↗