உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
திரைக்கதை & வசனம்

திரும்பிப்பார்!

காட்சி 52 · 52 / 93

பாண்டியன் : குமுதா! என்ன இது !

பூமாலை : பேசட்டும் அவளைப் பேச விடுங்கள். அவள் தானே பாக்கி ! அவளும் பேசிவிட்டால் பிறகு எனக்கென்ன குறையிருக்கிறது.

பூமாலை: பாண்டியன்! நான் சொல்வதை தயவுசெய்து கேளுங்கள். நீங்களும் குமுதாவும் இந்த ஊரைவிட்டே கொஞ்சநாள்.....

பாண்டியன் : சாவுக்கு பயந்தா, ஊஹும்...

பூமாலை: என் குமுதாவிற்காக. அவள் கூந்தலிலே குலுங்கும் மலர்க்காடு அழிந்துவிடாமல் இருப்பதற்காக, இந்த ஒரே ஒரு வரத்தைக் கொடுங்கள் பாண்டியன். என் குமுதா துன்பத்தைத் தொட்டும் பாராதவள். எனக்குத் தெரியும், அவளைத் துண்டு துண்டாக வெட்டிப் போட்டாலும், தொடர்ச்சி கெடாமல் ஒட்டிவிடக் கூடிய மாமருந்து நீங்கள். அந்த மருந்தை, குமுதாவின் இன்ப விருந்தை நான் அழியவிட மாட்டேன். தயவு செய்யுங்கள். நான் உங்களுக்காக தியாகம் செய்தேனே காதல்.

(குமுதா action) அந்த தியாகத்தின் பெயரால், அந்தக் காதலின் பெயரால் கேட்கிறேன். கெஞ்சுகிறேன், சம்மதியுங்கள்.

குமுதா: சின்னம்மா... (ஓடிவரல்).

பூமாலை: பாருங்கள் பாண்டியன் என் குமுதாவை, அவள் வாழ்வு வளைந்து விடாமல் காப்பாற்றுங்கள். இருவரும் சென்னைக்குச் சென்று விடுங்கள், உங்கள் பகைவனின் ஆத்திரம் தீர்ந்த பிறகு திரும்பலாம்....

பாண்டியன் : சரி, உங்களிஷ்டப்படியே செய்கிறோம் .....

★

[மில் வாசல்: ரோடு

[புண்யகோடியும் இரண்டு மூன்று தொழிலாளர்களும் பேசிக்கொண்டு வருகின்றனர்.)

ஒரு தொழிலாளி: (புண்யகோடியிடம்) என்னங்க மேஸ்திரி குறைகளையெல்லாம் சீக்கிரம் கவனிக்கப்போறாரு முதலாளின்னீங்க ஒண்ணியும் காணுமே!

புண்யகோடி : அதெல்லாம் சீக்கிரம் நடக்கும் பாரு!... நடக்கலேன்னா நம்ம தலைவர் இறுதிப் போராட்டம் ஆரம்பிச்சுடுவாரு

தொழிலாளி: அது சரி.. இப்ப ஆரம்பிச்ச ஜனவரிப் போராட்டமே பிசு பிசுண்ணு போய்ட்டுதுண்ணு சில பேர் பேசிக்கிறாங்களே !

முதல் பதிப்பு: 1953