தொகுதி 51 · கடிதம் 3867
நிலைகுலைந்த ஆட்சியில் விலைவாசி நிலவரம்!
2014-03-20
உடன்பிறப்பே,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினை முதலமைச்சர் ஜெயலலிதா “மிகப் பெரிய கபட நாடகம்; பொய்ப் பித்தலாட்டத்தின் உச்சக் கட்டம்” என்றெல்லாம் “ஜெயா பிராண்ட்” அரசியல் நாகரிகத்தோடு விமர்சித்து வருகிறார். கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அந்தத் தேர்தல் அறிக்கையில் “நுகர்பொருள்களின் விலைகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்குச் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, வாங்கும் சக்தி குறைவாக உள்ள ஏழையெளிய நடுத்தரக் குடும்பத்தினர் பயன் பெறும்வகையில் அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தை ஆளும் கட்சியான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் விலைவாசியைக் கட்டுப்படுத்துவது பற்றி எதுவும் கூறப்படவில்லை. விலைவாசிக் கட்டுப்பாடு குறித்து அந்த அளவுக்கு அக்கறை அ.தி.மு.கவுக்கு! ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு மே திங்களில் ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகின்றன. இந்த மூன்றாண்டுகளில், இந்த ஆட்சியில் விலைவாசி எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது?
தி.மு.க. அ.தி.மு.க. ஆட்சியில் ஆட்சியில் விலைகள் விலைகள் நிலவரம் நிலவரம் துவரம்பருப்பு ஒரு கிலோ 62 ரூபாய் 84 ரூபாய் உளுத்தம்பருப்பு ஒரு கிலோ 56ரூபாய் 84 ரூபாய்
கடலைப் பருப்பு ஒரு கிலோ 38 ரூபாய் 74 ரூபாய்
பயத்தம்பருப்பு ஒரு கிலோ 80 ரூபாய் 100 ரூபாய்
பூண்டு ஒரு கிலோ 100 ரூபாய் 140 ரூபாய் மஞ்சள் ஒரு கிலோ 65 ரூபாய் 160 ரூபாய் புதுப்புளி ஒரு கிலோ 100 ரூபாய் 120 ரூபாய் பழைய புளி ஒரு கிலோ 60 ரூபாய் 100 ரூபாய் மிளகாய் ஒரு கிலோ 70 ரூபாய் 140 ரூபாய் தனியா ஒரு கிலோ 80 ரூபாய் 116 ரூபாய் புழுங்கல் அரிசி ஒரு கிலோ 40 ரூபாய் 50 ரூபாய் பொன்னி அரிசி (25 கிலோ) 855 ரூபாய் 1,315 ரூபாய் பொன்னி பச்சரிசி ஒரு கிலோ 32 ரூபாய் 54 ரூபாய் மிளகு ஒரு கிலோ 275 ரூபாய் 680 ரூபாய் வெந்தயம் ஒரு கிலோ 50 ரூபாய் 100 ரூபாய் நல்லெண்ணெய் 84 ரூபாய் 220 ரூபாய் ஒரு லிட்டர்
கடலை எண்ணெய் 86 ரூபாய் 110 ரூபாய் ஒரு லிட்டர்
பாமாயில் ஒரு லிட்டர் 36 ரூபாய் 66 ரூபாய் சிமெண்ட் ஒரு மூட்டை 250 ரூபாய் 350 ரூபாய் கம்பி ஒரு டன் 48,000 ரூபாய் 28,000 ரூபாய் மணல் ஒரு லோடு 7,000 ரூபாய் 19,000 ரூபாய் செங்கல் ஒரு லோடு 13,500 ரூபாய் 18,000 ரூபாய்
அ.தி.மு.க. ஆட்சியில், முதலமைச்சர் ஜெயலலிதா மிகவும் சிரமப்பட்டு விலைகளை இந்த அளவிற்குக் குறைத்துள்ளார்! அதனால்தான் அவர்களுடைய தேர்தல் அறிக்கையிலே விலைவாசியைக் கட்டுப்படுத்துவது பற்றி எதுவும் கூறவில்லை போலும்!
