உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 45

தொகுதி 45 · கடிதம் 3558

திரைப்படத்துறையும் - தி.மு.க.வும்!

2011-04-30

3558. திரைப்படத்துறையும் - தி.மு.க.வும்!

உடன்பிறப்பே,

முதுபெரும் எழுத்தாளர்களில் ஒருவரும் என்னுடைய மனம்

கவர்ந்த கருத்தாளர்களில் ஒருவருமான “சோலை” அவர்கள்

எதை எழுதினாலும் - அதனை விருப்பு வெறுப்பின்றி ஒரே சீரான

மனோநிலையில் நான் படிப்பது பொக்கம். படிப்பது மட்டுமல்ல,

நிந்தனைக்கு இடமின்றி - சிந்தனையில் அதனை அசை போட்டு;

பாலும் நீரும் கலந்த கலவையில், தனக்கு வேண்டியதை மாத்திரம்

எடுத்துக் கொள்ளும் அன்னப்பறவை போன்ற நிலையினின்று -

என்றைக்கும் தடுமாறாதவன் நான். ஆதலால் தமிழகத் திரைப்படத்

துறை குறித்து அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையை ‘நக்கீரன்’ வார

இதழில் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

தொண்டாற்றியும் தொடர்ந்து தியாகங்கள் செய்தும் -

இயக்கத்தின் தருக்களாக வளர்ந்துள்ள என் பிள்ளைகள் - அழகிரி,

ஸ்டாலின், தமிழரசு ஆகியோரும் அவர்களுடைய பிள்ளைகளும்

திரையுலகிலும் பொருளீட்டி புகழ் ஈட்டுவதைப் பொறுத்துக்

கொள்ள முடியாத சிலர் எனக்கு நண்பர்களாக இருந்து கொண்டே

நச்சுக்கணைகள் பாய்ச்சுவதை நாட்டுக்கு உணர்த்தி - ‘பாட்டுக்கு

பாட்டெடுப்பேன்’ என்ற பாணியில் இல்லாமல் - பகுத்தாய்ந்து;

தெளிந்திடுக எனும் வேண்டுகோளோடு இந்த விளக்கத்தை

அளிக்க விரும்புகிறேன்.

1945 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 75க்கு மேற்பட்ட

திரைப்படங்களுக்கு - திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறேன்.

நான் திரைக்கதை வசனம் எழுதிய முதல் படங்களான அபிமன்யூ

ராஜகுமாரி ஆகியவற்றில் எனது அருமை நண்பர் எம்.ஜி.ஆர்.

கதாநாயகனாகத் தோன்றியிருக்கிறார். அவரையடுத்து, எனது

அன்பு நண்பர் சிவாஜி “பராசக்தி” படத்தில் கதாநாயகனாக நடித்துப்

பெரும் புகழ் பெற்றார். இப்படி எனக்கும் திரைப்படக் கலைஞர்கள்,

இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைவாணர்கள், கவிஞர்கள்,

தொழிலாளர்கள் ஆகியோருக்கும் இருந்த தொடர்புகளையும்

இருக்கின்ற தொடர்புகளையும் திரையுலகைத் தெளிவாகப்

புரிந்தவர்கள் மறந்திருக்க முடியாது.

எழுத்து நடையின் வேகத்தில் சோலை அவர்கள் யாரோ

ஒருவர், பெரியதோர் தயாரிப்பாளர் கோபத்தின் உச்சத்தில்

இந்த ஆட்சி மாறினால்தான் சினிமாத்துறைக்கு விடிவு காலம்

என்று ஆதங்கப்படுவதாகக் குறிப்பிட்டு, அவர் பெயரையும்

வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்தப்

பெயரை வெளியிட நான் விரும்பவில்லை.

தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை வெளியிட தியேட்டர்களே

கிடைக்கவில்லையென்று சினிமா வட்டாரத்தில் விமர்சிக்கிறார்கள்

என்று சொல்லவும் சோலை தவறவில்லை.

என் செய்வது? படம் எடுப்பதற்கு ஆள் இல்லாமல்,

ஸ்டுடியோக்களையும், திரையரங்குகளையும் மூடிவிட்டு, அந்த

இடங்களை திருமண மண்டபங்களாகவும், ஓட்டல்களாகவும்,

கிடங்குகளாகவும் மாற்றிடும் நிலைமை ஏற்பட்டது ஒரு காலம்.

