உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 49

தொகுதி 49 · கடிதம் 3813

எத்தனை சாமிக்கண்ணுகள் வளர்த்த கழகமிது!

2013-09-30

உடன்பிறப்பே,

எனக்கு அகவை 90 என்பது உனக்குத் தெரியும்! இப்போதும் நான் அன்றாடம் அண்ணா அறிவாலயத்திற்கு வரத் தவறு வதில்லை. காலையில் “முரசொலி” நாளிதழுக்காக உடன்பிறப்பு மடல்களோ, கேள்வி பதில்களோ எழுதி முடிக்கவே 10.30 மணியாகி விடுகிறது. அதன்பிறகுதான் காலை உணவே! அதற்குப் பிறகுதான் அறிவாலயம். கழகத்தின் முன்னணியினர், மாவட்டக் கழகச் செயலாளர்கள், தேர்தல் நிதியளிக்க வருவோர், உள்ளூர் பிரச்சினைகளை என் கவனத்திற்குக் கொண்டுவர நினைப்போர் என பார்வையாளர்களைச் சந்தித்து முடிக்கவே பகல் 1 மணி ஆகிவிடும். 1 மணி அளவில் செய்திகளைப் பார்த்துவிட்டு, வெளியே வந்தால் அங்கேயும் கழகத் தோழர்கள், செய்தியாளர்கள் என்று நின்றுகொண்டிருப்பார்கள். செய்தியாளர்கள் “ஒரே கேள்வி! ஒரே கேள்வி!” என்பார்கள். அருகே அழைத்தால் ஒன்பது கேள்விகளைக் கேட்பார்கள்! ஒரு கேள்வி என்றீர்களே என்றால், ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி அய்யா என்பார்கள்! முடிந்தவரை பதிலளிப்பேன். அவர்களையும் தாண்டிப் புறப்பட்டு விட நினைத்தால், அப்போதும் ஒருசில கழகத் தோழர்கள்! அந்த வகையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் புறப்படத் தயாரான போது, ஒரு முதியவர் என்னை நெருங்கினார்.

“யார்? என்ன வேண்டும்?” என்றேன். “நான் கட்சிக்காரன் அய்யா, எனக்கு ஒன்றும் வேண்டாம்; உங்களைப்பார்க்க வேண்டும்; அவ்வளவுதான்” என்றார். கார் அருகே அழைத்தேன். “தலைவரே! எனக்கு 100வது வயது பிறக்கப்போகிறது; எனக்கு நினைவு தெரிஞ்சது முதல் நான் தி.மு.க; காஞ்சிபுரம் மாவட்டம். உங்களிடம் வாழ்த்துப் பெறுவது ஒன்றுதான் என்னுடைய விருப்பம்” என்றார். அவரை நான் வாழ்த்திவிட்டுப் புறப்பட்டேன். அந்தப் பெரியவருக்கு மிகப் பெரிய மன நிறைவு.

அவர் என் கையிலே கொடுத்த மனுவைப் படித்தேன். அதில், “அய்யா, வணக்கம். நான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் ஏழை ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்தவனாகும். எனக்கு வயது 100 ஆகிறது. ஆதி முதல் இன்றுவரை நான் தி.மு.க. ஈசூர்கிளையில் உறுப்பினராக இருந்து தொண்டாற்றி வருகின்றேன். எங்கள் குடும்பமே தி.மு.க.வை சேர்ந்ததாகும். தி.மு.க.வின் கொள்கை பிடிப்போடு இன்றுவரை நான் இருந்து வருவது எங்கள் பகுதிவாழ் மக்கள் அறிந்த ஒன்றாகும். எனக்கு வருகிற 27-9-2013 ந்தேதி 100வது வயது பிறக்கப் போகின்றது. எனக்கு உங்களுடைய நல்லாசி கிடைக்க வேண்டி இம்மனுவைச் சமர்ப்பிக்கின்றேன். மேலும், 27-9-2013 அன்று எங்கள் கிராமத்தில் 100வது வயது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கின்றேன். அதற்குத் தாங்கள் என்னை ஆசீர்வதிக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு என்றும் தி.மு.க. தொண்டன். இதனுடன் எனது உறுப்பினர் அட்டை இணைத்துள்ளேன்” என்று எழுதியிருந்தார்.

இவரது 100வது பிறந்த நாள் 27-9-2013 என்பதை அறிந்த நான் தம்பி ஸ்டாலினிடம் மாவட்டக் கழகச் செயலாளரை அவருடைய இல்லத்திற்கே சென்று வாழ்த்தும்படி கூறிய தோடு, அவர் கொடுத்த, அந்த மனுவினைத் தம்பி ஸ்டாலினிடம் கொடுத்துவிட்டு நான் புறப்பட்டேன். சாமிக்கண்ணுவையும், அவருடைய துணைவியாரையும் தம்பி ஸ்டாலின் அவருடைய அறைக்கு அழைத்துச் சென்று பொன்னாடை அணிவித்து, ஆயிரம் ரூபாய் நிதியினையும் அளித்து அனுப்பிவைத்திருக்கிறார்.