அ.தி.மு.க. ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் எட்டாத உயரத்திற்குச் சென்றுள்ளதோடு, கட்டுமானப் பொருள்களின் விலையும் உயர்ந்துவிட்டது. அதன் காரணமாக கட்டுமானத் தொழில் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள்
வேலையிழந்து பரிதவிக்கிறார்கள். ஆனால் விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று கூறித் தான் தப்பித்துக் கொள்ள முயலுகிறார். விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்றால், தமிழகத்திலே பால் விலையை உயர்த்தவும், பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவும், மின் கட்டணத்தை உயர்த்தவும் யார் காரணம்? விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசுதான் முழு முதல் காரணம் என்றால், அ.தி.மு.க. அரசின் ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் விலைவாசியைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை பற்றி விளக்குவது ஏன்? ஜெயலலிதா, 2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக வரவு செலவுத் திட்டத்தை அவையிலே வைப்பதற்கு முன்பாகவே வழக்கத்திற்கு முற்றிலும் மாறாகத் தமிழக மக்கள் தலையில் சுமார் 4000 கோடி ரூபாய் அளவிற்கு வரிகளைச் சுமத்தினார். அத்துடன் இல்லாமல்- பஸ் கட்டண உயர்வு - பால் விலை உயர்வு - மின் கட்டண உயர்வு என்று பல உயர்வுகளைச் செய்து, ஏழையெளிய நடுத்தரக் குடும்பத்தினர் மீது சுமைகளை ஏற்றினார். மக்களைப் பழிவாங்கும் காரியத்தை அடுக்கடுக்காக நடத்திக் கொண்டே, அந்தப் பழியைக் கடந்த கால கழக அரசின் மீதும், மத்திய ஆட்சியின் மீதும் போடுவதற்கு அவர் பகீரதப் பிரயத்தனம் செய்தார். தி.மு. கழகம் ஆட்சியில் இருந்தபோது பெட்ரோல் விலையை, டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லையா? உயர்த்திக் கொண்டுதான் இருந்தார்கள். அந்த உயர்வை அவ்வப்போது கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுத்தோம்; இருந்தாலும் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்தச் சுமையையெல்லாம் தமிழக அரசு தாங்கிக் கொண்டு பேருந்துக் கட்டணத்தை ஒரு பைசா கூட உயர்த்தாமல் பார்த்துக் கொள்ளவில்லையா? ஆவின் பால் விலையை அதிகமாக உயராமல் பார்த்துக் கொள்ளவில்லையா? பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விலையை உயர்த்தியபோது, அதற்கான விற்பனை வரியை விதிக்காமல் தமிழக அரசு தவிர்த்து விடவில்லையா?
பேருந்துக் கட்டணங்களைப் பொறுத்தவரையில், சாதாரண புறநகர்ப் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு கழக ஆட்சியில் 28 பைசா வீதம் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தை, 50 சதவிகித அளவிற்கு அதாவது மேலும் 14 பைசா என்ற அளவிற்கு உயர்த்தி,
கிலோ மீட்டர் ஒன்றுக்கு 42 பைசா என்று நிர்ணயம் செய்தது அ.தி.மு.க. அரசு. இதன் காரணமாகப் பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளையே பயன்படுத்தும் மக்கள் பாதிப்புக்காளாவார்களே
என்று சிறிதேனும் எண்ணிப் பார்த்தார்களா?
விரைவு மற்றும் செமி-டீலக்ஸ் புறநகர்ப் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு கழக ஆட்சியில் 32 பைசா வீதம் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தை ஜெயலலிதா 75 சதவிகிதம் உயர்த்தி, அதாவது 24 பைசா வீதம் உயர்த்தி, கிலோ மீட்டர் ஒன்றுக்கு 56 பைசா வீதம் வசூலிக்க ஆணையிட்டார்.
