தொகுதி 51 · கடிதம் 3871
“சலசல”வெனப் பெருகும் சாட்சிய அருவிகள் பாரீர்!
2014-03-31
உடன்பிறப்பே,
பெங்களூரில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதைத் தொடர்ந்து, அரசு வழக்கறிஞர் பவானிசிங், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சேர்த்த சொத்துக்கள் குறித்து, சாட்சியங்கள் அளித்த விவரங்களையெல்லாம் நான்கு நாட்களாகத் தொகுத்துக் கூறிவருகிறார். அந்த விவரங்களைத் தமிழ்நாட்டில் உள்ள நாளேடுகள் வெளியிடாமல் மறைக்கின்ற காரணத்தால், அந்த விசாரணை விவரங்களை இங்கே தெரிவித்திருக்கிறேன். இந்த விவரங்களையெல்லாம் வாக்காளப் பெருமக்களிடம் நேரடியாகவோ, துண்டு அறிக்கைகள் மூலமாகவோ கொண்டு சேர்த்திட வேண்டிய இன்றியமையாப் பணி உனக்குள்ளது. நாளையே அதை நிறைவேற்றிடுவாய் என்ற நம்பிக்கையோடு அதை இங்கே தருகிறேன்.
ஜெயலலிதா தரப்பினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மேலும் தாமதப்படுத்த வழியில்லாத நிலையில் தற்போது அரசு வழக்கறிஞர் பவானிசிங் பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பினர் வாங்கிய சொத்துக்களைப் பற்றிய விவரங்களை ஆதாரத்தோடு எடுத்துக்கூறித் தன் வாதத்தைத் தொடங்கியிருக்கிறார்.
அப்போது, அவர் ஜெயலலிதாவிற்குச் சொந்தமாகக் கொடநாட்டில் 898 ஏக்கர் நிலமும், நெல்லையில் 1,197 ஏக்கர் நிலமும், வாலாஜாபாத்தில் 200 ஏக்கரா நிலமும், ஊத்துக்கோட்டையில் 100 ஏக்கர் நிலமும், சிறுதாவூரில் 25 ஏக்கர் நிலமும் உள்ளதற்கான சாட்சியங்களை நீதிமன்றத்திலேயே அவர் படித்துக் காண்பித்தார்.
1997 அக்டோபர் 21ஆம் தேதியன்று, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 259 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். தமிழகத்தில் மீண்டும் 2001 மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளவர் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றவுடன், சென்னையில் நடந்து வந்த விசாரணையில் ஏற்கனவே சாட்சியம் அளித்த 76 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு, 2002 நவம்பர் முதல் 2003 பிப்ரவரி 21 ஆம் தேதிவரை விசாரணை நடந்தது. அதைத் தொடர்ந்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313 விதியின்படி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகாமல், நீதிமன்ற உத்தரவின்படி நேரில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வீட்டிற்கே சென்று அவர்களிடம் கேள்வி கேட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
இதனிடையில் இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றம் செய்யக்கோரித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், பொதுச்செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவினையேற்று வழக்கைப் பெங்களூருக்கு மாற்றம் செய்து 2003 நவம்பர் 18ஆம் தேதி உத்தரவிட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கு 1.7.1991க்கு முன் இருந்த சொத்துக்கள் - ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த 1.7.1991 முதல் 30.4.1996 வரையில் சேர்த்த சொத்துக்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன.
வழக்கு காலத்திற்கு முன் ரூ. 2 கோடியே 1 லட்சத்து 82 ஆயிரத்து 953 மதிப்புள்ள சொத்து இருந்ததும், வழக்கு காலத்திற்குப் பின் சொத்து மதிப்பு ரூ. 64 கோடியே 42 லட்சத்து 89 ஆயிரத்து 616 சேர்த்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
1 முதல் 4 வரையிலான குற்றவாளிகள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் என்பதற்கான பல கம்பெனிகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அதன் மூலம் நான்கு குற்றவாளிகளும் கூட்டுச் சதி செய்து, முதல் குற்றவாளி முதலமைச்சராக இருந்தபோது, அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவருக்காகவும், அவரைச் சார்ந்த மற்ற 3 குற்றவாளிகளுக்காகவும் சேர்த்துத் தங்களது வருமானத்திற்கு
அதிகமாகச் சொத்துக்களைச் சேர்த்திருக்கிறார்கள் என்பதுதான் இந்த வழக்கின் அடிப்படையாகும்.
