உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 50

தொகுதி 50 · கடிதம் 3865

கோயபல்ஸ் யார்? நானா? ஜெயலலிதாவா?

2014-03-17

உடன்பிறப்பே,

முதலமைச்சர் ஜெயலலிதா தூத்துக்குடி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது, இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டிற்குக் கருணாநிதி மட்டுமே சொந்தம் கொண்டாடுவது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை என்றும் தனது ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டிற்கு வித்திட்டதே தான்தான் என்றும் பேசியிருக்கிறார். அவருக்கு நான் பதில் கூறுவதைவிட, முஸ்லிம்களுக்காக அன்றாடம் பணியாற்றிக் கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர், அண்ணாவின் நெருங்கிய நண்பர், பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்களும், மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும், கடந்தமுறை ஜெயலலிதாவுடன் தோழமைக் கொண்டு அந்தக் கட்சி வெற்றி பெற மாநிலம் முழுவதும் சுற்றிப் பாடுபட்டவருமான ஜவாஹிருல்லா அவர்களும் என்ன சொன்னார்கள் என்பதைக் குறிப்பிட்டாலே, முஸ்லிம்களுக்காக இட ஒதுக்கீடு வழங்கியது, தி.மு. கழக ஆட்சியா, ஜெயலலிதாவா என்பது தெளிவாகிவிடும் அல்லவா?

பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்கள் 10.3.2014 அன்று அவர்கள் கட்சியின் தேசிய அரசியல் ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறும்போது, “முஸ்லிம்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கியது தான்தான் என்று கூறித் தமிழக முதல்வர் ஜெயலலிதா உண்மைக்கு மாறான தகவலைக் கூறி வருகிறார். இது அப்பட்டமான வரலாற்றுப் புரட்டு. முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்கியதும், இந்த இடஒதுக்கீடு வழங்குவதற்குக் காரணமாக இருந்த பிற்பட்டோர் பட்டியலில் லெப்பை, தக்னி, தூதேகுலா, மாப்பிள்ளா உள்ளிட்டவர்களைச் சேர்த்ததும், தி.மு.க. தலைவர் கலைஞர்தான் என்பது வரலாற்றில் பதியப்பட்ட ஒன்று. அ.தி.மு.க.

தேர்தல் அறிக்கையில் சமூக, கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதற்குப் பதிலாகப் பொருளாதாரத்தில் பிற்பட்டவர்கள் என்று இடம்பெறச் செய்துள்ளதன் மூலம் பா.ஜ.க.வின் கொள்கையை ஜெயலலிதா அப்படியே பின்பற்றுகிறார். எனவே அவரது கூற்றை முஸ்லிம் சமுதாயம் ஒருபோதும் ஏற்காது” என்று தெரிவித்திருக்கிறார். திரு. ஜவாஹிருல்லா அவர்களோ, நேற்றைய தினம், “தி.மு.கழக ஆட்சியில்தான் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இதை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் பலமுறை பேசியும், அ.தி.மு.க. அரசு கண்டுகொள்ளவில்லை. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினோம் என்று சொல்வதற்கு அ.தி.மு.க.வுக்கு அருகதை இல்லை” என்று கூறியிருக்கிறார். ஜெயலலிதா எவ்வளவு பெரிய பித்தலாட்டக்காரர் என்பதற்கு இஸ்லாமிய சமுதாயத்தின் இந்த இரண்டு பெரியவர்கள் கூறியிருக்கும் உண்மை போதுமா? போதாதா? தப்பித்துக் கொள்வதற்காக இப்போது ஜெயலலிதா தான் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையால் தான் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது என்று சொல்கிறார். தாலி கட்டியவனுக்கு மனைவி சொந்தமே தவிர, அவளைப் பெண் பார்த்துவிட்டுப் போனவன் எல்லாம், தனக்குத்தான் அவள் சொந்தம் என்று கூறினால் ஊரிலே உள்ளவர்கள் எல்லாம் உதைக்க வந்து விடுவார்கள்! மேலும் ஜெயலலிதா, தூத்துக்குடியில் பேசும் போது அ.தி.மு.க. ஒருபோதும் கரசேவைக்கு ஆட்களை அனுப்பியதே இல்லை என்று கூறித் தப்பிக்கப் பார்த்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கும், கரசேவைக்கும் உள்ள தொடர்பு பற்றியும், அவர் அப்போது எவ்வாறு நடந்துகொண்டார் என்பது பற்றியும் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாதா என்ன? தினமணி நாளிதழ் 24-11-1992இல் வெளியிட்ட செய்திக்குத் தலைப்பு என்ன தெரியுமா? “கரசேவை: ஜெயலலிதா வலியுறுத்தல்” என்பதாகும். அந்தச் செய்தியில், ஜெயலலிதா டெல்லியில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு மன்றக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் என்ற முறையில்

