உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 50

தொகுதி 50 · கடிதம் 3851

மீனவர் பிரச்சினைக்கு விடிவு ஏற்படுமா?

2014-01-17

உடன்பிறப்பே,

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுதலை செய்வது குறித்தும், தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்தும், மீன் பிடிப்பதில் உள்ள மற்ற முக்கியமான பிரச்சினைகள் குறித்து தீர்வு காண்பது குறித்தும், இரண்டு நாடுகளின் மீனவப் பிரதிநிதிகள் சந்திப்பது பற்றி மத்திய அரசு, தமிழக அரசுக்குக் கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதி, அது பற்றி அனைவரும் அழுத்தம் கொடுத்த நிலையில் தமிழக அ.தி.மு.க. அரசு இந்த மாதம் 20ஆம் தேதி அந்தச் சந்திப்பினை நடத்த முன்வந்துள்ளது. ஆனால் அந்தச் சந்திப்பு எங்கே நடைபெறப் போகிறது? கலந்தாலோசனையில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள்? இந்த முக்கியமான பிரச்சினை பேசப்படும் போது, தமிழக மீனவர்களுக்காக, தமிழக முதலமைச்சர் அதிலே கலந்து கொள்ள வேண்டாமா? முதலமைச்சர் கொடநாட்டில் இருப்பதால் அவர் இல்லாமல் அந்தப் பேச்சுவார்த்தை நடைபெறப் போகிறதா? மீனவர்கள் பிரச்சினை பற்றி, தமிழக முதலமைச்சருக்கு உள்ள அக்கறை அவ்வளவுதானா? மீனவர்களின் பிரதிநிதிகள் கலந்து பேசும் கூட்டம் டெல்லியில் நடக்கப்போவதாக ஒரு செய்தி வருகிறது; சென்னையில் நடைபெறப்போவதாக மற்றொரு செய்தி வருகிறது! எது உண்மை என்று யாரும் இன்னமும் தெளிவுபடுத்தவில்லை. இதற்கிடையே இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள “தினத்தந்தி” நாளேடு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முயற்சியின் பேரில், மீனவர்கள் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசப் போவதாக செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்தியப் பிரதமர் இந்தச் சந்திப்புக்காக கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதி, அந்தக் கூட்டம் இந்த அளவிற்கு தாமதமாகக் காரணமே தமிழக முதலமைச்சரும், தமிழக அரசும்தான் என்று செய்திகள் வந்த பிறகும், தினத்தந்தி

நாளேடு முதலமைச்சரைக் காப்பாற்றுகின்ற வகையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியின் பேரில் இந்தக் கூட்டம் நடைபெறப்போவதாக, அவருக்கு வக்காலத்து வாங்குவதைப்போல செய்தி வெளியிட்டிருப்பதுதான் விந்தையாக உள்ளது. மேலும் இன்றைய “தினத்தந்தி” நாளேட்டில், மீனவர்கள் பிரச்சினைக்காக, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 33 கடிதங்கள் எழுதியிருப்பதாகவும், அவருடைய கடுமையான முயற்சியின் விளைவாக தற்போது இலங்கைச் சிறையிலே உள்ள அனைத்து தமிழக மீனவர்களும் இன்றுமுதல் அடுத்தடுத்த நாட்களில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் பெட்டிச் செய்தி வெளியிட்டு, முதலமைச்சரை புகழ்ச்சியின் உச்சியிலே கொண்டு போய் நிறுத்தப் படாதபாடு பட்டிருக்கிறது. இந்திய மீனவர்களின் நலனுக்காக நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவை நாகைக்கே அனுப்பி, மீனவர்களின் உண்ணாவிரதத்தை நிறுத்தச் செய்ததோடு, மீனவர்களின் பிரதிநிதிகளை டெல்லிக்கே அழைத்துச் சென்று, பிரதமரையும், வெளியுறவுத் துறை அமைச்சரையும் சந்திக்க வைத்து, அந்த நேரத்தில்தான் பிரதமர் அவர்கள், அந்த மீனவர்களிடம் ஜனவரி 20ஆம் தேதி வாக்கில் இரு நாட்டின் மீனவர் பிரதிநிதிகளையும் சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார் என்ற செய்திகளையும் “தினத்தந்தி” நாளேடு வசதியாக மறைத்து விட்டு, “அம்மா” புகழ் பாடியிருக்கிறது. பாவம்! அவர்களுக்கு என்ன நெருக்கடியோ?