சூப்பர் டீலக்ஸ் மற்றும் சொகுசு புறநகர்ப் பேருந்துகளுக்குக் கழக ஆட்சியில் கிலோ மீட்டர் ஒன்றுக்கு 38 பைசா வீதம் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தை, ஜெயலலிதா கிலோ மீட்டர் ஒன்றுக்கு 60 பைசா என்று உயர்த்தினார்.
புறநகர்ப் பேருந்துகளைப் பொறுத்து இதுதான் நிலைமை என்றால், நகரப் பேருந்துகளைப் பொறுத்த வரையில், சென்னை நீங்கலாக இதரப் பகுதிகளில் குறைந்தபட்சக் கட்டணம் இரண்டு ரூபாய் என்பதை, ஜெயா ஆட்சியில் மேலும் 50 சதவிகித அளவிற்கு, அதாவது ஒரு ரூபாய் அளவிற்கு உயர்த்தி, மூன்று ரூபாய் என்று அறிவிக்கப்பட்டது.
நகரப் பேருந்துகளில் அதிகப்பட்சக் கட்டணமாகக் கழக ஆட்சியில் 7 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. அதை ஜெயலலிதா 70 சதவிகித அளவிற்கு உயர்த்தி, 12 ரூபாய் கட்டணம் என்று நிர்ணயித்தார்.
சென்னை நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரையில், கழக ஆட்சியில் குறைந்தபட்சக் கட்டணம் 2 ரூபாய் என்பதை ஜெயலலிதா 3 ரூபாயாகவும், அதிகப்பட்சக் கட்டணம் 12 ரூபாய் என்பதை 14 ரூபாயாகவும் உயர்த்தினார்.
பேருந்துக் கட்டணங்கள் எந்த அளவிற்கு அ.தி.மு.க. ஆட்சியில் உயர்த்தப்பட்டுள்ளன என்பதற்கு உதாரணம் கூற வேண்டுமேயானால், திருச்சிக்கு டீலக்ஸ் பேருந்தில் பயணம் செய்ய கழக ஆட்சியில் 105 ரூபாய் கட்டணம் என்றிருந்தது, அ.தி.மு.க. ஆட்சியில் 180 ரூபாய் என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டது. மதுரைக்கு கழக ஆட்சியில் 145 ரூபாய் என்றிருந்த பேருந்துக் கட்டணம் அ.தி.மு.க. ஆட்சியில் 255
ரூபாயாகவும், நெல்லைக்கு கழக ஆட்சியில் 200 ரூபாய் என்றிருந்த கட்டணம் அ.தி.மு.க. ஆட்சியில் 350 ரூபாயாகவும், கோவைக்கு கழக ஆட்சியில் 165 ரூபாய் என்றிருந்த கட்டணம் அ.தி.மு.க. ஆட்சியில் 290 ரூபாயாகவும் ஜெயலலிதா உயர்த்தினார்.
2006ஆம் ஆண்டு முதல் 2011 மே திங்கள் வரை நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பேருந்துக் கட்டணம் ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை என்பதையும், ஜெயலலிதா 2006ஆம் ஆண்டுக்கு முன்பு பதவியிலே இருந்தபோது பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய பிறகு தற்போது மீண்டும் அவர் பொறுப்புக்கு வந்த ஒருசில மாதங்களிலேயே பேருந்துக் கட்டணத்தை உயர்த்திப் பொதுமக்களை வாடச் செய்தார் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விடுக்கின்ற ஒவ்வொரு அறிக்கையிலும், தமிழ்நாடு மின்வாரியத்தைத் தி.மு. கழக அரசும், முதல் அமைச்சராக இருந்த நானும் சீர்கேடு அடையச் செய்து விட்டதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல் அமைச்சராக வந்தபோதும், 1-12- 2001 முதல் மின் கட்டணங்களை உயர்த்தினார். மீண்டும் 2003ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் 15-3-2003 அன்று 1398 கோடி ரூபாய்க்கு மின் கட்டண உயர்வுகளைச் செய்தார். தி.மு. கழக ஆட்சியில் வழங்கப்பட்ட விவசாயம், குடிசைகளுக்கான இலவச மின்சாரத்தை அப்போதுதான் ரத்து செய்தார். வீடுகளுக்கான மின் கட்டணத்தை 22.13 சதவிகிதமும், கல்வி நிலையங்களுக்கு 16.61 சதவிகிதமும் உயர்த்தினார்.
