உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

கலைஞர் · 1924–2018

கலைஞர்

ஐந்து தலைமுறைகளின் குரல், ஒரே இடத்தில்.

எம். கருணாநிதி — அரசியல்வாதி, எழுத்தாளர், திரைக்கவிஞர், தமிழ் ஆர்வலர். இந்த ஆவணம் அவரது வாழ்க்கை, சாதனைகள், எழுத்துகள், உரைகள் மற்றும் மரபை ஆவணப்படுத்துகிறது.

Kalaignar M. Karunanidhi
கலைஞர்1924 — 2018

முரசொலி · தினமும் ஒரு கடிதம்

இன்றைய கடிதம்

கலைஞரின் கடிதத் தொகுப்பிலிருந்து இன்று ஒரு கடிதத்தை வாசியுங்கள்.

தொகுதி 47 · கடிதம் 3684

பெற்றகரிய திருநாள் பேராசிரியர் பிறந்த நாள்!

உடன்பிறப்பே,

நாளை நம்முடைய இனமானப் பேராசிரியர் பெருந்தகையின் 91வது பிறந்த நாள் விழா! எனக்கு இன்று முதலே மனதிலே ஒரு பரபரப்பு! மனதிற்குள் எத்தனை எத்தனையோ எண்ணங்கள்! அவற்றில் எதையெல்லாம் எழுத்திலே வடிப்பது? இந்த ஆண்டு பேராசிரியர் பிறந்த நாள் விழாவுக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடக்கின்றனவா என்று நான் கேட்டபோது, பேராசிரியர் அவர்களே துணைவியாருக்கு உடல் நலம் சரியில்லை என்பதைக் காரணமாகக் காட்டி, விழா ஏற்பாடுகள் எதுவும் வேண்டாமென்று கூறி விட்டார்கள் எனத் தெரிவிக்கிறார்கள். உடனே நான் அவர்களைக் கோபித்துக்கொண்டு, அவர் அப்படிக் கூறினால், நீங்கள் உடனே ஏற்றுக்கொண்டு வந்துவிடுவதா, உடனடியாக ஏற்பாடுகளைத் தொடங்குங்கள், நான் அவரைச் சமாதானம் செய்து கொள்கிறேன் என்று கூறினேன். பொருளாளர் தம்பி ஸ்டாலின் உடனடியாக வடசென்னை, தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்களை வரவழைத்து விட்டார். இருவருக்குள் போட்டி - தங்கள் பகுதிக்குள்தான் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தை வைத்துக் கொள்ள வேண்டுமென்று! பின்னர் இருவருமே சமாதானமாகி வடசென்னை, தென்சென்னை இரண்டு மாவட்டக் கழகங்களும் இணைந்து கூட்டத்தைப் புகழ்பெற்ற தங்கசாலை மணிக்கூண்டு அருகே நடத்துவதென்று முடிவுசெய்தனர். 2002ஆம் ஆண்டு, பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களின் 81வது பிறந்த நாள் விழாவினையும், இதே இடத்தில்தான் நாம் நடத்தினோம். மீண்டும் பத்தாண்டுகளுக்குப் பிறகு இன்றைய தினம் 91வது பிறந்த நாள் விழாவினை நடத்துகிறோம்.

பேராசிரியர் அவர்களின் போர்க்குணத்திற்கு ஆக்கம் தந்திடும் வகையில் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளில் நாம்

மக்கள் பிரச்சினைக்காக அறப்போர் ஆர்ப்பாட்டத்தை அறிவித் திருக்கிறோம். மாதவரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு பேராசிரியர் அவர்களே தலைமை தாங்குகிறார். பிறந்தநாள் விழாவிற்கு முன்பாக அறப்போர் ஆர்ப்பாட்டம், அதற்குத் தலைமை! பேராசிரியரை முதன் முதலாக நான் எப்போது சந்தித்தேன்?

