தொகுதி 49 · கடிதம் 3809
நீவிர், வீட்டுக்கு விளக்குகள்; நாட்டுக்குத் தொண்டர்கள்!
2013-09-23
உடன்பிறப்பே,
14.9.2013 அன்று சென்னையில் “அன்பகத்தில்” கழகப் பொருளாளர், தளபதி தம்பி மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக இளைஞர் அணியின் மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்று, நான்கு முக்கியத் தீர்மானங்களை நிறைவேற்றி, அவை ஏடுகளில் வெளிவந்திருப்பதை நீ படித்து அறிந்திருப்பாய்!
அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம் - “பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள், அறிவுலக மேதை அறிஞர் அண்ணா பிறந்தநாள், தமிழ் இனத்தின் நம்பிக்கை நட்சத்திரமாய்த் திகழும் திராவிட முன்னேற்றக் கழகம் உதயமான நாள் ஆகியவை இணைந்த “முப்பெரும் விழா” தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் ஆண்டுதோறும் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் தொடர்ச்சியாக தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் தமிழகமெங்கும் பட்டிதொட்டிகள் தோறும் கழகத்தின் தங்கநிகர் கொள்கைகளையும், தமிழக மக்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில்கொண்டு தலைவர் கலைஞர் அவர்களால் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களையும் மக்களிடையே விளக்கிடுவதோடு, நிர்வாகத் திறனற்ற ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்குச் சீர்குலைவு, எங்கு நோக்கினும் கொலை, கொள்ளை, வழிப்பறி, வன்முறை, கற்பழிப்பு, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, மின்வெட்டு, வேலையில்லாத் திண்டாட்டம் என அனைத்துத் தரப்பினரையும் வேதனைக்கு உள்ளாக்கி வரும் அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களைப் பட்டியலிட்டு அவற்றை எளிய முறையில் அச்சிட்டு, கிராமங்கள், குக்கிராமங்கள், நகரங்கள், வார்டுகள் என அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வீடுவீடாக விநியோகிப்பதோடு, ஆங்காங்கே திண்ணைப் பிரச்சாரம் எனப் பல்வேறு கோணங்களில் வியூகம் அமைத்துச் செயலாற்றிட இன்றே திட்டமிட்டு, பிரச்சாரப்பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்வதோடு, முதற்கட்டப் பிரச்சாரப் பணிகளை 24.9.2013 ஆம் தேதி முதல் 30.9.2013ஆம் தேதிவரை தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு, தமிழகம் முழுவதும் நடத்திட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது” என்பதாகும்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் தொடர்ச்சியாக இளைஞர் அணியின் சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ள கழகச் சொற்பொழிவாளர்களின் பெயர்ப் பட்டியலும் இளைஞர் அணியின் செயலாளர் தம்பி ஸ்டாலினால் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. மாவட்ட இளைஞர் அணியின் அமைப்பாளர்கள் அந்தப் பட்டியலிலே உள்ள பெயருக்குரியவர்களைத் தொடர்புகொண்டு எந்தெந்தத் தேதிகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, பேச்சாளர்கள் எப்போது வருகிறார்கள், எத்தனை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்கள் என்ற விவரங்களையெல்லாம் தொலைபேசி வாயிலாகப் பேசி வருவது என் கவனத்திற்கு வந்தது.
எந்தெந்த ஊர்களில், யார் யார் பேச்சாளர்கள், அவர்கள் எத்தனை மணிக்கு வருவார்கள் என்ற தகவல்களையெல்லாம் நேற்றையதினம் தம்பி ஸ்டாலின் அன்பகத்தில் அமர்ந்து மாவட்டவாரியாகப் பட்டியலாகத் தயாரித்து இன்றைய முரசொலியில் வெளியிட்டுள்ளார். அதுவே எட்டு மாவட்டங்களுக்குத்தான் முடிவடைந்துள்ளது. மற்ற மாவட்டங்களுக்குத் தொடர்ந்து வெளிவரும். இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருக்கின்ற பேச்சாளர்கள், கழகத்தின் மூத்தப் பேச்சாளர்கள் அல்ல; சில வளர்ந்த பேச்சாளர்களும், சில வளருகின்ற பேச்சாளர்களும் இந்தத் தெருமுனைப் பிரச்சாரத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். அவர்களுக்கு ஊக்கமும், ஆக்கமும் தர வேண்டியது கழகத்தவர் கடமை.