அதற்குப் பிறகு தி.மு. கழக ஆட்சிக் காலத்தில்; தமிழ்நாடு மின்சார வாரியம், 18-1-2010 அன்று மின் கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கான மனுவைத் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் தாக்கல் செய்தது. அதனை பல்வேறு கட்டங்களில் பரிசீலித்து 31-7-2010 அன்று மின் கட்டண மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட்களுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர், குடிசைவாசிகள், விசைத்தறி மின் நுகர்வோர், கைத்தறி மின் நுகர்வோர், பொது வழிபாட்டிடங்கள் மற்றும்
வேளாண் மின் நுகர்வோருக்கு எந்தவிதமான மின் கட்டண உயர்வும் செய்யப்படவில்லை.
இரண்டு மாதத்திற்கு 600 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோருக்குக்கூட யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டது. தொழில் மின் நுகர்வோரில், உயர் அழுத்த வகையினருக்கு யூனிட் ஒன்றுக்கு 50 காசுகளும் மற்றும் தாழ்வழுத்த வகையினருக்கு யூனிட் ஒன்றுக்கு 30 காசுகளும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இன்னும் சற்று விளக்கமாகக் கூற வேண்டுமேயானால், தமிழகத்தில் அப்போது வீடுகளுக்கு மின்சாரம் உபயோகிப்போர் மொத்தம் 149.86 இலட்சம் பேரில் 134.67 இலட்சம் பேருக்கு எந்தவிதமான மின் கட்டண உயர்வும் கழக ஆட்சியில் செய்யப்படவில்லை. 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் 3 லட்சத்து 21 ஆயிரம் பேர்களுக்கு மட்டும் யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற அளவிற்கு கழக ஆட்சியிலே மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. தாங்கும் சக்தி அற்றவர்களுக்குக் கட்டண உயர்வு செய்யாமல் பாதுகாத்தது
தி.மு. கழக அரசு. ஆனால் அதற்கே அப்போது பா.ம.க. நிறுவனரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற வேறு சில கட்சியினரும் கண்டனம் தெரிவித்தார்கள். குறிப்பாக இன்றைய முதலமைச்சர், ஜெயலலிதா அவர்கள் 2-8-2010 அன்று விடுத்த அறிக்கையில்,
“விலைவாசியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கச் சொன்னால், விலைவாசியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கிறார் முதல்வர் கருணாநிதி. இரண்டு மாதத்துக்கு 600 யூனிட் மின்சாரத்துக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகளில் மாதம் 300 யூனிட் மின்சாரப் பயன்பாடு என்பது சர்வ சாதாரணம். மேலும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் ஏழை எளிய மக்கள் கூடுதல் மின்சாரக் கட்டணத்துக்கு ஆளாக்கப்படுவார்கள். மின் கட்டண உயர்வால் வீட்டு வாடகையும் உயரலாம். தொழிற்சாலைகள், சிறு, குறுந்தொழில்கள், குடிசைத் தொழில்கள், கல்வி நிறுவனங்கள் என எல்லாத் தரப்புக்கும் மின் கட்டண உயர்வால் கடும் பாதிப்பு ஏற்படும். மின் கட்டண உயர்வால் அத்தியாவசியப்