திருவாரூரில் நடைபெற்ற இஸ்லாமியர் விழா, சிக்கந்தர் விழா ஒன்று. 100 பேர் மட்டுமே அமர்ந்திடக் கூடிய - சிறிய மண்டபம். அண்ணா அவர்கள்தான் சிறப்புப் பேச்சாளர். அவரைப் பேசுவதற்காக அழைத்தவுடன், அவர் ஒலிபெருக்கியிடம் வந்து, “நான் ஒரு இளைஞரை இங்கே அழைத்து வந்திருக்கிறேன். அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர். நான் பேசுவதற்கு முன் அவர் பேசுவார்” என்று கூறி அந்த இளைஞரை அங்கே அறிமுகப்படுத்தினார். ஒல்லியான உருவம். ஒளியுமிழும் கண்கள். ஓடைப் புனலெனக் கருத்துக்கள் அப்போதே வெளிவந்தன. மண்டபத்திற்குள்ளும் வெளியிலும் குழுமியிருந்தோர் வியப்பால் விழிகளை விரித்து நிற்கின்றனர். அந்த இளங்குருத்துத்தான் நம்முடைய பேராசிரியர்.

ஏ, அப்பா, காலில் சக்கரம் கட்டிக் கொள்ளாமல் காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடி விட்டது? துள்ளித் திரியும் பருவத்திலே தான் நான் அவரைப் பார்த்தேன். அப்போது அவரும் என்னைப் போன்ற இளைஞரேதான். இன்று இருவரும் தள்ளாத கிழங்களாக அன்றாடம் அலுவலகத்தில் அருகருகே அமர்ந்து ஒன்றாகச் சிந்திக்கின்றோம். ஒருமனதாக முடிவெடுக்கின்றோம்.

1942ஆம் ஆண்டு திருவாரூரில் தமிழ் மாணவர் மன்றத்தின் சார்பில் ஆண்டு விழாவினை நடத்தினேன். அந்த மாநாட்டில் கலந்து கொள்ள பல பேரை அழைத்திருந்தேன். பெரும்பாலோர் வரவில்லை. அவர்களை வரவேற்கப் புகைவண்டி நிலையத்திற்கு நண்பன் தென்னனுடன் சென்றிருந்தபோதுதான் அவர்கள் வரவில்லை என்று தெரிந்து, விழியிலே நீர் பெருக நின்றேன். நல்லவேளை, அந்த நேரத்தில் பேராசிரியர் - அப்போது அன்பழகன், மதியழகன் இருவரும் வந்து எனக்கு ஆறுதல் அளித்தனர். அன்று எனக்குத் தோன்றாத துணையாய் வந்த பேராசிரியர் இன்றளவும் துணையாய் வருகிறார்! எனக்குத்தான் எவ்வளவு பெருமகிழ்ச்சி.

அதனால்தான் அவருடைய மணிவிழா மலரிலே “பல்லாண்டு பாடுகிறேன், பரவசத்தால் ஆடுகிறேன்” என்று எழுதினேன்.

பேராசிரியர் ஒரு முறை அவருடைய பிறந்த நாள் விழா ஏற்புரையிலே பேசும்போது, “திருமணம் செய்துகொண்ட மணமகனும், மணமகளும் கூட அறுபதாண்டு காலம் சண்டை சச்சரவு இல்லாமல் ஒன்றாக இருந்தார்கள் என்ற வரலாற்றை நீங்கள் காண முடியாது, ஆனால் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்” என்று சொன்னார். ஆம், எழுபதாண்டு காலத்திற்கு மேலாக நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம்.

என் கழகத்தை விட்டு, நமது நாவலர், ஆம் நமது நாவலர்தான்; பிரிந்தபோது கூட, பேராசிரியர் அவர்கள், நாவலரோடு சென்று விடுவார் என்றுதான் தமிழ்நாடே எதிர்பார்த்தது. சாதிப் பற்று என்றெல்லாம் இப்போதும் பேசுகிறார்களே, அதையெல்லாம் தூக்கிக் குப்பையிலே வீசிவிட்டு, பேராசிரியர் எனக்குத் துணையாகத் தோள் கொடுத்தார். இன்றைக்கும் அந்தத் தோள்களிலே தொத்திக் கொண்டுதான் நான் இருக்கிறேன்.

பேராசிரியப் பெருந்தகை - தமிழகம் முழுதும் சுற்றிச் சுற்றித் தன்மான உணர்வை வளர்த்த வீறுகொண்ட சொற்பொழிவாளர்! பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளர்! சென்னைக்கு அண்ணா வந்தாலே, அவருக்கு விருந்தோம்பல் நம்முடைய பேராசிரியர் வீட்டிலேதான்! சட்டப் பேரவை உறுப்பினராக - நாடாளுமன்ற உறுப்பினராக - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக - நிதி அமைச்சராக அரும்பணியாற்றியவர்.