பேச்சாளர்கள் எந்தப் பொருள் பற்றி அந்தக் கூட்டங்களில் பேசுவது என்பதற்கான விவரங்களை - 90 வயதுக்கு மேலான நான் - அன்றாடம் காலை உணவை 11 மணி அளவில் அருந்துகின்ற அளவிற்கு - காலையில் அமர்ந்து எழுதுகின்ற “உடன்பிறப்பு” கடிதங்களின் மூலமாகவும், “கேள்வி-பதில்கள்” மூலமாகவும் தெரிந்து கொண்டிருக்கலாம். கழகப் பேச்சாளர்கள், ஏன் குறிப்பாக நம்முடைய துணைப் பொதுச் செயலாளர் துரை முருகன் உட்பட பலர் அன்றாடம் என் கடிதங்களிலே உள்ள கருத்துகளை, பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கேற்ப இரவில் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வதாகவும், அது கூட்டங்களில் பேசுவதற்கு மிகவும் உதவிகர மாக இருப்பதாகவும் என்னிடம் கூறியிருக்கிறார்கள்.
தற்போது அரசியலில் மிகவும் பரபரப்பான செய்தியாக வெளிவந்து கொண்டிருப்பது முதலமைச்சர் ஜெயலலிதா மீதான 66 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு பற்றியதாகும். அந்த வழக்கு 1997ஆம் ஆண்டிலிருந்து 16 ஆண்டுக் காலமாக நடைபெற்றுவருகிறது. உச்ச நீதிமன்றத்திலும், பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திலும், கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்திலும் என்று இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை நூறு முறைகளுக்கு மேல் அந்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்டவர்கள் வாய்தா வாங்கியிருக்கிறார்கள். ஆனால் தற்போது உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று அந்த வழக்கினை விசாரிக்கும் குறிப்பிட்ட நீதிபதிதான் இந்த வழக்கு முடியும்வரை நீடிக்க வேண்டும் என்றும், தங்களுக்கு எதிராக வாதாடுவதற்காகக் கர்நாடக அரசால் நியமிக்கப்பட்டுள்ள அரசு வழக்கறிஞரும், தற்போது உள்ளவர்தான் நீடிக்க வேண்டுமென்றும் முறையிடுகிறார்கள் என்றால், அதிலே உள்ள சூட்சமத்தையும், சுயநல உள்நோக்கத்தையும் கிராமங்கள்தோறும் மக்களிடையே எடுத்து விளக்கிப் புரியவைத்திட வேண்டிய முக்கியக் கடமை உனக்கு உள்ளது. அதுபற்றி நான் 14.9.2013 தேதிய “முரசொலியில் இரண்டு பக்கங்களுக்கு மேல் எழுதினேன். ஆனால் அதிலே உள்ள கருத்துகள் தமிழகத்தில் வெளிவரும் தமிழ், ஆங்கில ஏடுகள் அனைத்திலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டுவிட்டன. அப்படியே வெளியிட்டாலும் ஒரு பத்தி, இரண்டு பத்திக்கு மேல் போவதில்லை. அரசுக்கு எதிரான செய்திகளையோ, ஜெயலலிதாவுக்கு எதிரான விமர்சனங்களையோ வெளியிட்டால் அந்தப் பத்திரிகைகளுக்கு முழுப் பக்க விளம்பரங்கள், அரைப் பக்க விளம்பரங்கள் கிடைக்காது. தற்போதெல்லாம் பத்திரிகைகளுக்கு, அவைகள் விற்கப்பட்டு வருகின்ற வருவாயைவிட, அரசு விளம்பரங்கள் மூலமாகத்தான் அதிக வருவாய் வருகின்றதாம். எனவே “பத்திரிகாதர்மம்” என்பதையெல்லாம் சற்று ஒதுக்கி ஓரங்கட்டி வைத்துவிட்டு, ஜனநாயக ரீதியாக ஆற்றிட வேண்டிய கடமையை மறந்து, “வருமானம்” ஈட்டுவதிலே கவனம் செலுத்தி வருகிறார்கள். கழகத்தைப் பொறுத்தவரை நாம் இந்த ஏடுகளை நம்பி இயக்கம் நடத்துபவர்கள் அல்ல. பேரறிஞர் அண்ணா அவர்கள் காலத்திலேயே “இந்து” நாளிதழ் “அண்ணா அவர்களும் அந்தக் கூட்டத்திலே பேசினார்” என்று வெளியிட்டது உண்டு. அதையெல்லாம் மீறித்தான் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. கழகப் பேச்சாளர்கள், ஏடுகள் ஆற்ற வேண்டிய பணியைத் தாமே எடுத்துக்கொண்டு, நாட்டு நடப்புகளை மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.
