உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 50

தொகுதி 50 · கடிதம் 3863

இஸ்லாமியர்களின் இனிய நண்பர் யார்?

2014-03-15

உடன்பிறப்பே,

9-3-2014 அன்று நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா பேசியது அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது. அவர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வமான நாளேட்டில் “இட ஒதுக்கீட்டில் ஏமாற்றுவதும், வஞ்சிப்பதும், துரோகம் இழைப்பதும் கருணாநிதிக்கு கை வந்த கலை; முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது எனது தலைமையிலான அரசுதான்” என்று தலைப்பிட்டு வெளிவந்துள்ளது.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது அ.தி.மு.க. ஆட்சிதான் என்று முதலமைச்சர் ஜெயலலிதா பேசியிருக்கிறார். தி.மு.கழக ஆட்சியில் தான் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது என்று நாங்கள் கூறுகிறோம். இதில் எது உண்மை? அ.தி.மு.க. ஆட்சியில்தான் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது என்றால், அதற்கான சட்டம் இயற்றப்பட்டதா? எந்தத் தேதியில் அதற்கான ஆணை வெளி வந்தது? எந்த நாளேட்டில் அந்தச் செய்தி வெளியிடப்பட்டது? திட்டவட்டமாகவும் குறிப்பாகவும் ஜெயலலிதா கூறத் தயாரா?

திராவிட முன்னேற்றக் கழகம் 2006ஆம் ஆண்டு வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், 24-5-2006இல் படிக்கப்பட்ட ஆளுநர் உரையிலேயே, “சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த இஸ்லாமியர் மற்றும் கிறித்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு ஏற்படுத்துவதற்குத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்” என்று தெரிவிக்கப்பட்டதே, இந்தச் செய்தி இன்றைக்கும் அந்த உரையிலே இருக்கிறதா இல்லையா?

2006ஆம் ஆண்டு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தைத் திருத்தி அமைத்ததும், அவர்களின் பரிந்துரையைப் பெற்றுத்தான் இட ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்ற அம்சத்தைச் சேர்த்ததும் அ.தி.மு.க. ஆட்சி என்றும், அதனால் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது அவர்கள்தான் என்றும் ஜெயலலிதா பேசியிருக்கிறார். இஸ்லாமிய சமுதாயப் பெருமக்களைக் கேட்கிறேன். இன்னமும் ஜெயலலிதா அணியினருக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று தெரிவிக்கின்ற பல்வேறு இயக்கத் தோழர்களைக் கேட்கிறேன். ஜெயலலிதா செய்ததுதான் இட ஒதுக்கீடு என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை ஜெயலலிதாதான் தமிழகத்தின் முதல் அமைச்சர். உண்மையிலேயே முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென்று அவர் கருதியிருந்தால், அவர் பதவியிலே இருந்த அந்த ஐந்தாண்டு காலத்திலேயே பிற்படுத்தப்பட்டோர் நல வாரியத்தின் பரிந்துரையைப் பெற்று, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திருக்கலாம் அல்லவா? அதை ஏன் அவர் செய்யவில்லை?

13-9-2007இல் தி.மு. கழக ஆட்சியில் நான் வெளியிட்ட அறிவிப்பில்தான், “2006-2007ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் மற்றும் கிறித்தவர்களுக்குக் கல்வி நிலையங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் தனியாக இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி வருவதுடன், தமிழகத்திலும் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டுக்கு வழி வகுத்திடத் தேவைப்படும் உறுதியான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பைச் செயல்படுத்துவதன் முதல் கட்டமாக நீதியரசர் திரு. ஜனார்த்தனம் அவர்களைத் தலைவராகக் கொண்டுள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம், இப்பொருள் பற்றி விரிவாக விசாரணையும், ஆய்வும் செய்து உரிய பரிந்துரையை வழங்குமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அவர்களின் பரிந்துரையை ஏற்று, பேரறிஞர் அண்ணா அவர்களின் 99ஆம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக, பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவிகித இட ஒதுக்கீட்டிலிருந்து, தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதமும்,

அப்பட்டியலில் இடம் பெற்றுள்ள கிறித்தவர்களுக்கு 3.5 சதவிகிதமும், தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் 15-7-2007 முதல் தனி இட ஒதுக்கீடு வழங்கி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டு, அது அப்போதே எல்லா ஏடுகளிலும் வெளிவந்திருக்கிறது.

ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா நாகர்கோவில் கூட்டத்தில், அ.தி.மு.க.தான் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதாகப் பேசியிருக்கிறார். பேசியதோடு ஏமாற்றுவது, வஞ்சிப்பது, துரோகம் இழைப்பதெல்லாம் எனக்கு கை வந்த கலை என்று பேசியிருக்கிறார். துரோகத்தைப் பற்றியும், வஞ்சிப்பதைப் பற்றியும், ஏமாற்றுவதைப் பற்றியும் வேறு யார் பேசினாலும், பாவம்; ஜெயலலிதா பேசலாமா? முந்தாநாள்வரை இவர்களை நம்பியிருந்த இடது சாரிக் கட்சிகளை ஏமாற்றியது, வஞ்சித்தது, துரோகம் செய்தது யார்?

சிறுபான்மையினர் நலன் என்று எடுத்துக்கொண்டால், அ.தி.மு.க. ஆட்சிதான் நன்மைகளைச் செய்தது என்றும் நாகர்கோவிலில் ஜெயலலிதா பேசியிருக்கிறார். கழக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு செய்த நன்மைகளின் பட்டியல் இதோ:-

சிறுபான்மையினர் நல இயக்குனரகம் தி.மு.கழக ஆட்சியில் தோற்றுவிக்கப்பட்டு 1.8.2007 முதல் இயங்கி வருகின்றது.

இஸ்லாமிய சமுதாயத்தினரின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்பட்டு, தமிழகத்தில் “உருது அகாடமி” தி.மு. கழக ஆட்சியில் 21-7-2000 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

மத்திய அரசு நிதி உதவியுடன் தொழிற்கல்வி-தொழில்நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ- மாணவியர்க்கு 2007- 2008ஆம் ஆண்டு முதல் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 7090 மாணவ - மாணவியர்க்கு 18 கோடியே 53 இலட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

மத்திய அரசு நிதி உதவியுடன் பதினோராம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ- மாணவியர்க்குக் கல்வி உதவித்தொகை 2007-08ஆம் ஆண்டு முதல் தி.மு. கழக ஆட்சியில் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ்,

67 ஆயிரத்து 683 மாணவ மாணவியர்க்கு 22 கோடியே 22 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

மத்திய - மாநில அரசுகளின் நிதி (75:25) உதவியுடன் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை பயிலும் சிறுபான்மையின மாணவ - மாணவியர்க்கு கல்வி உதவித்தொகை 2008-2009ஆம் ஆண்டில் தி.மு. கழக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, முதற்கட்டமாக 15,340 மாணவ மாணவியர்க்குக் கல்வி உதவித் தொகைகள் தமிழகத்திற்கென பெற்று வழங்கப்பட்டது. இத்திட்டம் குறித்து தமிழக அரசால் சிறுபான்மையின மக்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் விளைவாக, 2009- 2010ஆம் ஆண்டிற்கு 1 இலட்சத்து 54 ஆயிரத்து 264 மாணவ - மாணவியர்களுக்கு ரூ.18.90 கோடியும்; 2010-2011ஆம் ஆண்டிற்கு 2 இலட்சத்து 42 ஆயிரத்து 301 சிறுபான்மையின மாணவ - மாணவியர்க்கு ரூ.28.62 கோடியும்; கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது.