அனைத்துத் தரப்பிலிருந்தும் தொடர்ந்து தரப்பட்ட அழுத்தத்தின் காரணமாக மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்து இந்திய-இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அண்மையில் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே தலைமையிலான அதிகாரிகள் குழு வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. சல்மான் குர்ஷித் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அத்துடன் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர், சரத்பவார் அவர்களையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தைக்குப் பிறகு இலங்கை அமைச்சர் சேனரத்னே அளித்திருக்கும் பேட்டியில், “இருநாட்டுச் சிறைகளிலும்

அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் உடனடியாக விடுதலை

செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்தியச் சிறைகளில் உள்ள 160 இலங்கை மீனவர்களையும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நான்கு மீன்பிடி படகுகளையும், இந்திய அரசு படிப்படியாக விடுதலை செய்யும். அதைப்போலவே இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 236 இந்திய மீனவர்களையும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 90 படகுகளையும் இலங்கை அரசு படிப்படியாக விடுவிக்கும். விடுவிக்கும் பணி நாளை முதலே தொடங்கும். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை” என்றெல்லாம் கூறியிருக்கிறார். ஆனால் இதே இலங்கை அமைச்சர், இரண்டு நாட்களுக்கு முன்பு, இலங்கையில் கூறிய செய்தி என்ன தெரியுமா? “இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு முன்பு இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள். இரு தரப்பிலும் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை ஒரே நேரத்தில் விடுவிக்க தீர்வு காண வேண்டும். தமிழக மீனவர்கள் சட்ட விரோதமாக, இலங்கைப் பகுதியில் நுழைந்து மீன் பிடிப்பதால், எங்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது” என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

அதுமாத்திரமல்ல; இலங்கை அமைச்சர் டெல்லி வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் அதே நேரத்தில், நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே, கோடியக்கரைக்கு தென் கிழக்கு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ரோந்துப் படகு அங்கே வந்து, நமது மீனவர்கள் மீது சரமாரிக் கற்களை வீசியிருக்கிறார்கள். பின்னர் தமிழக மீனவர்கள் விரித்திருந்த மீன்பிடி வலைகளையெல்லாம் வெட்டி வீசியிருக்கிறார்கள். இரண்டு நாட்டு மீனவர்களுக்கிடையே ஒரு சுமுகமான முடிவுக்காக முயற்சிகள் மேற்கொண்டிருக்கும் நேரத்தில், இலங்கை கடற்படை தாக்குதலிலே ஈடுபட்டுள்ளது. ஆனால் இலங்கை அமைச்சர் டெல்லியில் அளித்த பேட்டியில் இந்திய மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

14ஆம் தேதி வெளிவந்த தமிழக நாளேடுகளில் இலங்கைச் சிறையிலே உள்ள 275 தமிழக மீனவர்களில், 163 பேர் 13ஆம் தேதியன்று விடுவிக்கப்பட்டார்கள் என்றும் அதேபோல் தமிழகச்

சிறைகளிலே உள்ள இலங்கை மீனவர்கள் 52 பேர் அதே 13ஆம் தேதியன்று விடுவிக்கப்பட்டார்கள் என்றும் செய்தி வந்தது. ஆனால் பின்னர் வந்த செய்தியில்,