என்னுடைய கருத்துகளைத் தமிழக ஏடுகள் புறக்கணித்த காரணத்தால், அந்தச் செய்தி தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாமலே போய்விட்டதா? ஏடுகளிலே அந்தச் செய்தி வெளிவரவில்லை என்றதும், “முரசொலி” யில் சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி நான் எழுதிய கடிதத்தைக் கழக உடன்பிறப்புகள் ஆங்காங்கு துண்டு நோட்டீஸ்களாக அச்சடித்து விநியோகிக்க வேண்டுமென்று நான்கு வரிகள் வந்ததுதான் தாமதம், மறுநாள் முதல் மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக முன்னணியினர் தங்கள் முயற்சியின் காரணமாகத் தங்கள் மாவட்டத்தில் எத்தனை ஆயிரம் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து மக்களிடம் விநியோகித்தோம் என்று ஆர்வத்தோடு பட்டியல் அனுப்பத் தொடங்கினார்கள். இளைஞர் அணியினரோ ஒரு படி மேலே போய், துண்டு நோட்டீஸ்களைக் கையிலே ஏந்தி ஆங்காங்குப் பேருந்துகளிலே ஏறிக்கொண்டு அதிலே பயணம் செய்தவர்களுக்கெல்லாம் விநியோகித்த காட்சியை நீங்களே ஏடுகள் வாயிலாகக் கண்டிருப்பீர்கள். எனவே திருமண வீட்டில் சீப்பை எடுத்து ஒளித்துவைத்துக் கொள்வதைப்போல என்னுடைய கடிதத்தை ஆட்சியாளர்களுக்குப் பயந்துகொண்டு இருட்டடிப்புச் செய்தவர்கள் எல்லாம் ஏமாந்துதான் போனார்கள்! தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபடவிருக்கும் பேச்சாளர்கள், அந்தத் துண்டுநோட்டீசில் இடம்பெற்றுள்ள கருத்துக்களைப் பொதுமக்களிடம் விளக்கிக் கூறிட வேண்டும்.
அடுத்து, தற்போது தமிழகத்திலே அன்றாடம் கேள்விக் குறியாக உள்ள பிரச்சினையான சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதைப் பற்றி மக்களுக்கு விளக்கிட வேண்டும். “கொலைப் பயத்தின் கோரப்பிடியில் தமிழகம்” என்ற தலைப்பில், தற்போது தமிழகத்தில் உள்ள சட்டம், ஒழுங்குப் பிரச்சினை பற்றி பல்வேறு நாளேடுகளிலும், வார இதழ்களிலும் வெளிவந்த கருத்துகளையெல்லாம் தேடிப் பிடித்து தொகுத்துத் தந்துள்ளேன். அந்தக் கருத்துகளையெல்லாம் பொதுமக்கள் நன்றாகப் புரிந்து கொள்ளும் விதமாக, என்னென்ன ஏடுகள் இந்த ஆட்சியைப் பற்றி எவ்வாறு விமர்சனம் செய்துள்ளன என்பதையெல்லாம் நீங்கள் படித்துக் காட்டிட வேண்டும். காவல்துறையினருக்காகக் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறக்கப்படாமல் அந்தக் காவல் நிலையங்கள் எவ்வாறு பாழடைந்த கட்டிடங்களிலே இயங்கி வந்தன என்பதையெல்லாம் ஆதாரத்தோடு குறிப்பிட்டு 6-9-2013 அன்று நான் உடன்பிறப்பு மடல் எழுதியிருந்தேன். அதற்குப் பிறகுதான் அவசர அவசரமாக முதலமைச்சரிடம் அதிகாரிகள், “கருணாநிதி முரசொலியில் இவ்வாறு உண்மைகளையெல்லாம் பட்டவர்த்தனமாக எழுதிவிட்டார், இனியாவது ஐந்து நிமிடம் நேரம் கொடுங்கள்” என்று கெஞ்சி முதல்வரிடம் நேரம் பெற்று, கட்டி முடிக்கப்பட்டு