தொகுதி 45 · கடிதம் 3556
பார்த்தும் மறந்தாரே “காரத்”!
2011-04-21
3556. பார்த்தும் மறந்தாரே “காரத்”!
உடன்பிறப்பே,
சாதியில் தங்களை உயர்ந்தவர்கள் என்று கருதிக்
கொண்டு அந்த இழிவான எண்ணத்தை மெய்ப்பிப்பதற்காக
கடும் முயற்சியிலே ஈடுபட்டு அதற்காக பூணூலை உருவிக்
கொண்டு போர்க் குரல் கொடுத்த கூட்டத்தை எதிர்த்து அய்யா
பெரியாரும் - அறிஞர் அண்ணாவும் அறப்போர் ஆயுதங்களை
ஏந்தி ஆயிரக்கணக்கான இளைஞர்களை தம் அணியில் திரட்டி,
தன்மான இயக்கத்தின் விரிவாக்கம் கண்ட போது வர்ணாசிரம
வெறி கொண்ட வைதீகப் புரியினர் வெகுண்டெழுந்து பெரியார்
மீதும், அண்ணா மீதும் கடுங்கணைகளை - காதால் கேட்க
முடியாத சுடுமொழிகளை வீசித் தாக்கி வந்த காலந்தொட்டு -
நானும் கவனித்து வருகின்றேன்; உன் போன்றோரும் கவனிக்கத்
தவறியிருக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையும் கொண்டுள்ளேன்.
அருவருக்கத்தக்கதும் - ஆபாசமானதுமான அர்ச்சனைகளை
உயர் வர்க்கத்தார் எனக் கருதிக் கொண்டிருப்பவர்கள்
அன்றும் சரி - இன்றும் சரி - நம்மீது பொழிவதை நிறுத்திக்
கொள்ளவில்லை. அவற்றுக்கு மறுப்புக் கருத்தாக நாம் எழுதியோ
- பேசியோ அவர்களுக்கு விளக்கம் அளிக்கும்போது எந்தவொரு
நிலையிலும் - தரம் தாழ்ந்து அவர்களை விமர்சிக்கும் முறையை
கையாண்டதில்லை.
எதிர் தரப்பினரின் எரியீட்டிகள் பாயும் போதெல்லாம்
எவ்வளவு பவ்வியமாக - பக்குவமாக - பண்பாடு கெடாமல் பழைய
உறவுக்கு எந்தப் பங்கமும் ஏற்பட்டு விடாமல் துடிக்கும் இளமை
வாய்ந்த வாலிபனாக நான் விளங்கிய காலத்திலிருந்து - இன்று
வரை மாற்றுக் கட்சித் தலைவர்களை - மாற்று முகாமிலே உள்ள
நண்பர்களை - மதிக்கும் போக்கினை துளியளவும் கைவிடாமல்
கடைப்பிடித்திருக்கிறேன் என்பதும் - இன்னமும் கடைப்பிடித்து
வருகிறேன் என்பதும் என் இயல்பு மட்டுமல்ல - என்னை
ஆளாக்கிய பெரியார் - அண்ணா ஆகிய இருவரின் வழியில் நடந்து
நாம் பெற்றுள்ள வளர்ச்சியுமாகும்.
எதிர் வரிசை இயக்கங்களில் குறிப்பாக கம்யூனிஸ்ட்
இயக்கங்களின் மீது - அதன் தலைவர்கள் எனப்படுவோர்
சிலர் மீது - எத்துணை வருத்தங்கள் அல்லது கோபங்கள்
ஏற்பட்டாலும், அவற்றை வெளிப்படுத்தும் போது - அவர்கள்பால்
கொண்டிருக்கும் அன்பையும் - பழைய நட்பையும் என்றைக்கும்
நான் மறந்தவனல்லன்!
அண்ணன் ஜீவானந்தம் என்றும் - பெரியவர் மணலி என்றும் -
மரியாதை கலந்த அன்பு வைத்தே அவர்களிடம் பழகியிருக்கிறேன்.
