தொகுதி 51 · கடிதம் 3899
“அம்மா” ஆட்சியில் தொடரும் அகால மரணங்கள்!
2014-07-08
உடன்பிறப்பே,
சென்னை போரூர் மவுலிவாக்கத்தில் ஜெயலலிதா அரசினால் அனுமதி வழங்கப்பட்டு - கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து விலை மதிப்பில்லா 61 உயிர்கள் பலியாகியிருக்கின்றன. அந்தக் கட்டிடம் கட்டுவதற்கு, தவறாகவும், முறைகேடாகவும் அனுமதி வழங்கிய அமைச்சர் மீதோ மற்றவர்கள் மீதோ தக்க நடவடிக்கை எடுக்க முன்வராமல், பெயர் அளவுக்குக் கண்துடைப்பு விசாரணைக் கமிஷனை மற்றவர்களை ஏமாற்றுவதற்காக ஜெயலலிதா அறிவித்திருப்பதைக் கண்டித்தும், நடைபெற்ற சம்பவம் பற்றி விசாரிக்க சி.பி.ஐ. விசாரணைக்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் ஜூலை 12 ஆம் தேதியன்று காலை 10 மணி அளவில் ஆளுநர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணி ஒன்றினைச் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டக் கழகங்களின் சார்பில் நடத்துவதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டக் கழகங்களின் சார்பில் பேரணி அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றை ஒட்டியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்களும் இந்தப் பேரணியில் கலந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.
ஜூன் மாதக் கடைசியில் 28ஆம் தேதியன்று இந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில், 61 பேர் பலியாகியிருக்கிறார்கள். 27 பேர் மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்குத் தலா இரண்டு இலட்சம் ரூபாய் மட்டுமே நிதி உதவி வழங்கப்படும் என்று முதலில் அறிவித்தார். ஆனால் அதே இடத்தைப் பார்வையிட்ட ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள்
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 5 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்த பிறகு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பலியானவர்களின் குடும்பத்தாருக்குத் தமிழக அரசின் சார்பில் மேலும் 5 இலட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
“பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்ற தலைப்பில், மவுலிவாக்கம் சம்பவம் பற்றிப் பத்திரிகையாளர் “சமஸ்” உருக்கமாக ஒரு பக்கத்திற்கு “இந்து” தமிழ் நாளிதழில் ஒரு கட்டுரை தீட்டியிருக்கிறார். புகைப்படங்களோடு வெளிவந்துள்ள அந்தக் கட்டுரையின் முகப்பில் “ஒரு வாரத்துக்கும் மேலாகிறது. இன்றுவரை பெயருக்குக் கூட சம்பிரதாய நடவடிக்கையாகக் கூட ஒருவர் கூடப் பொறுப்பேற்று ராஜினாமா செய்யவில்லை. ஒருவர் கூடப் பதவி-பணி நீக்கம் செய்யப்படவில்லை. ஊழலின் பெயரால் அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஒருவர்கூடக் கைது செய்யப்படவில்லை” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
எப்படி ராஜினாமா செய்வார்கள்? யாரைப் பணி நீக்கம் செய்வார்கள்? சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுத்தால், அவர் எத்தனை சதவிகிதம் மேல் இடத்திற்கு கொடுத்தேன் என்பதைச் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற சிந்தனையில் இருப்பார்கள்.
சமஸ் மேலும் எழுதுகிறார், “தூர நின்னு பார்த்த நமக்கே சகிக்கலையே, எப்படிங்க அவங்களால எல்லாம் நிம்மதியா இருக்க முடியுது? மனசாட்சின்னு ஒண்ணு இருக்குமா? இருக்காதா? ஒரு வாரம் ஆகிவிட்டது சம்பவம் நடந்து, அதை விபத்து என்று குறிப்பிட என் கை கூசுகிறது. அது விபத்தா? ஊழலின் வெடிப்பா? நடந்தது படுகொலை. இந்த அமைப்பின் சகல மட்டங்களிலும் புரையோடியிருக்கும் ஊழல்வாதிகள் செய்த படுகொலை. இது ஒவ்வொருவரின் மனசாட்சிக்கும் தெரியும். இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்க வேண்டிய சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) தலைவர், தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம் சம்பவ இடத்தைப் பார்வையிடவே செல்லவில்லை” என்று தொடருகிறது கட்டுரை. சமஸ் தி.மு.கழகத்தையோ, வேறு எந்தக் கட்சியையோ சேர்ந்தவரல்ல. பொதுவான ஒரு பத்திரிகையாளர், நடுநிலைப் பத்திரிகை ஒன்றில் இந்த அளவுக்கு மனம் வெந்து
எழுதுகிறார் என்றால், இதற்காக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டாமா என்பதைத்தான் நாம் கேட்கிறோம். அதற்கு இந்த ஆட்சியினரிடமிருந்து பதில் இல்லாத காரணத்தால் தான் 12ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி நடத்துகிறோம்.