சோதனைச் சூறாவளி நமது கழகத்தின் மீது வீசிய நேரத்தில் ஒடிந்து விழுந்த ஓதியமிலார்களைப் போலன்றி - அந்த நேரத்தில் எல்லாம் கழக மாளிகையைக் காப்பவனே உண்மையான அண்ணாவின் தம்பியாவான் எனக் கூறி, உறுதிமிக்க தூணாக நின்று கழகத்தைக் காத்தவர் நம்முடைய பேராசிரியர்.

ஒருசில சமயங்களில் கழகம் எடுத்த பிரச்சினைகளிலே கருத்து மாறுபாடுகள் தோன்றியதுண்டு - ஆனால் கவிழ்க்கும் ஏற்பாடுகளை ஒருவருக்கொருவர் நினைத்ததே இல்லை. கழகத்தின் வெற்றிக்கு எம்முறை சிறந்தது? எவ்வழி போகலாம்? இந்த விவாதங்கள் இடம்பெற்றிருக்குமே தவிர விரோதங்கள் தலைகாட்டியதில்லை, அன்றும் சரி, இன்றும் சரி.

பெரியாரால் உருவாக்கப்பட்டு, அண்ணா அவர்களால் வலிவும் பொலிவும் ஏற்பட்டு, அவர்களின் வழித்தோன்றல்களால் வளர்க்கப்படும் இந்தப் பேரியக்கம் எத்தனை எத்தனை வீரர்களின் வியர்வையை, குருதியை, உயிரையே காணிக்கையாக்கி கடமை ஆற்றி வருகிறது. பதவிகள் வரும், போகும், பருவக் காற்றுக்கு ஏற்பவாறு மழை வருவதுபோல! இந்த ஆட்சியில் அந்த மழை வரக் கூட அஞ்சுகின்ற நிலை!

பதவியோ மடு போன்றது! இதனைப் புரியாதோர் புன்மைச் செயல்களில் ஈடுபட்டபோது, புண் பெற்ற நெஞ்சுடனே கண்கலங்கியவர்தான் நாளைய விழா நாயகர், நம் பேராசிரியர்!

மணவழகர் ஈன்றெடுத்த செல்வன் - மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை - எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை எனக்கூறி மாத்தமிழ் காக்கும் 90 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த அரிமா - பெரியாரின் தொண்டர் - அண்ணாவின் அருமைத் தம்பி - எனது உடன்பிறப்பு - பேராசிரியர் அன்பழகன்.

நேர்மையான சிந்தனை - நிதானமான போக்கு - ஆழமான நீர்நிலைக்குரிய அமைதி - ஆபத்து தமிழ் இனத்துக்கு என்றால் அனலாகக் கொதிக்கின்ற உள்ளம் - இவற்றின் மொத்த உருவம்தான் இனமானப் பேராசிரியர் என்கிறபோது நமது கழகப் பாசறைக்குக் கிடைத்திட்ட ஒப்பற்ற கருவூலம் நமது பேராசிரியரே என்றெண்ணி பேருவகை கொள்கிறேன்.

நெருப்பாற்றில் மெழுகுவத்தி மனிதர்கள் நீந்திக் கரையேற முடியாதுதான் - கதை கூட அப்படி எழுத முடியாதுதான் - ஆனால் இதோ பேராசிரியர் துணையுடன் நானும் கழகக் கண்மணிகளும் நீந்திக் கரையேறி நின்று கொண்டிருக்கிறோமே! கனி குலுங்கும் மரமாயினும் தனி மரம் தோப்பு ஆகாது! பயன்தரும் பல மரங்கள் இருந்திட வேண்டும் தோப்பு எனும் இலக்கணத்திற்கு! ஒரு இயக்கமும் அப்படித்தான். அடுத்தடுத்த வரிசையினர் ஆற்றலாளர்களாக உருவாக்கப் படல் வேண்டும், அந்த இயக்கம் பலன் அளித்திட நாட்டுக்கு! இந்த எண்ணம் அண்ணன் காலத்தில் செயல்படுத்தப்பட்டது. இன்னமும் தொடர்ந்து கொண்டுதானிருக் கிறது.