தமிழகத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 52 பேர் சில நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டதாகவும்; அதைப்போலவே இலங்கை சிறைகளிலே இருந்த காரைக்கால், நாகை மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 52 பேர் இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டதாகவும்; 162 இந்திய மீனவர்களை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டபோதும், தமிழகத்தில் 52 இலங்கை மீனவர்கள் மட்டுமே விடுதலை செய்யப்பட்டதால், இலங்கை அரசும் முதற்கட்டமாக 52 மீனவர்களை விடுதலை செய்துள்ளது என்று செய்திகள் வந்தனவே, அந்தச் செய்திகளை இலங்கை அமைச்சர் தற்போது வெளியிட்டிருக்கும் தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எந்த அளவுக்கு உண்மை என்பது புதிராகவே இருக்கிறது. ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, தமிழக மீனவர்களின் நலன் கருதி உண்மை நிலை என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்திய - இலங்கை மீனவர்கள் மீன் பிடிப்பதில் உள்ள முக்கியமான பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதற்காக ஆறு அதிகாரிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும்; இந்தக் குழுவில் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த தலா மூன்று அதிகாரிகள் இடம் பெறுவர் என்றும்; இந்தியக் குழுவுக்கு மத்திய வேளாண்மைத் துறை செயலாளரும், இலங்கைக் குழுவுக்கு அந்த நாட்டின் மீன் வளத் துறை தலைமை இயக்குநரும் தலைமை வகிக்க உள்ளதாகவும்; இந்தக் குழுவின் முதல் பேச்சுவார்த்தை இன்று (16-1-2014) நடக்கவிருப்பதாகவும் நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. நடக்கவிருப்பதாகச் சொல்லப்படும் இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழக அரசின் பங்கு என்ன என்பதைப் பற்றி எந்த விளக்கமும் இல்லை. அதையும் அ.தி.மு.க. அரசுதான் தமிழக மீனவர்களுக்கு விளக்க வேண்டும்.

மீனவர் பிரச்சினை குறித்து நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளின் போது மத்திய அரசும், மாநில அரசும் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடும், கவனமாகவும் செயல்பட வேண்டும். ஏனெனில் இலங்கைச் சிங்கள அரசு தொடர்ந்து பேசுவது

ஒன்றாகவும், செய்வது வேறொன்றாகவும் முரண்பாடுகளின் மொத்த உருவமாகக் காட்சியளிப்பதை யாரும் மறந்துவிட முடியாது. 2009ஆம் ஆண்டு இலங்கைப் போரின்போது, போரை நிறுத்திவிட்டதாக உலக நாடுகளையும், இந்திய அரசையும் நம்ப வைத்துவிட்டு, அதற்கு மாறாக போரைத் தொடர்ந்து நடத்தி விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்ததை நம்மால் என்றைக்கும் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது.

போருக்குப் பிறகு 13வது சட்டத் திருத்தத்தைப் பற்றி பேசியபோதெல்லாம் இலங்கை அதிபர் ராஜபக்ஷே, 13வது சட்டத் திருத்தத்திற்கு கூடுதலாகவும், அதிகாரங்கள் அங்கேயுள்ள தமிழர்களுக்கு வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். ஆனால் நடந்தது அதற்கு எதிர்மாறான நடவடிக்கைதான்.

வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்தி ஜனநாயக ரீதியாக ஆட்சி நடப்பதற்கு ஏற்பாடு செய்வேன் என்று நம்பிக்கை அளித்த ராஜபக்ஷே, தேர்தலை நடத்தியதோடு சரி; அவர் கனவு கண்டபடி சிங்கள அரசியல் கட்சிகள் வெற்றிபெற முடியவில்லை; படுதோல்வி அடைந்து தமிழ்த் தேசிய முன்னணி அறுதிப் பெரும்பான்மை பெற்று, ஆட்சி அமைத்த போதிலும், அவர்கள் எதிர்பார்த்த குறைந்தபட்ச அதிகாரங்கள்கூட வழங்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் சென்ற வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசும்போது, “வடக்கு மாகாண நிர்வாகத்திற்கு குறுக்கீடாக இருப்பது ராணுவம்தான். வடக்கு மாகாணம், ராணுவ முகாம்கள் நிறைந்த பகுதியாகி விட்டது. உள்நாட்டுப் போரின்போது இடம் பெயர்ந்த பல குடும்பங்கள் இன்னும் சொந்த இடம் திரும்ப முடியாமல் தவிக்கின்றன. தனியார் நிலங்களையும், சில இடங்களில் விவசாய நிலங்களையும் இலங்கை ராணுவம் கையகப்படுத்திக் கொண்டுள்ளது. நிலம் தமக்கே சொந்தமானதாக இருந்தாலும் அதில் முகாமிட்டுள்ள ராணுவத்தினர் பயிரிடும் விளைபொருள்களை உள்ளூர்ப் பகுதி விவசாயிகள் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்ப்பந்த நிலையில் இருக்கின்றனர். பெண்களும், குழந்தைகளும் ராணுவத்தினரின் மிரட்டலுக்கு உள்ளாகி வேதனைப்படுகிறார்கள். கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. ஆளுநராக உள்ள இலங்கை