பொருள்களின் விலையும் மேலும் உயரக் கூடும். சாமானிய மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இந்தக் கூடுதல் சுமையை உடனடியாக நீக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” - என்று என்னைக் கேட்டுக் கொண்ட அம்மையார் ஜெயலலிதா, அ.தி.மு.க. ஆட்சி பதவியேற்றதும் எதைப் பற்றியும் எண்ணிப் பார்க்காமல் சகட்டு மேனிக்கு அனைத்துத் தரப்பினருக்கும் மின் கட்டணத்தை உயர்த்தினார். ஜெயலலிதாவின் இந்தப் பொற்கால ஆட்சியிலே, ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் மின் கட்டணத்தை எந்த அளவிற்கு உயர்த்தப் பரிந்துரை செய்தார்கள் என்றால், வீடுகளுக்கு இரண்டு மாதங்களுக்கு 50 யூனிட் வரை மின்சாரம் உபயோகிப்போருக்கு யூனிட் ஒன்றுக்கு 65 காசு என்றிருந்த மின் கட்டணத்தை இனிமேல் யூனிட் ஒன்றுக்கு ஒன்றரை ரூபாய் அளவிற்கும் - 51 யூனிட் முதல் 100 யூனிட் வரை மின்சாரம் உபயோகிப்போருக்கு யூனிட் ஒன்றுக்கு 75 காசு என்றிருந்த மின் கட்டணத்தை ஒன்றரை ரூபாய் அளவிற்கும் - 101 யூனிட் முதல் 150 யூனிட் வரை மின்சாரம் உபயோகிப்போருக்கு மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 75 பைசா என்றிருந்ததை, இனி இரண்டு ரூபாய் அளவிற்கும் - 151 யூனிட் முதல் 200 யூனிட் வரை உபயோகிப்போருக்கு 85 பைசா என்றிருந்ததை இரண்டு ரூபாய் என்றும் 201 யூனிட் முதல் 500 யூனிட் வரை மின்சாரத்தை உபயோகிப்போருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 2.20 என்றிருந்ததை, ரூ. 3.50 என்ற அளவிற்கும் - 501 முதல் 600 யூனிட் வரை உபயோகிப் போருக்கு வசூலிக்கப்பட்டு வந்த ரூ. 1.80 என்பதை ரூ. 5.75 என்ற அளவிற்கும் - 601 யூனிட்களுக்கு மேல் மின்சாரத்தை உபயோகிப்போருக்கு ரூ. 4.05 என்றிருந்த மின் கட்டணத்தை ரூ. 5.75 என்ற அளவிற்கும் உயர்த்துவதாகத் திட்டமிட்டு ஒழுங்குமுறை ஆணையத்திற்குப் பரிந்துரை செய்தார்கள் என்றால் - கழக ஆட்சியில் எந்த அளவிற்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது, 600 யூனிட் வரை வீடுகளுக்கு மின்சாரத்தை உபயோகிப்போருக்கு மின் கட்டண உயர்வே இல்லை என்று அறிவித்ததையும், தற்போது 50 யூனிட் வரை மின்சாரம் உபயோகிப்போருக்கும் ஏழை நடுத்தர மக்களுக்கேகூட மின் கட்டணத்தை உயர்த்தத் திட்டமிட்டிருப்பதையும் ஒப்பிட்டுப்பார்த்து ஏழை எளிய நடுத்தர மக்களின் பொருளாதார நிலை அறிந்து அரவணைப்பது யார் என்பதை உணர வேண்டும்.
மேலும் வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டணம், 120 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 1.50 என்பதிலிருந்து ரூ. 2.50க்கும், 120 யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு 3 ரூபாய் என்பதை 5 ரூபாயாகவும் - தனியார் கல்வி நிலையங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.80 என்பதை ரூ. 5.00 என்றும், திரையரங்குகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 5.50 என்பதிலிருந்து ரூ. 7.00 என்றும், தொழிற் சாலைகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 4 என்பதிலிருந்து ரூ. 5 ஆகவும் உயர்த்த அ.தி.மு.க. அரசினர் பரிந்துரை செய்தார்கள்.