இச்சம்பவம் குறித்துச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தைக் கண்காணிப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, எம்.ஜி. தேவசகாயம், “கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு சி.எம்.டி.ஏ.வின் முறையான ஆய்வு இல்லை என்பதும், ஊழலின் மொத்த உருவமாக சி.எம்.டி.ஏ. மாறியிருப்பதும் தான் அடிப்படைக் காரணம். ஆனால் அந்தத் துறை அதிகாரிகளைப் பாதுகாப்பதற்கு முதலமைச்சர் முயற்சிக்கிறார் என்பதுதான் அவர் சொல்லியிருக்கும் பதிலிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. பிளானிங் அப்ரூவலுக்கு மாறாக ஒருவர் பல அடுக்கு மாடிகள் கட்டி வருகிறார் என்றால், அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு இருக்கிறது? சி.எம்.டி.ஏ.வுக்குத்தானே? அப்ரூவலுக்கு எதிராகக் கட்டிடம் கட்டப்படுகிறது என்றால் தடுக்க வேண்டியது தானே? அதிகாரிகள் ஏன் தடுக்கவில்லை? அவர்கள் தடுத்திருந்தால் ஜீரணிக்க முடியாத இந்தத் துயரத்தையும் தடுத்திருக்க முடியும்தானே? தங்களுடைய கடமையைச் செய்தார்களா? செய்யவில்லையே?” என்றெல்லாம் அந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் கேட்டிருக்கிறார்.
இடிந்து விழுந்த கட்டிடத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதுபற்றியெல்லாம் நான் விரிவாக 4-7-2014 தேதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். துறையின் அமைச்சரே தலையிட்டு இந்தக் கட்டிடத்திற்கான அனுமதியை வழங்கியிருக்கிறார் என்றும் ஏடுகளிலே செய்திகள் வந்துள்ளன. ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா என்ன காரணத்தாலோ அந்தத் துறையின் அமைச்சரைக் காப்பாற்ற எண்ணி, அவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல், நீதிபதி ரெகுபதி அவர்களை ஒரு நபர் விசாரணைக் கமிஷனாக நியமித்திருக்கிறார். அந்தக் கமிஷனுக்கும் எந்தவிதமான காலவரையறையும் குறிப்பிடவில்லை. அந்த நீதிபதி ஏற்கனவே பல பணிகளிலே ஈடுபட்டிருப்பவர். அவர்
வழக்கறிஞராக இருந்தபோதே, அ.தி.மு.க.விற்காகப் பாடுபட்டவர் என்றும் சொல்லப்படுகிறது.
கமிஷனை அறிவிப்பதற்கு முன்பாகவே, முதலமைச்சர் அளித்த பேட்டியில் எந்தவிதமான முறைகேடும் அனுமதி வழங்கியதிலே இல்லை என்று அறிவித்திருப்பது மறைமுகமாக விசாரணைக் கமிஷன் நீதிபதிக்கு வழங்கிய அறிவுரையாகவே கருதப்படும்.
