பராசக்தி
காட்சி 40 · 40 / 46
கல் : என் குழந்தை என்ன திருஞானசம்பந்தரா பார்வதி வந்து பால் கொடுத்துக் காப்பாற்ற? நான்தானே காப்பாற்றியாக வேண்டும். என்னை வாழவிடாமல் என் வாழ்வில் எனக்கு இடையூறு இருந்தது. வஞ்சகர் வலையிலே விழாத காரணத்தால் சட்டத்தின் முன் நிற்கிறேன் குற்றவாளியாக. ஆனால் நான்மட்டும் கொஞ்சம் உடலை அசைத்திருந்தால் உப்பரிகையிலே உலவிக் கொண்டிருப்பேன் விதவையாக அல்ல விஷம் பிடித்தவளாக அல்ல. விபச்சாரியாக! விபச்சாரியாக!
அதைத்தானே இந்த சமூகம் விரும்புகிறது. அப்படித்தானே இந்த சமுதாயத்தை எதிர்க்க முடிகிறது. வேறு எப்படி வாழ முடியும் அனாதையாக.
நீதி : நீ அனாதையா?
கல் : ஆம் காலம் என்னை அனாதையாக்கிற்று.
நீதி : கதை பேசாதே விஷயத்தைச் சொல்.
கல் : பிறந்த மறுநாளே தாயார் இறந்துவிட்டாள். தகப்பனார் நிழலிலே வளர்ந்தேன். தலைமகனார் மூன்று பேர் அவர்களை நான் சரியாகக் கூட பார்த்தது கிடையாது. அவ்வளவு இளமையிலேயே இரங்கூன் சென்றுவிட்டார்கள். கல்யாணமாயிற்று எனக்கு. கணவர் இறந்தார், தந்தையும் இறந்தார். இரங்கூனிலிருந்து எனது அண்ணன்மார் சந்திரசேகரன், ஞானசேகரன், குணசேகரன் வந்துவிடுவார்கள் என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தேன்; வரவில்லை அண்ணன்மார்.
பிள்ளையைத் தூக்கிக்கொண்டு பிச்சைக்காரியாய்த் திரிந்தேன். நாட்டிலே எனக்குக் கிடைத்த பதில் போடி வேலையற்றவளே என்பதுதான். ஒரு நீதிபதியாம் நேர்மையை அனுஷ்டிப்பவராம். பிச்சை கேட்டுப்போன என்னைப் பூட்ஸ் காலால் உதைத்தார். (நீதிபதி சேகர் கல்யாணி தன் தங்கையென தெரிந்து அதிர்ச்சியடைந்து கீழே விழுகிறார்.)
(ரோட்டில் பிரசங்கி பேசுகிறார்)
பிர : உலகப் பேரழகி கிளியோபாட்ரா தமிழ் நாட்டின் முத்துக்களை சாராயத்திலே போட்டு குடித்தாளாம். அத்தகைய தமிழகத்தின் பெண்களோ இரங்கூனுக்கும் சிங்கப்பூருக்கும் சென்று ஆடவர்கள் சம்பாதித்து அனுப்பும் பணத்தை எதிர் பார்த்து பட்டினி கிடக்கிறார்கள். ஆலயங்கள் இங்கே. ஆண்டவனுக்கு வைரக்கவசம் ரத்தின சிம்மாசனம், அந்த ஆண்டவனின் அருமைக் குழந்தைகளோ அரைவயிற்றுக் கஞ்சிக்கும் அல்லல்படுகிறார்கள். கோவில்புரம் நிறைய நண்பர்களே தாய் தன் குழந்தையை விற்றாள் என்று.
பசியின் கொடுமையால் பல தாய்மார்கள் குழந்தையை
விற்றுவிட்டார்களாம். தாயார் குழந்தையை விற்றாள்! பத்து மாதம் சுமந்து படாதபாடு பட்ட தாய், பாராட்டி சீராட்டி வளர்த்த தாய், தொட்டிலிலே போட்டு ஆராரோ பாடிய தாய், வெள்ளிக்கிண்ணத்தில் பால்சோறு போட்டு தாழ்வாரத்திலே தவழ்ந்தோடும் பிள்ளைக்கு ஊட்ட வேண்டும் என்று கனவு கண்டிருந்த தாய், மஞ்சள் நீராட்டி மகனின் மழலைமொழி கேட்டு “பள்ளிக்குச் செல்லடா கண்மணி” என்று அவன் பின்னழகைக் காணவேண்டுமென்று துடித்துக் கிடந்த தாய், மகனுக்கு திருமணம் செய்து மகனும் மருமகளும் மஞ்சத்திற்குச் செல்லும் அந்த நாளும் வராதோ என்று ஏங்கிக்கிடந்த தாய், தான் பெற்ற குழந்தையை தன் வயிற்றிலே கிடந்த வைரத்தை வறுமையினால், கோமேதகத்தை, தங்கத் தாம்பாளத்தை விற்றாளாம் கூறுகிறேன்.
பிள்ளையோ பிள்ளை, என்று மார்க்கெட்டில் கீரைப்போல் கூறுவதுபோல் எட்டு ரூபாய்க்குக் குழந்தையாம்! பெரிய குழந்தை ஐந்து ரூபாய் பிஞ்சுக் குழந்தை மூன்று ரூபாய், கொடுமை! கொடுமை!
(இதைக் கேட்டுக் கொண்டிருந்த குணசேகரன் எழுந்து ஓடுகிறான். எதிர்ப்பட்ட குப்பனை சந்திக்கவே தன் தங்கை கல்யாணியை பூசாரி கற்பழிக்க முயற்சித்தான் என்பது அறிந்து ஆத்திரத்துடன் பராசக்தி கோவிலுக்குச் செல்கிறான்.)
(இடம் காளியம்மன் கோவில்)
(பராசக்தி கோவிலில் குணசேகரன் பூசாரியைத் தாக்கும் காட்சி)
பூசாரியின் தடபுடல்கள் காவடிகள் அம்பாளுக்கு ஆராதனைகள் அர்ச்சனைகள் தேவி விழா! ஒரே அமர்க்களம். பாடைக் காவடியொன்று பராசக்தி சன்னதிக்கு வருகிறது. பூசாரியின் அதிதீவிர பூஜைக்குப் பின் பாடையிலிருந்தவன் எழுந்திருந்தான்.
கிழவி : தாயே! பராசக்தி! என் மகனுக்கு செலுத்த வேண்டிய காணிக்கையை செலுத்திட்டேன். என் குழந்தையைக் காப்பாற்று தாயே.
பூசாரி : ஓம்...ரீங்கரீம் உன் பிள்ளை உடம்புக்கென்னம்மா?
கிழ : அம்பாள் குடிகொண்டிருந்தா என் பிள்ளை உடம்பிலே ஒரு வில்லங்கமும் வராமல் இருந்தால், பாடைக் காவடி
எடுக்கிறதா வேண்டிக்கிட்டேன். அவ தயவுலே ஒரு கண் மாத்திரம் போய் பிழைச்சுக்கிட்டான் காணிக்கையும் செலுத்திட்டேன்.
பூசாரி : பயப்படாதே உன் மகன் தீர்க்காயுசா இருப்பான்.