நீண்ட காலமாகத் திறக்கப்படாமல் உள்ள காவல் நிலையங்களையெல்லாம் முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்துவைத்து, அந்தச் செய்தியைத் தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக வெளியிட்டன. எந்தப் பத்திரிகையும், முதலமைச்சரால் திறக்கப்பட்ட காவல் நிலையக் கட்டிடம் பற்றிக் கருணாநிதி குற்றம் சாற்றியிருந்தார், அதற்குப் பிறகுதான் முதலமைச்சர் நேரம் ஒதுக்கி அதைத் திறந்து வைத்தார் என்று குறிப்பிடவே இல்லை. இந்தச் செய்திகளையெல்லாம் நீங்கள் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் என்று கூறப்பட்டு, பல கோடி ரூபாய்ச் செலவில் திருமணம் செய்து வைக்கப்பட்ட சுதாகரன், பிறகு அ.தி.மு.க. ஆட்சியில் கைது செய்யப்பட்டது பற்றியும், 2001ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளாக அவர் மீது வழக்கு நடைபெற்று, தற்போது அளிக்கப்பட்ட தீர்ப்பு பற்றியும், தீர்ப்பை வழங்கிய நீதிபதி என்ன சொன்னார் என்பது பற்றியும் 20ஆம் தேதிய கேள்வி பதில் பகுதியில் விரிவாகத் தெரிவித்துள்ளேன்.
எவ்வாறு இந்த ஆட்சியில் பிடிக்காதவர்களை அலைக்கழிக்க வேண்டும் என்பதற்காகவும், காழ்ப்புணர்ச்சியோடும் வழக்குப் போடப்படுகிறது என்பதற்கு நல்லதொரு விளக்கமாக அது அமையும்.
கச்சத் தீவு பிரச்சினை பற்றியும், விவசாயிகள் பிரச்சினை பற்றியும் 12.9.2013 அன்று கேள்வி-பதில்கள் பகுதியிலே எழுதியிருக்கிறேன். அதே நாளில் தஞ்சை நகராட்சி சார்பாக ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட ஒரு பணிக்கு “டெண்டர்” விடப்பட்ட வினோதம் பற்றியும், தேனியில் பேருந்து நிலையம் ஒன்று கட்டிமுடிக்கப்பட்டு அ.தி.மு.க.வினர் அதன் திறப்பு விழாவிற்கு முட்டுக்கட்டை போட்டுவருவது பற்றியும் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன்.
தி.மு. கழக ஆட்சியில் மகளிர்க்காக எத்தகைய மகத்தான திட்டங்கள் எல்லாம் தீட்டப்பட்டன என்ற விவரத்தைச் சற்று விரிவாகவே 8.9.2013 தேதிய முரசொலியில் தெரிவித்திருக்கிறேன். அ.தி.மு.க. அமைச்சர்கள் சிலர் கழக ஆட்சியில் மகளிர்க்காக எதுவும் செய்யவில்லை என்பதைப்போல “ப்ளக்ஸ் போர்டு” வைத்ததோடு சரி! ஆனால் எப்படிப்பட்ட திட்டங்கள் எல்லாம் மகளிர்க்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன என்பதையெல்லாம் தெரிவித்திருக்கிறேன். அவற்றைப் பற்றியும் தெருமுனைப் பிரச்சாரங்களில் கோடிட்டுக் காட்டவேண்டும். அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக மாற்றுத் திறனாளிகள் இந்த ஆட்சியில் எந்த அளவிற்குப் போராடுகிறார்கள் என்பதையும், அவர்களைக் கைது செய்யும் காவல் துறையினர் எவ்வாறு அந்த மாற்றுத் திறனாளிகளைக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்பதையும் விளக்கிக் கூறத் தவறக் கூடாது.