இன்னமும்
திரு.நல்லகண்ணு போன்றவர்கள் அந்த வரிசையில்தான்
என் உள்ளத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த உண்மையும்,
உயிர்நாடிகளில் ஒன்றாக நாம் ஏற்றுக் கொண்டுள்ள “கம்யூனிசம்”
என்ற கொள்கையும் - என்னை இயக்கிக் கொண்டிருக்கிற குன்றாத
குருதியோட்டமாகவே திகழ்வதை அக்கட்சிகளின் நண்பர்கள்
பலரும் அறிவார்கள். அத்தகைய நண்பர்களில் ஒருவராகத்தான்
அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. பிரகாஷ் காரத்
அவர்களை நான் கருதியிருக்கிறேன்.
அவர் எனக்கு அறிமுகமான காலத்திலிருந்து இடையிடையே
ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் எங்கள் நட்பை என்றைக்கும்
பாதித்ததில்லை.
திராவிட இயக்கத்தை - பெரியாரை - அண்ணாவை; விபூதி
வீரமுத்துக்கள் போன்ற நாராச நடையினர் விமர்சித்துத் தாக்கிய
காலத்தை நாம் மறந்து விட முடியாத அளவுக்கு பாண்டியன்களும்,
ராம கிருஷ்ணன்களும் நரகல் நடையில் நம்மை இழித்தும்
பழித்தும் பேசுகிறார்களே என எண்ணும் போது கூட, தோழர்
பிரகாஷ் காரத் போன்றவர்கள் - எச்சூரி போன்றவர்கள் அந்த
அணியில் இருக்கிறார்களே என்பதை நினைத்து - இவர்களது
ஏசுப்பேச்சுக்களை தரக்குறைவான தாக்குதல்களை நான்
பொருள்படுத்தாமல் இருந்து விடுவதுண்டு.
காரணம் இவர்களையெல்லாம் விட கம்யூனிசக் கொள்கை
மீது என்னைக் கவர்ந்த அம்சங்கள் பல இருப்பதுதான் என்பதை
நானே அவ்வப்போது வெளிப்படுத்தியிருக்கிறேன். ஆனால் நான்
வியப்படைந்து, விழி கலங்கும் நிலையில் படித்த ஒரு செய்தி திரு.
பிரகாஷ்காரத் அவர்கள் பெயராலேயே “தீக்கதிர்” ஏட்டில் வெளி
வந்திருப்பதைப் பார்த்து, திகைத்துத் திடுக்கிட்டேன்.
“தீக்கதிர்” ஏட்டில் என்னைப் பற்றியும் - என் தலைமையில்
உள்ள கழகத்தைப் பற்றியும் இழிமொழிகள், ஏசல் மொழிகள் வெளி
வருவது வழக்கம் தான் என்றாலும், அந்த வழக்கத்திற்கு மாறாக
இந்தச் செய்தியின் கர்த்தாவாக நண்பர் பிரகாஷ்காரத் இருப்பது
தான் என்னைத் திடுக்கிடச் செய்த ஒன்றாகும்.
“மாநில சுயாட்சி மற்றும் மத்திய-மாநில
உறவுகளுக்குக் குரல் கொடுத்த கட்சிகளில்
முன்னோடியாக விளங்கியது தி.மு.க. அத்தகைய
பாரம்பரியம் கொண்ட ஒரு கட்சி மிகவும் தரம் தாழ்ந்து
இன்றைய தினம் ஒரு குடும்ப முன்னேற்றக் கழகமாக
மாறி, கொள்ளையடித்த பணத்தைத் தேர்தலிலும்
பயன்படுத்தி, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள
முயல்வதைப் பார்க்கும்போது, மிகவும் பரிதாபமாக
இருக்கிறது”
இந்த வரிகள் திரு. பிரகாஷ் காரத் அவர்களால் கூறப்பட்டவை.
