தொகுதி 47 · கடிதம் 3684
பெற்றகரிய திருநாள் பேராசிரியர் பிறந்த நாள்!
2012-12-19
3684. பெற்றகரிய திருநாள்
பேராசிரியர் பிறந்த நாள்!
உடன்பிறப்பே,
நாளை நம்முடைய இனமானப் பேராசிரியர் பெருந்தகையின்
91வது பிறந்த நாள் விழா! எனக்கு இன்று முதலே மனதிலே ஒரு
பரபரப்பு! மனதிற்குள் எத்தனை எத்தனையோ எண்ணங்கள்!
அவற்றில் எதையெல்லாம் எழுத்திலே வடிப்பது? இந்த ஆண்டு
பேராசிரியர் பிறந்த நாள் விழாவுக்கான ஏற்பாடுகள் எல்லாம்
நடக்கின்றனவா என்று நான் கேட்டபோது, பேராசிரியர் அவர்களே
துணைவியாருக்கு உடல் நலம் சரியில்லை என்பதைக் காரணமாகக்
காட்டி, விழா ஏற்பாடுகள் எதுவும் வேண்டாமென்று கூறி
விட்டார்கள் எனத் தெரிவிக்கிறார்கள். உடனே நான் அவர்களைக்
கோபித்துக்கொண்டு, அவர் அப்படிக் கூறினால், நீங்கள் உடனே
ஏற்றுக்கொண்டு வந்துவிடுவதா, உடனடியாக ஏற்பாடுகளைத்
தொடங்குங்கள், நான் அவரைச் சமாதானம் செய்து கொள்கிறேன்
என்று கூறினேன். பொருளாளர் தம்பி ஸ்டாலின் உடனடியாக
வடசென்னை, தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்களை
வரவழைத்து விட்டார். இருவருக்குள் போட்டி - தங்கள்
பகுதிக்குள்தான் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தை வைத்துக்
கொள்ள வேண்டுமென்று! பின்னர் இருவருமே சமாதானமாகி
வடசென்னை, தென்சென்னை இரண்டு மாவட்டக் கழகங்களும்
இணைந்து கூட்டத்தைப் புகழ்பெற்ற தங்கசாலை மணிக்கூண்டு
அருகே நடத்துவதென்று முடிவுசெய்தனர். 2002ஆம் ஆண்டு,
பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களின் 81வது பிறந்த நாள்
விழாவினையும், இதே இடத்தில்தான் நாம் நடத்தினோம். மீண்டும்
பத்தாண்டுகளுக்குப் பிறகு இன்றைய தினம் 91வது பிறந்த நாள்
விழாவினை நடத்துகிறோம்.
பேராசிரியர் அவர்களின் போர்க்குணத்திற்கு ஆக்கம் தந்திடும்
வகையில் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளில் நாம்
மக்கள் பிரச்சினைக்காக அறப்போர் ஆர்ப்பாட்டத்தை அறிவித்
திருக்கிறோம். மாதவரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு
பேராசிரியர் அவர்களே தலைமை தாங்குகிறார். பிறந்தநாள்
விழாவிற்கு முன்பாக அறப்போர் ஆர்ப்பாட்டம், அதற்குத்
தலைமை! பேராசிரியரை முதன் முதலாக நான் எப்போது
சந்தித்தேன்?
திருவாரூரில் நடைபெற்ற இஸ்லாமியர் விழா, சிக்கந்தர்
விழா ஒன்று. 100 பேர் மட்டுமே அமர்ந்திடக் கூடிய - சிறிய
மண்டபம். அண்ணா அவர்கள்தான் சிறப்புப் பேச்சாளர். அவரைப்
பேசுவதற்காக அழைத்தவுடன், அவர் ஒலிபெருக்கியிடம் வந்து,
“நான் ஒரு இளைஞரை இங்கே அழைத்து வந்திருக்கிறேன். அவர்
அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர். நான் பேசுவதற்கு
முன் அவர் பேசுவார்” என்று கூறி அந்த இளைஞரை அங்கே
அறிமுகப்படுத்தினார். ஒல்லியான உருவம். ஒளியுமிழும் கண்கள்.
ஓடைப் புனலெனக் கருத்துக்கள் அப்போதே வெளிவந்தன.
மண்டபத்திற்குள்ளும் வெளியிலும் குழுமியிருந்தோர் வியப்பால்
விழிகளை விரித்து நிற்கின்றனர். அந்த இளங்குருத்துத்தான்
நம்முடைய பேராசிரியர்.