மேலும் நான் கூறியதன்படி ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் தா.மோ அன்பர சனைத் தொடர்பு கொண்டு, சாமிக்கண்ணுவின் பிறந்த நாள் அன்று அவருடைய இல்லத்திற்கே சென்று அவரைக் கழகத்தின் சார்பில் கெளரவப் படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அண்ணா அறிவாலயத்தில் அந்த நூறு வயதான சாமிக்கண்ணு காஞ்சிபுரம் மாவட்டம் என்று சொன்னதன் விளைவாகவோ என்னவோ, காரில் இல்லத்திற்குப் புறப்பட்ட என் நினை வலைகளில் உடனே அண்ணா வந்தார், அவரைத் தொடர்ந்து சி.வி.எம். வந்தார், சி.வி. ராஜகோபால் வந்தார், கே.டி.எஸ். மணி வந்தார், காஞ்சி கல்யாணசுந்தரம் வந்தார், கம்பராசபுரம் ராஜகோபால் வந்தார், வெங்கா வந்தார், மதுராந்தகம் ஆறுமுகம் வந்தார், பூவிருந்தவல்லி ராஜரத்தினம் வந்தார், தி.மு.க. வரலாறு எழுதிய டி.எம். பார்த்த சாரதி வந்தார், குன்றத்தூர் தா.மோகலிங்கம் வந்தார், அதே குன்றத்தூரைச் சேர்ந்த தி.ந.சம்பந்தம், மணிமொழியார் என்று ஒவ்வொருவரும் என் மனக்கண்முன் தோன்றி நலம் விசாரித்தனர்.

நினைவில் வந்த அண்ணாவிடம், “வயதாகி விட்டது அண்ணா” என்றேன். “என்ன வயதாகி விட்டது, 1969இல் உங்களைவிட்டு வரும்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பணி குறைந்தது இன்னும் ஐம்பதாண்டு காலத்திற்குத் தேவைப்படுகிறது என்று சொன்னேனே, அந்த ஞாபகம் வரவில்லையா? அந்த ஐம்பதாண்டு என்பது 2019ஆம் ஆண்டுதானே வரு கிறது; அதற்குப் பிறகும் நம்முடைய கழகத்தின் பணி தமிழ்நாட்டிற்குத் தேவைதான்!” என்றார்.

அண்ணா அவர்கள் இருந்தபோது, காஞ்சிபுரம் நகருக்கு எத்தனை முறை அவரைச் சந்திக்கச் சென்றிருப்போம், எப்படியெல்லாம் பழகினோம், என்னென்ன கருத்துகளைக் கேட்டிருப்போம் என்பதையெல்லாம் அசைபோட்டுக் கொண்டே இல்லம் சென்றேன். இதற்கெல்லாம் காரணமாக இருந்த காஞ்சிபுரம் மாவட்டம் சாமிக்கண்ணுவிற்கு 100 வயது என்பதும் என் நினைவிற்கு வந்தது.

காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் அன்பரசனும் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டக் கழக முன்னணியினரும் 27ஆம் தேதியன்று சாமிக்கண்ணுவின் இல்லத்திற்கே சென்று அந்தத் தம்பதியினருக்கு மாலை மரியாதை செய்து, என் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்து, மாவட்டக் கழகத்தின் சார்பில் பொற்கிழியும் வழங்கி, அதைப் புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

அந்த முதியவரின் பெயர் திரு.சாமிக்கண்ணு. காஞ்சிபுரம் மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்தில், ஈசூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் வாழ்ந்து வருகிறார். அவருடைய துணைவியார் காசியம்மாள். சாமிக்கண்ணு விவசாயக் கூலித் தொழிலாளி. காசியம்மாள் விறகு வெட்டி விற்பனை செய்கிறார். விவசாயக் கூலி வேலையிலும் ஈடுபட்டு வருகிறார். இந்தத் தம்பதியருக்கு கோவிந்தன், அசோக் என்று இரண்டு மகன்களும், தேவி, சத்தியவாணி என்று இரண்டு மகள்களும்! தி.மு. கழகத்தின் மீது தீவிர பற்றுக்கொண்ட சாமிக்கண்ணுவிற்கு என்னை நேரில் சந்தித்துப் பேச வேண்டுமென்பதே பல ஆண்டுக் காலக் கனவாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் பார்க்க முடியுமா என்று நினைத்துக்கொண்டே காலத்தைக் கழித்திருக்கிறார்.