தற்போது படங்களை வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லை

என்று அலைகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது

என்பதை நான் எழுதி வெளிவந்துள்ள “பொன்னர் - சங்கர்”

திரைப்படத்துக்கும் எங்கும் தியேட்டர்கள் கிடைக்கவில்லை -

அலையாய் அலைந்துதான் தியேட்டர்களைப் பிடிக்க முடிந்தது

என்று அதன் தயாரிப்பாளர்கள் கண்ணீர் விட்ட நிகழ்ச்சியெல்லாம்

எனக்குத் தெரியும்.

கடலூரில் ஒரு தியேட்டரில் “பொன்னர் சங்கர்” திரைப்படம்

திரையிடப்பட்டு அரங்கம் நிறைந்த காட்சிகளாக நடைபெற்றுக்

கொண்டிருந்தபோதே - இரண்டாம் நாளே அந்தத் திரைப்படத்தை

கட்டாயப்படுத்தி எடுத்து விட்ட செய்திகள் எல்லாம் சோலை

அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில்

ஒரு மூதாட்டி “கருணாநிதியின் பேரன் பேத்திகள் எல்லாம்

சினிமா படம் எடுக்கிறார்களே, எப்படி” என்று கேட்டதாக சோலை

எழுதியிருக்கிறார். பாவம் அந்தப் பாட்டிக்கு ஏ.வி.மெய்யப்ப

செட்டியார் திரைப்படம் எடுத்து - பின்னர் அவருடைய மகன்கள்

ஏ.வி.எம் முருகன், ஏ.வி.எம்.குமரன், ஏ.வி.எம்.பாலசுப்ரமணியம்,

ஏ.வி.எம்.சரவணன், அவருடைய மகன் குகன், மருமகள் நித்யா

போன்றவர்கள் எல்லாம் திரைப்படத் துறையிலே இருப்பதும் -

நடிகர் திலகம் சிவாஜிக்குப் பிறகு அவருடைய மகன்கள் ராம்குமார்,

பிரபு அவருடைய மகன் துஷ்யந்த் போன்றவர்கள் திரைப்படத்

துறையில் பாடுபட்டதும் -சூப்பர்ஸ்டார் ரஜினி, அவருடைய

அன்பு மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோர் திரைப்படத்

துறையில் இருப்பதும் - கலைஞானி கமல், அவருடைய சகோதரர்

சாருஹாசன், மகள் ஸ்ருதி, மற்றும் சுகாசினி, மணிரத்னம்,

அனுஹாசன் போன்றவர்கள் எல்லாம் இந்தத் துறையிலே

ஈடுபட்டிருப்பதும் - தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி மற்றும்

அவருடைய பிள்ளைகள் ஜீவா, ஜித்தன் ரமேஷ் போன்றவர்கள்

இருப்பதும் - குணச்சித்திர நடிகர் சிவக்குமார், அவருடைய

பிள்ளைகள் சூர்யா, கார்த்தி போன்றவர்கள் திரைப்படத்துறையில்

ஈடுபட்டிருப்பதும் ரெட்டியார் சத்திரம் மூதாட்டிக்குத் தெரியாமல்

போனதுதான் வேடிக்கை. அது மாத்திரம் அல்ல, கடந்த காலத்தில்

எத்தனை படத்தயாரிப்பாளர்கள் படங்களைத் தயாரித்து அதனை

முடிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்கள், எத்தனை

பேர் படம் எடுத்த காரணத்தினாலேயே ஓட்டாண்டியாக ஆகி

தெருவிலே நின்றார்கள் என்பதையெல்லாம் என் நண்பர் கவிஞர்

கண்ணதாசன் எழுதி புத்தகமாக வெளியிட்டார். அதை நக்கீரன்

இதழ் வாங்கி வெளியிடுமானால் நன்றாக இருக்கும்

என் குடும்பத்திலே என்னுடைய பிள்ளைகளோ,

பெண்களோ, பேரர்களோ அரசியலிலே ஈடுபட்டால் வாரிசு

அரசியல் என்பதற்கும் - திரைப்படத் துறையிலே ஈடுபட்டால்

அதற்கு அர்த்தம் கற்பிப்பதற்கும் என்னதான் காரணமோ? ஏன்தான்

இந்த நெஞ்செரிச்சலோ?