வேலையில்லாத சிறுபான்மையின மாணவ - மாணவியர் தனியார்த் துறைகளில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கும், அவர்களது திறனை மேலும் மேம்படுத்தும் வகையில் தகவல் மற்றும் தொழில் நுட்பம், ஆயத்த ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு, காலணிகள் வடிவமைப்பு போன்றவற்றில் தொழில் நுட்ப சிறப்புப் பயிற்சித் திட்டம் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்குத் தமிழக அரசின் நிதியுதவி பெற்று ரூ.2.50 கோடி செலவில் 2007- 2008 முதல் தி.மு. கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் நான்கரை ஆண்டுகளில் 10 கோடி ரூபாய்ச் செலவில் 41 ஆயிரத்து 316 பேர் பயனடைந்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா நாகர்கோவிலில் பேசும்போது உலமாக்களின் மாதாந்திர ஓய்வூதியத் தொகையை ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது பற்றிப் பெருமையாகச் சொல்லியிருக்கிறார். ரூ.1 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் 24.8.2009 அன்று தி.மு. கழக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டு, 11 ஆயிரத்து 274 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன; 704 பயனாளிகளுக்கு ரூ.12.93 இலட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

உலமா ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட ஓய்வூதியம் ரூ.200 என்பது 2006இல் தி.மு. கழக ஆட்சியில் ரூ.400 எனவும்; 1.12.2010இல் மாதம் 500 ரூபாய் எனவும் உயர்த்தப்பட்டது. அந்தத் தொகையைத்தான் அ.தி.மு.க. ஆட்சியில் மேலும் அதிகமாக உயர்த்தினார்கள். ஓய்வூதியம் பெறும் உலமாக்கள் எண்ணிக்கை 1998-1999இல் 2000 பேர் என்பது 2200 ஆகவும்; 2007-2008இல் 2400 ஆகவும் தி.மு. கழக ஆட்சியில் உயர்த்தப்பட்டது. உலமா ஓய்வூதியத் திட்டம் தர்க்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் தி.மு. கழக ஆட்சியில் நீட்டிக்கப்பட்டது.

மதவழி மற்றும் மொழிவழிச் சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திடவும் 1989இல் மாநில சிறுபான்மையினர் ஆணையம் ஒன்று முதன்முதலில் 13.12.1989 அன்று தி.மு. கழக ஆட்சியில் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாணையம் 14.3.1990 முதல் செயல்படத் தொடங்கியது.

சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்திடும் சீரிய நோக்கத்துடன் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்திற்கு, சட்டப்படிக்கான அங்கீகாரம் அளித்து தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் 2010 தி.மு. கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. 1.8.2010 முதல் சட்டப்படிக்கான அதிகாரத்துடன் செயல்பட அரசாணை வெளியிடப்பட்டு, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அருட்திரு வின்செண்ட் சின்னதுரை அவர்கள் தலைமையில், ஐந்து உறுப்பினர்களைக் கொண்டு செயல்படத் தொடங்கியது.

2006இல் தி.மு. கழக அரசு பொறுப்பேற்றவுடன், அதற்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சியிலே கொண்டுவரப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டத்தினை ரத்து செய்தது. மேலும் அச்சட்டத்தை எதிர்த்துப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் முந்தைய அரசு பிடித்தம் செய்திருந்த ஒரு நாள் சம்பளத்தைத் திரும்ப வழங்கியது.

சிறுபான்மையினர் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும்வண்ணம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தி.மு. கழக ஆட்சியில் 27.12.1999 முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இக்கழகத்தின்மூலம் கடந்த கழக ஆட்சிக் காலத்தில் சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த 7208 பேருக்கு 29 கோடியே 68 இலட்ச ரூபாய் தனிநபர் கடனாக வழங்கப்பட்டது.

5 ஆண்டுகளில் 966 பேருக்கு 10 கோடியே 67 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ஆட்டோ கடன் வழங்கப்பட்டது. ஐந்தாண்டுகளில் கறவை மாடுகள் வாங்கிட 146 பேருக்கு 27 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது.

