தொகுதி 49 · கடிதம் 3805
பொது வாக்கெடுப்பே ஈழத்தமிழர்க்குப் புது வாழ்வு தரும்!
2013-09-13
உடன்பிறப்பே,
“போருக்குப் பின்னர் உருவாகி வரும் நிலைமையை நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்” என்று இலங்கை அரசு தெரிவித்திருந்ததையொட்டியும், இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு நடத்திடவும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் திருமதி நவநீதம் பிள்ளை ஆகஸ்டு 25 அன்று இலங்கை சென்று, ஒருவார காலமாகப் பல பகுதிகளை ஆய்வு செய்து, போரினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களுடைய மனக்குறைகளையும், குமுறல்களையும் அனுதாபத்தோடு கேட்டறிந்து, இலங்கை அதிபர் ராஜபக்சேவையும், அரசியல் கட்சியினரையும், மனித உரிமை ஆர்வலர்களையும் பத்திரிகையாளர்களையும் சந்தித்துப் பேசிவிட்டு ஜெனீவா திரும்பியிருக்கிறார். போருக்குப் பின்னர் இலங்கைக்கு நேரில் சென்ற ஐ.நா. மன்றத்தின் முதல் முதுநிலை அலுவலர் நவநீதம் பிள்ளைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
போர்க் குற்றங்கள் புரிந்தவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும் என்றும்; நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தி நிறைவேற்றிட வேண்டுமென்றும்; சர்வதேச சமுதாயம் இலங்கையை வற்புறுத்திக் கொண்டே இருக்கிறது. இத்தகைய பின்னணியில் நவநீதம் பிள்ளையின் இலங்கைப் பயணமும், அவர் இப்போது 9-9-2013 அன்று தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 24வது கூட்டத்தில் வழங்கிட உள்ள விளக்க உரையும், 2014 மார்ச் மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் தரவிருக்கும் அறிக்கையும், உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
நவநீதம் பிள்ளை இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கும் அங்கிருந்து முல்லைத் தீவு மாவட்டம் புதுமாத்தளை, முள்ளிவாய்க்கால், கோப்பாப்பிலா மாதிரிகிராமம், திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளுக்கெல்லாம் சென்று போரினால் சீர்குலைந்த அந்தப் பகுதிகளில் என்னென்ன மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதை ஆய்வு செய்ததோடு; தமிழ் மக்களைச் சந்தித்து அளவளாவி விவரங்களை அறிந்துகொண்டார்.
முள்ளிவாய்க்கால் சென்றபோது அங்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தமிழ்ப் பெண்கள் நவநீதம் பிள்ளையிடம், தங்களுக்கு இன்னும் வீட்டு வசதிகள், வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என்றும்; தங்களுடைய விவசாய நிலங்கள் சிங்கள ராணுவத்தால் கைப்பற்றப்பட்டு விட்டதாகவும், அவற்றைப் பெற்றுத் தருமாறும் கேட்டுக் கொண்டனர். போரினால் தங்கள் குடும்பங்களில் பலரையும் பறிகொடுத்த பெண்கள் நவநீதம் பிள்ளையின் கால்களில் விழுந்து கதறித் துடித்தது கண்டு அவர் கண்ணீர் சிந்தினார்.
31-8-2013 என்ற நாள் 'பலவந்தம் காரணமாகக் காணாமல்போனோருக்கான சர்வதேச தினம்” (International Day of Forced Disappearances) ஆகும். அன்றைய தினம் நவநீதம் பிள்ளை கொழும்பு நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது;
“இலங்கையில் உள்ள நிலைமை எனக்கு மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆன பின்னரும், இப்போதும் மக்கள் மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர். பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். மேலும், இலங்கை அரசின் விசாரணைக் குழு காணாமல் போனவர்கள் பற்றி அளித்துள்ள அறிக்கை ஏமாற்றம் தருகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும். பாதுகாப்பு அமைப்புகளால் மனித உரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவது அதிகமாகி இருக்கிறது. இலங்கை சர்வாதிகாரப் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் மிகுந்து காணப்படுவது கவலையை ஏற்படுத்துகிறது. என்னுடைய பயணத்தின்போது என்னுடன் கலந்துரையாடிய மனித உரிமை ஆர்வலர்கள், இலங்கைப் போலீசார் மற்றும் ராணுவத்தினரால் துன்புறுத்தலை எதிர்கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. இலங்கை மோசமான நிலையில் இருப்பதாகவே தோன்றுகிறது. இலங்கையில் மக்கள் கண்காணிக்கப்படுவதும், துன்புறுத்தப்படு வதும் அதிகரித்து வருகிறது. அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை உருவாக்குவதுடன், அவர்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான வழிவகைகளும் செய்யவேண்டும்” என்று நவநீதம் பிள்ளை விளக்கியிருப்பது, இலங்கை நிலை குறித்துச் சர்வதேச சமுதாயத்தின் கவலையை மேலும் பெருக்கியிருக்கிறது.
