தொகுதி 49 · கடிதம் 3777
ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்!!
2013-07-19
உடன்பிறப்பே,
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள் விற்பனை பிரச்சினை நல்ல முறையில் நடந்து முடிந்து தொழிலாளர்கள் எல்லாம் பணிக்குத் திரும்பினார்கள் என்று செய்தி வந்துள்ளது. நமது தொ.மு.ச.வின் தலைவர் தம்பி சண்முகம் தொலைபேசி வாயிலாக அந்தச் செய்தியை அன்று மாலையில் கூறியபோதே என்னுடைய பெரு மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டேன். ஆனால் மனதிலே நெருடும் ஒருசில கேள்விகள் என்னைக் குடையவே செய்தன.
நெய்வேலி நிலக்கரி நிறுவனம், ஆண்டு ஒன்றுக்கு சுமார் 1500 கோடி ரூபாய் இலாபத்தோடு இயங்கி வந்த நிலையில், மத்திய அரசின் அமைச்சரவை 21-6-2013 அன்று 466 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 சதவிகிதப் பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்க முற்பட்ட நிலையில் 22-6-2013 அன்றையதினமே நான் ஓர் அறிக்கை விடுத்தேன்.
ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த ஆண்டு மே மாதத்தில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்கக் கூடும் என்று ஒருசில நாளேடுகளில் செய்தி வந்தவுடனே பிரதமருக்கு 23-5-2013 அன்று; தான் கடிதம் எழுதியதாக, தனது அறிக்கையிலே கூறியிருக்கிறார்.
அவர் கடிதம் எழுதிய அதே காலகட்டத்தில் தி.மு. கழகத்தின் சார்பாக நானும் இதே பிரச்சினை பற்றி 26-5-2013 அன்று “முரசொலி”யில் எழுதும்போது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இருக்கும் தனது பங்குகளை மத்திய அரசு மேலும் 5 சதவிகிதம் விற்பனை செய்யத் திட்டமிட்டிருப்பதாக அறிவதாகவும், அந்த முயற்சி விரும்பத்தக்கதல்ல என்றும், எனவே என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்வதற்குப் பதிலாக மாற்று வழிமுறைகளை ஆராயுமாறு கேட்டுக்கொள்வதாகவும் ஜெயலலிதா இந்தியப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் எழுதி யிருந்ததைப் பெருந்தன்மையோடு நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அ.தி.மு.க. அரசின் சார்பில் எழுதப்பட்டதை மறைக்க வேண்டும் என்ற குறுகிய புத்தி எனக்கு எப்போதும் கிடையாது.
தற்போது நடந்ததைப் போலவேதான், தி.மு. கழகம் மீண்டும் 2006ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது 22-6-2006 அன்று நெய்வேலிப் பங்குகளில் 10 சதவிகிதத்தை விற்பனை செய்யும் முடிவினை மத்திய அரசு அறிவித்தது. மறுநாள் 23ஆம் தேதி காலையிலேயே தி.மு.க. தொழிற்சங்கம் (தொ.மு.ச.); சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., அதிகாரிகள் சங்கம் ஆகிய சங்கத்தினரை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. 4-7- 2006 அன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதென அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 25- 6-2006 அன்று இந்தப் பிரச்சினை குறித்துப் பிரதமருக்கு நான் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அந்தக் கடிதத்தில், “நெய்வேலியில் பத்து சதவிகிதப் பங்கினை விட்டுத்தருவது பற்றி, தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்க் கருத்துக்களை மத்திய அரசு அலட்சியப்படுத்தி விடக் கூடாது. ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட குறைந்தபட்சத் திட்டத்தில் இருந்து விலகிச் செல்வதற்கு; எந்தக் காரணம் கூறப்பட்டாலும், அது முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையைக் கடைப்பிடிக்கும் உறுதிப்பாட்டினைத் தளர்த்துவ தாகவே கருதப்படும். எனவே மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்திட வேண்டுகிறேன்” என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.
