உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 45

தொகுதி 45 · கடிதம் 3553

“குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை”!

2011-04-05

3553. “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை”!

உடன்பிறப்பே,

ஓய்வுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு - கடுமையான வெயிலிலும்

- கொடுமையான குளிரிலும் மாறி மாறிப் பயணம் செய்து - நமது

கூட்டணியின் வெற்றிப் பதாகையைத் தூக்கிப் பிடிக்க ஆங்காங்கு

நிறுத்தப்பட்டிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழக - காங்கிரஸ்

- பாட்டாளி மக்கள் கட்சி - விடுதலைச் சிறுத்தைகள் - இந்திய

யூனியன் முஸ்லிம் லீக் - கொங்குநாடு முன்னேற்றக் கழகம் -

மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - பெருந்தலைவர் மக்கள் கட்சி

ஆகியவற்றின் வேட்பாளர்களையெல்லாம் அறிமுகப்படுத்தவும்

- அவர்கள் ஆற்றி வரும் சமுதாயப் பணிகளை நினைவுபடுத்தி

அப்பணி தொடரவும் - அவர்களை மூல பலமாகப் பெற்றுள்ள

நமது ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு

ஈட்டி முனைகளாக இருந்து இடையறாது பணியாற்றிடுவீர்

என்று அணியின் செயல்வீரர்களைக் கேட்டுக் கொள்ளவும் -

அவர்தம் வேண்டுகோளையும், என் வேண்டுகோளையும் ஏற்று

வெற்றிக் கொடியேற்றிட வாரீர், வாரீர் என - உடன்பிறப்பாம்

உங்களுக்கெல்லாம் அழைப்பு வேண்டுகோள் விடுக்கின்ற இந்த

நேரத்தில் - என் சுற்றுப்பயணத்தின் களைப்பு நீங்கி - மேலும்

சுறுசுறுப்பாக உங்களோடு இணைந்து ஓடியாடி உழைக்கும்

திறனை மென்மேலும் வளர்ப்பதற்குப் பதிலாக - ஆங்காங்கு

உடன்பிறப்புக்களாம் உங்களிடையே களத்தில் ஏற்படும் கவலை

தரும் நிகழ்வுகள் என் பயணத்தைச் சற்று தயக்கமுறச் செய்து

வருவதை, கழகத்தின் தற்கால நலன் கருதியும், எதிர்கால வளர்ச்சிக்

கருதியும் வெளிப்படையாகவே கூற விரும்புகிறேன்.

அப்படிக் கூறுவது என் சிறு கவலைக்குக் கூட அருமருந்தாகும்

என்ற நம்பிக்கையினால் இதை எழுதுகின்றேன்.

எந்தவொரு இயக்கத்திலும் கருத்து வேறுபாடுகள் -

அவற்றால் விளையும் கசப்புணர்வு - அலைகளிடையே நுரைகளின்

தொகுப்பாக வெளிப்படுவது இயற்கை. ஆனால் அவற்றால் கடல்

அலைகள் ஓய்ந்து விடுவதுமில்லை - கடலே முற்றாக காய்ந்து

விடுவதுமில்லை.

கடல் -

அலை -

நுரை -

இவை நிரந்தரமானவை. அதற்காக

கடலையோ -

அலையையோ -

நுரையையோ -

வெறுத்து விடுபவர்களும் இல்லை - வேண்டாமென்று

ஒதுக்கி விடுபவர்களும் இல்லை.

இதை மனத்திற்கொண்டு சிந்தித்து செயல்படுவதே செயல்

வீரர்களாம் இந்தக் கூட்டணியின் அனைத்துக் கட்சிச் செயல்

வீரர்களுக்கும் நான் விடுக்கும் அன்பான அறைகூவலாகும்.

கேள்விப்படுகிறேன் -

ஏன் நேரிலும் கண்டு வந்தேன் -

யாரும் சொல்லாமலே - உணர்ந்தும் வந்தேன் -

இந்தச் சுற்றுப் பயணம் பல்லாயிரக் கணக்கான வாக்காளப்

பெருமக்களை - இயக்கங்களின் ஈடற்ற உழைப்பாளிகளைக்

காண்பதற்குப் பயன்பட்டதென்றாலும் - பளபளப்பானப்

பட்டாடையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக - சிக்கிச்

சீர்குலைக்கும் சிறு சிறு மனத்தாங்கல்கள் - என் கண்ணையும்

கருத்தையும் உறுத்திடத் தவறவில்லை.