“I have received reports that people I met during my visit were later questioned. I strongly object to this surveillance and harassment. Srilanka is showing signs of heading in an increasingly authoritarian direction. The war may have ended, but in the meantime democracy has been undermined and the rule of law eroded. Freedom of expression is under a sustained assault. I have called for the right to information act to be adopted, like many of its neighbours in SAARC.” என்று நவநீதம் பிள்ளை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்.
“முல்லைத் தீவில் உள்ள கிராமங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு நான் செல்வதற்கு முன்பும் பின்பும் ராணுவம் மற்றும் போலீசார் சென்றதாக எனக்குத் தகவல் வந்தது” என்றும் நவநீதம் பிள்ளை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“நவநீதம் பிள்ளையின் அறிக்கை எங்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என்று நம்புகிறோம். ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் அடுத்த அறிக்கை, இதற்கு முந்தைய அறிக்கைகளைப் போல மென்மையாக இருக்காது என்றும் நிச்சயமாக நம்புகிறோம்” என்று இலங்கைக் கவிஞர் தீபச்செல்வன் இந்தியா டுடே'யிடம் கூறியிருக்கிறார்.
“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை அரசு நீக்கிட வேண்டும்; போரில் காணாமல் போனவர்கள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று நவநீதம் பிள்ளை சொல்லியிருப்பது இலங்கை அரசுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது” என்று இலங்கைத் தமிழ் எம்.பி., யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கலங்கிக் கண்ணீர் வடித்தபோது, “நான் தூர தேசத்திலிருந்து உங்களுடைய பிரச்சினைகளை ஆராய்வதற்காகவே வந்துள்ளேன். காணாமல் போனவர்கள் பற்றிய பிரச்சினைகளை நான் முன்னரே அறிவேன். அதைப்போல இங்குள்ள மற்ற பிரச்சினைகளையும் ஆராய்ந்து தீர்வைத் தேடித் தரவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. உங்களுடைய பிரச்சினைகளுக்காக, எனக்குள்ள முழு அதிகாரத்தையும் பயன்படுத்தித் தீர்வைத் தேடித்தருவேன்” என்று நவநீதம் பிள்ளை உறுதி அளித்துள்ளார்.
எனினும்,
1) தமிழ் மக்களுக்கு நிம்மதியான மறுவாழ்வை உருவாக்கித் தரவேண்டும் என்ற கடமையை இலங்கை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.
2) பதிமூன்றாவது சட்டத் திருத்தத்தின்படி நடந்துகொள்ள மறுத்து வருகிறது.
3) தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவத்தை முற்றிலுமாக விலக்கிக் கொள்ளவில்லை.
4) தமிழர் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றத்தை ஊக்குவித்து வருகிறது.
5) ராணுவத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தமிழர்களின் வீடுகள் மற்றும் நிலங்கள் குறித்த பிரச்சினையில் மாற்றம் இல்லை.
6) தமிழ் மொழிக்கான சமஉரிமை அரசியல் சட்டரீதியாக அங்கீகாரம் செய்யப்படவில்லை.
7) காணாமல் போனவர்கள் பற்றிய முழுமையான பட்டியலைத் தயாரித்து நேர்மையான விவரங்களைத் தமிழ் மக்களிடம் எடுத்துச்சொல்ல எந்த முயற்சியும் இல்லை.