அவர் உருவாக்கிய தோப்பில் கிளையிலும், மாத்திலும், வேரிலும் சுனைக் கனி - சுவைக்கனி வழங்கிடும் பலவாகத்தான்

நமது பாசத்திற்குரிய பேராசிரியர் காட்சி அளிக்கிறார். கனி தரும் பலா மட்டுமல்ல, காரிருளில் கரை காட்டும் கலங்கரை விளக்கமாகவும் இருக்கின்ற அவருக்குத்தான் நாளை 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா. அந்த நாளைக் கொண்டாடுவோம். அதுவே நமக்கு திருநாள் என்று! ஆம், பெற்றகரிய திருநாள் பேராசிரியர் பிறந்த நாள்! வாழ்க பேராசிரியர்! வாழ்க வாழ்கவே!

அன்புள்ள, மு.க. 19-12-2012

கலைஞர் கையொப்பம்

கலைஞர்: ஒரு சகாப்தம்

நூறாண்டுகளுக்கு முன்னால், காவிரிக்கரையில், திருக்குவளை மண்ணில் உதயமானது அந்த இளஞ்சூரியன். மாணவப் பருவத்திலேயே தன்னைப் பொதுவாழ்க்கைக்கு அர்ப்பணித்துக் கொண்டார் கலைஞர். பள்ளி நாள்களில் மாணவநேசன் என்ற பெயரில் கையெழுத்துப் பத்திரிகை தொடங்கினார். சமூகநீதிக்கான உரிமைக்குரலை முழங்கும் பத்திரிகையாளராகத் தன் வாழ்நாள் முழுவதும் திகழ்ந்தார்.

தன் பதின் பருவ வயதிலேயே நாடகம் எழுதி இயக்கினார். நாடக எழுத்தாளராக, இயக்குநராக, நடிகராக மட்டுமின்றி திரைப்படத் துறையிலும் தலைசிறந்த வசனகர்த்தாவாக, திரைக்கதை எழுத்தாளராக, பாடலாசிரியராக முத்திரை பதித்தார். கலை இலக்கியங்களின் நோக்கம் பொழுதுபோக்கு அல்ல, சமூக மாற்றமே என்பதை மெய்ப்பித்துக் காட்டினார். பள்ளிப் பருவத்தில் மொழித் திணிப்புக்கு எதிராகத் தொடங்கிய அவரது போராட்டம் வாழ்நாள் முழுவதும் சமத்துவத்திற்காகவும், சமூகநீதிக்காகவும், மொழியுரிமைக்காகவும் தொடர்ந்தது. எதிர்க்கட்சி உறுப்பினராகத் தொடங்கியது அவரது சட்டமன்றப் பயணம். அடுத்து வந்த அறுபதாண்டுகளில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு அரசியல் நகர்விலும் அவருடைய கருத்து தவிர்க்க முடியாததாக இருந்தது.

ஐந்து முறை முதலமைச்சர் பொறுப்பையேற்றார் முத்தமிழறிஞர் கலைஞர். தந்தை பெரியார் வகுத்துத் தந்த கொள்கையில், பேரறிஞர் அண்ணா அமைத்துத் தந்த அரசியல் பாதையில் லட்சிய நடைபோட்டார். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில், சுகாதார மேம்பாட்டில், உட்கட்டமைப்பு உருவாக்கத்தில், தொழில்வளப் பெருக்கத்தில்... எல்லோருக்கும் எல்லாம் என்ற சம வாய்ப்பு வழங்கும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிக் காட்டினார்.

இருபதாம் நூற்றாண்டு, இருபத்தொன்றாம் நூற்றாண்டு... இந்த இரண்டு நூற்றாண்டுகளின் இந்திய வரலாற்றை, கலைஞரின் பெயரின்றி எழுத முடியாது. உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவரின் பெயரை இனி வரும் தலைமுறைகளும் நன்றியுடன் சொல்லிக் கொண்டிருக்கும்.

பன்முகத்தன்மை கொண்ட கலைஞரின் படைப்புகள் அனைத்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் நாட்டுடைமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றை மின்னுருவாக்கம் செய்து 'கலைஞர் கருவூலம்' என்ற இந்த வரலாற்றுப் பேழையை உங்கள் பார்வைக்கு வைப்பதில் பெருமை கொள்கிறோம்.

