அம்மையப்பன்
களஞ்சியப் பகுதி 21 · 21 / 63
ஒரு கோச் வந்து நிற்கிறது. பலதேவர், ராணி, எல்லோரும் இறங்கி உள்ளே செல்கின்றனர். கோச்சை ஓட்டிவந்த முத்தனும் இறங்குகிறான். அவன் குதிரையை எடுக்கிறான். அதிலிருந்து படம் ஒன்று விழுகிறது. சுகதேவ் கண்டு விடுகிறான்.
சுக : ஏ!—முத்தா! என்ன படம் இது?
முத் : ஒன்றுமில்லை...
சுக : ஏ!...சும்மா காட்டு; பார்க்கலாம்...
[காட்டுகிறான்.]
சுக : அடேடே!...முத்தா! நான் இதுமாதிரி ஒரு படம் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னால் எங்கேயோ பார்த்தது போலே ஞாபகம்!...
முத் : இப்போது நீங்கள் காணப்போகும்...இந்தப் படம் என் லட்சியக் கனவு...இன்ப விடிவெள்ளி...இரண்டொரு வாரங்களுக்கு முன் நீங்கள் பார்த்த படம் இந்தப் படத்தின் இன்னொரு பிரதி—முற்றுப் பெறாத சித்திரம்...
சுக : ஓகோ! அதுவும் உன்னுடையதுதானா?
முத் : ஆமாம் முன்னது கை தவறிப்போய் களவாடப்பட்டு விட்டது....! நான் வேறு எழுதிக் கொண்டேன். அது...இது...
சுக : சரி; சரி; ஆளு முத்தா இந்தப்படத்திலே இருக்கிறமாதிரி ஒரு பெண்ணு உலகத்திலே இருந்தா நான் தான் அதை கல்யாணம் பண்ணிக்குவேன்.
முத் : உம்; இல்லாததைப்பற்றிப் பேசவானேன்.
சுக : சரிதான், உலகத்திலே பேசறதே இல்லாததைப் பற்றித்தான்...சரி நீ வரவில்லையா மடத்துக்கு.
முத் : ஊர் கூடம்.
[முத்தன் நண்பர்கள் வருகிறார்கள்]
நண் : என்ன முத்தண்ணா சுகந்தானா?
முத் : இது என்ன சுந்திர பூமியா சுகமாயிருக்க? சுகவாசி இதோ இந்த மடத்துக்குள்ளே இருக்கிறார் மாய்கைநாத சாமியார்.
மாய்கை : அகில ஜெகத்திற்கும் அம்மையப்பன் அருள் சித்திக் கட்டும்...அடியார்க்கு அடியார்களே! அன்பு நிறைந்த பக்தர்களே!.......அய்ய வினைகள் ஏதேனும் இருப்பின் கேட்டுத் தெளிவு பெறுக........
சுகதேவ் : அம்மையப்பன் என்பதற்கு அர்த்தம் என்ன ஸ்வாமி.........
மாய்கை : அடடா, இதுவா புரிய வில்லை—இளவரசே. இதோ இருக்கும் பாளையக்கார பலதேவர் உமக்கு...
சுகதேவ் : அப்பா!......
மாய்கை : சரி, அவர்கள்.......?
சுகதேவ் : அம்மா!.......
மாய்கை : அம்மா......அப்பா......அம்மையப்பா.
சுகதேவ் : அடடே! அப்படியானால் நீங்கள் தோலத் தரிப்பது என் அம்மாவையும் அப்பாவையும் தானா!
மாய்கை : கேளும் உமக்கு ஒரு அம்மையப்பன் இருப்பது போலவே, உலக மக்களுக்கும் ஒரு அம்மையப்பன் இருக்கிறார்கள்.
சுகதேவ் : அவர்கள் எங்கு இருக்கிறார்களோ?—
மாய்கை : கண்ணுக்குத் தெரிய மாட்டார்கள்!—
சுகதேவ் : பிள்ளைகளாகிய நாம் கண்ணுக்குத் தெரியும் போது, பெற்றவர்களும் தெரிய வேண்டியது தானே.
மாய்கை : தவறு!...தெரிய மாட்டார்கள் அந்த தெய்வப் பெற்றோர்கள் — அவர்கள் அரூபிகள் — அண்ட சராசரங்களையும் படைத்து அழிக்கும் ஆற்றல் பெற்றவர்கள்...ஆயிரம் நாமம் படைத்தோர்...பாயிரம் பலவற்றுள் பாராட்டப் பெற்றோர்...இகபரம் சுகதுக்கம் ... தூண் துரும்பு...அங்கு...இங்கு எங்கும் பிரகாசமாய் இருப்போர்...என்ன சுகதேவ் ... குழப்பம் முடிவுற்றதா?...
சுகதேவ் : இப்போது தானே ஆரம்பமே ஆகிறது
மாய்கை : அட அம்மையப்பா—
பலதேவர் : சுகதேவ் இப்படி எல்லாம் குறும்புத் தனமாக கேள்விகளை கேட்டாதே; மகான்களை இப்படி யெல்லாம் மடக்குவது மகாபாபம்......
சுகதேவ் : இல்லையப்பா தெரியாமல்தான் கேட்டேன். திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.......
மாய்கை : சந்தோஷம்.
