உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 47

தொகுதி 47 · கடிதம் 3685

ஏன்; இந்த இரட்டை அளவுகோல்?

2012-12-22

3685. ஏன்; இந்த இரட்டை அளவுகோல்?

உடன்பிறப்பே,

13-12-2012 ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின்

தலைமைச் செயற்குழு சென்னை, அண்ணா அறிவாலயத்தில்

கூடி ஆறு தீர்மானங்களை நிறைவேற்றி - அதில் கடைசித்

தீர்மானமாகத் தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டினைப்

பற்றியும், அதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் படுகின்ற

சிரமங்கள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி, அதனைக் கண்டித்து

தமிழக மெங்கும் 18-12-2012 அன்று கண்டன அறப்போர்

ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று முடிவெடுத்து அறிவித்தோம்.

இடையிலே நான்கே நாட்கள்! நான்கு நாட்கள் போதுமா

என்றனர் - நான்கு நாட்கள் என்ன, நான்கே மணி நேரத்தில்,

நீங்கள் வெட்டிவா என்றால் கட்டி வரும் தம்பிகள்தான் என்பதை

மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கும் வகையில், நம்முடைய

மாவட்டக் கழகச் செயலாளர்கள் எல்லாம் பம்பரமெனச் சுழன்று

தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டத்தினை, அ.தி.மு.க. ஆட்சியாளர்கள்

அதிர்ந்து போகும்வண்ணம் மிகவும் வெற்றிகரமாக நடத்தி

முடித்துள்ளார்கள். அதனால் தான் செய்தியாளர்கள் அதைப் பற்றி

என்னைக் கேட்டபோது “அமோக எழுச்சி, அமோக வெற்றி” என்று

குறிப்பிட்டேன்.

நான் சென்னையில் வள்ளுவர் கோட்டத்திற்கு அருகில்

நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதாகத்தான்

அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அண்ணா மேம்பாலம்

தாண்டி, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை எனும் எம்.ஜி.ஆர்.

சாலையிலேயே ஆர்ப்பாட்டம் தொடங்கிவிட்டது. வள்ளுவர்

கோட்டம் அருகே தானே ஆர்ப்பாட்டம், இங்கேயே இவ்வளவு

பேர் திரண்டிருக்கிறார்களே என்று நான் கேட்டுக்கொண்டே

இருந்தபோது, கார் நகர்ந்தது. வள்ளுவர் கோட்டம் எங்கே

இருக்கிறது என்றே தெரியவில்லை. எப்படியோ என்னைக்

காரிலிருந்து இறக்கி, மேடைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள்.

மேடையிலே ஒரு கூட்டம். எதிரே ஒரு மாநாடு. அதிலும்

ஆண்களை விஞ்சி, பெண்களின் கூட்டம். அத்தனை பேரும்

உணர்ச்சிக் கொந்தளிப்பாய் உருமாறி இருந்தார்கள். அரை

மணி நேரம் ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர். முன்னாள் மேயர் மா.

சுப்பிரமணியமும், முன்னாள் அமைச்சர் தம்பி பொன்முடியும்

“கணீர்” என்ற குரலில் மின்வெட்டு காரணமாக எழுந்துள்ள

அவலங்களை எல்லாம் தொகுத்து முழக்கமாக எடுத்து

முழங்கினார்கள். தொடர்ந்து பேராசிரியர் தம்பி சுப. வீரபாண்டியன்,

நடிகர் சந்திரசேகர், துணைப் பொதுச் செயலாளர் சற்குணப்

பாண்டியன், குஷ்பு சுந்தர், மாவட்டச் செயலாளர் அன்பழகன்

ஆகியோர் உரையாற்றிய பிறகு நான் அங்கே ஆர்ப்பாட்டம் பற்றி

உரையாற்றினேன்.

ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு அறிவாலயம் நான் வந்து

சேருவதற்குள் தொடர்ந்து தொலைபேசிகள்! மாதவரத்திலும்,

காஞ்சிபுரத்திலும் ஆர்ப்பாட்டம் மிகப் பெரிய வெற்றி என்றும்,

பேராசிரியரும், தளபதி ஸ்டாலினும் கலந்து கொண்டார்கள் என்றும்

செய்திகள். மற்ற மாவட்டங்களிலிருந்து மாவட்டச் செயலாளர்கள்

தொலைபேசியில் ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது என்று

எடுத்துக் கூறினார்கள். “கலைஞர் தொலைக்காட்சி”யிலும்

ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகளையெல்லாம் தொகுத்து விவரமாகத்

தெரிவித்ததைப் பார்த்தேன்.