ஏ, அப்பா, காலில் சக்கரம் கட்டிக் கொள்ளாமல் காலம்தான்
எவ்வளவு வேகமாக ஓடி விட்டது? துள்ளித் திரியும் பருவத்திலே
தான் நான் அவரைப் பார்த்தேன். அப்போது அவரும் என்னைப்
போன்ற இளைஞரேதான். இன்று இருவரும் தள்ளாத கிழங்களாக
அன்றாடம் அலுவலகத்தில் அருகருகே அமர்ந்து ஒன்றாகச்
சிந்திக்கின்றோம். ஒருமனதாக முடிவெடுக்கின்றோம்.
1942ஆம் ஆண்டு திருவாரூரில் தமிழ் மாணவர் மன்றத்தின்
சார்பில் ஆண்டு விழாவினை நடத்தினேன். அந்த மாநாட்டில்
கலந்து கொள்ள பல பேரை அழைத்திருந்தேன். பெரும்பாலோர்
வரவில்லை. அவர்களை வரவேற்கப் புகைவண்டி நிலையத்திற்கு
நண்பன் தென்னனுடன் சென்றிருந்தபோதுதான் அவர்கள்
வரவில்லை என்று தெரிந்து, விழியிலே நீர் பெருக நின்றேன்.
நல்லவேளை, அந்த நேரத்தில் பேராசிரியர் - அப்போது அன்பழகன்,
மதியழகன் இருவரும் வந்து எனக்கு ஆறுதல் அளித்தனர். அன்று
எனக்குத் தோன்றாத துணையாய் வந்த பேராசிரியர் இன்றளவும்
துணையாய் வருகிறார்! எனக்குத்தான் எவ்வளவு பெருமகிழ்ச்சி.
அதனால்தான் அவருடைய மணிவிழா மலரிலே “பல்லாண்டு
பாடுகிறேன், பரவசத்தால் ஆடுகிறேன்” என்று எழுதினேன்.
பேராசிரியர் ஒரு முறை அவருடைய பிறந்த நாள் விழா
ஏற்புரையிலே பேசும்போது, “திருமணம் செய்துகொண்ட
மணமகனும், மணமகளும் கூட அறுபதாண்டு காலம் சண்டை
சச்சரவு இல்லாமல் ஒன்றாக இருந்தார்கள் என்ற வரலாற்றை
நீங்கள் காண முடியாது, ஆனால் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்”
என்று சொன்னார். ஆம், எழுபதாண்டு காலத்திற்கு மேலாக
நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம்.
என் கழகத்தை விட்டு, நமது நாவலர், ஆம் நமது நாவலர்தான்;
பிரிந்தபோது கூட, பேராசிரியர் அவர்கள், நாவலரோடு சென்று
விடுவார் என்றுதான் தமிழ்நாடே எதிர்பார்த்தது. சாதிப் பற்று
என்றெல்லாம் இப்போதும் பேசுகிறார்களே, அதையெல்லாம்
தூக்கிக் குப்பையிலே வீசிவிட்டு, பேராசிரியர் எனக்குத்
துணையாகத் தோள் கொடுத்தார். இன்றைக்கும் அந்தத்
தோள்களிலே தொத்திக் கொண்டுதான் நான் இருக்கிறேன்.
பேராசிரியப் பெருந்தகை - தமிழகம் முழுதும் சுற்றிச் சுற்றித்
தன்மான உணர்வை வளர்த்த வீறுகொண்ட சொற்பொழிவாளர்!
பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளர்!
சென்னைக்கு அண்ணா வந்தாலே, அவருக்கு விருந்தோம்பல்
நம்முடைய பேராசிரியர் வீட்டிலேதான்! சட்டப் பேரவை
உறுப்பினராக - நாடாளுமன்ற உறுப்பினராக - மக்கள் நல்வாழ்வுத்
துறை அமைச்சராக - நிதி அமைச்சராக அரும்பணியாற்றியவர்.
சோதனைச் சூறாவளி நமது கழகத்தின் மீது வீசிய நேரத்தில்
ஒடிந்து விழுந்த ஓதியமிலார்களைப் போலன்றி - அந்த நேரத்தில்
எல்லாம் கழக மாளிகையைக் காப்பவனே உண்மையான
அண்ணாவின் தம்பியாவான் எனக் கூறி, உறுதிமிக்க தூணாக
நின்று கழகத்தைக் காத்தவர் நம்முடைய பேராசிரியர்.
ஒருசில சமயங்களில் கழகம் எடுத்த பிரச்சினைகளிலே
கருத்து மாறுபாடுகள் தோன்றியதுண்டு - ஆனால் கவிழ்க்கும்
ஏற்பாடுகளை ஒருவருக்கொருவர் நினைத்ததே இல்லை.