34,589 பேருக்கு 46 கோடியே 46 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் சிறுவணிகக் கடன் வழங்கப்பட்டது.

முஸ்லிம் மக்கள் தொகை அடிப்படையில், ஹஜ் பயணத்திற்கு ஒவ்வொரு நாட்டிற்கான ஒதுக்கீட்டை சவூதி அரசு நிர்ணயிக்கிறது. இவ்வொதுக்கீட்டில் இருந்து 2001ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அந்தந்த மாநில முஸ்லிம் மக்கள் தொகைக் கேற்றவாறு மாநிலங்களுக்கு ஹஜ் பயணத்திற்கான ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தி.மு. கழக ஆட்சியில் ஒதுக்கீட்டிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதால், கூடுதல் ஒதுக்கீடு வழங்கக்கோரி, கழக அரசு இந்தியப் பிரதமரிடம் கேட்டுக் கொண்டதன்பேரில் மத்திய அரசு தமிழகத்திற்கு 5 ஆண்டுகளில் நிர்ணயித்த 13 ஆயிரத்து 626 பேருக்கும் அதிகமாக 5611 பேரைக் கூடுதலாக ஹஜ் பயணம் மேற்கொள்ள இஸ்லாமிய மக்களுக்குத் துணை நின்றதும் தி.மு. கழக அரசுதான்!

தமிழக அரசு சிறுபான்மையினர் நலனுக்காகச் செயல்படுத்திவரும் திட்டங்களை ஆய்வு செய்த மத்திய அரசின் தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு. எம்.எஸ்.ஏ. சித்திக் அவர்களும், அவரது தலைமையில் வருகைபுரிந்த குழுவினரும், சிறுபான்மையினருக்கான தமிழக தி.மு. கழக அரசின் திட்டங்களில் முழு மன நிறைவு கொண்டு, கழக அரசு, 'சிறுபான்மையினருக்காகப் பாடுபடும் அரசு: (Pro- Minority) என்று பாராட்டினார்.

இஸ்லாமிய மக்களுக்காகக் கழக அரசு செய்தவை இவை மாத்திரம்தானா? 1969இல் மீலாது நபிக்கு முதன்முதல் அரசு விடுமுறை; முந்தைய அ.தி.மு.க. அரசு 2001இல் ரத்து செய்த மீலாது நபி அரசு விடுமுறையை 15.11.2006 ஆணை மூலம் மீண்டும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.

1973இல் உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் தி.மு. கழக ஆட்சியிலேதான்.

1974இல் சென்னை அண்ணாசாலை அரசினர் மகளிர் கல்லூரிக்கு “காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி” எனப் பெயர் சூட்டப்பட்டது.

2001இல் “காயிதே மில்லத் மணிமண்டபம்” 58 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவில் சென்னையில் அமைத்திட 25.2.2001 அன்று தி.மு. கழக ஆட்சியிலே அடிக்கல் நாட்டி, திறக்கப்பட ஆவன செய்தது.

தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களை ஆதரித்துப் பேசும் ஜெயலலிதா கடந்த காலத்தில் அவர்களைப் பற்றி பேசியது என்ன?

“ அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டபோது, “ஆமாம், ஆதரிக்கிறேன். இந்தியாவிலேயே ஒரு ராமர் கோவில் கட்ட முடியவில்லை என்றால் வேறு எங்கே கட்ட முடியும்?” என்று கூறியவர்தான் ஜெயலலிதா.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கழக அணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், மனித நேய மக்கள் கட்சியும் கூட்டணி சேர்ந்து தலா ஓர் இடத்தில் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க. ஏதாவது ஒரு முஸ்லிம் இயக்கத்திற்கு ஓர் இடமாவது அளித்திருக்கிறதா? வேட்பாளர்களை எடுத்துக் கொண்டால், தி.மு.கழகத்தின் சார்பாக இரண்டு இஸ்லாமிய சகோதரர்கள், தோழமைக் கட்சிகள் சார்பில் இரண்டு இஸ்லாமிய சகோதரர்கள் என்று மொத்தம் நான்கு பேர், அதாவது 10 சதவிகிதம் என்கிற அளவிற்கு முஸ்லிம்களுக்குப் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டிருக்க, அ.தி.மு.க.வில் ஒரே ஒருவருக்குத்தான் வாய்ப்புதரப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது, இட ஒதுக்கீட்டில் ஏமாற்றுவதும், வஞ்சிப்பதும், துரோகம் இழைப்பதும் கருணாநிதியா? ஜெயலலிதாவா?