இந்தச் சம்பவம் நடைபெற்ற மவுலிவாக்கம் பஞ்சாயத்துத் தலைவர் திரு. சதாசிவம் அவர்கள் கூறியதாக “நக்கீரன்” இதழில் வெளிவந்த செய்தியில், 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம், அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர்தான் இந்தக் கட்டிடத்திற்குப் பூஜை போட்டு, கட்டிட வேலையைத் துவங்கி வைத்தாராம். 2013இல் மணல் தட்டுப்பாடு பெரிய அளவில் இருந்ததால், க்ரஷர் மண்ணைப் பயன்படுத்தினார்களாம்! தூண்களில் கருங்கல் ஜல்லிகளைக் கூடத் தேவையான அளவுக்கு உபயோகிக்கவில்லையாம். இடிந்து விழுந்த இந்தக் கட்டிடத்தைப் பார்க்க முதலமைச்சர் வந்த போது, அந்த அமைச்சரும் உடன் வந்ததாக அந்தப் பத்திரிகை செய்தியிலே வெளிவந்துள்ளது. கட்டுமானத்துக்கு ஒரு வாரம் கடல் தண்ணீரைப் பயன்படுத்தியதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்ட போதெல்லாம் இதுபோன்ற அகால மரணங்கள் ஏற்பட்டுத்தான் வருகின்றன. உதாரணமாக 1992ஆம் ஆண்டு பிப்ரவரியில் கும்பகோணம் மகாமகக்குளத்தில் முதலமைச்சரும், அவருடைய உடன்பிறவாச் சகோதரியும் இறங்கிக் குளித்தபோது, அவர்களை வேடிக்கை பார்த்த கூட்டத்தில் 100க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். அந்தக் காட்சியை அப்போது சங்கராச்சாரியார் கூட, “அவாளுக்கு இவாள் ஊற்ற, இவாளுக்கு அவாள் ஊற்ற” என்றெல்லாம் வர்ணித்திருக்கிறார். 2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஏர்வாடியில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டு, அதிலே 28 பேர் பலியானார்கள். 2004ஆம் ஆண்டு ஜனவரியில் திருவரங்கத்தில் மணவிழா ஒன்றில் நடந்த தீ விபத்தில் 54 பேர் தீயில் கருகி மாண்டார்கள். அதன் பின்னர் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கும்பகோணத்தில் பள்ளி ஒன்றில் தீப்பிடித்து 94 குழந்தைகள் கருகினார்கள். மீண்டும் 2005ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நகரில்
வெள்ள நிவாரணப் பொருள்கள் வழங்கியபோது, ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பெண்களும், 19 ஆண்களுமாக, 42 பேர் இறந்த சம்பவமும், அ.தி.மு.க. ஆட்சியிலேதான் நடைபெற்றது. அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே வட சென்னையில் வெள்ள நிவாரணப் பொருள்கள் வாங்க வந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் பலியானார்கள்.
எம்.ஜி. ஆர். நகர் சம்பவத்திற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ராமன் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்த நிலையில் பகுதிக் கழகச் செயலாளராகப் பணியாற்றிய தனசேகரனைக் கைது செய்து சிறையிலே அடைத்தார்கள். 26-12-2005 அன்று சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுதலை செய்யத் தீர்ப்பளித்த போதும், அ.தி.மு.க. அரசு அவரை ஜாமீனில் விடுவதற்குக்கூட இடைக்காலத் தடை பெற்றதோடு, அவர் மீது குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தி, சிறையிலிருந்து ஜாமீனில் கூட வெளியே வர முடியாமல் செய்தனர். சென்னை உயர் நீதிமன்றம் தனசேகரனுக்கு அளித்த ஜாமீன் சரியானதே என்று தெரிவித்த போது, அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.ஜி. பாலகிருஷ்ணன், நவ்லேக்கர் ஆகியோர் விசாரித்து அளித்த தீர்ப்பில், “உங்கள் அரசின் (தமிழக அரசின்) பொறுப்பில்லாத அதிகாரிகள்தான் இந்தச் சோகச் சம்பவத்துக்குக் காரணம், உங்கள் அரசுதான் இதற்கு முழுப் பொறுப்பு. யாரோ வதந்தி கிளப்பினார் என்று பழியை இன்னொருவர் மேல் போட்டுவிட்டுத் தப்பிக்கப் பார்க்காதீர்கள். எங்கிருந்து கிளம்பியது என்பதே தெரியாத ஒரு விஷயத்தைத்தான் வதந்தி என்பார்கள். ஆனால், உங்கள் அரசு தனசேகரனும், வேறு சிலரும்தான் வதந்தி கிளப்பினார்கள் என்கிறது. அரசுதான் இதற்குப் பொறுப்பு. பொதுமக்கள் கூடும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடு செய்வது போலீசாரின் கடமை. வதந்தியால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நெரிசலில் சிக்கி 42 பேர் இறந்ததாகக் கூறுவது பொறுப்பற்ற செயல். பாதுகாப்புத் தர வேண்டியது முழுக்க முழுக்க அதிகாரிகள் பொறுப்பு. தமிழ்நாட்டில் இப்படி அசம்பாவிதம் நடப்பது இது முதல் முறையல்ல. இப்படி அடிக்கடி நடக்கத்தான் செய்கிறது. இதற்காகத் தனசேகரன் மீது பழிபோட்டுத்
தப்ப முடியாது. தமிழக அரசின் அப்பீலைத் தள்ளுபடி செய்கிறோம்”
- என்று உறுதிபடத் தெரிவித்தார்கள்.