ஜெயலலிதாவின் பேச்சு வெளியாகியுள்ளது. அந்தப் பேச்சில், “அரசியல் சட்டத்தின்படி, பெரும்பான்மையினருக்குக் கிடைக்கும் சாதாரண உரிமைகளையும், சிறப்புரிமைகளையும் பாதிக்கும் வகையில் அரசியல் சரித்திர, சமூக அமைப்புகளின் பின்னணியில் தங்கள் நலன்களை முன்னிருத்திச் செயல்படுவது சிறுபான்மையினருக்கு ஏற்றது அல்ல. பெரும்பான்மையினரும், அவர்களுடைய உரிமைகளைச் சிறுபான்மையினரைப் போல் அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். அயோத்தி பிரச்சினையில் இதனைத் தொடர்புபடுத்திக் குறிப்பாகக் கூற வேண்டுமென்றால், உத்தரப் பிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் இந்துக்கள் விரும்பியபடி, கட்டுமானப் பணியை நிறைவேற்ற அனுமதிப்பதாகும்.

உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணைகளும், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளும் ஒருவிதமான சட்டச் சூழலை உருவாக்கியிருப்பதை நான் அறிவேன். இந்தச் சூழலில் உத்தரப்பிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில், கரசேவையோ அல்லது வேறுவித நடவடிக்கையோ மேற்கொள்வது கடினமாக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கட்டுமானத்துக்குத் தடை இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டால், கட்டுமானப் பணிக்குத் தடையாக உள்ள சட்டச் சிக்கல்களை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசும் உத்தரப்பிரதேச அரசும் மேற்கொண்டாக வேண்டும். கரசேவை நடைபெறுவதற்குப் பொருத்தமான சூழ்நிலையை உருவாக்கத் தேவையான முடிவை இந்த தேசிய ஒருமைப்பாட்டுக் குழு எடுக்க வேண்டியுள்ளது. கரசேவையை அனுமதிக்கும்படி நீதிமன்றங்களை அணுகத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். மிகவும் சுருக்கமாக என்னுடைய வேண்டுகோளைத் தெரிவிக்கிறேன். உத்தரப் பிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் கரசேவை நடைபெறத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்” என்று பேசி, ஏடுகளில் எல்லாம் அப்போதே வெளிவந்திருக்கிறது என்றால், முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றிலே மறைப்பது போலத் தற்போது தூத்துக்குடியில் போய், அ.தி.மு.க. ஒருபோதும் கரசேவைக்கு ஆட்களை அனுப்பியது இல்லை என்று பேசினால், மக்கள் நம்பி விடுவார்களா என்ன?

“தினமணி”யில் மட்டுமல்ல; 1.1.1993 தேதிய “ஃப்ரண்ட் டலைன்” ஆங்கில இதழில், “I am aware that the Supreme Court directions to the Uttar Pradesh Government and the pendency of the cases in the High Court have created a legal situation making it difficult for the Kar Sewa” என்றும்; “This august body will, therefore, have to take a decision on creating a congenial atmosphere for the conduct of the Kar Sewa. All steps will have to be taken to move the Courts to permit Kar Sewa” என்றும் அப்போது செய்தி வெளியிட்டதுகூட இட்டுக் கட்டிய கதையா? ஜெயலலிதா கூறுவாரா?

முதலமைச்சர் ஜெயலலிதா இந்திய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டத்திலே பேசியதை, “தமிழ்நாடு விசுவ இந்து பரிசத்” சார்பாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில், “தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டத்தில் அயோத்தி கரசேவைக்கு ஆதரவாகப் பேசி கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்த தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!” என்று அச்சடிக்கப்பட்டிருந்தது.

அது மாத்திரமல்ல; “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேட்டில், 1992 டிசம்பர் 3ஆம் தேதியன்று, கரசேவை நடைபெற்ற உத்தரப்பிரதேச மாநில “விசுவ இந்து பரிசத்” அமைப்பின் செயலாளரான குலாப் சிங் பரிகார் என்பவர் அளித்த பேட்டியிலேயே அயோத்தியில் நடைபெறும் கரசேவைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினரைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பி வைத்துள்ளார். மேலும் கரசேவைக்குரிய பல உதவிகளைச் செய்வதாக உறுதியும் அளித்துள்ளார்” என்று கூறிச் செய்தி வந்ததே, அப்போதே ஜெயலலிதா துள்ளிக் குதித்து, அந்தச் செய்தியில் உண்மையில்லை, நான் கரசேவைக்கு ஆள் அனுப்பவில்லை என்று எந்தப் பத்திரிகையிலே மறுப்புக் கூறினார்? சொல்லத் தயாரா? அப்போது அந்தச் செய்தியைப் பாராட்டாக எடுத்துக்கொண்டவர், தற்போது முஸ்லிம்களின் வாக்குக்காக “கரசேவைக்கு ஆள் அனுப்பவில்லை” என்று சொன்னால் இஸ்லாமியர்கள் நம்பி விடுவார்களா என்ன?