“இவரை வெற்றிபெறச் செய்தால், நமக்கென்ன இலாபம்?

செய்தால்தான் கிடைப்பது என்ன இலாபம்?” என்று நெஞ்சில் ஒரு

கோணல் ஏற்படுமேயானால் - உங்கள் எல்லோரையும் இணைத்து

- நான் நெய்திட விரும்பும் பட்டாடைக் கிடைத்திடுமா? அதைப்

பக்குவமாய் படைத்திடத்தான் இயலுமா? என்ற கலக்கம் என்னை

ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்தக் கூட்டணியில் யார் பெறுகிற வெற்றியானாலும் அது

நமது நாட்டுக்கே ஏற்றமும் வெற்றியும் வழங்குவதல்லவா? என்ற

உணர்வுதான் மகத்தானது; மரியாதைக்குரியது எனும் பரந்த

மனப்பான்மையோடுதான் உலகக் கோப்பை வெற்றியில் 11

பேர்தான் கோப்பையைப் பெற்று மகிழ்ந்து கொண்டாடினார்கள்

என்றாலும் - இந்த உலகில் உள்ள இந்தியர்கள் அனைவரும், ஏன்

குறிப்பாகத் தமிழர்கள் அனைவரும் குதூகலித்து கொண்டாட்டம்

போடுகிறார்களே; அந்த வெற்றியில் தமக்குக் கிடைத்த பங்கு

என்ன என்று கருதிப் பார்த்தா அல்லது கணக்குப் பார்த்தா இப்படிக்

களிப்பில் ஆடுகிறார்கள்?

இல்லை - இல்லவே இல்லை! ஓர் உணர்வு - உயிரினும்

மேலான உணர்வு - அந்த 11 பேர் பெற்ற வெற்றியை - அந்த 11

பேர்தானே பெற முடியும் - பார்த்தோர், ரசித்தோர் என பல்லாயிரக்கணக்கானவர் பெறமுடியுமா? எனினும், ஒவ்வொருவரும் அந்த

வெற்றியைப் பெற்றதாகத்தானே மகிழ்கிறார்கள்.

அஃதேபோல் 234 தொகுதிகளில் வெற்றி பெறுவோரின்

எண்ணிக்கை 234 தானே இருக்க முடியும்? நாம் இல்லாத

அந்தக் குழுவில் யார் வெற்றிபெற்றால் என்ன என சிந்திப்போர் -

சிடுசிடுப்போர் - சீறிடுவோர் யாராயினும் அவர்கள் நாட்டுப்பற்றின்

மேன்மை அறியாதவர்கள் என்றுதானே கருதப்படுவர்.

விளையாட்டுக் களத்தில் பெறவேண்டிய வெற்றிக்கு

ஒவ்வொரு இடத்தில் இருந்தும் ஓடியும், உதவியும், உற்சாகப்

பண்பாடியும், ஒருவருக்கொருவர் ஊக்கம் தந்தும் - வெற்றியின்

மொத்த வடிவத்தைத் தூக்கி நிறுத்துவது போலத்தான் -

ஜனநாயகம் காத்திட நடைபெறும் தேர்தல் களத்தில் ஓரணியில்

நிற்போர் அனைவரும் ஒத்துழைத்து வெற்றி வாகை சூடுவதில்

“நான் முந்தி - நீ முந்தி” என்று போட்டிபோட வேண்டுமே தவிர

- வேகமாக அடிக்கப்பட்டு உயரப் பறந்தோடி வரும் பந்தினைப்

பிடித்தால் - அதன் பெருமை பந்தை வீசுபவருக்குத்தானே

கிடைக்கும் என்று எண்ணி - பந்தைப் பிடிப்பவர் அந்தப்

பந்தைப் பிடிக்காமல் விட்டுவிட்டால் - அது அந்த அணிக்கே

பிணியாகிவிடும் அல்லவா?