வரலாற்றுப் புகழஞ்சலி

அனைத்து புகழஞ்சலிகள் →

"கருணாநிதியின் பேனா நெருப்பைக் கக்கும்; அவரது நாவோ கவிதையைப் பொழியும். இப்படி ஒரு தம்பியை எனக்குத் தாருங்கள், உலகையே வென்று காட்டுகிறேன்."

பேரறிஞர் அண்ணா (C. N. Annadurai)

Mentor & First Chief Minister of Tamil Nadu · 1967

சிறப்பு மேற்கோள்

அனைத்து பொன்மொழிகள் →

Until my breath ceases I shall write; and until my pen ceases my breath will not depart.

— நெஞ்சுக்கு நீதி, 1995

பெருந்தலைவர்களின் பார்வையில் கலைஞர்

வரலாற்றுப் புகழஞ்சலி

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, சிவாஜி கணேசன் உள்ளிட்ட ஆளுமைகள் கலைஞருக்கு செலுத்திய புகழாரங்கள்

அனைத்து புகழஞ்சலிகளையும் காண்க →

"நமது சுயமரியாதைக் கொள்கைகளை சட்ட வடிவாக்கி நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரே தலைவர் கருணாநிதி ஒருவர்தான்."

தந்தை பெரியார் (E. V. Ramasamy)

Father of the Dravidian Movement

Dravidar Kazhagam· 1970

"கருணாநிதியின் பேனா நெருப்பைக் கக்கும்; அவரது நாவோ கவிதையைப் பொழியும். இப்படி ஒரு தம்பியை எனக்குத் தாருங்கள், உலகையே வென்று காட்டுகிறேன்."

பேரறிஞர் அண்ணா (C. N. Annadurai)

Mentor & First Chief Minister of Tamil Nadu

DMK Founder· 1967

"பராசக்தியும் கலைஞரின் தீப்பொறி வசனங்களும் இல்லையென்றால் இந்த சிவாஜி கணேசன் இல்லை. எனது கலைவாழ்வுக்கு உயிர் கொடுத்தவர் அவரே."

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் (Sivaji Ganesan)

Legendary Tamil Actor

Cinema & Arts· 1992
காலத்தை வென்ற வரிகள்

கலைஞரின் பொன்மொழிகள்

அனைத்து பொன்மொழிகளையும் காண்க →

என் மூச்சு நிற்கும் வரை நான் எழுதுவேன்; என் எழுத்து நிற்கும் வரை என் மூச்சு நிற்காது.

"Until my breath ceases I shall write; and until my pen ceases my breath will not depart."

— நெஞ்சுக்கு நீதி, 1995

சமத்துவம் என்பது சலுகை அல்ல; அது ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை.

"Equality is not a favor granted; it is the fundamental birthright of every human being."

— சட்டமன்ற உரை, 1989

வாழும் போது மனிதன் எதைச் சாதித்தான் என்பதை விட, அவன் இறந்த பின் மனித சமுதாயத்திற்கு என்ன விட்டுச் சென்றான் என்பதே முக்கியம்.

"What matters most is not merely what a human accomplished while alive, but what they left behind for humanity after they depart."

— முரசொலி மடல், 1982

சமூக ஊடக ஆவணம்

ட்வீட்கள் / சமூகப் பதிவுகள் (@kalaignar89)

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமூக ஊடகப் பதிவுகள்

அனைத்து பதிவுகளையும் காண்க →

M Karunanidhi

@kalaignar89

3 ஜூன், 2018

தலைவர் கலைஞர் அவர்கள் கோபாலபுரம் இல்லத்தில் தனது 95 வது பிறந்த நாளினை முன்னிட்டு தொண்டர்களை சந்தித்து கையசைத்தார். #Admi

தலைவர் கலைஞர் அவர்கள் கோபாலபுரம் இல்லத்தில் தனது 95 வது பிறந்த நாளினை முன்னிட்டு தொண்டர்களை சந்தித்து கையசைத்தார். #Admin

M Karunanidhi

@kalaignar89

2 ஜூன், 2018

திருவாரூரில் நடைபெற்ற ‘திருவாரூரில் கலைஞர்-95’ விழாவை, தலைவர் கலைஞர் அவர்கள் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கண்டு மகிழ்ந்