அவரது இந்தக் கூற்றுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்து குடுமி
பிடி சண்டையில் ஈடுபட நான் விரும்பவில்லை. ஏனெனில்
மூன்றாண்டுகளுக்கு முன்பு கூட அவரும், அவருடன் சில
கம்யூனிஸ்ட் கட்சி தளபதிகளும் சென்னையில் என் வீட்டிற்கே
வந்து கொள்கை அடிப்படையிலான பல கருத்துக்களையும்
- இந்திய தேசிய அடிப்படையிலான பல கருத்துக்களையும் -
காங்கிரஸ் கட்சியுடன் உறவு உண்டா இல்லையா - இனியும்
நீடிக்குமா - என்பன போன்ற பல கருத்துக்களையும் -
அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் போன்ற கருத்துக்களையும்
மணிக்கணக்கில் உரையாடி விவாதித்திருக்கிறோம்.
ஆனால் அந்தச் சமயங்களில் என் இதயத்தில் நல்லதோர்
இடத்தைப் பெற்றிருந்த அந்த நண்பர் காரத் இப்போது ஏன்
இத்தகைய நச்சு நினைப்பினர் ஆனார் என்பது தான் எனக்குப்
புரியவில்லை - என்றாலும் நாம் கட்டிக் காத்து வரும் அண்ணா
வழி - பெரியார் வழி - பண்பாட்டுச் சங்கிலியில் ஒரு கண்ணி
கூட தேய்ந்து அறுந்து விடாத அளவுக்கு அந்த நண்பரோடு பழகி
வந்திருக்கிறேன். ஆனால் கம்யூனிஸ்ட் ஏட்டில் இந்த வாசகங்கள்
அவர் பெயரால் வெளி வந்த பிறகு “அவரா இவர்?” என்ற
கேள்விக்கு பதில் காண முடியாமல் துடித்துத்தான் போகிறேன்.
அவர் எழுப்பியுள்ள “குடும்ப முன்னேற்றக் கழகம்” என்ற
குற்றச்சாட்டுக்கு அவரோடு இணைந்து இயக்கப் பணியாற்றும்
திருமதி பிருந்தாகாரத் அவர்களே விடையாகவும் விளக்கமாகவும்
விளங்கும்போது அந்தக் குற்றச்சாட்டைத் தவிர்த்து - “ஆட்சியைத்
தக்க வைத்துக் கொள்ள முயல்வதைப் பார்க்கும்போது மிகவும்
பரிதாபமாக இருக்கிறது” - என்று அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு
மாத்திரம் பதில் சொல்ல விரும்புகிறேன்.
ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள கருணாநிதி முயலுவதைப்
பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக இருக்கிறது என்கிறார் அந்த
நண்பர். கொள்கை அடிப்படையில் நானும், என் தலைமையில்
உள்ள கழகமும் விடாப்பிடியாக இருந்து இலங்கை பிரச்சினையிலும்
- மத்திய மாநில உறவுகள் பிரச்சினையிலும் - “நெருக்கடிக்
கொடுமைக்கு ஈடு கொடுத்து இந்தியாவிலேயே சுதந்திரக்
காற்றைச் சுவாசிக்கும் இடம் தமிழ்நாடுதான்” என்று தோழர் ஈ.எம்.
எஸ். நம்பூதிரிபாட் அவர்களே சென்னை கூட்டத்தில் பாராட்டிய
அளவுக்கு - நானும், என் தலைமையிலே உள்ள கழகமும் நிமிர்ந்து
நின்ற போது அதைப் பார்க்காமல் இருந்து விட்டாரே - அல்லது
பார்த்தும் இப்போது அதை மறந்து விட்டாரே “காரத்” என்பதை
நினைக்கும்போது தான் எனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது!
அன்புள்ள,
மு.க.
21-4-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022) · பக்கங்கள் 160–163.
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 45 PDF ↗