இஸ்லாமிய சமுதாயத்தினரோடு, நமது திராவிட இயக்கமும் நானும் கொண்டுள்ள தொய்வில்லாத தொடர்பும், உறவும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. 75 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி செலலும் மாணவனாக இருந்தபோதே, திருவாரூரிலே நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டிலேயே - நான் கொடிபிடிக்கும் சிறுவனாக - பச்சைப் பிறைக் கொடியைக் கையிலே ஏந்துகின்ற சிறுவனாக - அந்த மாநாட்டிலே கலந்து கொண்டேன் என்பதை நான் பெருமையோடு நினைவு கூர்கிறேன்.

அந்த மாநாட்டிற்குப் புதுக்கோட்டையில் திவானாக இருந்த கான்பகதூர் கலிபுல்லா சாகேப் அவர்கள்தான் தலைமையேற்றார்கள். ஒரு கையிலே “குடியரசு' ஏடு; இன்னொரு கையிலே “தாருல் இஸ்லாம்' என்கிற முஸ்லிம்லீக்கிற்காகப் பிரச்சாரம் செய்கிற ஏடு - இவைகள்தாம் என்னுடைய கைகளை அந்த நாட்களில் அலங்கரிக்கும்.

மாணவப் பருவத்திலே என்னுள் முகிழ்த்த அந்த உறவும், உணர்வும் இன்றைக்குச் செழித்துப் பசுமையாகப் பரவியிருக்கின்றன. எனவே நான், இளமைப் பருவத்திலேயே இஸ்லாமிய சமுதாயத்தினரின் எண்ணற்ற நிகழ்ச்சிகளில், கூட்டங்களில், மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோதெல்லாம் அந்தச் சமுதாயத்தினருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைத் தவறாது ஆற்றி வந்திருக்கிறேன்.

நேற்றைக்கு நடந்ததைப்போல் இருக்கிறது ஒரு நிகழ்ச்சி; என் நெஞ்சத்தை நெகிழவைத்து, எனது நினைவிலிருந்து நீங்காமல் என்றென்றும் நிலைத்துவிட்ட அந்த நிகழ்ச்சி. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவரும், பெரியாரின் அன்புக்கும், பேரறிஞர் அண்ணாவின் பாசத்திற்கும், எனது மட்டற்ற மதிப்புக்கும் உரியவரான பெருந்தகையாளர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள், 1972ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது -.அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்ற செய்தி அறிந்தவுடன், எனது கோவை மாவட்டச் சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டு, உடனடியாகச் சென்னை திரும்பினேன்.

ஸ்டான்லி மருத்துவமனையில் அவரது நிலையைக் கண்டபோது, அந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ள எனக்குத் தெம்பில்லாமல் போயிற்று. கண்மூடி மயக்கநிலையில் படுத்திருந்த அவர் அருகே குனிந்து, மெல்லிய குரலில், “அய்யா, நான் கருணாநிதி வந்திருக்கிறேன்” என்று கூறினேன். அந்தக் குரல் கேட்டுக் காயிதே மில்லத் அவர்கள் கண்விழித்துப் பார்த்தார். அந்த நிகழ்ச்சி குறித்து, தென்காசி என்.கே. ரிபாயி அவர்கள் தான் எழுதிய