மூன்றாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள வி.என். சுதாகரனை முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள அவரை (ஜெயலலிதா) தத்துப் பிள்ளையாக ஏற்றுக்கொண்டு பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து வைத்துள்ளார். அதற்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குற்றவாளிகள் பல நிறுவனங்களை வாங்கியதற்கான ஆவணங்கள் குறித்தும், அந்த நிறுவனங்களின் பெயரிலேயே பல அசையாச் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ள விவரங்களையும் அரசு வழக்கறிஞர் பெங்களூர் நீதிமன்றத்தில் படித்துக் காண்பித்தார்.
குறிப்பாக இசையமைப்பாளர் கங்கை அமரனுக்குச் சொந்தமான, சென்னையை அடுத்த சிறுதாவூரில் உள்ள பங்களாவுடன் கூடிய 22 ஏக்கர் நிலத்தினைச் சுதாகரன் மிரட்டி வாங்கியது குறித்து அளிக்கப்பட்ட சாட்சியத்தினை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பவானிசிங் படித்துக் காண்பித்தார்.
(அந்த நிலத்தில்தான் இப்பொழுது முதலமைச்சர் ஜெயலலிதா பங்களா கட்டிக் குடியிருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.)
ஜெயலலிதா கொடநாட்டில் வாங்கிய 898 ஏக்கர் நிலத்தினைச் சீரமைக்க வேளாண்மைத் துறை அலுவலர் ராதாகிருஷ்ணனை அழைத்தது பற்றி அந்த அதிகாரியே சாட்சியம் அளித்துள்ளதை அரசு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அதே வேளாண்மைத் துறை அதிகாரி ராதாகிருஷ்ணன், சுதாகரனால் முறைகேடாகச் சொந்தத் தேவைகளுக்காக அனுப்பப்பட்டு, அவர் திருநெல்வேலியில் 1190 ஏக்கர் நிலத்தினை ஆய்வு செய்த பிறகு, வாங்கியது குறித்த சாட்சியத்தையும் பவானிசிங் நீதிமன்றத்தில் எடுத்துக்காட்டி வாதிட்டார்.
அதுமட்டுமல்லாமல், சென்னை அருகே உள்ள வாலாஜாபாத்தில்் 100 ஏக்கர் நிலத்தினை அந்த இடத்தின் உரிமையாளர்களை அணுகி, வாங்கிக் கொடுத்த நிலத்தரகர்
ராஜாராம் வழங்கியிருந்த சாட்சியத்தையும் நீதிமன்றத்தின் கவனத்திற்குப் பவானிசிங் கொண்டுவந்தார்.
இவ்வாறு ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகளால் வாங்கப்பட்ட பல சொத்துக்கள் தொடர்பான விவரங்களையும், அது தொடர்பான சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் எடுத்துக்காட்டிய அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங்,
“வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளவர்களின் பொருளாதார நிலைக்கும், அவர்கள் வாங்கிக் குவித்துள்ள நிலங்களின் மதிப்புக்கும் துளியும் சம்பந்தமில்லை. இவை அனைத்தும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதன் மூலம் வாங்கப்பட்ட நிலங்கள் என்பது சாட்சியங்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது.”
“இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளான ராஜகோபால் மற்றும் ராதாகிருஷ்ணன் போன்ற அரசு அதிகாரிகள் போயஸ் தோட்டத்திற்கு வரவழைக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன” என்றும் பவானிசிங் வாதிட்டார்.
ராஜகோபால் என்ற சார்பதிவாளரைப் பயன்படுத்திப் பல இடங்களில் அரசு நிலங்கள் வாங்கப்பட்டு மெடோ ஆக்ரோ பார்ம், லெக்ஸ் பிராபர்ட்டீஸ் உட்பட பல நிறுவனங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள சுதாகரன், இளவரசி ஆகியோர் பெயரில் நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சசிகலாவின் நேரடிப் பார்வையில் நிலம் வாங்கியதைச் சாட்சிகள் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளனர் என்றும் பவானிசிங் தெரிவித்தார்.
பவானிசிங் நீதிமன்றத்தில் தெரிவித்த ஜெயலலிதா தரப்பினரின் சொத்துப் பட்டியல்:-
1. சென்னை அருகே வாலாஜாபாத்தில்் 100 ஏக்கர், 2. சிறுதாவூரில் 25 ஏக்கர் அளவில் ஒரு பங்களா.
3. நீலாங்கரையில் 2 ஏக்கர்.