இவ்வளவு வெற்றிகரமாக நாம் நடத்திய இந்த அறப்போர்

ஆர்ப்பாட்டம் பற்றித் தமிழகத்திலே உள்ள நாளேடுகள் எல்லாம்

எந்த அளவிற்குச் செய்தியாக அதனைத் தந்துள்ளன என்பதைப்

பார்த்தால் “அண்ணாவும் பேசினார்” என்று அந்தக் காலத்தில்

“இந்து” நாளிதழ் செய்தி வெளியிட்டதே, அந்தப் பாணியிலேதான்

பெருமளவுக்கு இருட்டடிப்பு செய்து வெளியிட்டுள்ளார்கள்.

தி.மு.க.வின் ஆர்ப்பாட்டத்திற்கு இவ்வளவு பேர்

வந்திருக்கிறார்களே என்பதை ஆட்சியாளர்களோடு சேர்ந்து

அவர்களாலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “முடிந்து

விடும் சகாப்தம் என்று கனவு கண்டோமே, மூலைக்கு மூலை

இப்படி அணிஅணியாகத் திரண்டு வந்திருக்கிறார்களே” என்ற

வயிற்றெரிச்சலில் தான் அறப்போர் ஆர்ப்பாட்டச் செய்திகளை

அரைகுறையாக வெளியிட்டிருக்கிறார்கள். நமது எழுச்சியையும்

வளர்ச்சியையும் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

டெல்டா மாவட்டங்களில் கருகும் பயிர்கள் பற்றியும்

பலியாகும் உயிர்கள் பற்றியும் “கருணாநிதியும் கண்டு

கொள்ளவில்லை” என்று “ஜனசக்தி” நாளிதழ் - ஜூனியர் விகடன்

வார இதழிலே வெளிவந்த ஒரு செய்தியை எடுத்துப் பெரியதாக

வெளியிட்டுள்ளது.

காவிரி நதி நீர்ப் பிரச்சினை பற்றி 13ஆம் தேதியே நமது கழகச்

செயற்குழு தீர்மானத்தில் நாம் தீர்மானம் நிறைவேற்றவில்லையா?

விவசாயிகள் தி.மு.க. கண்டுகொள்ளவே இல்லையா? 17-12-

2012 அன்று நான் விடுத்த நீண்ட அறிக்கையில் விவசாயிகளுக்கு

ஏக்கர் ஒன்றுக்கு நாற்பதாயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க

வேண்டுமென்றும், டெல்டா மாவட்டங்களைப் “பேரிடர் பாதித்த

மாவட்டங்களாக” அறிவிக்க வேண்டுமென்றும், தற்கொலை

செய்துகொண்டு இறந்த விவசாயிகளின் குடும்பங்களில் தலா

ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்

கொள்ளவில்லையா? காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை அரசிதழில்

வெளியிட வேண்டுமென்று கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்

எல்லாம் பிரதமரைச் சந்தித்து முறையிட வேண்டுமென்று நான்

கேட்டுக்கொண்டதின் பேரில், 17ஆம் தேதியே பிரதமரை,

அவர்கள் சந்தித்துக் கோரிக்கை வைக்கவில்லையா? தமிழகத்தில்

இறந்த விவசாயிகளைப் பற்றிக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மக்களவையிலும், மாநிலங்களவையிலும் குரல் கொடுக்க

வில்லையா? இதற்கெல்லாம் முன்பாகவே தற்கொலை செய்து

கொண்டவர்களைப் பற்றி நான் கேள்வி-பதில் பகுதியிலேயே

பட்டியல் இட்டுக் காட்டவில்லையா?

தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன ஏழு

விவசாயிகளின் குடும்பங்களுக்கும் தலா ஐம்பது ஆயிரம்

ரூபாய் வீதம் தி.மு.கழகத்திலிருந்து உதவி நிதி வழங்கப்படும்

என்று தங்கசாலை மணிக்கூண்டு அருகே நடைபெற்ற

பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட பேராசிரியர் அவர்களின்

91வது பிறந்த நாள் விழா மேடையில், அறிவித்ததோடு, அந்தக்

கூட்டத்திற்கு வருகை தந்திருந்த திருவாரூர் மாவட்டக் கழகச்

செயலாளர் பூண்டி கலைவாணனிடம் அந்த மாவட்டத்தில்

தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் குடும்பத்திற்

கான நிதிக்கான காசோலையை அளித்து, உடனடியாக அந்தக்

குடும்பத்தினரிடம் அதனைக் கொண்டுபோய்ச் சேர்த்து “ரசீது”

பெற்று தலைமைக்கழகத்திடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்

கொண்டேன். மற்ற மாவட்டங்களில் தற்கொலை செய்துகொண்ட

விவசாயிகளின் குடும்பங்களுக்கான நிதியினை; நாகை, கடலூர்,

விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டக் கழகச் செயலாளர்களிடம்

அதற்கான காசோலைகளை வழங்கி, தற்கொலை செய்துகொண்ட

மற்ற விவசாயிகளின் குடும்பத்திடம் அளிக்கும்படி தலைமைக்

கழகத்தினால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அத்தனையையும் மறைத்துவிட்டு, “இந்தப் பிரச்சினை

பற்றியும், தற்கொலை செய்துகொண்டவர்கள் பற்றியும் கருணாநிதி

வாயைத் திறக்காமலே இருக்கிறார், அவரது கட்சி எம்.பி.க்களும்

நாடாளுமன்றத்தில் பேசாமல் இருக்கிறார்கள்” என்றெல்லாம்

“ஜூனியர் விகடனும்”, “ஜனசக்தி”யும் வெளியிட்டிருக்கிறார்கள்

என்றால் எந்த அளவிற்கு அவர்களுக்குக் காழ்ப்புணர்ச்சி

நம்மீது கனன்று கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள

லாம். அதைத்தான் நான் பேராசிரியரின் பிறந்த நாள் விழா

பொதுக் கூட்டத்தில் பேசினேன். அந்தப் பொதுக் கூட்டத்தில்

பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள். அந்தக்

கூட்டத்தைப் பற்றியோ, அதிலே பேசியது பற்றியோ ஆங்கிலம்

மற்றும் தமிழ் நாளேடுகள் சிலவற்றில் வெளியிடப்படவில்லை.

“தினமலர்” நாளேடு தமிழகம் முழுவதும் நடைபெற்ற

ஆர்ப்பாட்டம் பற்றி ஒரு வார்த்தை கூட செய்தி வெளியிடவில்லை.

நான் பேசியது பற்றி மாத்திரம் ஒரு சின்ன பெட்டிச் செய்தி

அதுவும் 12வது பக்கத்திலே வந்துள்ளது. தினமணியிலோ 9வது

பக்கத்தில் படமும், செய்தியும் வந்துள்ளது. ஆனால் முதல்

பக்கத்தில் டெல்டா மாவட்டங்களை முதல்வர் பார்வையிடப்

போவதாகத் தகவல் வந்துள்ளதாக அரைப் பக்கத்திற்கு ஊகமாகச்

செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். டெல்டா மாவட்டங்களில்

ஆளுங்கட்சிக்கு நிலைமை சரியில்லை, முதலமைச்சர் அங்கே

சென்று பார்வையிடுவது நல்லது என்பதைத் தங்கள் செய்தியின்

மூலமாக ஆளுங்கட்சிக்கு ஆலோசனையாக உணர்த்த, படாத

பாடுபடும் “தினமலர்” தமிழகம் எங்கும் எழுச்சியோடு நடைபெற்ற

ஆர்ப்பாட்டத்தைப் பற்றி செய்தி வெளியிடாமல் விட்டுவிட்டால்,

தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மை தெரியாமலேயே போய்விடுமா?