ஆட்சி மாற வேண்டுமென்று துர்வாச முனிவரைப்போல

கோபப்பட்ட தயாரிப்பாளருக்கு நான் நினைவூட்ட விரும்புவது -

ஏன் அவரே பல முறை கொஞ்ச காலத்திற்கு முன்பு வரையில் பல

மேடைகளில் சொல்லியதுதான் அவை வருமாறு :

குறைந்த செலவில் தயாரிக்கப்படும் தமிழ்ப் படங்களை

ஊக்குவிக்கும் நோக்குடன் தகுதி வாய்ந்த தமிழ்த்

திரைப்படங்களுக்கு அவை வெளியிடப்பட்டது

முதல் 4 வாரங்கள் வரை கேளிக்கை வரியில் இருந்து

விலக்கு அளிக்கும் திட்டம் முதன் முதலாக 12.12.1996

அன்று கழக அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டு

நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால்

அதற்கு முன்பு இருந்த ஆட்சியில் கேளிக்கை வரி

வசூலிக்கப்பட்டுத்தான் வந்தது.

புதிய படங்களுக்குக் கேளிக்கை வரியை 54

விழுக்காட்டில் இருந்து 40 விழுக்காடாக 1989ஆம்

ஆண்டில் குறைத்த கழக அரசு, 1.8.1998 முதல் 40

விழுக்காட்டில் இருந்து 30 விழுக்காடாகவும், 2000இல்

25 விழுக்காடாகவும் குறைத்தது.

10 ஆண்டுகளுக்கு முன்வந்த திரைப்படங்களுக்குக்

கேளிக்கை வரியை

40 விழுக்காட்டில் இருந்து 20 விழுக்காடாக 1.8.1998

அன்று குறைத்ததுடன்;

மொழிமாற்றுப்படங்களுக்கான கேளிக்கை வரியையும்

பிற தமிழ்ப்படங்களுக்குக் குறைக்கப்பட்டது போல்

குறைத்தது கழக அரசு. இதேபோல, இணக்க வரி

விதிப்புகளும் அதற்கேற்றாற்போல் குறைக்கப்பட்டன.

இந்த வரிக்குறைப்புகளின் மூலம் ஆண்டிற்கு 60

கோடி ரூபாய் அளவிற்கான வரிச் சலுகைகளைத்

தமிழ்த்திரைப்பட வரலாற்றில் இல்லாத அளவில்

1996ஆம் ஆண்டிலேயே கழக அரசு வழங்கியது.

விற்பனை வரிச் சட்டத்தின்படி, திரைப்படங்களுக்கான

உரிமை மாற்றம் மீது 1.4.1986 முதல் 11.11.1999 வரை

செலுத்த வேண்டிய வரியினைத் தள்ளுபடி செய்ததுடன்,

உரிமை மாற்றத்திற்கான விற்பனை வரியை 12.11.1999

முதல் 11 விழுக்காட்டில் இருந்து 4 விழுக்காடாகவும்

குறைத்தது கழக அரசு. 1.4.2000 முதல் திரைப்படங்கள்

குத்தகை மீதான 4 விழுக்காடு விற்பனை வரி அறவே

நீக்கப்பட்டது

திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர்கள்

வைக்கப்படுமானால், அதற்கு முழு கேளிக்கை வரி

முழுமையும் ரத்து செய்யப்பட்டிருப்பதும் இந்த

ஆட்சியிலேதான்.

தொல்பொருள் ஆய்வுத் துறையின்கீழ் உள்ள மற்றும்

கலைச் சின்னங்கள் உள்ள இடங்களுக்குச் செலுத்தி

வந்த படப்பிடிப்புக் கட்டணம் ஓரிடத்திற்கு ஒரு

நாளைக்கு 5000 ரூபாய் என்பதை 1000 ரூபாய் எனவும்,

ஏனைய இடங்களுக்கு 2500 ரூபாய் என்பதை 500

ரூபாய் எனவும் 1996இல் குறைத்தது கழக அரசு.

இராஜாஜி மண்டப படப்பிடிப்பு வாடகை கழக ஆட்சியில் -

1 நாளைக்கு ஆயிரம் ரூபாய் என்று இருந்ததை 2003இல்

1 இலட்சமாக உயர்த்தியது ஜெயலலிதா அரசு. 2004

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்குப்பின்

அது 25 ஆயிரம் ரூபாயாகக் குறைக்கப்பட்டது. அது

25.6.2006. அன்று கழக அரசினால் 10 ஆயிரம் ரூபாயாக

மேலும் குறைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு

நடத்தப்படும் இடங்களில் வகை-1 என்ற பிரிவில்

குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு ஜெயலலிதா ஆட்சியில்

10 ஆயிரம் ரூபாய் என்று விதிக்கப்பட்ட கட்டணம் 5

ஆயிரம் ரூபாயாகவும், வகை-2இன் கீழ்வரும் இடங்

களுக்கு முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 5 ஆயிரம் ரூபாய்

என்று விதிக்கப்பட்ட கட்டணம் 3 ஆயிரம் ரூபாயாகவும்

குறைக்கப்பட்டுள்ளது.