எனது இந்தக் கடிதத்திற்கு உடனடியாகப் பதில் வராத நிலையில், 4ஆம் தேதி முதல் நெய்வேலியில் வேலை நிறுத்தம் தொடங்கியது. 6-7-2006 அன்று செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது, “நெய்வேலிப் பிரச்சினையில் தொழிலாளர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் மத்திய அரசு இருக்கும்போது, மத்திய அரசினால் எடுக்கப்பட்டுள்ள அந்த முடிவுக்குத் தி.மு.க. அந்த அரசிலே இடம்பெற்று, இதற்குப் பொறுப்பேற்க வேண்டுமா என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம். இதை டெல்லியிலே உள்ள கழக அமைச்சர்கள் பிரதமரிடத்திலே அறிவித்திடுமாறு கூறியிருக்கிறேன்” என்று சொன்னதோடு, அவ்வாறே மத்திய அமைச்சராக இருந்த தம்பி தயாநிதி மாறன் மூலமாக உடனடியாகப் பிரதமரைச் சந்தித்து எனது கருத்தைத் தெரிவிக்கச் செய்தேன். அதன் பின்னர் நெய்வேலி நிறுவனத்தின் பத்து சதவிகிதப் பங்குகளை விற்கும் முடிவை நிறுத்திவைப்பதாக அன்று இரவே மத்திய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் தங்களது வேலை நிறுத்தத்தையும் திரும்பப் பெற்றனர்.
ஆனால் இப்போது முதலமைச்சர் பொறுப்பிலே இருக்கும் ஜெயலலிதா விடுத்துள்ள நீண்ட அறிக்கையில் இதையெல்லாம் அப்படியே மூடி மறைத்துவிட்டு, “மத்திய அரசின் முடிவைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதனையடுத்து மத்திய அரசு தனது முடிவைக் கைவிட்டது” என்று அப்போது 2006ஆம் ஆண்டில் மத்திய அரசு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளைத் திரும்பப் பெற்றதற்கு அ.தி.மு.க.தான் காரணம் என்பதைப்போல இப்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தனக்குத்தானே பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார். அதைப்போலவே - சரித்திரத்திலேயே இல்லாத அளவிற்கு இமாலய வெற்றியை இப்போது 2013ஆம் ஆண்டில் முதலமைச்சர் ஜெயலலிதா பெற்றுவிட்டார் என்றெல்லாம் விளம்பரங்கள்! அவைகளையெல்லாம் பார்த்துச் சிரிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
21-6-2013 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் என்.எல்.சி.யின் ஐந்து சதவிகிதப் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டதாகச் செய்தி வந்தவுடனேயே அந்த நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களும் கடும் அதிர்ச்சியடைந்து, தங்களது கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் காட்டுகின்ற வகையில் போராட்டங்களில் இறங்க ஆயத்தப் பணிகளிலே ஈடுபட்டதையும் எடுத்துக்காட்டி;
“மத்திய அரசு தனது 5 சதவிகிதப் பங்குகளை விற்பதன் மூலமாக 466 கோடி ரூபாய்தான் மத்திய அரசுக்குக் கிடைக்கக்கூடுமென்று தெரிகிறது. மத்திய அரசுக்கு இது ஒரு பெரும் தொகையல்ல. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் குறைந்தது 10 சதவிகிதம் பொதுமக்களிடம் இருக்க வேண்டும் என்ற இந்தியப் பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) நிபந்தனை விதித்திருப்பதின் அடிப்படையிலேதான் இந்த முடிவு எடுக்கப்படுவதாக மத்திய அரசு கூறக்கூடும். ஆனால் இந்தக் கட்டுப்பாட்டில் இருந்து நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு விலக்களிக்க பங்கு ஒப்பந்த விதிகள் சட்டத்திலே திருத்தம் கொண்டு வரலாம், அல்லது என்.எல்.சி நிறுவனத்தையே பங்குகள் விற்பனை செய்யப்படும் நிறுவனங்களின் பட்டியலிலே இருந்து நீக்கி விடலாம்” என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு ஏற்கனவே எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருப்பதை மத்திய அரசு கருத்திலே கொண்டும்; ஏற்கனவே இதுபோல நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு பின்னர் எனது வேண்டுகோளையேற்று அந்த முடிவினைத் தள்ளிவைத்ததை மனதிலே கொண்டும்; தற்போது மத்திய அமைச்சரவை எடுத்துள்ள இந்த முடிவினை ரத்து செய்ய வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் 22-6-2013 அன்று அறிக்கை விடுத்திருந்தேன்.