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ்நாடு கிளைத் தலைவர், மறைந்த ஏ.கே.ஏ. அப்துல் சமத் அவர்கள் அயோத்தியில் நடைபெற்ற கரசேவையில் அ.தி.மு.க. தொண்டர்களும் கலந்து

கொண்டனர் என்று அப்போதே குற்றஞ் சாட்டியபோது, ஜெயலலிதா அதை மறுத்தாரா?

இஸ்லாமியர்களை ஜெயலலிதா என்ன பாடுபடுத்துகிறார் என்பதற்கு, பாவம் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி, தி.மு. கழக ஆட்சியிலே ஒரு முக்கிய பொறுப்பிலே இருந்தார் என்பதற்காக, அவரைப் படுத்துகின்ற பாட்டைத் தமிழ்நாட்டு மக்கள் பார்க்கவில்லையா என்ன? இவர்கள் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து மூன்றாண்டு காலமாக அவர் பணி நீக்கத்திலே வைக்கப்பட்டு, இன்னும் சொல்லப் போனால், அவர் சென்னைக்குக் கூட வரக்கூடாது, ராமேஸ்வரம்- மண்டபத்திலேயே தங்கி இருக்க வேண்டுமென்று இந்த ஆட்சியினர் ஆணை பிறப்பித்திருக்கும் தகவல் தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்குத் தெரியாதா என்ன? ஆனால் தி.மு. கழக ஆட்சியிலே இந்த அதிகாரிக்குப் பெரிய பொறுப்பு அளித்தது மாத்திரமல்ல; உலகத் தமிழ் மாநாட்டிற்கு ஒரு தனி அதிகாரியாகத் திறமையான அதிகாரியை நியமிக்க வேண்டுமென்று என்னிடம் கோப்பு வந்தபோது அலாவுதீன் என்ற மூத்த அதிகாரியைத்தான் அந்தப் பதவியிலே நியமித்தேன். நல்லவேளையாக அந்த அதிகாரி தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். இல்லாவிட்டால் அவரும் பழிவாங்கப்படக் கூடும்.

தமிழக மக்களிடம், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில்தான் இராமர் கோயில் கட்ட வேண்டுமென்று இலட்சக்கணக்கான கையெழுத்துக்களை வாங்கி பா.ஜ.க. வினர் தமிழக ஆளுநரிடம் அப்போது கொடுத்தபோது, அந்த மனுவிலே அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஆர். முருகானந்தம், ரமேஷ், பன்னீர்செல்வம், கோவிந்தராஜ் ஆகியோர் கையெழுத்திட்டிருப்பதாக அப்போது பா.ஜ.க. சார்பிலே அறிவித்தபோது, இன்று என்னை மறுக்கும் ஜெயலலிதா அப்போது அதை மறுக்கவில்லையே? இப்படியெல்லாம் பேசி, இஸ்லாமியர்களை ஏமாற்றிவிட முடியுமா என்ன?

இன்று ஜெயலலிதாவின் பேச்சைக் கொட்டை எழுத்துக்களில் வெளியிட்டிருக்கும் “தினத் தந்தி”, தனது 23.7.2004 இதழில் இதே ஜெயலலிதாவின் பேட்டி ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்தப் பேட்டியில் ஒரு கேள்வி இதோ:-

செய்தியாளர்:- சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? ஜெயலலிதா:- முஸ்லிம்கள் மட்டும் சிறுபான்மையினர் அல்ல. கிறித்தவர்கள் இருக்கிறார்கள், பார்சிகள் இருக்கிறார்கள், புத்த மதத்தினர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் முஸ்லிம்கள், கிறித்தவர்கள் சமமாக இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்குத் தனி ஒதுக்கீடு அளித்தால், நாளை கிறித்தவர்களும் இட ஒதுக்கீடு கேட்பார்கள். எனவே இவ்வாறு செய்வது இயலாத ஒன்றாகும். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் ஏற்கனவே பல சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். பெரும்பான்மை சமூகத்தினர் அந்தச் சலுகைகள் எல்லாம் அனுபவிக்கவில்லை. ஏற்கனவே சலுகைகளை அனுபவித்துவரும் சிறுபான்மை சமுதாயத்தினருக்கு மேலும் சலுகைகளை வழங்க முடியாது” என்று இதே ஜெயலலிதா சொன்னாரா இல்லையா? இதையும் மறுக்கிறாரா? இப்போது கூறுங்கள், தமிழ்நாட்டின் கோயபல்ஸ் யார் என்று? நானா? ஜெயலலிதாவா?

அன்புள்ள,

மு.க.

17-3-2014

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 50 PDF ↗