உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 49

தொகுதி 49 · கடிதம் 3807

அறப்போர் வாளேந்தி, அய்யா; அண்ணா வழியில் பயணம் தொடருவோம்!

2013-09-17

உடன்பிறப்பே,

இன்று (17-9-2013) முப்பெரும் விழா! பெரியார் அவர்களின் 135வது பிறந்த நாள் - அண்ணா அவர்களின் 105வது பிறந்த நாள் - தி.மு.கழகத்தின் 65வது பிறந்த நாள் - இந்த மூன்று நாள்களையும் இணைத்து நமக்கு எழுச்சியூட்டும் ஏற்றமிகு விழா இந்த முப்பெரும் விழா!

தந்தை பெரியாரோடு ஏற்பட்ட தொடர்பு பற்றி அறிஞர் அண்ணா அவர்கள், “எனக்கு பெரியாரோடு தொடர்பு ஏற்பட்டது 1935ஆம் ஆண்டில். திருப்பூரில் நடந்த வாலிபர் மாநாட்டில் தான் முதலில் சந்தித்தது. அன்று முதல் அவர் எனது தலைவர் ஆனார். நான் அவருக்கு சுவீகாரப் புத்திரன் ஆகிவிட்டேன் பொது வாழ்வில்!” என்று தந்தைக்கும், தனயனுக்கும் உறவு முளைத்ததை உற்சாகம் பொங்கக் கூறியிருக்கிறார். அதுமட்டுமோ! மேலும் “இத்தனை ஆண்டுகளிலும் நான் அறிந்த தலைவர் - தெரிந்த தலைவர் - பார்த்த தலைவர் பெரியார் ஒருவர்தான். வேறு தலைவரின் தலைமையில் நான் வேலை செய்தது கிடையாது. செய்யவும் மனம் வந்ததும் இல்லை. வராது. பெரியார் நமது இதய பூர்வமான தலைவர். இதயத்தில் குடியேறிய தலைவர்” என்றும் பெரியாரைப் பற்றி அண்ணா பெருமிதத்தோடு சொல்லியிருக்கிறார். அந்தப் பெரியாரைப் பற்றி நான்,

“இனத்தினிலே கோளாறு புகுத்தி வைத்தோர்

இடிமுழக்கம் கேட்பதுபோல் - திணறிப் போனார்

பின்னி வைத்த மதங்கடவுள், மடத்தன்மை யெல்லாம்

மின்னலது வேகத்தில் ஓடியதுகாண்!

பாராட்டிப் போற்றி வந்த பழமைலோகம்

ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்.

ஈவெரா என்ற வார்த்தை இந்நாட்டு ஆரியத்தின் அடிப்பீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம்! அவர் வெண்தாடி அசைந்தால் போதும் கண் ஜாடை தெரிந்தால் போதும்; கறுப்புடை தரித்தோர் உண்டு நறுக்கியே திரும்பும் வாள்கள்!!”

என்று 1945ஆம் ஆண்டு என்னுடைய 21வது வயதில் கவிதை

எழுதினேன். தந்தை பெரியார், தன்னுடைய பொது வாழ்வின்

இலட்சியத்தைப் பற்றி “குடியரசு” ஏட்டின் முதல் இதழிலேயே

“மக்களுக்குச் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும்

ஓங்கி வளர வேண்டும். உயர்வு - தாழ்வு என்னும் உணர்ச்சியே

நமது நாட்டில் வளர்ந்து வரும் சாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாய் இருப்பதால் இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிரும் ஒன்றென்று எண்ணும் அறிவு வளர வேண்டும்” என்று தெளிவுபடுத்தினார். அந்த இலட்சியப் பாதையில் இறுதி மூச்சு இருந்தவரையில் கொஞ்சமும் விலகாமல் பயணித்தார். அந்தப் பெரியாரின் 135வது பிறந்த நாள்!

அந்தப் பெரியாரின் தளகர்த்தராம் நம்முடைய அண்ணா அவர்களின் 105வது பிறந்த நாள்! என்றென்றும் அந்தத் தமிழ்த் தாயின் தலைமகனின் நினைவு நம் நெஞ்சை விட்டு நொடிப்போதும் நீங்கியதே இல்லை. அவருடைய திருவுருவத்தை நம் நெஞ்சிலே செதுக்கி அவருடைய வழியில் அயராது பணியாற்றி வருகிறோம். அந்த அண்ணனைப் பற்றி,

“பூவிதழின் மென்மையிலும் மென்மையான

புனித உள்ளம் - அன்பு உள்ளம் -

அரவணைக்கும் அன்னை உள்ளம்! அவர்

மலர் இதழ்கள் தமிழ் பேசும் -

மா, பலா, வாழையெனும் முக்கனியும் தோற்றுவிடும்-

விழிமலர்கள் வேலாகும், வாளாகும்

தீங்கொன்று தமிழ்த் தாய்க்கு வருகுதென்றால்!