உலகக் கோப்பை கிரிக்கெட் வெற்றியைப் பெற்றுள்ள இந்த

நேரத்தில் உடன்பிறப்புகள் பலருக்கும் இது உள்ளத்தில் பதியும்

என்பதற்காக இதை உதாரணமாகக் குறிப்பிடுகிறேன்.

இதில் ஒளிந்து கிடக்கும் உண்மையின் துடிப்பையும் -

உரசிக் கொண்டு செல்லும் பொய்மையின் நடிப்பையும் என

உயிரினும் மேலான உடன்பிறப்புகள் அனைவரும் இங்கொன்றும்

அங்கொன்றுமாக உணர்ந்திருப்பதை நானும் உணருகிறேன்.

அதனால் மனம் சற்று உடையினும், மலை போல் நிமிர்ந்து

நிற்கிறேன்.

இந்த வலிமைக்குக் காரணம் ஊர் பல சுற்றி உலா வந்தபோது

என் உடன்பிறப்புகளும் அவர்தம் உடன் பிறந்த அண்ணன்

தம்பிகளும் - அக்காள் தங்கைகளும் - உற்றார் உறவினரும்

- அவர்கள் அனைவரையும் பெற்றெடுத்த தாய்மார்களும்,

தந்தையரும் - வழி நெடுக வாழ்த்திப்பாடி - என்னைப் பார்த்து

“ஏழைகளின் பசி போக்க அரிசி கொடுத்து, வாடிய பயிரைக் கண்ட

போதெல்லாம் வாடிய வடலூர் வள்ளலாரின் வழி வந்தவனே!”

என்று வாழ்த்தியதும் - “நம்பிக்கையாகப் போ - வெற்றிதான்

நமக்கு” என வீரமொழி பொழிந்ததையும்தான் நான் மறக்க

இயலுமா?

எனக்கோ நலமில்லாத உடல் - பலமும் இல்லை பயணம்

செய்வதற்கு - இருந்தாலும் உன்னையும் என் தமிழ் மக்களையும்

கண்டிட ஓடோடி வருகிறேனே, ஏன்?

அவர்கள் எல்லாம் நன்றி மறவாதவர்கள் - நானும்

அவர்களுக்கு தொடர்ந்து நன்மை செய்ய மறவாதவன்.

என்னை எங்கே உட்கார வைத்தாலும் - “ஏழையின் சிரிப்பில்

இறைவனைக் காண்போம்” என்ற அண்ணாவின் வரிகளைத் தேடிக்

கண்டு பிடித்து - திக்கற்றோர் வாழ்ந்திட - அந்த வரிகளை வான

விளிம்பில் வண்ணமாய்ச் செதுக்கி - காணும் விழிகளில் எல்லாம்

ஏழைபாழைகள் களி நடனம் புரிந்திட, வாழும் வழி நிலையாகத்

திறக்கப்படும் வரை - நாம் வாழினும், வீழினும் போரிடுவோம் -

என்ற சூளுரையை நெஞ்சில் பதித்து நிமிர்ந்து நின்று போராட

வா என் கண்மணியே! என்று வாஞ்சையுள்ள உடன்பிறப்புகளே

உங்களையெல்லாம் அழைக்கின்றேன்.

“நரிக்கு நாட்டாண்மை கொடுத்தால், அது கிடைக்கு

எட்டு ஆடு கேட்கும்” என்ற பழமொழியை வாக்காளப்

பெருமக்களுக்கு எச்சரிக்கையாக்கி; - “பொறுத்தார் பூமியாள்வார்”

என்ற பழமொழியை நமது அணியினருக்குப் போர்க் கருவியாக

வழங்கி - நடக்கின்ற இந்த ஜனநாயக அறப்போரில் - வலிவான

தாயகம் - வளமான தமிழகம் என்ற முழக்கத்தோடு வெற்றி நடை

போடுவோம், வா! வா! “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்ற

அண்ணாவின் கருத்துப் புதையலைப் படித்திருப்பாயே; அது

இன்றைய என் கடிதத்திற்கும் பொருந்தும் என்று உணர்ந்து

எழுந்து வா!

அன்புள்ள,

மு.க.

5-4-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022) · பக்கங்கள் 145–149.

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 45 PDF ↗