இப்படிப்பட்ட தீர்ப்புகளையெல்லாம் பெற்ற கட்சியினர்தான் தற்போதும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிறார்கள். தற்போதும் பழைய பாணியிலேதான் மவுலிவாக்கத்தில் நடைபெற்ற கட்டிட விபத்துக்கு, தங்களுக்கு வேண்டிய ஒரு நீதிபதியின் தலைமையிலே விசாரணைக் கமிஷன் நியமித்து தப்பித்துக்கொள்ள நினைக்கிறார்கள். நீதிபதி விசாரணையை முதல் நாள் அறிவித்துவிட்டு, அந்த விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து விசாரிக்கச் சென்னை மாநகரக் காவல் ஆணையர் மேற்பார்வையில், சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும், குழுவுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப் பல்வேறு துறை வல்லுநர்கள் இடம்பெறுவார்கள் என்றும் ஓர் அறிவிப்பினை முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க. அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பவர்களே இதுபற்றிய விசாரணையை நடத்தினால் ஆட்சியினர் செய்த தவறுகளை நிச்சயம் எடுத்துக்கூற மாட்டார்கள். அது ஊரை ஏமாற்றும் விசாரணைகளாகவே அமையும் என்பதால்தான் சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்று நாம் கேட்டு, அதற்குப் பலரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
மவுலிவாக்கம் கட்டிடத்தைப் பொறுத்தவரையில் அந்தக் கட்டிடத்தில் உள்ள குடியிருப்புகளை வாங்கியவர்களின் நிலைமை என்ன? ஒவ்வொருவரும் வங்கிகளிலே கடன் பெற்றோ, வேறு எங்கோ கடன் பெற்றோ அந்தத் தொகையைக் கட்டி வீடு வாங்கியிருக்கிறார்கள். தற்போது அவர்களின் கதி என்ன? அந்தப் பணம் திரும்பக் கிடைக்குமா? அவர்களுக்கு அரசின் பதில் என்ன? கட்டிடப் பணிகளை ஆற்ற இனித் தொழிலாளர்கள் கிடைப்பார்களா என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.
இது பற்றியெல்லாம் தீர விசாரித்து அறிக்கை பெற்றால்தான் பல பிரச்சினைகளுக்கு முடிவு தெரியும். அதனால்தான் சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்று கழகத்தின் சார்பில் கேட்டு, அதற்கு அ.தி.மு.க. ஆட்சியினர் எந்தவிதமான பதிலும்
தெரிவிக்காத நிலையில் ஆளுநரிடம் இது பற்றி முறையிட நாம் பேரணி நடத்தவிருக்கிறோம். அந்தப் பேரணியினைச் சிறப்பாக நடத்தித்தர வேண்டிய பொறுப்பு உன்னிடம்தான் இருக்கிறது. பேரணி சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் சார்பில்தானே நடைபெறுகிறது என்று அண்டை மாவட்டத்திலே உள்ளவர்கள் நினைக்காமல், தொழிலாளியாகவாவது பணி புரிந்து தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றலாம் என்ற எண்ணத்துடன், நாளெல்லாம் உழைத்துத் தேய்ந்த 61 உயிர்கள் பலிகடாவாகியிருக்கிறார்களே; அவர்களுடைய குடும்பத்தினர் எங்கே என் மனைவி, எங்கே என் கணவன், எங்கே என் மகன் என்றெல்லாம் கதறிக் கதறி அழுகின்றார்களே, அந்த வேதனையை எண்ணித்தான் தி.மு. கழகம் இந்தப் பேரணியை நடத்திட முன் வந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியினர் அதற்குள் சி.பி.ஐ. விசாரணை நடத்துகிறோம், உண்மையை உலகத்திற்குத் தெரிவிக்கிறோம், என்றெல்லாம் அறிவித்து, ஊழலுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. எனவே, இந்தப் பேரணியில் கலந்துகொள்வது நம்முடைய கடமை என்ற உணர்வோடு, கழக உடன்பிறப்புகள் அனைவரும் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணியில் கலந்துகொள்ள வேதனையோடு அழைக்கின்றேன். அன்புள்ள, மு.க. 8-7-2014
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 51 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 51 PDF ↗