தன்னைப் பார்க்கவரும் கழகத் தோழர்களிடம் 2016ஆம் ஆண்டு வருகிற சட்டமன்றத் தேர்தலில் தலைவர் கலைஞர் அவர்களை ஆறாவது முறையாக முதல்வராக ஆக்கியே தீர வேண்டும் என்று கூறிவருகிறாராம். தி.மு. கழகம் நடத்திய அனைத்து மாநாடுகளிலும் இவர் கலந்து கொண்டிருக்கிறாராம். சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நானும், பொருளாளர் தம்பி ஸ்டாலினும் கலந்துகொண்ட அனைத்துப் பொதுக் கூட்டங்களிலும் இவர் வராமல் இருந்ததில்லையாம். எந்தவொரு சாதாரண பதவிக்கும் வர வேண்டுமென்று இவர் எண்ணியதே இல்லையாம். தொண்டராக இருப்பதிலேதான் தனக்கு மகிழ்ச்சி என்கிறார்.

100 வயதாகும் இந்தக் கழகத் தோழரின் இரண்டாவது மகன் அசோக் என்பவர் 25-2-2009 அன்று சென்னை புழுதிவாக்கம் நகரிலே வசித்து வந்த நேரத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி, அவரும், அவருடைய துணைவியார் சிவசக்தி என்பவரும் அவர்களுடைய பிள்ளைகள் சீமான், சுரேஷ், மகள் சுகன்யா ஆகியோரும் தீயில் கருகி இறந்துவிட்டார்களாம். சாமிக்கண்ணுவை இந்தச் சம்பவம் பெரிதும் பாதித்த போதிலும், கழகப் பணியை நிறுத்தாமல் தொடர்ந்து செய்துவருகிறார்.

நமது கழகத்தில் இந்த ஒரு சாமிக்கண்ணு மாத்திரமல்ல; எந்தப் பதவியிலும் அவர் இருந்ததில்லை. கட்சியினால் தனக்கு என்ன இலாபம் என்று நினைத்துப் பார்த்ததுகூட இல்லை. இன்னும் எத்தனையோ சாமிக்கண்ணுகள் இணைந்து வளர்த்த கட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம். சாமிக்கண்ணுவைப் போன்றவர்கள் இந்தக் கட்சியிலே உறுப்பினராகச் சேர்ந்து கட்சியை வளர்க்கத் தொடங்கிய நேரத்தில், தமிழகத்தில் நம்முடைய கட்சி ஆட்சிக்கு வரும்; சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக நம்முடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் எல்லாம் வருவார்கள் என்று எதிர்பார்த்ததில்லை.

கட்சியை வளர்க்க வேண்டும் என்பதுதான் ஒரே குறிக்கோளாக இருந்தது. திராவிட இயக்கத்தின் 100ஆம் ஆண்டு தொடக்க விழாவினை 27-2-2012 அன்று கழகத்தின் சார்பில் எடுத்தோம். அந்த விழாவில் நானும், பொதுச்செயலாளர் பேராசிரியர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நீதியரசர் மோகன், பேராசிரியர் மா.நன்னன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டோம். அந்தத் திராவிட இயக்கம் எனும் ஆலமரத்தின் விழுதுகளான சாமிக்கண்ணுவைப் போன்ற எண்ணற்ற தொண்டர்கள் கட்டிக்காத்து வருவதுதான் நமது இயக்கம். அந்த இயக்கத்தின் வளர்ச்சியே நம்முடைய வாழ்க்கை. அந்த இயக்கத்தின் வளர்ச்சியைத் தவிர தனக்கு வேறொன்றும் தெரியாது என்று 100வது வயதிலும் முழங்கும் அருமை சாமிக்கண்ணுவை - நூறாண்டு காலத்திற்குமேல் அகவை உடைய திராவிட இயக்கத்தின் சார்பில் - ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்த - 100 வயதான - ஆதி முதல் இன்றுவரை கழகத்தின் தீவிர உறுப்பினரான சாமிக்கண்ணுவையும் அவரது துணைவியாரையும், கழகத்தின் தலைவர் என்ற முறையில் மனமார வாழ்த்துகிறேன். நமக்குத் தெரிந்தவரை, இப்போதுள்ள நிலவரப்படி, நமது கழகத்தின் மூத்த தொண்டர் காஞ்சிபுரம் சாமிக்கண்ணு என்றுதான் கருதுகிறேன். அந்த மூத்த கழகத் தொண்டருக்கு நாம் அனைவரும் சேர்ந்து வாழ்த்துக் கூறுவோம். வாழ்க சாமிக்கண்ணு; வளர்க அவரின் தொண்டு!

அன்புள்ள, மு.க. 30-9-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 49 PDF ↗