நான் அறிக்கை விடுத்த 22-6-2013 அன்றுதான், தமிழக முதலமைச்சரும் பிரதமருக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திலே முதலமைச்சர் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்கக் கூடாது என்றுதான் வேண்டுகோள் விடுத்திருந்தாரே தவிர, அந்தப் பங்குகளைத் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்க வேண்டுமென்று எழுதவே இல்லை. அவர் அதற்கு முன்பு பிரதமருக்கு எழுதிய கடிதத்திலும் பங்குகளைத் தனியாருக்கு விற்கக் கூடாது என்று அதே வேண்டுகோளைத்தான் விடுத்திருந்தார்.
தற்போது அந்த வேண்டுகோள் நிறைவேறி விட்டதா? நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு விற்காமல் 2006ஆம் ஆண்டு கழக ஆட்சியிலே செய்ததைப் போல முடிவைத் திரும்பப் பெற்றுக்கொண்டு விட்டதா? நெய்வேலி பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை யாருக்கும் விற்கமாட்டோம் என்று மத்திய அரசு ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு விட்டதா என்றால் கிடையாது. ஆனால் ஆளுங்கட்சி நாளேடுகளும், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் நாளேடுகளும் ஜெயலலிதாவிற்கு இமாலய வெற்றி கிடைத்திருப்பதாகக் கூறி, ஆளுங்கட்சி நாளேட்டில் மட்டும் 55 பக்கங்களுக்கு விளம்பரங்கள் கொடுத்திருக்கிறார்கள். மற்ற ஏடுகளிலும் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் .
ஜெயலலிதா முதலில் நெய்வேலிப் பங்குகளை விற்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில், பத்திரிகையாள நண்பர் ஒருவர் 5 சதவிகிதப் பங்கினை தனியாருக்கு விற்பதற்குப் பதிலாக மாநில அரசுக்கே விற்பனை செய்யும்படி கோரலாம் என்று முதலமைச்சருக்கே ஒரு கடிதம் எழுதிய பிறகு - நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்று 22-6-2013 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதியதற்கு மாறாக, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தமிழக அரசே வாங்கிக் கொள்ளத் தயார் என்று பத்திரிகையாளரின் கருத்தையே தமிழக அரசின் கருத்தாக ஏற்றுக் கொண்டு 25-6- 2013 அன்று முதல்வர் பிரதமருக்கு எழுதினார். முதலமைச்சர் ஜெயலலிதா அந்தக் கருத்தை அமைச்சரவையைக் கூட்டித்தான் எடுத்தாரா என்பது விவாதத்திற்குரிய வேறு விஷயம். 3-7-2013 அன்று என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கி விட்ட நிலையில், 4-7-2013 அன்று சோனியாகாந்திக்கும், பிரதமருக்கும், நிதித் துறை அமைச்சருக்கும் அவசரக் கடிதம் ஒன்று எழுதினேன். அந்தக் கடிதத்தில், 2006ஆம் ஆண்டு மத்திய அரசு நெய்வேலி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முடிவினை அறிவித்து, அதன் பின்னர் கழக அரசின் வேண்டுகோளையேற்று அந்த முடிவினைத் திரும்பப் பெற்றதை நினைவூட்டி, தற்போதும் அவ்வாறே முடிவினைத் திரும்பப் பெற வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தேன். உடனே நமது முதலமைச்சரும் 7-7-2013 அன்று பிரதமருக்கு மீண்டும் ஒரு கடிதத்தை, நெய்வேலி நிறுவனப் பங்குகளைத் தமிழக அரசின் நிறுவனங்களுக்குத் தரும்படி கேட்டுக் கொண்டு எழுதினார். ஆனால் 8-7-2013 அன்று நெய்வேலியில் உள்ள அனைத்துத் தொழிற் சங்கங்களும் கலந்து பேசி, அ.