உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 48

தொகுதி 48 · கடிதம் 3737

இந்தக் கூட்டுறவுத் தேர்தலில் எல்லாக் கட்சிகளும் எதிர்பார்ப்பது என்ன?

2013-04-18

உடன்பிறப்பே,

தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறதாம். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. அரசு எவ்வாறு செயல்படும் என்பதை முன்கூட்டியே ஆலோசித்து எதிர்பார்த்தே, திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டுறவுத் தேர்தல்களில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்து ஏற்கனவே அறிக்கை மூலமாக வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டது. இருந்தாலும் அ.தி.மு.க. அரசு கூட்டுறவுத் தேர்தல்களை ஓரளவிற்காகவாவது முறையாக நடத்த முற்படும் என்று நினைத்து வேறு சில கட்சிக்காரர்களும், எந்தக் கட்சியையும் சாராதவர்களும் முடிவுக்கு வந்து, இந்தத் தேர்தலில் ஆங்காங்கு போட்டியிடுகிறார்கள்.

ஆனால் அவர்கள் அ.தி.மு.க. அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளினால் என்ன பாடுபடுகிறார்கள் என்பதைப் பற்றியும், ஆளுங்கட்சியே இந்தக் கூட்டுறவுத் தேர்தலில் ஆங்காங்கு உட்கட்சிப் பூசலால் குடுமிபிடிச் சண்டையில் ஈடுபட்டு வருவதைப் பற்றியும் அன்றாடம் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதைப்பற்றி நானும் இதுவரை இரண்டு மூன்று முறை எழுதிவிட்டேன் என்றாலும், தொடர்ந்து ஆளுங் கட்சியினர் நடத்தும் அதிகாரச் சேட்டைகளினால் விளைந்துள்ள அநியாயங்களைப் பற்றி நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக இங்கே ஓரளவிற்குத் தொகுத்துள்ளேன்.

16-4-2013 நாளிட்ட “தீக்கதிர்” நாளேட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்த அறிக்கையில், “தமிழகத்தில் கூட்டுறவு அமைப்புகளுக்கு நடந்து முடிந்துள்ள இரண்டு கட்டத் தேர்தல்களில் பரவலாக நடைபெற்ற ஆளுங்கட்சியினரின் அத்துமீறல் நடவடிக்கைகளைக் கண்டித்தும், தேர்தல் ஆணையம் வெறும் பார்வையாளராக இருப்பதை விமர்சித்தும், கூட்டுறவுத் தேர்தலை ஜனநாயக முறையில் நேர்மையாக நடத்துவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது. சென்னையில் மூன்றாம் கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றபோது, பரவலாக, பல இடங்களில், ஆளுங்கட்சி தவிர, இதரக் கட்சிகள், அமைப்புகள், தனி நபர்கள் மனுத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படவில்லை. காவல்துறை பல இடங்களில் ஆளுங்கட்சியின் அராஜகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதைப் பார்க்கமுடிந்தது. ஆளுங்கட் சியினர், வேட்பு மனு தாக்கல் செய்யப்பட வேண்டிய அலுவலகங்களில் கதவைப் பூட்டிக் கொண்டு மற்றவர்களை உள்ளேவிட மறுப்பது, கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டு சைக்கிள் செயின், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அச்சுறுத்துவது, தாக்குவது போன்ற சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டனர். வேட்பு மனுக் கொடுக்க உள்ளேயே போக முடியாத நிலையில், தாக்குதல்களையும் எதிர் கொண்டு, ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டப் போராடிய தோழர்கள் சுற்றி வளைக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டனர். தியாகராய்நகர் கூட்டுறவு வங்கி, பல்லவன் போக்குவரத்துக் கழகப் பணியாளர் கூட்டுறவுக் கடன் சங்கம், போக்குவரத்துக் கழகப் பணியாளர் கடன் சொசைட்டி, அண்ணா தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், நொச்சிக் குப்பம் மீனவர் சொசைட்டி, மீனவர் கடன் கூட்டுறவுச் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களில் இதுதான் நிலைமையாக இருந்தது. இந்தப் படுமோசமான ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார். கூட்டுறவுத் தேர்தல் குறித்து வந்த மற்றொரு செய்தி - அ.தி.மு.க.வினர் மற்ற வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை; அ.தி.மு.க. உறுப்பினர்கள் மட்டுமே அனைத்து இடங்களிலும், வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். ஆளுங்கட்சியினரின் அராஜகப் போக்கைக் கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது. சாலை மறியல் செய்தோர் மீது காவல் துறையினர் தடியடி நடத்திக் குண்டுக் கட்டாகக் கைது செய்தனர். தியாகராயர் நகர், தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, தாம்பரம், நொச்சிக்குப்பம், பல்லவன் இல்லம், பிராட்வே ஆகிய இடங்களிலும் அராஜகங்கள் நடந்தன. இதை எதிர்த்து சி.ஐ.டி.யு. சார்பில் ஆங்காங்கே மறியல் போராட்டங்கள் நடந்தன.