14-2-2011 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “பால் தட்டுப்பாட்டினை உருவாக்கி, தட்டுப்பாடுகளை உருவாக்கும் தறிகெட்ட அரசாக மைனாரிட்டி தி.மு.க. அரசு விளங்குகிறது. பால் உற்பத்தியாளர்களை அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய தி.மு.க. அரசு வழிப்பறிக் கொள்ளையர்களைப் போல நடந்து கொள்கிறது” என்றெல்லாம் வாய்ச்சவடால் விட்டார். ஆனால் இவருடைய ஆட்சியில் என்ன ஆயிற்று? பால் உற்பத்தியாளர்களை அழைத்துப் பேசாமல், போராட நினைத்த அவர்களை அச்சுறுத்தி அடக்கி விட்டு, தன்னிச்சையாகவே கொள்முதல் விலையையும், விற்பனை விலையையும் உயர்த்தியிருக்கிறார்.
அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சமன்படுத்திய பாலின் விலையை லிட்டர் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வந்த 17 ரூபாய் 75 பைசாவிலிருந்து - 24 ரூபாயாக உயர்த்த முடிவெடுத்தார்கள். அதாவது லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் 25 பைசா அளவிற்கு ஜெயலலிதா உயர்த்தினார்.
தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் 1-9-2009 அன்று பசும்பாலின் கொள்முதல் விலையை ரூ. 13.45லிருந்து ரூ. 15.64 ஆகவும், எருமைப் பால் விலையை 18 ரூபாயிலிருந்து 23 ரூபாயாகவும் - அதன் பின் 5-1-2011இல் பசும்பாலின் கொள்முதல் விலையை ரூ. 15.64 லிருந்து ரூ. 16.64 ஆகவும், எருமைப் பால் விலையை 23 ரூபாயிலிருந்து ரூ. 25.20 ஆகவும் - 16-2-2011 அன்று பசும்பாலின் கொள்முதல் விலையை ரூ. 16.64லிருந்து 18 ரூபாயாகவும், எருமைப்பால் விலையை ரூ. 25.20லிருந்து 26 ரூபாயாகவும் அதிகப்படுத்திக் கொடுத்த போதிலும், அதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகப் பாலின் விற்பனை விலை லிட்டர் ரூ. 17.75 என்பதிலிருந்து ஒரு
பைசா கூட உயர்த்தவில்லை என்பதும், “விலைவாசியை நான் ஆட்சிக்கு வந்தால் குறைப்பேன்” என்றும் “வானத்தை வில்லாக வளைப்பேன்” என்றும் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா ஒரே நேரத்தில் லிட்டர் ஒன்றுக்கு பாலின் விலையை ரூ. 6.25 உயர்த்தினார் என்பதையும் நினைவிலே கொள்ள வேண்டும்.
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு விலைவாசியைப் பாதிக்கும் என்று வாதிடும் ஜெயலலிதாவுக்கு, பேருந்துக் கட்டணம் - மின் கட்டணம் உயர்வு விலைவாசியைப் பெரிதும் பாதிக்கும் என்ற உண்மை தெரியாதா? “வாங்கும் சக்தி மிகுந்துள்ள செல்வந்தர்களைச் சிறிது பாதித்தாலும், வாங்கும் சக்தி குறைவாகவே உள்ள ஏழை எளிய நடுத்தர மக்களை எந்த வகையிலும் பாதிக்காமல் கொள்கை முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்ற அறிஞர் அண்ணா அவர்களின் அறிவுரைப்படி நடை போட்டது தி.மு. கழக அரசு. ஆனால் அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதைக் காதிலே போட்டுக் கொள்ளாமல், ஏழை எளிய நடுத்தர மக்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், மற்றவர்கள் மீது பழி சுமத்தியே காலத்தைக் கழித்து விடலாம் என்று கனவு காண்கிறார் ஜெயலலிதா! அன்புள்ள, மு.க. 20-3-2014
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 51 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 51 PDF ↗