மனோகரா
காப்பக வழிசெலுத்தல் பகுதி 38 · 38 / 57
(சிறைச்சாலை)
விஜயா : வாள் முனையால், தன்னுயிரையும் மன்னுயிரையும் காத்திடும் வலிமை வாய்ந்தவர் கடைசியில் தப்பி ஓடி உயிர் பிழைத்தார். எல்லாம் உங்கள் நல்லெண்ணத்தால் வந்த நாசந்தான் அத்தே! அவர் எங்கு சென்றாரோ? எப்படி அலைகிறாரோ!
பத்மாவதி : சாப்பிடு விஜயா...
விஜயா : வேண்டாம் அத்தே!
பத் : கர்ப்பவதி சாப்பிடாமல் இருக்கக் கூடாது. வயிற்றில் வளரும் கருவுக்காகவாவது சாப்பிட்டுத்தானே ஆகவேண்டும்... சாப்பிடு...
விஜயா : அத்தே... இந்தக் கஞ்சியா...
* * *
வ. சே : அருமையாயிருக்கிறது...
தோழி : இந்தப் பழரசம் உடம்பைப் பளபளப்பாக்கும்...
வ. சே : தெரிந்துதானடி இதைத் தேர்ந்தெடுத்தேன், மாலினி! எங்கேயோ ஒரு அழகி இருந்தாளாம்; அவள் மேனியின் மெருகு குலையாமலிருக்க கழுதைப் பாலிலே ஸ்நானம் செய்வாளாம்.
தோழி : இதென்னம்மா அதிசயம்... நீங்கள் கேட்டால் புருஷோத்தமர் புலிப்பால் கூட கொண்டு வருவாரே...
வ. சே : சந்தேகமென்னடி அதிலே?
தோழி : அதிருக்கட்டும்... நீங்கள் இப்படி அலட்சியமாக இருக்கிறீர்களே... மனோகரன் வேறு தப்பிவிட்டான். வசந்தன் முடி சூட்டு விழாவை சீக்கிரம் நடத்திவிட வேண்டாமா?
வ. சே : இது என்னடி பெரிய காரியம், வேந்தனின் வேத புத்தகமே நான்தான். வெண்ணிலவை சூரியன் என்றால் அவர் நம்பித்தான் தீருவார்... கவலைப்படாதே! ஒரு கண்ணசைவில் முடிந்துவிடும் வசந்தன் பட்டாபிஷேகம்!
* * *
வைத்தியர் : ராஜாதி ராஜ... ராஜமார்த்தாண்ட...
விகடன் : ராஜ கம்பீர... ராஜகோலாஹல...
வைத் : ராஜவீர தீர பராக்கிரம...
விக : ரணரங்க தீர வீர சூர...
வைத் : உப்பில்லாம கலக்கஞ்சி குடிக்கும் வசந்த மகா ராஜா பராக்! பராக்!
வசந் : தோம்... தோம்... வந்தோம்......
விகடன் : வசந்தா! இதோ பாரு... அம்மா திட்டுவாங்க எழுந்திரு... தர்பார் மாதிரியே இருக்கணும்... நான் சொல்றபடி செய்யணும்... உம்... இதிலே உட்காருங்க மகாராஜா!
: இப்ப நான் சொல்றபடி சொல்லணும்......
விக : இப்ப நீங்க யாரு?
வசந்தன் : இப்ப நீங்க யாரு?
விக : த்ச்...பதில் சொல்லுங்க...
வச : த்ச்...பதில் சொல்லுங்க...
விக : அடடா... பதில் சொல்லுங்க, மகாராஜா?
வச : அடடா... பதில் சொல்லுங்க மகாராஜா!
விக : பதில் சொல்லணும் “மகாராஜா” அப்படீன்னு!
வச : உம்... சரி...சரி... மகாராஜா!
விக : ஆ... நான் தான் மந்திரி!
வச : உம்...
விகட : இவரு (வைத்தியரைக் காட்டி)
வச : தெரியும்... தெரியும்...... மகாராணி...... வா...வா... உக்கார...
விக : மகாராஜா... அவரு சேனாதிபதி...... இப்ப யாரு மகாராணி?
வைத் : அதோ...மாலினியை வைச்சுக்கலாம்...வா...
விக : (மாலினியைப் பார்த்து) நான் சொல்றபடி கொஞ்சம் கேளேன்... இன்னைக்கு மட்டும் நீ மகாராணி... மகாராஜாவோட போயி உட்காரு...
வச : [இளிக்கிறான்]... சபாஷ்....
விகடன் : அடுத்து நாட்டு அரசர் யாராவது, சந்தோஷமாக வந்தால் சந்தோஷமாக பேசவேண்டும், கோபமாக வந்தால் கோபமாக பேச வேண்டும்...
வச : சரி!... மந்திரி!...
விக : உம்—தர்பார் ஆரம்பமாகலாம்....
வச : சேனாதிபதி! நடனம் நடக்கட்டும்...
வைத்தியன் : மகாராணியை ஆடச் சொல்லுங்கள்...
விக : ஆமாம் அரசே! வேற ஆளில்ல பாருங்க... அதனாலே ஆடட்டும்!
[மாலினி ஆடுகிறாள்]
வச : உம்... ஆடு! நம் நாட்டில் எல்லோரும் சமத்துவம்... எல்லோரும் ஆடலாம்... நடனமாடத் தெரியாதவர்கள் பெண்களே அல்ல! சரிதானே விகடா
விக : இப்போது பெண்கள் நடப்பதே ஒரு நடனமாதிரிதானே இருக்கு!
[புருஷோத்தமர் வருகிறார்]
வச : ஓகோ! அடுத்த நாட்டு அரசரா?... சந்தோஷமாய் வருகிறீரா? கோபமாய் வருகிறீரா?...
புருஷோத் : போதுமடா... சும்மா இரு...
வச : ஓ! கோபமாய் வந்திருக்கிறார்... ஓய்!...மூளையில்லாத ராஜே!... முட்டாள் அரசரே!... எங்கே வந்தீர்? வந்த காரியத்தைச் சொல்லும்... வசந்தனுடைய தர்பாரிலே வரக் காரணம் என்ன?... மந்திரி!... போதுமா கோபம்!...
அரசர் : ஏ, விகடா இது என்னடா கூத்து!...
விக : முடிசூட்டு விழா... ஒத்திகை நடத்திக் காட்டச் சொன்னார்கள் அம்மா!...
அர : வைத்தியா! நீ என்ன மருந்து கொடுத்து பைத்தியத்தை தெளிய வைக்கிறாயா இல்லை!...
வச : பைத்தியமா?... யார் சொன்னது? இது தீராத வியாதி!...