8) யாழ்ப்பாணத்தில் எல்லா இடங்களிலும் சிங்கள ராணுவக் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருவதால் இன்னும் ஐந்தாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் தமிழ்மக்கள் வாழ்வதற்குக்கூட இடமில்லாமல் போகலாம்.
9) மதவழிச் சிறுபான்மையோரின் வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வருகின்றன.
10) தமிழ் அரசியல் கைதிகளின் நிலை என்ன என்பது பற்றி எதுவும் அறிவிக்கப்பட வில்லை.
11) வடக்கு மாகாணத்தில் செப்டம்பர் 21 அன்று நடைபெற உள்ள தேர்தலுக்கு முன்பு, அடிப்படை ஜனநாயக வழிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.
12) தமிழர்கள் பிரச்சினையில் நிரந்தரமாகத் தீர்வு காண எந்த முயற்சியும் மேற்கொள்ளப் படவில்லை;
- என்பன போன்ற எண்ணற்ற பிரச்சினைகள் முடிவின்றித்
தீவிரமடைந்து வருகின்றன.
ஐக்கிய நாடுகள் அவையின் வல்லுனர் குழு இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை மற்றும் மனித உரிமைமீறல்கள் குறித்து ஆய்வு செய்து 2011 ஏப்ரல் மாதத்தில் அளித்த அறிக்கையின்படியோ; ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படியோ; அதற்குப் பிறகு 2013ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படியோ, இலங்கை அரசு நடந்து கொள்ளவும் இல்லை; தீர்மானங்களில் குறிப்பிட்ட எதையும் நிறைவேற்றுவது பற்றிச் சிந்தித்துப் பார்க்கவும் இல்லை.
மனித உரிமைகளுக்கான பல்வேறு அமைப்புகள் உண்மை கண்டறியும் குழுக்களை அமைத்து, தீர விசாரித்து வெளியிட்ட அறிக்கைகள் எதையும் இலங்கை அரசு சிறிதும் காதில் போட்டுக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தி விட்டது.
இலங்கை அரசே அமைத்த “கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் காணும் குழு: (எல்.எல்.ஆர்.சி.) வழங்கிய அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றிட இலங்கை அரசு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், நவநீதம் பிள்ளை இலங்கை சென்று, நேரடியாகக் கண்டும் கேட்டும், ஆய்ந்தறிந்தும் தெரிவிக்கும் விவரங்கள் மற்றும் மேற்கொள்ளும் முடிவுகள் அடிப்படையில் தயாரித்து, ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் அவர் அளித்திடும் அறிக்கை, ஈழத் தமிழர்களுக்கு ஆறுதலாகவும், அவர்களுடைய பிரச்சினையை அடுத்த ஆக்கப்பூர்வமான கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு வளர்ந்திருக்கிறது. இலங்கை அரசாலும், இலங்கை அரசாங்கத்தின் நிர்வாகத்தில் உள்ளவர்களாலும், இலங்கைத் தமிழர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைப் போர்க் குற்றங்கள் என்றும், இனப் படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும்; மேலும் நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் மற்றும் இனப் படுகொலைகள் குறித்துக் குறிப்பிட்ட காலவரையறைக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டும்; என்று நாம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பதற்கு நவநீதம் பிள்ளையின் அறிக்கை எந்த அளவுக்குத் துணைபுரியப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். எனினும் இலங்கையிலே உள்ள தமிழர்கள் மற்றும் உலக நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்கள் மத்தியில் ஐ.நா. மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தி, அவர்களுக்குத் தேவையான அரசியல் தீர்வை முடிவு செய்திடும் உரிமையை அவர்களுக்கு வழங்குவது ஒன்றே, புதுவாழ்வு புலர்ந்திடச் செய்யும்! இத்தகைய நிரந்தரத் தீர்வுக்கு, நவநீதம் பிள்ளை நேரடி ஆய்வின் அடிப்படையில் தரவிருக்கும் அவரது அறிக்கைக்குப் பிறகு, ஐ.நா. மன்றம் தாராளமாக முன்வருமென்று உலகத் தமிழர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள்!
அன்புள்ள, மு.க. 13-9-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 49 PDF ↗