தி.மு.க. வைத் தவிர்த்த மற்ற சங்கங்கள் மத்திய அரசு அதன் பங்குகளை தமிழக அரசுக்குக்கூட விற்கக் கூடாது என்று அறிவித்தன. ஆனால் அ.தி.மு.க. சங்கம் மட்டும் முதலமைச்சர் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்று கூறினார்கள். 12-7-2013 அன்று பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு நான் மீண்டும் ஒரு கடிதம் எழுதி, தம்பி டி.ஆர். பாலு மூலமாக அனுப்பி பிரதமரிடம் விளக்கமாக எடுத்துரைக்கச் செய்தேன். அந்தக் கடிதத்திலும் தொழிலாளர்களின் போராட்டத்தை நினைவுபடுத்தி, 5 சதவிகித என்.எல்.சி.
பங்குகளை தனியாருக்கு விற்பதற்கான முடிவை உடனடியாகக் கைவிட்டு, சிறப்பு விதிவிலக்கு அளிக்க முதலில் பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். வேறு வழியே இல்லை என்றால், இறுதிக்கட்டமாக, தமிழக அரசு வாங்க முன்வந்துள்ள பங்குகளை வாங்கிக் கொண்டு, அவற்றைப் “பொதுமக்கள் பங்கு” என்று கணக்கில் எடுத்துக் கொண்டு பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் தெரிவித்திருந்தேன். இதற்குப் பிறகுதான் “செபி” நிறுவனம் நெய்வேலிப் பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு விற்க ஒப்புக்கொண்டு, தமிழக அரசு அதனை ஏற்றுக் கொண்டது. அதைத்தான் “வெற்றி, வெற்றி” என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை யாருக்கும் விற்கக் கூடாது என்று முதலில் வைத்த கோரிக்கையில் தமிழக அரசு உறுதியாக இருந்திருக்குமானால்; தொழிலாளர்களின் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் தரும் அழுத்தத்தின் காரணமாக மத்திய அரசு விதிவிலக்குக் கொடுத்து, 2006ஆம் ஆண்டில் நடந்ததைப் போலவே தங்கள் முடிவினைத் திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கக்கூடும். ஆனால் அதற்கு மாறாக நெய்வேலி நிறுவனப் பங்குகளை விற்பது என்ற “செபி”யின் ஆரம்ப முடிவுக்கு தமிழக அரசு இணங்கித் துணையாக இருக்கிறதே தவிர, வேறொன்றும் இல்லை. இது உண்மையிலேயே “இமாலய” வெற்றியா? இதற்கு அ.தி.மு.க.வின் நாளேட்டுக்கு இவ்வளவு விளம்பரங்களா? இதற்கிடையே அம்மையாரின் முடிவுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் பாராட்டாம்! எந்தெந்த அரசியல் கட்சிகள் என்று பார்த்தால்; அ.தி.மு.க.விடம் தோழமைக் கட்சிகளாக இருக்கின்ற எல்லாக் கட்சிகளும் இதற்குப் பாராட்டுத் தெரிவிக்கவில்லை. ஓரிரு கட்சிகள்தான் பாராட்டுத் தெரிவித்திருக்கின்றன. அதற்குத்தான் இவ்வளவு கூப்பாடுகள்! பல லட்ச ரூபாய்க்குப் பாராட்டு விளம்பரங்கள்! ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்; உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்!
அன்புள்ள, மு.க. 19-7-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 49 PDF ↗