கழகத்தின் வெற்றிக்கு எம்முறை சிறந்தது? எவ்வழி போகலாம்?
இந்த விவாதங்கள் இடம்பெற்றிருக்குமே தவிர விரோதங்கள்
தலைகாட்டியதில்லை, அன்றும் சரி, இன்றும் சரி.
பெரியாரால் உருவாக்கப்பட்டு, அண்ணா அவர்களால் வலிவும்
பொலிவும் ஏற்பட்டு, அவர்களின் வழித்தோன்றல்களால்
வளர்க்கப்படும் இந்தப் பேரியக்கம் எத்தனை எத்தனை வீரர்களின்
வியர்வையை, குருதியை, உயிரையே காணிக்கையாக்கி கடமை
ஆற்றி வருகிறது. பதவிகள் வரும், போகும், பருவக் காற்றுக்கு
ஏற்பவாறு மழை வருவதுபோல! இந்த ஆட்சியில் அந்த மழை வரக்
கூட அஞ்சுகின்ற நிலை!
பதவியோ மடு போன்றது! இதனைப் புரியாதோர் புன்மைச்
செயல்களில் ஈடுபட்டபோது, புண் பெற்ற நெஞ்சுடனே
கண்கலங்கியவர்தான் நாளைய விழா நாயகர், நம் பேராசிரியர்!
மணவழகர் ஈன்றெடுத்த செல்வன் - மாங்குயில் கூவிடும்
பூஞ்சோலை - எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை எனக்கூறி
மாத்தமிழ் காக்கும் 90 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த அரிமா -
பெரியாரின் தொண்டர் - அண்ணாவின் அருமைத் தம்பி - எனது
உடன்பிறப்பு - பேராசிரியர் அன்பழகன்.
நேர்மையான சிந்தனை - நிதானமான போக்கு - ஆழமான
நீர்நிலைக்குரிய அமைதி - ஆபத்து தமிழ் இனத்துக்கு என்றால்
அனலாகக் கொதிக்கின்ற உள்ளம் - இவற்றின் மொத்த
உருவம்தான் இனமானப் பேராசிரியர் என்கிறபோது நமது கழகப்
பாசறைக்குக் கிடைத்திட்ட ஒப்பற்ற கருவூலம் நமது பேராசிரியரே
என்றெண்ணி பேருவகை கொள்கிறேன்.
நெருப்பாற்றில் மெழுகுவத்தி மனிதர்கள் நீந்திக் கரையேற
முடியாதுதான் - கதை கூட அப்படி எழுத முடியாதுதான் - ஆனால்
இதோ பேராசிரியர் துணையுடன் நானும் கழகக் கண்மணிகளும்
நீந்திக் கரையேறி நின்று கொண்டிருக்கிறோமே! கனி குலுங்கும்
மரமாயினும் தனி மரம் தோப்பு ஆகாது! பயன்தரும் பல மரங்கள்
இருந்திட வேண்டும் தோப்பு எனும் இலக்கணத்திற்கு!
ஒரு இயக்கமும் அப்படித்தான். அடுத்தடுத்த வரிசையினர்
ஆற்றலாளர்களாக உருவாக்கப் படல் வேண்டும், அந்த இயக்கம்
பலன் அளித்திட நாட்டுக்கு! இந்த எண்ணம் அண்ணன் காலத்தில்
செயல்படுத்தப்பட்டது. இன்னமும் தொடர்ந்து கொண்டுதானிருக்
கிறது.
அவர் உருவாக்கிய தோப்பில் கிளையிலும், மாத்திலும்,
வேரிலும் சுனைக் கனி - சுவைக்கனி வழங்கிடும் பலவாகத்தான்
நமது பாசத்திற்குரிய பேராசிரியர் காட்சி அளிக்கிறார். கனி
தரும் பலா மட்டுமல்ல, காரிருளில் கரை காட்டும் கலங்கரை
விளக்கமாகவும் இருக்கின்ற அவருக்குத்தான் நாளை 91ஆம்
ஆண்டு பிறந்த நாள் விழா. அந்த நாளைக் கொண்டாடுவோம்.
அதுவே நமக்கு திருநாள் என்று! ஆம், பெற்றகரிய திருநாள்
பேராசிரியர் பிறந்த நாள்! வாழ்க பேராசிரியர்! வாழ்க வாழ்கவே!
அன்புள்ள,
மு.க.
19-12-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022) · பக்கங்கள் 260–264.
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 47 PDF ↗