கால் மலர்கள் வாடிடினும் அவர் கடும் பயணம் நிற்காது; கை மலர்கள் பிணைத்து நிற்கும், தம்பியரை, கழகத்தை ! அம்மலரே எதிரிகளை மன்னித்து நெற்கதிர் போல் தலை நாணச் செய்து விடும்!” என்று 1969ஆம் ஆண்டு நான் எழுதிய கவிதை வரிகள் இன்றும் எனக்கு உணர்ச்சியூட்டிக் கொண்டிருக்கிறது. அந்த அண்ணன் தலைமையில், கொட்டும் மழையில் சென்னை ராபின்சன் பூங்காவில் 17-9-1949 அன்று உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் 65வது பிறந்த நாள் இன்று!

இந்த மாபெரும் இயக்கத்தைத் தொடங்கிய போது அறிஞர் அண்ணா அவர்கள், “நான் மிக மிகத் தெளிவாகவே கூறி விடுகிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் எந்த விதத்திலும் திராவிடர் கழகத்திற்கு எதிரானதல்ல; எதிர்நோக்கம் கொண்டதுமல்ல; கொள்கை ஒன்றே. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே சமதர்மக் குறிக்கோள், அரசியல் துறையிலே வடநாட்டு ஏகாதிபத்தியத்தினின்றும் விடுதலை - ஆகிய கொள்கைகள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடுகள்” என்று பிரகடனப்படுத்தினார். மேலும்,

“திராவிட முன்னேற்றக் கழகம் ஓர் ஒட்டு மாஞ்செடிதான். மண்

வளம் ஏராளம். அதே பூமி. நீர் பாய்ச்ச, பதப்படுத்த, பாத்தி கட்ட

முன் நிற்போர் பலர். ஒட்டு மாஞ்செடி பூத்துக் காய்த்துக் கனி குலுங்கும் நாள் வந்தே தீரும்” என்றும் உறுதிபடக் கூறியவர்

அண்ணா. அண்ணா தோற்றுவித்தது தி.மு. கழகம் எனினும்; பெரியாரைத்

தலைவராகக் கொண்ட திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்டதும்

1944இல் சேலம் மாநாட்டில் “அண்ணா தீர்மானம்” காரணமாகத்தான். அந்த அடிப்படையிலேதான் பெரியார் பிறந்த நாள், அண்ணா பிறந்த நாள், திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்த நாள் என்ற மூன்றையும் இணைத்து ஆண்டுதோறும் “முப்பெரும் விழா”வாக நடத்தி வருகிறோம்.

தந்தை பெரியார் சமுதாயச் சீர்திருத்தச் சிற்பி என்றால், அறிஞர் அண்ணா அரசியல் மறுமலர்ச்சி ஆசான். பெரியாரும், அண்ணாவும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவர்கள். காரல்மார்க்சும் ஏங்கல்சும் எப்படி பொதுவுடைமை இயக்கத்தின் பிதாமகன்களோ; அதைப்போலவே பெரியாரும், அண்ணாவும் திராவிட இயக்கத்தின் பிதாமகன்கள் ஆவார்கள். அண்ணா அவர்கள் நமக்கு அளித்த சொற்றொடர்களாம்

● கோடு உயர்ந்தது; குன்றம் தாழ்ந்தது!

● இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்!

● தம்பி உடையான் படைக்கு அஞ்சான்!

● மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு!

● கையில் காசில்லாதவர்கள் - மனதில் மாசில்லாதவர்கள்!

● சாலையோரத்திலே சில வேலையற்றதுகள்; வேலையற்றதுகள் உள்ளத்திலே விபரீத எண்ணங்கள்!

● இயற்கை கொஞ்சுகிறது, இல்லாமை கொட்டுகிறது!

● தன்னை வெல்வான், தரணியை வெல்வான்!

போன்றவை நம் எண்ணத்தை என்றென்றும் புதுப்பித்துக் கொண்டே இருக்கும்.

அந்த அண்ணன் உருவாக்கிய கொள்கைப் பாசறையாம் தி.மு. கழகம் ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் அமர்ந்து, தனது இலட்சியங்களில் அண்ணா வழியில் பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. தற்போது மீண்டும் எதிர்க்கட்சி வரிசையிலே தி.மு. கழகம் அமர்ந்திருக்கிறது என்றாலும், ஜனநாயகக் கடமையைப் பொறுப்புடன் நிறைவேற்றி, தமிழ் மக்களின் பாதுகாவலனாக விளங்கும் என்பதில் யாருக்குமே அய்யப்பாடு இருக்க முடியாது.