“சீப்பை ஒளித்து விட்டால் திருமணமே நின்றுவிடுமா”

என்பார்களே, அதைப்போலத்தான் தமிழ்நாட்டுப் பத்திரிகைகள்

எல்லாம் நாம் நடத்திய அறப்போராட்டத்தைத் திரைபோட்டு

மறைக்கப் பார்க்கின்றார்கள். அதைத்தான் நான் பேராசிரியர் பிறந்த

நாள் விழா பொதுக் கூட்டத்தில் விரிவாக எடுத்துக் கூறினேன்.

மேலும் அதே “தினமலர்” நாளேட்டில் மற்றொரு செய்தி.

பேராசிரியர் பிறந்த நாளைப் பற்றி நான் முரசொலியில் எழுதிய

கடிதத்தில் “அலுவலகத்தில் அருகருகே அமர்ந்து ஒன்றாக

சிந்திக்கிறோம், ஒருமனதாக முடிவெடுக்கிறோம்” என்று

நான் எழுதியதை “தினமலர்” ஏட்டினால் தாங்கிக்கொள்ள

முடியவில்லை. அதைக் கிண்டல் செய்து, ஐந்து தடவை

முதலமைச்சராக இருந்தபோது, பேராசிரியருக்கு எந்தப் பதவியும்

கொடுக்காமல் ஏமாற்றி விட்டேன் என்பதைப்போலத் துணுக்குச்

செய்தி வெளியிட்டுள்ளது.

1967ஆம் ஆண்டு முதல் முதலாக தி.மு. கழக அமைச்சரவை

அமைந்தது. அண்ணா தலைமையில் அமைந்த அந்த

அமைச்சரவையில் பேராசிரியர் இடம்பெறவில்லை. 1969ஆம்

ஆண்டில் அண்ணா மறைந்தபோது, அண்ணா அமைத்த

அமைச்சரவைதான் நீடித்தது. ஆனால் 1971ஆம் ஆண்டு

பொதுத்தேர்தல் நடைபெற்று, நான் முதல்வராகப் பொறுப்பேற்று

அமைச்சரவையை அமைத்தபோது, பேராசிரியர் அவர்களை மக்கள்

நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்கச் செய்தேன்.

அடுத்து 1989ஆம் ஆண்டு என் தலைமையில் அரசு அமைந்த

போதும், பேராசிரியரை கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்கச்

செய்தேன். அமைச்சரவையிலே பேராசிரியருக்கு இரண்டாவது

இடம்.

1996ஆம் ஆண்டிலும் அவர்தான் கல்வி அமைச்சர். அப்போது

பள்ளிக் கல்வி, உயர் கல்வி ஆகிய இரண்டு துறைகளுக்குமே

பேராசிரியர் தான் அப்போது அமைச்சர். 2006ஆம் ஆண்டிலோ

பேராசிரியர் தான் நிதி அமைச்சர். ஆனால் “தினமலர்” பேராசிரி

யருக்கு நான் எந்தப் பதவியும் கொடுக்கவில்லை என்பதைப்போல

நஞ்சு தடவிய துணுக்குச் செய்தி வெளியிடுகிறது என்றால், எந்த

அளவிற்கு நம்மீது அந்த ஏட்டிற்கு “வஞ்சம்” உள்ளது என்பது

தெரிகிறது அல்லவா?

மத்தியிலே ஆட்சி செய்து வரும் ஐக்கிய முற்போக்குக்

கூட்டணியை நாள்தோறும் கடுமையாக விமர்சனம் செய்து

பத்திரிகைக்காரர்கள் பக்கம் பக்கமாகச் செய்திகள் வெளியிட்டு

நாட்டையே குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள். ஆனால்

தமிழ்நாட்டிலோ ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க.வைத் தாங்கிப்

பிடிக்கிறார்கள். எதிர்க்கட்சியான தி.மு.க.வைத் தொடர்ந்து

தாக்கி, கற்பனை கலந்து எழுதி வருகிறார்கள். பத்திரிகைகளுக்கு

மட்டும் டெல்லிக்கு ஓர் அளவுகோல்; சென்னைக்கோ வேறொரு

அளவுகோல்! பொதுமக்கள் இந்த அளவுகோல்களைக் கண்டு

அதிசயித்து நிற்கிறார்கள்! ஏன்; இந்த இரட்டை அளவுகோல்?

அன்புள்ள,

மு.க.

22-12-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022) · பக்கங்கள் 265–270.

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 47 PDF ↗