சின்னத் திரைக்கான படப்பிடிப்புக் கட்டணங்கள் பெரிய

திரைக்கான கட்டணங்களில் 50 சதவீதம் மட்டுமே

செலுத்தினால் போதும் எனவும் 25.6.2006 அன்று

ஆணையிட்டது கழக அரசு.

தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் சண்டைப்

பயிற்சியாளர்கள் சண்டைக் காட்சியின்போது உயிரிழக்க

நேர்ந்தால் அவர்களுடைய குடும்பத்திற்கு 1 இலட்ச

ரூபாயும், செயல்பட முடியாத அளவிற்குக் காயம்பட்டு

ஊனமடைய நேர்ந்தால் அவர்களுடைய குடும்பத்திற்கு

50 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவி வழங்கும்

திட்டத்தை 1996இல் அறிமுகப்படுத்தி தொடர்ந்து

நடைமுறைப்படுத்தி வருகிறது கழக அரசு.

திரைப்படக் கலைத்துறை, சின்னத்திரை சார்ந்த

தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப

உதவியாளர்கள், தொழிலாளர்கள் அனைவருக்கும்

வீடுகள் கட்டுவதற்காக காஞ்சிபுரம் மாவட்டம்

சிறுதாவூருக்கு அருகில் பையனூரில் 96 ஏக்கர் நிலம்

வழங்கப்பட்டுள்ளது.

திரைப்படத்துறையின் உழைப்பாளிகள் நலன்களைக்

காத்திட திரைப்படத் துறையினர் நல வாரியம்

அமைக்கப்பட்டுள்ளது.

9.7.2008 அன்று “உளியின் ஓசை” படத்தின் மூலம்

எனக்குக் கிடைத்த கதை வசனத்துக்கான ஊதியம் 25

இலட்ச ரூபாயில் வருமான வரி போக 18 இலட்சம் ரூபாய்

திரைத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றும்

மூத்த கலைஞர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.

உடன்பிறப்பே, நண்பர் சோலை அவர்கள் திரைப்படத்

துறையிலே உள்ள ஒரு சிலரின் எண்ணத்தை தன் கட்டுரையின்

வாயிலாக தெரிவித்திருப்பதையொட்டி இந்த விளக்கத்தை

அவர்களுக்கெல்லாம் தெரிவித்திட உதவியதற்காக நன்றி

தெரிவித்துக் கொண்டு திரையுலகத்திற்கு கழக ஆட்சியிலே

செய்யப்பட்ட ஒருசில சாதனைகளை இங்கே சொல்லியிருக்

கிறேன். இதையெல்லாம் செய்த குற்றத்திற்காகத்தான் இந்த

ஆட்சி மாற வேண்டுமென்று திரைப்படத் துறையிலே உள்ள

ஒரு சிலர் எண்ணுவார்களானால், அவர்களுக்கு விளக்கம் அளிக்க

வேண்டிய பொறுப்பு என் நண்பர் சோலை அவர்களுக்குத்தான்

உண்டு. கலைத் துறை, இலக்கியத் துறை இரண்டையும்

என் அரசியல் இலட்சியப் போராட்டத்திற்குத் தேவையான

போர்க்கருவிகளாக நான் கருதுகிறேன். சில பேர் இலட்சியப்

போரின் பக்கம் அடியெடுத்து வைக்காமல், தலைவைத்துப்

படுக்காமல் கலைத்துறை, இலக்கியத் துறைகளால் மட்டுமே

ஈர்க்கப்பட்டு செயல்படுகிறார்கள். காரணமின்றி அவர்களில்

சிலருக்கு என் மீது அழுக்காறும், அசூயையும் ஏற்படுவது இயல்பு

தான். அதற்காக நான் என்னுடைய இலட்சியத்தை புதைத்து

விட்டு, இலட்சங்களைத் தேடி அலைய மாட்டேன்.

அன்புள்ள,

மு.க.

30-04-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022) · பக்கங்கள் 170–175.

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 45 PDF ↗