இந்த ஆண்டு முப்பெரும் விழாவினை வேலூர் நகரிலே நடத்திட என்னிடம் ஒப்புதல் பெறப்பட்டு, பணிகள் விரைந்து நடைபெற்றுக் கொண்டிருக்கையில், பந்தல் அமைக்கின்ற வேலையும் தொடங்கப்பட்டு விட்ட நிலையில், வானிலை செய்தியில் இந்த வாரம் 15ஆம் தேதி வரை தொடர் மழை இருக்கக்கூடும் என்று தெரிவித்த காரணத்தால், திடலில் பந்தலிட்டு இந்த நிகழ்ச்சியை நடத்துவதைக் காட்டிலும், சென்னையில் அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் அரங்கில் நடத்துவது பொருத்தமாக இருக்குமென்று முடிவு செய்து, வேலூர் மாவட்டக் கழக நண்பர்களையெல்லாம் அதற்கு ஒப்புக்கொள்ள வைத்து, இன்று (17-9-2013) முப்பெரும் விழா கழகத்தின் சார்பில் நடைபெறுகின்றது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் மாணவர்கள்பால் கொண்டிருந்த நேசத்தை வெளிப்படுத்திடும் வகையில் எப்போதும் போல முப்பெரும் விழா நிகழ்ச்சியுடன் இணைத்து, தி.மு. கழக அறக்கட்டளையின் சார்பில் மாணவர்களுக்கு நிதியளிப்பு விழாவும் நடைபெறுகிறது. மேல்நிலைப் பள்ளித் தேர்வில் உயர் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தி.மு. கழக அறக்கட்டளை சார்பில் நிதியளிப்பும் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி மற்றும் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு “முரசொலி அறக்கட்டளை” சார்பில் நிதியளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்ணா அவர்கள் தொழிலாளர்களிடம் கொண்டிருந்த தோழமையை வெளிப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் வழங்குவதைப் போலவே இந்த ஆண்டும் சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கான நற்சான்று, பண முடிப்பு, பதக்கம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

இவற்றைத் தொடர்ந்து கழகத்தின் சார்பில் முப்பெரும் விழா விருதுகள் வழங்கும் விழா நம்முடைய பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகப்பெரிய அறுவை சிகிச்சைக்கு ஆளாகி நலம் பெற்று வரும் பேராசிரியர் அவர்கள்; “பெயரை அழைப்பிதழிலே போட வேண்டாம், உடல் நலம் அனுமதித்தால் நானே வந்து விடுகிறேன்” என்று தெரிவித்திருந்தபோதிலும், நான்தான் “அழைப்பிதழிலே பேராசிரியர் தலைமையில் என்றே அச்சிட்டு விடுங்கள், உடல் நலம் இடம் கொடுத்தால் விழாவிலே கலந்து கொள்ளட்டும், இல்லாவிட்டால் பரவாயில்லை” என்று கூறி அவ்வாறே அழைப்பிதழை அச்சடிக்கச் செய்தேன்.

முப்பெரும் விழா நாளன்று ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதைப்போல இந்த ஆண்டு, தந்தை பெரியார் விருதினை மராட்டிய மாநிலத்தில் கழகத்தின் வேர் பரப்பிய மும்பை த.மு. ஆரிய சங்காரன் அவர்களுக்கும், அண்ணா விருதினை மொழிப் போர் தளகர்த்தர் எல். கணேசன் அவர்களுக்கும், பாவேந்தர் விருதினை எழுத்து வேந்தர் க. திருநாவுக்கரசு அவர்களுக்கும், என் பெயரால் உள்ள கலைஞர் விருதினை “ஆயிரம் விளக்கின் அற்புத விளக்கு” என்று என்னால் பாராட்டப்பட்ட எஸ்.ஏ.எம். உசேன் அவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

கழகப் பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு நா. வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், வி.பி. துரைசாமி, திருமதி சற்குணப்பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவுள்ளார்கள். தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் ஜெ.அன்பழகன், எம்.எல்.ஏ., வரவேற்புரை ஆற்றிட, வடசென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் நன்றியுரையாற்ற உள்ளார். முப்பெரும் விழாவினை சென்னையில் நடத்துவதையொட்டி, விழா ஏற்பாடுகளை கழகப் பொருளாளர் தளபதி தலைமையில் தென் சென்னை, வட சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழக முன்னணியினரும் இணைந்து செய்து வருகிறார்கள்.

இந்த முப்பெரும் விழா பற்றிய செய்திகள் ஏற்கனவே ஏடுகளில் வெளிவந்துள்ளன. சுவரொட்டி வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணனுக்காக எடுக்கப்படும் இந்த விழாவில் கலந்துகொள்ள, அதுவும் குடும்பத்துடன் கலந்து கொள்ள, பயணம் புறப்பட்டிருப்பாய் என்பதை நான் நன்றாகவே அறிவேன். இருந்தாலும் அண்ணாவிற்காக நடத்தப்படும் விழாவிற்கு ஆண்டுதோறும் அழைப்பு விடும் இந்த அண்ணன் இந்த ஆண்டு அழைக்கவில்லையே என்ற நினைப்பு உன் நெஞ்சத்தில் நிழலாடும் அல்லவா? அதற்காகவே அவசர அவசரமாக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

ஒருசிலர் என் அழைப்பு வந்தால் புறப்படலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கக் கூடும். அவர்களும் இந்த மடல் கண்டதும் உடனடியாக குடும்பத்துடன் புறப்பட்டு வருவர் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பேன்.

பெரியார் காட்டிய பாதையில் - அண்ணா பண்படுத்திய வழியில் - திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அறப்போர் வாளும் கேடயமும் ஏந்தி நம் பயணத்தைத் தொடருவோம்!

அன்புள்ள, மு.க. 17-09-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 49 PDF ↗