திரும்பிப்பார்!
காட்சி 79 · 79 / 93
[பரந்தாமன் தாசியின் வருகைக்காக காத்திருக்க அவள் வந்து திரைமறைவில் நிற்கிறாள்]
பரந்தாமன் : ஏ இங்கே வா! அட த்சு வான்னா ! (ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து வீசுகிறான்) வாங்கிறேன்ல !
வர்ரியா நான் வரட்டுமா ? (எழுந்து வந்து) அன்புக்கரசி! அழகு மணி மாளிகையின் அலங்காரத் திருவுருவே ! அழித்தெழுதாச் சித்திரமே !
(திரையில் குரல்)
குரல்: அழித்தெழுதாச் சித்திரமே! ஆடிவரும் பொன் விளக்கே ! கட்டாணி முத்தழகி! கண்கவரும் ரத்தினமே !
பரந்தாமன்: ஆ! யார்?
(பாமா வெளிப்படுகிறாள்)
பரந்தாமன் : ஆ ! பாமா!
பாமா: நானேதான்! அன்புக்கரசீ என வர்ணித்தாயே அந்த அரசியின் சரசி வேஷத்தைப் பார் ! அழகு மணி மாளிகையின் அலங்காரத் திருவுருவம்! சமுதாயக் குட்டிச்சுவற்றின் நிழலில் சருக்கி விழுந்து உருக் குலைந்து கிடப்பதைப் பார் ! அழித்தெழுதாச் சித்திரம் ! நாள்தோறும் இங்கு நடமாடும் புதுப் புது ஓவியக் கலா ரசிகர்களால் திருத்தி எழுதப்பட்டு தெருவில் நாசமாகிக் கிடப்பதைப் பார்! ஆடிவரும் பொன் விளக்கு ! அனுதினமும் தேடி வரும் ஆணழகர் கையில் அகப்பட்டு அணைந்து கிடப்பதைப் பார்!
கட்டாணி முத்தழகி ! மொட்டாகவே கருகிவிட்டதைப் பார்! கண்கவரும் ரத்தினத்தில், மண்படிந்து கிடப்பதைப் பார்! கயவனே, காதகனே! கவிதை பேசிய காதற் புலவனே ! பார் ... ! பார் ...
பரந்தாமன் : பாமா பொறு ! போனதை மறந்துவிடு!
பாமா: மறப்பதா! என் மானமே போய்விட்டதடா மகா பாபி!
பரந்தாமன்: மானத்தை இழக்க நீ தானே காரணம்!....
பாமா: ஆமாம். உன் காதல் மாளிகையிலே, கனகமணி கட்டிலிலே, உல்லாச உப்பரிக்கையிலே,ஒய்யார கீதம் பாடியபடி அல்லும் பகலும் இணைபிரியாத அன்புத் தெய்வமாக வைத்திருந்தாய். நான்தான் அவமானச் சாக்கடையில் தொப்பென்று குதித்து கல்லாக மாறிவிட்டேன்! அப்படித்தானே !
பரந்தாமன்: விதியின் விளையாட்டு எல்லாம்!