கூட்டுறவுத் தேர்தல் குறித்து சி.ஐ.டி.யு. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அண்ணா தி.மு.க. தொழிற்சங்கம் கட்டை, சைக்கிள் செயின், கத்தியுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிக் கும்பலுடன் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்ய வரிசையில் நின்றிருந்த சி.ஐ.டி.யு. வேட்பாளர்களைத் தாக்கி அலுவலகத்தில் இருந்து பகிரங்கமாக வெளியேற்றினர்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டுறவுத் தேர்தல்களில் சில இடங்களில் அ.தி.மு.க.வினரே இரு குழுக்களாகப் பிரிந்து மோதிக் கொண்டனர். உதாரணமாக திருவள்ளூரில் அ.தி.மு.க. மாவட்டக் கவுன்சிலர் குமார், அ.தி.மு.க. முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில் 24 பேர் தனித்தனியாக வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். தேர்தலின்போது “பூத்” முகவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அடிதடியாகத் தொடர்ந்து, ஒருவருக்கொருவர் கல் வீசி, பலர் காயமடைந்தனர். இன்ஸ்பெக்டரின் காரின் கண்ணாடி மற்றும் நான்கு பைக், ஒரு ஆட்டோ அடித்து நொறுக்கப்பட்டது.

கூட்டுறவுத் தேர்தலில் போட்டியிட்ட கோவிந்தராஜ் என்பவர் தலைமையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சோளிங்கர் - சித்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

திருப்போரூர் ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடந்த தேர்தலைப் படம் பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை விரட்டி விட்டு, பின் தேர்தல் முடிவுகளை அறிவித்தார்கள்.

கோவையில் காந்திபுரம் ஏ.டி.டி. காலனிப் பகுதியில், பெண்கள் ஆடைத் தயாரிப்பாளர்கள் கூட்டுறவுச் சங்கம் ஒன்று இருக்கிறது. அங்கே 300க்கும் மேற்பட்ட பெண் வாக்காளர்களுக்கு வாக்களிக்கவே வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர்கள் தேர்தல் நடத்துவோரிடம் வாக்குவாதம் செய்தும் பயன் ஏற்படவில்லை.

அரியலூர் உதயநத்தம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் உள்ளே புகுந்து, வாக்குச் சீட்டுக்களைப் பறித்துக் கிழித்தெறிந்திருக்கிறார்கள். இதற்காக அங்கே மறியல் நடைபெற்றது.

அணைக்குடம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத் தேர்தலில் மர்ம நபர்கள் வாக்குச் சாவடிக்குள் புகுந்து தேர்தல் அதிகாரி பாண்டியனிடம் இருந்து வாக்குச் சீட்டைப் பறித்துக் கிழித்தெறிந்திருக்கிறார்கள்.

கோடாலிகருப்பூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத் தேர்தலில் ஆளுங்கட் சியினர் வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்று தகராறு நடைபெற்றுத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

16-4-2013 தேதிய “தினத்தந்தி” நாளிதழிலேயே; திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டுறவுத் தேர்தலில் நேற்றைய தினம் வேட்பு மனுத்தாக்கல் செய்தபோது மோதல் வெடித்து, அ.தி.மு.க.வினரும், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினரும் ஒருவருக்கொருவர் கம்புகளால் தாக்கிக்கொண்ட போது எடுத்த புகைப்படமும், அதிலே ரத்தம் சொட்டச் சொட்ட காயமடைந்து செல்கின்ற புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளன. காவல் துறையினர் முன்னிலையிலேயே ஒருவருக்கொருவர் இவ்வாறு தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். கல் வீச்சு மற்றும் உருட்டுக்கட்டைத் தாக்குதலில் மணிகண்டன், அபிமன்யூ, அன்வர், மாசாணம், முகமது அலி ஜின்னா, சின்னப்பராஜ், முத்துசாமி, சதீஷ்குமார், மாணிக்கம், ஜெயக்குமார், ராஜா, சவரிநாதன் ஆகியோர் காயமடைந்ததாகவும், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் “தினத்தந்தி”யே செய்தி வெளியிட்டுள்ளது.