“கவ்மின் காவலர்” என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “அவர்கள் கண்விழித்துப் பார்த்தார்கள். வந்திருப்பது யார் என்பதையும் புரிந்து கொண்டார்கள். கலைஞர் கருணாநிதியைப் பார்த்ததும் தங்களது கரங்களை நீட்டினார்கள். அவரும் அக்கரங்களைப் பிடித்துக் கொண்டார். அச்சமயம் காயிதே மில்லத் அவர்கள் மிகவும் பலகீனமான குரலில், 'முஸ்லிம் சமுதாயத்திற்குத் தாங்கள் செய்த உதவிகளுக்கெல்லாம் எனது நன்றி” என்று கூறினார்கள். இதைக் கேட்டதும் அவர் அப்படியே மெய்மறந்துவிட்டார். அவரது கண்கள் கலங்கிவிட்டன. என்ன சொல்வதென்றே தெரியாது அவர் தத்தளித்துக் கொண்டிருந்தார். அதற்குள்ளாக காயிதே மில்லத் அவர்களின் கண்கள் மூடிக்கொண்டன. மீண்டும் மயக்கநிலை ஏற்பட்டுவிட்டது. அதற்குப் பிறகு காயிதே மில்லத் அவர்கள் மீண்டும் சுயநினைவு பெறவேயில்லை”.

இளமைக் காலத்திலேயே இஸ்லாமிய சமுதாயத்தினர்மீது நான் கொண்டிருந்த மதிப்பின் தொடர்ச்சியாக; காயிதே மில்லத் அவர்கள்மீது நான் கொண்டிருந்த அன்புக்கும், பாசத்துக்கும் அடையாளமாக - இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு வாய்ப்பு கிடைத்திடும்போதெல்லாம் பல்வேறு நன்மைகளை வழங்கியிருக்கிறேன். ஆனால் என்னைப் பற்றித்தான் ஜெயலலிதா நான் ஏமாற்றுவதாகவும், வஞ்சிப்பதாகவும் பேசியிருக்கிறார்.

“இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கை நெறி” என்றார் அண்ணா. இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாமல் மனித சமுதாயம் அனைத்திற்கும் பொதுவாகப் பொருந்தும் வாழ்க்கை நெறிகளைப் போதித்த அண்ணல் நபிகளார், ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் அன்புடன் பழகி, உறவை வளர்க்க வேண்டும் என்றார். மற்றவர்களைப் பற்றிக் குற்றம் குறைகள் கூறும் மனப்பான்மையை விட்டுவிட வேண்டும் என்று போதித்த அண்ணல் நபிகளார், “பிறருடைய குற்றங்களைத் தேடி அலையாதீர்கள்; நீங்கள் உயர்ந்த நிலை அடைவதற்காகப் பிறரைத் தாழ்த்தி விடாதீர்கள்; பிறர்மீது பொறாமை கொள்ளாதீர்கள்; பிறரைப் பற்றிப் புறம் பேசாதீர்கள்; பிறரிடம் முகம் சுளிக்காதீர்கள் ” என்கிறார்.

இஸ்லாமியர்களைப் பற்றி பேசியிருக்கின்ற ஜெயலலிதா, நபிகள் நாயகத்தின் இந்த அறிவுரைகளையாவது மனதிலே கொண்டு இனியாவது பிரச்சாரத்தை மேற்கொள்வார் என்று நம்புகிறேன். தி.மு.கழக ஆட்சியில் இஸ்லாமியப் பெருமக்களுக்காக நாம் செய்த சலுகைகளையெல்லாம் அவர்களுக்கு நினைவூட்டிட வேண்டும். “முஸ்லிம்கள் மட்டும் சிறுபான்மையினர் அல்ல, வேறு சமுதாயத்தினரும் இருக்கிறார்கள்” என்றெல்லாம் ஜெயலலிதா பேட்டி கொடுத்ததையும், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது கழக அரசுதான் என்பதையும் விளக்கிட வேண்டும்.

அன்புள்ள,

மு.க.

15-3-2014

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 50 PDF ↗