4. கொடநாட்டில் 898 ஏக்கர் மற்றும் பங்களாக்கள். ( இங்கு ஒரு ஏக்கர் ரூ. 5 கோடி மதிப்பு இருக்கும். இதுவே 4 ஆயிரம் கோடியைத் தாண்டுகிறது. இது ஒரு உத்தேச மதிப்புதான்.)
5. காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர்.
6. கன்னியாகுமரியில் மீனங்குளம், சிவரங்குளம், வெள்ளங்குளம் பகுதியில் ஆயிரத்து 190 ஏக்கர்.
6. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர்.
7. ரிவர்வியூ ஆக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர்
8. 30 வண்ணங்களில் பலவித கார்கள், டிரக்குகள்
9. ஐதராபாத்தில் திராட்சைத் தோட்டம்.
நான்கு நாட்களில் அரசு வழக்கறிஞரால் நீதிமன்றத்தில் எடுத்துவைக்கப்பட்ட, சாட்சியங்களால் பதிவுசெய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு வருமாறு:-
1) வாலாஜாபாத்தில்் ஜெ. தரப்பினர் வாங்கியிருப்பது 100 ஏக்கர் நிலம். இங்கே ஒரு ஏக்கர் நிலம் அரசு மதிப்பு 40 லட்சம் ரூபாய்; சந்தை மதிப்பு 50 லட்சம் ரூபாய். அதன்படி 100 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 40 கோடி ரூபாய் - சந்தை மதிப்பு 50 கோடி ரூபாய்.
2) சிறுதாவூரில் வாங்கியிருப்பது 25.4 ஏக்கர். இங்கே ஒரு ஏக்கர், அரசு மதிப்பு 1.7 கோடி ரூபாய் - சந்தை மதிப்பு 2 கோடி ரூபாய். அதன்படி சிறுதாவூர் நிலத்தின் அரசு மதிப்பு 42.5 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 50 கோடி ரூபாய்.
3) நீலாங்கரையில் ஒரு ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 35 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 50 கோடி ரூபாய். அதன்படி அங்கே இருக்கும் 2 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 70 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 100 கோடி ரூபாய்.
4) காஞ்சிபுரத்தில் ஒரு ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 30 லட்சம் ரூபாய், சந்தை மதிப்பு 50 இலட்ச ரூபாய்.
ஜெ. தரப்பினர் வாங்கியுள்ள 200 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 60 கோடி ரூபாய், சந்தை மதிப்பு 100 கோடி ரூபாய்.
5) தூத்துக்குடி திருவைகுண்டம் பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 15 இலட்சம் ரூபாய்; சந்தை மதிப்பு 25 இலட்சம் ரூபாய். அங்கே வாங்கியுள்ள 1,167 ஏக்கரின் அரசு மதிப்பு 175 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 292 கோடி ரூபாய்.
6) பையனூரில் ஒரு ஏக்கர் நிலம், அரசு மதிப்பு 2 கோடி ரூபாய், சந்தை மதிப்பு 3 கோடி ரூபாய். அங்கே வாங்கியுள்ள 5 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 10 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 15 கோடி ரூபாய்.
7) கொடநாட்டில் ஒரு ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 3 கோடி ரூபாய், சந்தை மதிப்போ 5 கோடி ரூபாய். அங்கே வாங்கியுள்ள 898 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 2,450 கோடி ரூபாய், சந்தை மதிப்போ 4,500 கோடி ரூபாய்.
இந்தப் பட்டியல்படி, 1991-96 ஆம் ஆண்டுகளில், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, இவர்கள் வாங்கிப் போட்டுள்ள சொத்துக்களில், ஒரு பகுதி சொத்துக்களின் இன்றைய அரசு மதிப்பு 2,847 கோடியே 50 இலட்சம் ரூபாய். சந்தை மதிப்போ 5,107 கோடி ரூபாய்.
இத்துடன் நகை, வைரம், கம்பெனி முதலீடுகள், அசையும் சொத்துக்களைக் கணக்கில் சேர்த்தால் மேலும் பல கோடி ரூபாய் வரும்.
நீதிமன்றத்தில் வெளியான மேலும் சில விவரங்கள்:-
திருவைகுண்டம் தாலுகாவில் உள்ள சேரகுளம், பண்டாரபுரம், வள்ளிகுளம் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகளுக்குச் சொந்தமான 1,167 ஏக்கர் நிலங்களைச் சிவா என்ற ரியல் எஸ்டேட் உரிமையாளர், தனது பெயரில், ஜெனரல் பவர் ஆப் அட்டர்னி செய்துகொண்டபின், சென்னையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில், ரிவர்வியூ ஆக்ரோ பார்ம் என்னும்
நிறுவனத்தின் பெயரில், அதனைக் கிரயம் செய்து கொடுத்ததாகச் சாட்சியம் அளித்துள்ளார்.