அ.தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு நிலைமை எவ்வாறு உள்ளது என்பதைப் பற்றியும், ஆட்சிப் பொறுப்பேற்றபோது மூன்றே மாதங்களில் மின்வெட்டினைச் சரி செய்வோம் என்று சவால் விட்டவர்கள், மூன்றாண்டுகள் முடிகின்ற நிலையிலும் மின் வெட்டுப் பிரச்சினையைத் தீர்க்காமல் இருப்பதைப் பற்றியும் நினைவுபடுத்திட வேண்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கழக ஆட்சியில் எவ்வாறு விரைவுபடுத்தப்பட்டு வந்தது, தற்போது திட்டம் முழுமை அடையாத நிலையில் எந்த அளவிற்கு விளம்பரம் செய்யப்பட்டு அவசர அவசரமாகத் திறந்து வைக்கப் பட்டது என்பதையெல்லாம் 6.9.2013 அன்று முரசொலியில் எழுதியிருக்கிறேன்.
அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அதற்கு முன்பு மக்கள் நலனுக்காகவும், மாநிலத்தின் மேம்பாட்டுக்காகவும் தி.மு. கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் திட்டங்களையெல்லாம் முடக்கிப் போடுவதற்காக என்னென்ன முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது என்பதையும் தெருமுனைப் பிரச்சாரங்களில் சுட்டிக்காட்டத் தவறக் கூடாது. குறிப்பாக தலைமைச் செயலகத்திற்காக தி.மு.கழக ஆட்சியில் 600 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து கட்டப்பட்ட கட்டிடம் மூன்றாண்டு காலமாக மூடப்பட்டுக் கிடப்பதையும், மதுரவாயல் - துறைமுகம் உயர் மட்டப் பறக்கும் சாலைத் திட்டத்தின் கதி என்ன என்பதையும், சேது திட்டம் கூடாது என்று நீதிமன்றம் வரை இந்த அரசு சென்றிருப்பதைப் பற்றியும் இந்தப் பிரச்சாரங்களில் தவறாமல் விளக்கிட வேண்டும்.
இப்படி எழுதிக்கொண்டே போகலாம்! ஆட்சியின் அவலங்களையெல்லாம் மறைப்பதற்காகவும், நாளேடுகள் அவற்றை வெளியிட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் ஒருவார காலத்தில் ஏடுகளுக்காக அ.தி.மு.க. ஆட்சியில் தரப்பட்ட முழுப் பக்க விளம்பரங்கள் எத்தனை என்பதையும், ஒவ்வொரு நாளிதழுக்கும் அந்த ஒருவார கால விளம்பரத்திற்காக அரசு அளித்த விளம்பரக் கட்டணம் எவ்வளவு என்பதையும் மிகவும் தெளிவாக எழுதி, அந்தப் புள்ளி விவரங்கள் தவறு என்றால், ஆட்சியினர் மறுப்பு வெளியிடட்டும், அதை ஏற்றுக் கொள்கிறேன் என்று செப்டம்பர் 1ஆம் தேதியே எழுதியிருந்தேன். இதுநாள் வரை அதற்கு எந்தப் பதிலும் ஆட்சியினர் தரவில்லை. மாறாக எதிர்க்கட்சியினர் மீது “அவதூறு வழக்கு”களைத் தொடுத்தே காலத்தைக் கழித்துவிட எண்ணுகிறார்கள். இதையெல்லாம் இந்த ஒரு வார காலம் தெருமுனைப் பிரச்சாரங்களில் ஈடுபடுவோர் எடுத்து விளக்கிடத் தவறக் கூடாது.
வெறும் வாய் ஜாலத்தாலும், வெற்று அறிக்கைகளாலும், பக்கம் பக்கமாக வெளியிடும் விளம்பரங்களாலும் மக்களை மயங்க வைத்து, ஏதோ தமிழக முன்னேற்றத்திற்கு அடுக்கடுக்கான காரியங்கள் நடைபெற்று வருவதைப் போல நம்பவைத்துக் குளிர்காயலாம் என்று அ.தி.மு.க. ஆட்சியினர் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சான்றுகளுடன் ஊர்கள் தோறும், தெருக்கள்தோறும், வீடுகள்தோறும் எடுத்து விளக்கிட வேண்டிய பொறுப்பை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும். என் தம்பி, தங்கைகளாம் நீவிர் நிறைவேற்றிடுவீர்கள் எனும் நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு. நீவிர், வீட்டுக்கு விளக்குகள் அல்லவா; நாட்டுக்குத் தொண்டர்கள் அல்லவா?
அன்புள்ள, மு.க. 23-9-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 49 PDF ↗