முன்னாள் ராணுவ மேஜர் ஜெனரலுடன் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. பணிபுரியும் ஊழியர்கள் ஆளுநர் சொல்வதை மட்டும் கேட்டு நடந்து கொள்கிறார்கள்” என்றெல்லாம் மனம் நொந்து கூறியிருக்கிறார். அதைப்போலவே இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், “உதயன்” நாளேட்டின் உரிமையாளருமான சரவணபவன், சென்னையில் அளித்திருக்கும் பேட்டியில், “இலங்கையில் போருக்குப் பிறகும் நிலைமை அப்படியே உள்ளது. ராணுவத்தின் தலையீடு குறையவில்லை. போராளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதாகக் கூறினார்கள். அவர்களுக்கு சரியான வேலைவாய்ப்போ, வாழ்வாதாரமோ உருவாக்கப்படவில்லை. முள்வேலி முகாம்களில் இருந்த இரண்டு இலட்சம் பேரை வெளியேற்றினார்கள். ஆனால் அவர்கள் இப்போது சரியான வீடுகள் இல்லாமல், வாழ்க்கை நடத்த வழியின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றெல்லாம் வேதனைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் நம்முடைய இந்திய அரசின் வேளாண்மைத் துறை அமைச்சர், நண்பர், திரு. சரத்பவார் 15-1-2014 அன்று அளித்துள்ள பேட்டியில், “இரு நாட்டு அரசாலும் கைது செய்யப்படும் மீனவர்களின் விவகாரத்தைக் கவனிப்பதற்காக துறை ரீதியான குழு அமைத்திட இந்தியாவும் இலங்கையும் முடிவு செய்துள்ளன. இதன் மூலம் அடுத்த வாரமே சில பலன்களைக் காண முடியும் என்று நம்புகிறேன். அப்படிப் பலன் ஏற்படவில்லை என்றால், அடுத்த கட்ட வாய்ப்புகள் பற்றி ஆலோசிக்கப்படும்” என்று கூறியிருக்கிறார். அடுத்த கட்ட நடவடிக்கைகள் அவர் கூறியபடி அமைந்தால் அனைத்துத் தரப்பினருக்கும் மகிழ்ச்சியே! வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆகியோர் தெரிவித்திருக்கும் கருத்துகள் ஏற்கனவே இலங்கை அதிபர் ராஜபக்ஷே அளித்த உறுதிமொழிகளுக்கு நேர்மாறானவை என்பதையும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இரண்டு முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகும், அதற்கு முரணான காரியங்களே இலங்கையிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதையும் இந்திய அரசு மனதிலே கொண்டு, தற்போது நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தைகளின்

போது மிகுந்த எச்சரிக்கையாக இருந்து தமிழக மீனவர்களின்

நல்வாழ்வுக்கு வழிவகுத்து, அவர்கள் இனியும் இலங்கைக்

கடற்படையினரின் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படாமல்

நிம்மதியாக வாழ்க்கையை நடத்திட உதவ வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

அன்புள்ள,

மு.க.

17-01-2014

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 50 PDF ↗