ரிவர்வியூ ஆக்ரோ பார்ம் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்கள்
யார்?
சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோராகும்.
இந்த நிலங்களைக் குறைந்த மதிப்பீட்டில், குறைவான முத்திரைத்தாள் கட்டணத்தில் பதிவு செய்து கொடுக்கும்படி திருவைகுண்டம் சார்பதிவாளரான தன்னிடம் கேட்டதாகவும், அதற்குத் தான் மறுத்த போது, சென்னையில் இருந்து வந்திருந்த சார்பதிவாளர் ஒருவர், இது மேலிட விவகாரம் என்பதால் மறுக்காமல் பதிவு செய்து கொடுக்கும்படி தன்னை வலியுறுத்தியதாகவும், தான் மறுத்துவிட்டதாகவும், சாட்சியம் அளித்தார். அதனால் மீதமுள்ள 1,153 ஏக்கருக்கான இடத்திற்கு, பவர் பத்திரம் தயார் செய்துகொண்டு, அவை ராஜகோபால் பொறுப்பிலே இருந்த சென்னை அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சாட்சியங்களை எடுத்துரைக்கும்போது,
அரசு வழக்கறிஞர் பவானிசிங், போயஸ் கார்டன் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் கட்டிடத்தைத் தனது தாயின் பெயரிலான சந்தியா நாட்டிய கலா நிகேதன் என்கிற டிரஸ்டின் பெயரில் வாங்கியதை மேலெழுந்த வாரியாகச் சொன்னார்.
சந்தியா நாட்டிய கலா நிகேதன் என்கிற டிரஸ்டின் ஒரே டிரஸ்டி ஜெயலலிதாதான் என்பதை அரசு வழக்கறிஞர் கூறவில்லை.
ஆனால், நீதிபதி குன்ஹா அவர்களே, அந்த டிரஸ்டில் ஜெயலலிதாதானே ஒரே டிரஸ்டி, அதனால்தானே அந்த இடத்தை அவர் கையெழுத்துப் போட்டு வாங்கினார் என்று தானாகவே கேட்டு, அதற்குப் பவானிசிங் ஆமாம் என்று தெரிவித்திருக்கிறார்.
ஊட்டியில் 898 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள கொடநாடு தேயிலைத் தோட்டம், ஆங்கிலேயரான கிரேக் ஜோன்ஸ் என்பவருக்குச் சொந்தமானதாக இருந்தது. அவர் அதை விற்பனை செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டார். அதை வாங்க அடிசன்ஸ், எஸ்ஸார் ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்கள்
முன்வந்தன. அந்தத் தகவல் கிடைத்ததும், கும்பல் ஒன்று தேயிலைத் தோட்ட மேனேஜரை, நம்பர் பிளேட் இல்லாத காரில் மிரட்டி அழைத்துச் சென்றதோடு, அந்தக் கொடநாடு தேயிலைத் தோட்டத்தைச் சென்னையைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்குத்தான் விற்க வேண்டும் என்று மிரட்டியது.
கிரேக் ஜோன்ஸ் காவல் நிலையத்தில் 23.10.1995 அன்று புகார் கொடுக்க, அதையும் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் மிரட்டி, திரும்ப வாங்கச் செய்துவிட்டனர். அப்போது பத்து கோடி ரூபாய் மதிப்பிலான, அந்தத் தேயிலைத் தோட்டத்தை ரூபாய் 7.5 கோடிக்கு உடையார் குடும்பத்தின் பெயரில் பதிவுசெய்தனர். ஆனால் இரண்டொரு மாதங்களில் கொடநாடு தேயிலைத் தோட்டம் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெயரில் பதிவு செய்யப்பட்டது. (இதற்கான சாட்சியங்கள் தெரிவித்த விவரங்களையும் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பவானிசிங் எடுத்துரைத்தார்.)
கனரா வங்கி அதிகாரி கொடுத்துள்ள சாட்சியத்தில், வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா கடந்த 1992ம் ஆண்டு ரூ.1 கோடியும், இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சசிகலா ரூ.25 லட்சமும் வங்கியில் மூன்றாண்டுகளுக்கு டெபாசிட் செய்ததாக அளித்துள்ள சாட்சியத்தை அரசு வழக்கறிஞர் பவானிசிங் எடுத்துக் கூறினார்.