16-4-2013 அன்று “தினமலர்” நாளிதழில் வெளி வந்த செய்தியில், கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்ய, தியாகராயர் நகரில் உள்ள தியாகராயர் நகர் கூட்டுறவு அலுவலகத்துக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், அ.தி.மு.க. வினருக்கும் இடையே மோதல் நடந்த சம்பவம் புகைப்படத்தோடு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் சென்னை காசிமேட்டில் வேட்பு மனுத் தாக்கல் .செய்வதில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்ட புகைப் படத்தோடு கூடிய செய்தியையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

16ஆம் தேதியன்று பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பாகவும், புதிய தமிழகம் சார்பாகவும் கூட்டுறவுத் தேர்தல் முறைகேடுகள் குறித்து பிரச்சினை எழுப்ப முயன்றபோது, கட்சிச் சார்பற்ற முறையில் நடுநிலையோடு பேரவையை நடத்திச் செல்லும் நமது சட்டமன்றப் பேரவைத் தலைவர், “கூட்டுறவுத் துறை மானியத்திற்கு அமைச்சர் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டார்; மீண்டும் கூட்டுறவுத் தேர்தல் பற்றிப் பேச அனுமதிக்க முடியாது” என்று பெருந்தன்மையோடு கூறி விட்டார். மின்துறை அமைச்சரோ கூட்டுறவுத் தேர்தலில் ஏற்பட்ட மோதல் காரணமாகத் தங்களுடைய கட்சியினர் ஐந்து பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக அவையிலே தெரிவித்திருக்கிறார். அதிலிருந்தே கூட்டுறவுத் தேர்தலில் எந்த அளவிற்கு மோதல்கள் முற்றி வன்முறை வெடித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பேரவைத் தலைவர் அனுமதி மறுத்த காரணத்தால் கம்யூனிஸ்ட் கட்சிகளும், புதிய தமிழகம் கட்சியும் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்திருக்கிறார்கள்.

இந்த முறையிலேயே தமிழ்நாட்டில் கூட்டுறவு அமைப்புகளுக்கு இரண்டு கட்டத் தேர்தல்களை முடித்துவிட்டனர். அந்தத் தேர்தல்களிலும் அ.தி.மு.க. அனைத்துவிதமான அத்துமீறல் - சட்ட விதிமுறைமீறல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு, ஜனநாயகப் படுகொலையை நடத்தி, அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமே அனைத்துப் பதவிகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள்.

இந்தக் கூட்டுறவுத் தேர்தல்களை நடத்துவதற்காக அ.தி.மு.க. அரசின் சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையம் இந்தக் கோமாளிக் கூத்துக்களையெல்லாம் அன்றாடம் அமைதியாக வேடிக்கை பார்த்து ஊக்குவித்து வருகிறது.

இவ்வளவுக்கும் பிறகு இனியாவது கூட்டுறவுத் தேர்தல் ஆணையம் தலையிட்டு, அராஜகமாகவும், சட்ட விரோதமாகவும் நடைபெற்ற கூட்டுறவுச் சங்கத் தேர்தல்கள் அனைத்தையும் ரத்து செய்து ஆணையிட வேண்டும்; ஜனநாயக ரீதியாக வேட்பு மனுத் தாக்கல் செய்ய விரும்பும் அனைவரிடமிருந்தும் அவைகளைப் பெற்று, அதன் பிறகு தேர்தல் நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும்; அதிகார மமதையில் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு ஜனநாயகத்திற்கு விரோதமாக ஆட்டம்போட்ட ஆளுங்கட்சியினர் மீதும், அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கிய காவல் துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; அப்போதுதான் கூட்டுறவுத் தேர்தல் முறையாக நடைபெற்றது என்று நாட்டிற்கு அறிவிக்க இயலும். இதே எண்ணத்தைத்தான் தமிழகத்திலுள்ள அனைத்து எதிர்க்கட்சியினரும் வெளியிட்டுள்ளனர். இதைத்தான் தமிழ்நாட்டு மக்களும் எதிர்பார்க்கிறார்கள். இல்லாவிட்டால் இந்தக் கூட்டுறவுத் தேர்தல்களை நடத்தியதில் எந்தவிதமான அர்த்தமும் இருக்க முடியாது.

அன்புள்ள, மு.க. 18-4-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 48 PDF ↗