திருவாரூரில் நடைபெற்ற ‘திருவாரூரில் கலைஞர்-95’ விழாவை, தலைவர் கலைஞர் அவர்கள் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கண்டு மகிழ்ந்தபோது. #Admin

M Karunanidhi

@kalaignar89

29 ஏப்., 2018

தெலுங்கானா முதலமைச்சர் திரு.சந்திரசேகர் ராவ் அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார். கழக செயல்

தெலுங்கானா முதலமைச்சர் திரு.சந்திரசேகர் ராவ் அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார். கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடன் இருந்தார். @TelanganaCMO @mkstalin #Admin

1924
life

திருக்குவளையில் பிறப்பு

1924 ஜூன் 3 அன்று திருவாரூர் அருகிலுள்ள திருக்குவளையில் முத்துவேலர் - அஞ்சுகம் அம்மையார் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் தட்சிணாமூர்த்தி.

1938
politics

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் களம் காணுதல்

தனது 14-வது வயதில் பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, இந்தி திணிப்புக்கு எதிராக திருவாரூர் வீதிகளில் தமிழ் கொடி ஏந்தி மாணவர் ஊர்வலத்தை வழிநடத்தினார்.

1942
writings

முரசொலி இதழ் தொடக்கம்

1942 ஆகஸ்ட் 10 அன்று திருவாரூரில் கையெழுத்துப் பிரதியாக 'முரசொலி' இதழைத் தொடங்கினார். பிற்காலத்தில் இது திராவிட இயக்கத்தின் அதிகாரப்பூர்வ நாளேடானது.

1944
writings

ஈரோட்டில் பெரியாரின் குடிஅரசு இதழில் இணைவு

தந்தை பெரியாரின் அழைப்பை ஏற்று ஈரோடு சென்று 'குடிஅரசு' இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி பகுத்தறிவு மற்றும் சமூக நீதி கருத்துக்களை ஆழமாகக் கற்றார்.

1947
writings

'ராஜகுமாரி' திரைப்பட வசனகர்த்தாவாக அறிமுகம்

எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த 'ராஜகுமாரி' திரைப்படத்திற்கு முதன்முதலாக கதை-வசனம் எழுதி, திரைப்படக் கலை உலகில் அடியெடுத்து வைத்தார்.

1949
politics

திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிப்பு

1949 செப்டம்பர் 17 அன்று சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் பேரறிஞர் அண்ணாவுடன் இணைந்து திமுக-வைத் தொடங்கினார்; கட்சியின் முன்னணி அமைப்பாளர்களுள் ஒருவரானார்.

1952
writings

'பராசக்தி' திரைப்பட வெளியீடு & வசனப் புரட்சி

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'பராசக்தி' படத்திற்கு அனல் பறக்கும் வசனங்களை எழுதி, திரையுலகை பகுத்தறிவு மற்றும் சமூக சமத்துவ மேடையாக மாற்றினார்.

1953
politics

வரலாற்றுப் புகழ் கல்லக்குடி ரயில் மறியல் போராட்டம்

1953 ஜூலை 15 அன்று டால்மியாபுரத்திற்கு 'கல்லக்குடி' என பெயர் மாற்றக் கோரி தண்டவாளத்தில் தலைவைத்து மறியல் செய்து 6 மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றார்.

1956
politics

திருச்சி மாநாட்டில் திமுக தேர்தலில் போட்டியிட முடிவு

திருச்சி திமுக மாநில மாநாட்டில் ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்பு நடத்தி, பொதுத்தேர்தலில் போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டதில் முக்கியப் பங்காற்றினார்.

1957
politics

குளித்தலை தொகுதியில் முதல் சட்டமன்ற வெற்றி

குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு 8,296 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முதலாக தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினரானார்; நங்கவரம் உழவர் போராட்டத்தை வழிநடத்தினார்.

1960
writings

முரசொலி நாளிதழாக மலர்தல்

1960 செப்டம்பர் 17 அன்று முரசொலி தினசரி நாளிதழாக உருப்பெற்றது. 'உடன்பிறப்பே' என்ற தலைப்பில் அவர் எழுதிய மடல்கள் தொண்டர்களுக்கு வழிகாட்டும் அரசியல் பாடங்களாயின.

1961
politics

திமுக பொருளாளராக தேர்வு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சி நிதி மற்றும் நிருவாகத்தை திறம்படக் கட்டமைத்தார்.