உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 47

தொகுதி 47 · கடிதம் 3682

அன்பே வா! அந்தகார இருள் போக்க அரிமாவே வா!

2012-12-16

3682. அன்பே வா! அந்தகார இருள் போக்க

அரிமாவே வா!

உடன்பிறப்பே,

இடையில் இன்னும் இரண்டு நாட்கள்தான்...! நேற்று

செய்த கொடுமைகளையெல்லாம் இன்று மக்கள் மறந்திருப்பர்

என்றெண்ணி; தீட்டுகின்றோம் திட்டங்கள் ஆயிரத்தை என்று

நீட்டி முழக்குகின்றார்; நீலிக் கண்ணீர் வடிப்பதிலே நிகரற்ற

ஆட்சியாளர்!

அம்மையாரின் ஆட்சியிலே அந்தகார இருள் சூழ்ந்து;

அவதிப்படும் மக்கள் நிலை எண்ணிப் பாராய்! இன்று எத்தனைக்

கொலைகள்! எத்தனை களவு! தாலிச் சங்கிலி அறுப்புக்குத்

தடையில்லை! செய்யாத குற்றத்துக்கு எதிர்க் கட்சிக்காரர்கள்

என்றால் எத்தனை எத்தனை அடக்கு முறை? எத்தனை கொடுந்

தண்டனை? எத்தனை குண்டர் சட்டங்கள் ? இப்படி எத்தனை

கொடுமைகளை அ.தி.மு.க.வின் அன்றைய ஆட்சியிலும் -

இன்றைய ஆட்சியிலும் தமிழகம் அனுபவிக்க நேர்ந்தது என்பதை

அருமை உடன் பிறப்பே! எண்ணிப் பாராய்!

“சொல் ஒன்று; செயல் ஒன்று!” என்பதற்குச் சான்றாக

விளங்குகின்ற அவல ஆட்சியன்றோ இன்றைய ஆட்சி! அன்று

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் ஆயிரமாயிரம் பேர்; அவர்கள்

உரிமைகளைக் கேட்டதற்கு, அவர்களின் வீடுபுகுந்து அடித்து

விரட்டி; “ஏனென்றா கேட்கின்றாய்? எதிர்த்தாப் பேசுகின்றாய்?

வாலைச் சுருட்டிக்கொள்! இல்லையேல் வாயைக் கிழித்தெறி

வோம்!” என்று குண்டாந் தடிகளாலும், துப்பாக்கி முனைகளாலும்

பதம் பார்த்தவர்கள் - இன்றைக்கும் அந்த முறை பலிக்குமென்று

அடக்குமுறை ஆயுதங்களைக் கூர்தீட்டிப் பார்க்கின்றனர்! சிறைக்

கதவைத் திறப்போம் எனச் சீறிப் பாய்கின்றனர்!

சிலிர்த்தெழும் சிங்கக் கூட்டமே!

மாணவர் அணியே!

மகளிர் அணியே!

இளைஞர் முழக்கமிடும்

இளைஞர் பட்டாளமே!

“இருப்பது ஒரு உயிர்; அது - என்னரும் ஏழைத்

தமிழர்களை வாழ வைக்கவும் - இந்த இனத்தின் வெற்றியை

நிலைநாட்டவும் பயன்படட்டும்” என்று அறிஞர் அண்ணா

சொன்னாரே - இன்று அதனை அவர் தம்பி நினைவூட்டுகின்றேன்!

தடை பல கடந்து எங்கள் படை பெருகும்; என்பதை

மெய்ப்பிக்க - என்னுயிர் உடன்பிறப்பே! இன்றே தயாராகுக!

இடையில் இன்னும் இரண்டே நாட்கள்!

நான் சென்னையிலும்; பேராசிரியர் மாதவரத்திலும்; தளபதி

ஸ்டாலின்; அண்ணன் பிறந்த காஞ்சியிலும் தலைமையேற்று,

பெருகிவரும் இளைஞர் பட்டாளத்தை - மகளிர் அணியை -

மாணவர் சேனையை - விவசாயிகளின் அணிவகுப்பை -

பாட்டாளிகள் முழக்கும் எழுச்சி முரசத்தை - கண்டிடக் காத்திருக்

கின்றோம்!

எமது விழிகள்; உமது அறநெறிப் போருக்கான வழிகளை

அமைக்கட்டும்!

இருளில் தவிக்கும் தமிழகத்திற்கு; அந்த இருள் போக்கும்

பேரொளியாக - நீ எழுப்பும் அறப்போர் ஒலி அமையட்டும்!

அன்பே வா!

அந்தகார இருள் போக்க அரிமாவே வா!

அன்புள்ள,

மு.க.

16-12-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022) · பக்கங்கள் 253–254.

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 47 PDF ↗