திரும்பிப்பார்!
காட்சி 89 · 89 / 93
(சுடப்போகிறாள்)
பரந்தாமன்: பாமா! (தடுக்கிறான் - இருவருடைய போராட்டத்தில்) பாமா! நான் சொல்வதைக் கேள்! என்னைக் கொல்லாதே! நான் உண்மையிலேயே திருந்திவிட்டேன்...
பாமா: பாவி ! விடு என்னை !
("குமுதா! குமுதா" என்ற பூமாலையின் ஒலி கேட்கிறது ! அதற்குள் பாமாவின் ரிவால்வார் வெடிக்கிறது. ரிவால்வார் அவள் பக்கமே திரும்பியிருந்ததால் பாமாவின் உயிர் போகிறது. பாமா விழுகிறாள்.)
பரந்தாமன் : ஆ !.... (கவலை)
(அதே சமயம் அவன் மார்பில் குண்டுவீச்சு)
பரந்தாமன் : ஆ !... (அலறல்)
(துடித்தபடி சோபாவில் விழுகிறான். இப்போது சுட்டது பூமாலை)
பூமாலை: தொலைந்துபோ துஷ்டனே ! இனிமேலாவது உலகம் நிம்மதியாயிருக்கட்டும் ! (கீழே கிடப்பவளிடம்) குமுதா! குமுதா! (அருகே போய் பார்க்கிறாள்) ஆ! பாமா!
[மரணமூச்சுவிடும் பரந்தாமன்)
பரந்தாமன் : அது குமுதா இல்லக்கா ! பாமா ! (விம்மலுடன்) என் பாமா! அவளே அவளைக் கொன்றுகொண்டாள்!
பூமாலை : ஆமாம் ! என்றைக்கு உன்னை முதன்முதலாகப் பார்த்தாளோ அன்றைக்கே அவள் தன்னைத்தானே கொல்ல ஆரம்பித்துவிட்டாள்!
பரந்தாமன்: அக்கா ! என்னை இன்னும் தவறாக நினைக்கிறீர்கள் அக்கா ! தகாத செயல் புரியும் தம்பியை அல்ல தாங்கள் கொன்றது ! தணலில் புடம்போட்டு எடுக்கப்பட்ட தங்கத்தை ! கோர விளையாட்டுக்களின் குகையாயிருந்த பரந்தாமனை முன்பே கொன்றுவிட்டீர்கள் அக்கா ! இப்போது நீங்கள் கொன்றது உங்களால் புதிதாக சிருஷ்டிக்கப்பட்ட உத்தமனை! உங்களுக்கு யார் தம்பியாய் இருக்க வேண்டுமோ அந்தத் தம்பியை கொன்றுவிட்டீர்களே அக்கா. குமுதாவிடத்திலே மன்னிப்புக்கேட்க வந்தேன் அக்கா.
பழிவாங்க எண்ணியிருந்த பாமா.... பாமா ...
பூமாலை: தம்பீ...