கம்பெனிகள் பதிவு செய்யும் அரசின் அதிகாரியாக இருந்த ஒருவர் அளித்துள்ள சாட்சியத்தில்; ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ், லெக்ஸ் பிராபர்ட்டீஸ், ரிவர்வியூ ஆக்ரோ பார்ம், சிக்னோரா பிசினஸ், மெடோ ஆக்ரோ பார்ம், பீன் பீச், ராமராஜ் ஆக்ரோ பார்ம், சூப்பர் - டூப்பர் டி.வி, இண்டோ கெமிக்கல்ஸ். ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் ஆகிய கம்பெனிகள் எந்தெந்தத் தேதிகளில் யார் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன? அதன் தலைவர், நிர்வாக இயக்குனர்கள் யார்? பங்குதாரர்கள் யார்? என்னென்ன தொழில்கள் செய்யப்படுகின்றன? என்பன உள்ளிட்ட பல தகவல்கள் குறித்துப் புள்ளி விவரங்களோடு சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளதை பவானிசிங் நீதிமன்றத்தில் தெளிவாகப் படித்துக்காட்டினார். மேலும் தமிழக அரசின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும் இது தொடர்பாகச் சாட்சியம் அளித்துள்ளார்.
விவசாயிகளிடம் வாங்கிய நிலங்கள் அனைத்தும் வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் பங்குதாரர்களாக இருக்கும் கம்பெனிகள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதைப் பவானிசிங் ஆதாரத்துடன் எடுத்துக்கூறினார்.
கடந்த 1992 டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ரிவர்வியூ ஆக்ரோ கம்பெனி பெயரில் பலரிடமிருந்து 426.62 ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சாட்சிகள் கூறியுள்ளதை பவானிசிங் தெரிவித்தார். இவ்வாறு பல்வேறு சாட்சியங்களை நீதிமன்றத்தில் பவானிசிங் படித்துக் காண்பித்தார்.
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது இரண்டு ஆண்டுகள் மாதம் ஒரு ரூபாய் வீதம் ரூ.24 சம்பளம் வாங்கினார். ஆனால், ரூபாய்14 கோடி மதிப்புள்ள கட்டிடங்களை அவர் கட்டியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர ஆபரணங்கள் குறித்து மதிப்பீடு செய்யும்படி தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட வாசுதேவன் கொடுத்துள்ள சாட்சியத்தில் எண் 36, போயஸ் கார்டன் வீட்டில் 23 கிலோ 113 கிராம் தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மொத்த மதிப்பீடு ரூ.3 கோடியே 35 லட்சத்து 50 ஆயிரத்து 43 ஆகும்.
மேலும் ஈபல் லீலாவதி கொடுத்த சாட்சியத்தில் நமச்சிவாயா ஹவுசிங், அய்யப்பா பிராபர்ட்டிஸ், நவசக்தி கன்ஸ்ட்ரக்ஷன், ஓசியானிக் கன்ஸ்ட்ரக்ஷன், லெக்ஸ் பிராபர்ட்டிஸ், கிரின் கார்டன் அப்பார்ட்மெண்ட் உள்பட பல நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளதைப் பவானிசிங் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.
உடன்பிறப்பே, தமிழ்நாட்டில் எப்படிப்பட்டவருடைய தலைமையிலே ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் எப்படியெல்லாம் பேசுகிறார்கள். “ஊழல்” என்றால் அப்படிப்பட்ட ஒரு வார்த்தையையே கேள்விப்படாதவர்கள் போலும், “சுத்த சுயம்பிரகாசம்” என்றும், தங்களைத் தவிர நாட்டிலே கட்சி நடத்தும் அத்தனைப் பேரும் ஊழல்வாதிகள் என்றும் சொல்லிக்கொண்டு; நம்மீது புழுதி வாரித் தூற்றுகிறார்கள் என்பதையெல்லாம்
தோலுரித்துக் காட்டிடும் விவரங்கள் இவை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் என்ன விளக்கம் தரப்போகிறார்கள் என்பதை இன்னும் சில நாள்களில் நடைபெறும் விசாரணையின் போது நாம் காணலாம். இந்த உண்மைகள் உலகத்திற்குத் தெரிந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த வழக்கினை இத்தனை ஆண்டு காலமும் வாய்தா வாங்கித் தள்ளிப் போட்டுக்கொண்டு வந்தார்கள். அதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. சிலரைப் பல நாள் ஏமாற்றலாம்; பலரைச் சில நாள் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியுமா?
அன்புள்ள, மு.க. 31-3-2014
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 51 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 51 PDF ↗